என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எதிர்காலத்தில் நம்முடைய நோக்கத்தை வென்றெடுப்போம்.
- மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சராக முடியும்.
கீழ்ப்பாக்கம்:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்க வேண்டாம். எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, ஆதரவாளர்களுக்கு மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
* அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும்.
* சட்ட போராட்டத்தில் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி.
* அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தவே தர்மயுத்தம் நடத்தி கொண்டிருக்கிறோம்.
* எதிர்காலத்தில் நம்முடைய நோக்கத்தை வென்றெடுப்போம்.
* மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சராக முடியும்.
* எடுத்துள்ள சில முடிவுகளை வெளியே சொல்ல முடியாது. அது என்ன என்பது குறித்து உங்களுக்கு தெரியும்
* எனது தலைமையில் வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்தப்படும்
* எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்து மதுரை மாநாட்டில் அறிவிப்பேன் என்றார்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
- தமிழகத்தை திமுக அரசாங்கம் கடந்த 4 ஆண்டுகளாக சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக தி.மு.க. அரசாங்கம் தமிழக மக்களை படுகுழியில் தள்ளி இருக்கிறார்கள். சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு என மக்களின் தலையின் மீது சுமையை ஏற்றி மக்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத ஆட்சி வரும் தேர்தலில் விரட்டி அடித்து அகற்றப்படும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற பெண் மீது தாக்குதல் நடந்துள்ளது. விசாரணை என்ற பெயரில் 24 பேர் லாக்கப் டெத் என்னும் காவல்நிலைய பாதுகாப்பில் இருந்தபோது மரணம் அடைந்துள்ளனர். சமீபத்தில் நடந்த அஜித்குமாரின் படுகொலை காவல்துறையின் படுகொலையாக பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகவே வாய்க்கு வந்த படி எல்லாம் பேசி முதல்வர் ஸ்டாலின் தடுமாறி உளர ஆரம்பித்துள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை சுற்றியுள்ள தம்பிகளின் ஆட்சி தான் நடக்கிறது.
அவர்கள்தான் ஒவ்வொரு துறையையும் கவனித்துக் கொள்கிறார்கள். டாஸ்மாக், மணல் கொள்ளை, பத்திரப்பதிவு ஊழல், கனிம வள கொள்ளை என தமிழகத்தை திமுக அரசாங்கம் கடந்த 4 ஆண்டுகளாக சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். அதற்காகத்தான் மேட்டுப்பாளையத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரமாண்ட யாத்திரையை தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவராக இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்.
இந்த யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். தி.மு.கவை வீட்டுக்கு அனுப்புகிற யாத்திரையாக இது இருக்கும். இதே போல் இந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாடு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் ஆன்மீக பூமி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இதனை எங்களது தலைவர் அமித்ஷாவே பலமுறை தெரிவித்து விட்டார். நாங்கள் அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
ஆனால் தி.மு.க கூட்டணியில் தான் விரிசல் ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரே தமிழகத்தில் நடைபெறும் லாக்கப் டெத் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து தினந்தோறும் விமர்சித்து வருகின்றன.
தேசிய கல்வி கொள்கையை பொறுத்தவரை அரசியல் காரணத்திற்காக தி.மு.க அரசு அந்த திட்டத்தை ஏற்க மறுத்து மாணவர்களின் கல்வியில் விளையாடி அரசியல் செய்கிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக சமூக நலன் சார்ந்த திட்டங்களான சாலை மேம்பாட்டு, ரெயில் நிலையம் மேம்பாட்டு, ஜல்ஜீவன் மற்றும் விவசாயிகளுக்கு ஆண்டுகளுக்கு 6,000 உதவித்தொகை, 3 கோடி மக்களுக்கு இலவச அரிசி என இதுவரை ரூ.11 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது.
த.வெ.க தலைவர் விஜயின் செயல்பாடுகளை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி யாரோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது, கூட்டணியில் இன்னும் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்பது போகப் போக தெரியும். தேசிய தலைமை தான் இவை அனைத்தையும் அறிவிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஐஏஎஸ் தீரஜ் குமாருக்கு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
- ஐஏஎஸ் அமுதாவுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம். செய்யப்பட்டுள்ளனர்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் ஆகியவற்றை செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
1. டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு மின்சார வாரியம்.
