என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- சில கட்சிகள் துணையுடன் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட மசோதா இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். சட்டசபையில் முதலமைச்சர் கூறியதாவது:
* வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல முழுமையாக திரும்பப்பெற வேண்டியது.
* சில கட்சிகள் துணையுடன் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட மசோதா இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
* பெரும்பாலான கட்சிகள் எதிர்த்த நிலையில் சில கட்சிகளின் துணையுடன் அதிகாலை 2 மணிக்கு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
* சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
* வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பூர்வமாக எதிர்த்து வெல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்துள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்துள்ளனர்.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்துள்ளனர்.
முன்னதாக, பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- மே மாதம் 15-ந்தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும்.
- பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி - கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும்.
தமிழில் பெயர்ப்பலகை வைப்பவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் குறிப்பிடப்படும் வார்த்தைகளை தமிழ் எழுத்தை விட சிறிய அளவில் வைக்க வேண்டும்.
வருகின்ற மே மாதம் 15-ந்தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும். பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
- ஆளில்லா விமானங்கள் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகிற 6-ந்தேதி வருகிறார். அன்றைய தினம் அவர் மதுரைக்கு வான்வழியாக வருகை தருகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையம், அதனை சுற்றியுள்ள பகுதிகள் உள்பட மதுரை மாவட்ட பகுதிகளில் 6-ந்தேதி டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா விமானங்கள் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
- கடற்கரை-எண்ணூர் இடையேயும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே இன்று மற்றும் 5 ஆகிய தேதிகளில் மதியம் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முழுவதுமாக ரத்து
* சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 மதியம் 1.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15, 3.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
* சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* ஆவடியில் இருந்து காலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து
* செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று மற்றும் 5 ஆகிய தேதிகளில் மட்டும் காலை 10.30 மணிக்கு சென்ட்ரல் - பொன்னேரி, மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி - சென்ட்ரல், மாலை 3.56 மணிக்கு எண்ணூர் - சென்ட்ரல், காலை 11.35, மதியம் 1.40 மணிக்கு சென்ட்ரல்- மீஞ்சூர், மாலை 4.14 மணிக்கு மீஞ்சூர் - சென்ட்ரல், மதியம் 2.40 மணிக்கு கடற்கரை - பொன்னேரி, மாலை 4.47 மணிக்கு பொன்னேரி - கடற்கரை, மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-எண்ணூர் இடையேயும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது.
- சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார்.
நாகப்பட்டினம்:
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன்-தமயந்தி பள்ளியில் நேற்று காலை ஆங்கில பாடத்திற்கான தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கியவுடன் தேர்வு அறை கண்காணிப்பாளர் வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு எழுதுபவர்களிடம் கொடுத்துவிட்டு கையொப்பம் பெற்றார்.
அப்போது அங்கு தனித்தேர்வராக தேர்வு எழுதிய ஒரு பெண் முககவசம் அணிந்து இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணிடம் முககவசத்தை அகற்றும்படி கூறினார். பின்னர் நுழைவு சீட்டை சோதனை செய்து பார்த்தார்.
அப்போது நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு அறை கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு ஒரு நபரின் புகைப்படம் இருந்தது.
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார். இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தனித்தேர்வு) முத்துச்சாமி, தேர்வு கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள், தேர்வு மையத்தில் பாதுகாப்பிற்கு இருந்த வெளிப்பாளையம் போலீசார் விரைந்து வந்தனர்.
தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை வெளிப்பாளையத்தைச் சேர்ந்த செல்வாம்பிகை(வயது 25) என்பது தெரிய வந்தது.
திருமணமான அவர் தனது தாய் சுகந்தி என்பவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது தெரிய வந்தது. இதேபோல அவர் கடந்த 28-ந் தேதி நடந்த தமிழ் பாடதேர்வை முககவசம் அணிந்து எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தாய் சுகந்தி 10-ம் வகுப்பு தனித்தேர்விற்காக விண்ணப்பம் செய்துள்ளபோது, மகள் எதற்காக தேர்வு எழுத வந்தார்? என அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். தாய்க்காக ஆள்மாறாட்டம் செய்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
- உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளான எலவனாசூர் கோட்டை, களமருதூர், குன்னத்தூர், ஆசனூர், கெடிலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
சென்னை:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளான எலவனாசூர் கோட்டை, களமருதூர், குன்னத்தூர், ஆசனூர், கெடிலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் சுற்றுவட்டாரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
- சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது.
- பல்லாவரம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பம்மல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது. குறிப்பாக பல்லாவரம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பம்மல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் வரும் 5-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழைக்கு வாயப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு.
- தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி.யில் ஒருமுறை பதிவிற்கான கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் செலுத்துவதை எளிமைப்படுத்தும் விதமாக யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கட்டணத்தைச் செலுத்த யுபிஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று கூறி உள்ளதாவது:
2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தேர்வர்களின் நலன் கருதியும் தெரிவுப் பணிகளை விரைவுபடுத்தவும் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்குத் தெரிவு (selection) செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 441 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப் பணியிடங்கள் (shortfall vacancies) நிரப்பப்பட்டுள்ளன. கட்டணங்களை UPI மூலம் செலுத்தலாம்
ஒருமுறை பதிவிற்கான கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் செலுத்துவதை எளிமைப்படுத்தும் விதமாக, UPI மூலம் செலுத்தும் வசதியை தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- திருச்சி- 37.1 டிகிரி செல்சியஸ், தர்மபுரி- 36.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. இந்த நிலை இன்னும் சில தினங்களில் மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் சதம் அடித்து வந்த வெயில் சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 99.68 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, கரூர் பரமத்தியில் 37.5 டிகிரி செல்சியஸ், சேலம்- 36.6 டிகிரி செல்சியஸ், மதுரை- 36.5 டிகிரி செல்சியஸ், வேலூர் 36.2 டிகிரி செல்சியஸ், திருத்தணி 35.8 டிகிரி செல்சியஸ், சென்னை மீனம்பாக்கம்- 35.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
திருச்சி- 37.1 டிகிரி செல்சியஸ், தர்மபுரி- 36.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.
- அராஜகம் அரசியல், கொள்ளை, ஊழல் போன்றவைகளிலிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும்.
- கட்சியின் தொண்டர்களை 1972-ல் உற்சாகமாகப் பணியாற்றிய அந்த பழைய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
9.ஆம் வகுப்பு படிக்கின்றபொழுதே பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி எம்.ஜி.ஆரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து இன்றுவரை அதிமுகவின் அடித்தளத் தொண்டன் என்பதிலும், அண்ணா தி.மு.க.-வின் முதல் தியாகி என்பதிலும் பெருமை கொண்டவன்.
பதவிக்காகவும் ஆதாயத்துக்காகவும் நான் அதிமுக-வில் இல்லை என்பதை என்னுடன் தோளுக்குத்தோள் இணைந்து கட்சிப்பணி செய்த சகாக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்கு தெரியும்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜா.அணி- ஜெ.அணி இணைப்புக்கும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கும் என எல்லா காலகட்டத்திலும் அண்ணா தி.மு.க. ஒற்றுமைக்குப் பணியாற்றிருக்கிறேன் என்ற தகுதியில்தான் கட்சி நிர்வாகிகளுக்கு இன்று அதிமுகவுக்கு சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறேன்.
1. எம்.ஜி.ஆரின் பெரும்புகழை மேடைகளில் பேசுவது, சுவரொட்டி மற்றும் பேனர்களில் பெரிய அளவில் முதன்மைப்படுத்துவது.
2. பிரிந்து கிடக்கும் அதிமுக-வினரை ஒற்றுமைப்படுத்துவது.