2. திரு. ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
3 திரு. தீரஜ் குமார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
4, திருமதி. பெ. அமுதா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் .வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
மேற்கண்ட அதிகாரிகள் எந்தெந்த துறை சம்மந்தமாக செய்திகள் வெளியிட வேண்டும் என முதல்வரின் ஆணைப்படி அவர்களுக்கு கீழ்க்காணுமாறு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன:
1. டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு மின்சார வாரியம்.
* எரிசக்தித் துறை
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
* போக்குவரத்துத் துறை
* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
* வெளிநாடு வாழ் தமிழர் நலன்
* பள்ளிக் கல்வித் துறை
* உயர்கல்வித் துறை
* கைத்தறி, கைத்திறன். துணிநூல் மற்றும் கதர்த் துறை
* மனிதவள மேலாண்மைத் துறை
2. திரு. ககன்தீப் சிங் பேடி
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
* ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை
* கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
* வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
* நீர்வளத் துறை
* சுற்றுச் சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
* தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
* இயற்கை வளங்கள் துறை
3. திரு தீரஜ் குமார்.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
* உள். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
4. திருமதி. பெ. அமுதா.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
* சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
* மாற்றுத் திறனாளிகள் நலத்துறை
* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
* பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
* வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை
* நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை
* சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
* சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் செயலாளர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள். அச்செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்தபின் தலைமைச் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசு செய்தி தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள்.
அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 21-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
- கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
சென்னை:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 27-ந்தேதி வெளியானது.
தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கியது. முதல்கட்டமாக முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவா்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்த நிலையில் அதில் 994 இடங்கள் மட்டுமே நிரம்பின. இதில் 125 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.
இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 39 ஆயிரத்து 145 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை ஜூலை 16-ந்தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 17-ந்தேதி காலையில் வெளியிடப்படும். அதற்கு மறுநாள் (ஜூலை18) மாலை 5 மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். மேலும் இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 21-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
இதற்கிடையே கலந்தாய்வின் போது விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதி செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மாணவர்கள் செயல்பட வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வு ஆகஸ்டு 20-ந்தேதியுடன் நிறைவுபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- "சரோஜா தேவி" எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
- சரோஜா தேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பழம்பெரும் திரைப்பட நடிகை, "அபிநய சரஸ்வதி" என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி அவர்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் சரோஜா தேவி அவர்கள் இணைந்து நடித்த திரைப்படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. "சரோஜா தேவி" எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்ற சரோஜா தேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
- தங்களிடம் நான் எதையெல்லாம் கூறினேனோ அது தற்போது நடந்து கொண்டு வருகிறது.
- கடந்த மூன்று ஆண்டுகளாக சுயமரியாதை இழந்து ஒரு சிலரால் கடும் நிந்தனைக்கும் அவதூறுக்கும் ஆளாகி வந்திருக்கின்றேன்.
சென்னை:
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன். ஆனால் கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை.
கடந்த 09.07.25 புதன்கிழமை அன்று திராவிட ரத்னா தமிழினக் காவலர் நான் உயிராக நேசித்த என் அன்புத் தலைவர் வைகோ எம்.பி. அவர்கள் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தமிழிழத் தாயகத்தின் ஒப்பற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு புலிப்படை வீரன் மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று எனக்கு (வைகோ) மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார் என்று ஒப்பிட்டு பேசினார்.
சான்றோர் பெருமக்களே நான் மாத்தையா போன்று துரோகியா நீதி சொல்லுங்கள்.
என் அரசியல் பொதுவாழ்க்கையில் என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களுக்கு எதிராக நான் சிந்தித்தேன் செயல்பட்டேன் என்பது உண்மையானால் பெரும்புலவர் இளங்கோ அடிகளின் தமிழர்களின் பெருங்காப்பியம் சிலப்பதிகாரத்தின் மூதுரை அரசியல் பிழைத்தோற்க்கு அறமே கூற்றுவனாகட்டும் என்ற நீதி நின்று நிலைத்து என்னை இப்போதே சுட்டெரிக்கட்டும்.