3. பாஜக மற்றும் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவது
அண்ணா திமுக-வின் குலதெய்வம் புரட்சித்தலைவர். அந்தக் குலதெய்வத்தின் கொள்கை வழி நின்று அவரது புகழை, சிறப்பை இன்னும் அதிகமாக முதன்மைப்படுத்த வேண்டும். திரைப்படத்தில் சொன்ன கருத்துக்களை எல்லாம் ஆட்சியில் செய்துகாட்டியவர். இன்றுவரை மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார்.
அராஜகம் அரசியல், கொள்ளை, ஊழல் போன்றவைகளிலிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். கட்சியின் தொண்டர்களை 1972-ல் உற்சாகமாகப் பணியாற்றிய அந்த பழைய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
கட்சிக்கு ஏன் இந்த தொடர் தோல்விகள், தொண்டனுக்கு ஏன் இந்த சோர்வு, இந்த தோல்வியை எப்படி தவிர்க்கலாம் என்று சிந்தித்தால் கட்சியின் ஒற்றுமை, கூட்டணி பலம் ஆகியவற்றின் தேவை புரியும்.
தொண்டர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல புரட்சித்தலைவர் மேற்கொண்ட சில அரசியல் முடிவுகளை நினைவூட்ட விரும்புகிறேன்.
1. மத்திய அரசுடன் நட்போடு பழகி தேர்தலில் கூட்டணி அமைத்தே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.
2. இந்திரா காந்தி தஞ்சாவூர் இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சியான அண்ணா திமுக அனுமதி கொடுக்காததால் உறவு முறிந்தது. பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அண்ணா திமுக 2 இடங்களை மட்டுமே பெற்று தோல்லி அடைந்தது.
3. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் சென்று என்ன தவறு செய்தேன் என் ஆட்சியை கலைத்தார்கள்? தீர்ப்பளியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தார்.
4. அதன் பிறகு, காங்கிரஸ் உடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து திமுக-வை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
5. அதன் அடையாளமாக திருப்பத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளரான அருணகிரிக்கு தானே வலிய சென்று ஆதரவு கொடுத்தார்.
7. திமுக கூட்டணியை பிரிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு பிரசாரம் செய்து வெற்றிபெற வைந்தார். இது அன்றைய அரசியலில் மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மத்திய அரசுடன் நல்ல நட்பு உருவானது.
8. 1981-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் உடல்நலம் பாதித்திருந்தபோது இந்திரா காந்தி நேரடியாக வந்து பார்த்து, அவர் வெளிநாட்டில் உயர்தர சிகிச்சை பெறுவதற்கு தேவையான வசதிகளை செய்து தந்தார்.
1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா திமுக காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அண்ணா திமுக-வுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோது மத்திய அரசின் உதவிகள் பெருமளவு பயன்தந்தது.
இப்படி அரசியல் முடிவுகள் எடுக்கின்றபோது கட்சி நலன், மக்கள் நலன், தொண்டர்கள் நலன் என்ற வகையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். எம்ஜிஆர் மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கமாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம்.
இவ்வாறு சைதை துரைசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விகாஸ் குமாரிடம் இன்று (02.04.2005) வழங்கினார்.
- 2ம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம் 3 (மாதவரம் பால்பண்னை முதல் சிறுசேரி சிப்காட் மெட்ரோ வரை).
வழித்தடம் 4 (கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை) மற்றும் வழித்தடம் 5 மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை) ஆகிய முன்று வழித்தடங்கள் மற்றும் மாதவரம் பூந்தமல்லி மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்பு பணிமனைகள் உட்பட 1,189 கி.மீ நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் (Letter of Acceptance) டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு ரூ. 5,870 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பு கடிதத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விகாஸ் குமாரிடம் இன்று (02.04.2005) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் அபித் குமார் ஜெயின் (இயக்கம் மற்றும் சேவைகள்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பணியின் நோக்கம் இரண்டாம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்கள் மூன்று பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகளை வழங்குதல் உட்பட இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகளும் இதில் அடங்கும்.
இதற்கான ஒப்பந்த காலம். இரண்டாம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும். டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பணிகள் திருப்திகரமாக இருப்பின் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