அன்பின் தோழமைகளே அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்கள் தன் மகன் துரை எம்பி அவர்களின் அரசியலுக்காக 32 ஆண்டுகள் வெளிப்படைத் தண்மையோடு உண்மையாகவும் விசுவாசமாகவும் குடும்பத்தை மறந்து என் வாழ்க்கையின் 32 ஆண்டுகளா வசந்தத்தை தொலைத்து இரவு பகல் பாராமல் கட்சி கட்சி தலைவர் வைகோ என்று பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப்பட்ட கடந்த 09.07. 25 தொடங்கி 13. 07. 25 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஐந்து இரவுகளும் என்னால் தூங்க முடியவில்லை என் தூக்கத்தை தொலைத்து விட்டேன் என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு உயர்ந்த உலகம் போற்றும் மாமனிதர் தலைவர் வைகோ எம்பி அவர்கள் வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலாமே... அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்து போய் இருப்பேனே. அன்புத் தலைவர் வைகோ அவர்களே அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது வேதனையில் துடிக்கின்றேன் நான்.
என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக்கொள்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப் போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல.
இடர் மிகுந்த மறுமலர்ச்சி திமுகவின் 32 ஆண்டுகளா லட்சியப் பயணத்தில் தலைவர் வைகோ எம்பி அவர்கள் என்னை ஒரு போராட்டக்காரனாகவே வார்பித்து உள்ளார். இந்த நெருப்பு வளையத்தில் இருந்து மீண்டு வந்து திராவிட இயக்கத் கருத்தியலின் தந்தை அயோத்தி தாசர் பண்டிதர், டாக்டர் நடேசனார் பிட்டி தியாகராயர், டாக்டர் டி எம் நாயர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகியோர் வகுத்துத் தந்த பாதையில் திராவிட இயக்கச் சுடரை உயர்த்திப் பிடித்து தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளை பாதுகாக்கும் களத்தில் ஒரு படை வீரனாக நின்று தமிழ்ச் சங்கப் பணிகள் உலகத் தமிழர்களின் உரிமைகள் இளைஞர்களை வார்பிக்கும் தற்காப்புக் கலை போன்ற பணிகளில் வழக்கம் போல் இயங்கிடுவேன்.
அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே தற்போது உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வின் போது நான் துணை பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மறுத்து அதற்கான காரணத்தை 2023 மே மாதம் 22 தேதி தங்களை தாயகத்தில் சந்தித்து தற்போது நிலவும் சூழ்நிலையை அப்போதே தெரிவித்தேன். தங்களின் வற்புறுத்தலின் காரணமாகவே நான் அப்போது ஒத்துக் கொண்டேன்.
தங்களிடம் நான் எதையெல்லாம் கூறினேனோ அது தற்போது நடந்து கொண்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக சுயமரியாதை இழந்து ஒரு சிலரால் கடும் நிந்தனைக்கும் அவதூறுக்கும் ஆளாகி வந்திருக்கின்றேன்.
மதிமுகவில் 31 ஆண்டுகால என்னுடைய பயணத்தில் பல்வேறு நிலையில் பொறுப்புகள் வழங்கி அழகு பார்த்த தங்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் பணியாற்றி வந்துள்ளேன். யாருக்காகவும் எதற்காகவும் உங்களை நான் விட்டுக் கொடுத்தவன் அல்ல என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
கடந்த 15. 06. 25 ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு நகரத்தில் ஈழத் தமிழர்களுக்கு சொந்தமான 108 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் 18.06. 25 புதன்கிழமை அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் பாராளுமன்றத்திலும் கட்சி வேட்டி கட்டி கருப்புத் துண்டுடன் நான் பேசும் போதும் உங்களைப் பற்றித் தான் பேசினேன்.
அன்புத் தலைவர் வைகோ அவர்களே காலம் முழுவதும் தங்களுக்கும் ம.தி.மு.க.விற்கும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன். என்னுடைய அரசியல் முகவரி நீங்கள்தான். தங்களைப் போன்றவரை தலைவராக பெற்றது நான் பெற்ற பேறு. உங்களை எப்போதும் என் இதயத்தில் வைத்து பூஜித்து வருவேன்.
உங்களின் உயர்ந்த அரசியல் நோக்கம் வெற்றிபெற என் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய இந்த நிலை கழகத்தில் இருக்கும் சிலருக்கு மகிழ்ச்சியாகவும் என்னை நிபந்தனையற்று நேசித்த என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களின் கண்மணிகள் பலருக்கு வருத்தமாகவும் இருக்கும். உங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்றவன் என்ற முறையில் நீங்கள் காட்டிய தூய அன்பிற்கு நான் என்றும் அடிமைப்பட்டவன். உங்கள் ஒவ்வொருவரையும் என் இதயத்தில் ஏந்தியிருப்பேன். கவலைப்பட வேண்டாம். இந்த சோதனையான காலகட்டத்தை கடந்து வருவேன்.
இன்பமோ துன்பமோ விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
மரம் ஓய்வு எடுக்க விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை என்ற சீனத்தின் தலைவர் மாவோ அவர்களின் பொன்மொழிக்கு இலக்கணமாக கடந்த நான்கு நாட்களாக நான் எதுவும் பேசாமல் மெளனம் காத்து வந்தேன் காரணம் நான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளராக இப்போது வரையில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்து வந்த நிலையில் என்மீது மதிமுக முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை எம்பி அவர்கள் பொதுவெளியில் விமர்சித்து பேசியுள்ளார். பதில் சொல்ல வேண்டிய ஜனநாயக கடமை எனக்கு உண்டு
நீ பேசாத வார்த்தைக்கு
நீ எஜமான்
நீ பேசிய வார்த்தைக்கு
நீ அடிமை
என் மெளனத்தைக் கலைக்கின்றேன்
இந்த இக்கட்டான காலகட்டத்தில் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் ஆறுதல் கூறிய சான்றோர் பெருமக்களுக்கும் என் தரப்பு நியாயத்தை கற்றறிந்த வழக்கறிஞரைப் போன்று அழுத்தமான வாதங்களை ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு புரியவைத்த தமிழகத்தின் தலை சிறந்த அரசியல் விமர்சகர்கள் அரசியல் ஆளுமைகளுக்கும் அன்பு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் என் நெஞ்சின் அடியாழத்தில் இருந்து நன்றி கூறுகின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
- ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி.
- பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜா தேவி அம்மையார்.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி.
தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் 'அபிநய சரஸ்வதி' எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார் அவர்கள்.
சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவி அவர்களின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- இதுவரையில் மீனாவுக்கான அரசு வேலையோ, இழப்பீடோ திமுக அரசால் வழங்கப்படவில்லை என செய்திகள் வருகின்றன.
- இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மீனாவிற்கு அரசு வேலை வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுவரையில் மீனாவுக்கான அரசு வேலையோ, இழப்பீடோ திமுக அரசால் வழங்கப்படவில்லை என செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் அவர்களே- நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருக்கும் உங்கள் அரசால், உங்கள் காவல்துறையால் தனது கனவனை இழந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண், 300 ரூபாய் கூலிக்கு வேலை செய்துக் கொண்டிருக்கிறார். மீனாவுக்கு உங்களிடம் இருந்து பதில் வருமா பொம்மை முதல்வரே?
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கும் நீங்கள் அவசர கதியில் கொடுத்த வேலை மற்றும் நிலம், தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்து வருகின்றனர்.
லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும் மனமில்லை!
இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி?
லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான உரிய இழப்பீடுகளை உடனே வழங்கிட வேண்டும் என
ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமைய இருக்கிறது.
- நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான தி.மு.க. அரசு, இன்னும் இரு மைல்கற்களை கடந்திருக்கிறது. முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1200 நாட்களாகும் நிலையில், இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
2-ஆவதாக, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட 30 மாதக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், ஆணையத்திடம் இருந்து அறிக்கை பெறுவதற்கு பதிலாக காலநீட்டிப்பு வழங்கி துரோகம் செய்திருக்கிறது.
தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் ஓர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக ஓர் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்வது இது தான் முதல் முறையாகும். இஸ்லாமியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 14.7.2006-ம் நாள் அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் ஆணையம் அதன் அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து 15.9.2007-ம் நாள் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
அதேபோல், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 25.3.2008-ம் நாள் அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் ஆணையம் 243 நாள்களில் அதே ஆண்டு நவம்பர் 22-ம் நாள் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்பின் 2009 பிப்ரவரி 26-ம் நாள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதைவிட பல மடங்கு, அதாவது 915 நாட்கள் ஆகி விட்ட நிலையிலும் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் தாமதித்து வருகிறது.
வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை ஆணையம் முதன்முதலில் அதற்கு வழங்கப்பட்ட 3 மாத காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்து, அதனடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டிருந்தால் கடந்த 4 ஆண்டுகளில் வன்னிய மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 600 எம்.பி.பி.எஸ் இடங்களும், 700-க்கும் கூடுதலான மருத்துவ மேற்படிப்பு இடங்களும் கிடைத்திருக்கும்.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும், கலைக்கல்லூரிகளில் 80 ஆயிரத்துக்கும் கூடுதலான இடங்களும், சட்டக்கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் கூடுதலான இடங்களும் கிடைத்திருக்கும். மேலும் அரசுத்துறைகளில் வன்னியர்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வேலைகள் கிடைத்திருக்கும். இயல்பாக கிடைக்க வேண்டிய இந்த உரிமைகளை பறித்து தி.மு.க. அரசு பெருந்துரோகம் செய்திருக்கிறது.
தி.மு.க. அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்துவதன் வாயிலாகவும், டா்கடர் அய்யா வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவும் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. அதன் தொடக்கமாகத் தான் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட நாளான ஜூலை 20-ம் நாள், இட ஒதுக்கீட்டுக்காக போராளிகள் இன்னுயிர் ஈந்த மண்ணான விழுப்புரத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்த தீர்மானித்திருக்கிறோம்.
நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான். அந்த வகையில் இப்போதும் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதனடிப்படையில் பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமைய இருக்கிறது.
இதை மனதில் கொண்டு பா.ம.க. வன்னியர் சங்கம் உள்ளிட்ட அதன் இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும், பாட்டாளித் தொண்டர்களும் விழுப்புரம் மண்ணில் படை திரள்வோம், தி.மு.க.வின் துரோகத்தை தோலுரித்துக் காட்டி நமக்கான சமூக நீதியை வென்றெடுப்போம் என்று உங்களை அழைக்கிறேன். வன்னிய மக்களின் சமூகநீதிக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக, பாட்டாளி சொந்தங்களாகிய உங்களை எதிர்பார்த்து விழுப்புரத்தில் காத்திருப்பேன்.
இ்வவாறு அவர் கூறியுள்ளார்.
+2
- தனது சுற்றுப்பயணம் மிகுந்த எழுச்சியுடன் நடந்து வருகிறது.
- போகும் இடமெல்லாம் தி.மு.க. ஆட்சி இருக்கக் கூடாது என மக்கள் கூறுகின்றனர்.
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி மிக வலுவாகவே உள்ளது.
* தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறதா என உதயநிதி பார்த்து கொள்ளட்டும்.
* தனது சுற்றுப்பயணம் மிகுந்த எழுச்சியுடன் நடந்து வருகிறது.
* போகும் இடமெல்லாம் தி.மு.க. ஆட்சி இருக்கக் கூடாது என மக்கள் கூறுகின்றனர்.
* அடுத்தாண்டு தேர்தல் வருவதால் தி.மு.க. நடத்தும் நாடகம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.
* உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்கிற பெயரில் நாடம் நடத்தப்படுகிறது.
* 4 ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாமல் இப்போது குறைகளை கேட்கிறார்கள்.
* அ.தி.மு.க.வுடன் மேலும் சில கட்சிகள் கூட்டணி வைக்க உள்ளன என்றார்.
- நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தருமபுரி:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக இருந்து வருகிறது.
நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்த ருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க மட்டும் நேற்று அனுமதி அளித்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
20-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
- வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்து விற்பனையாது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,155 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
13-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
12-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
11-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600
10-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
09-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
13-07-2025- ஒரு கிராம் ரூ.125
12-07-2025- ஒரு கிராம் ரூ.125
11-07-2025- ஒரு கிராம் ரூ.121
10-07-2025- ஒரு கிராம் ரூ.120
09-07-2025- ஒரு கிராம் ரூ.120






