என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விஜயகாந்த் பற்றி பேசுவதனால் வாக்குகள் கிடைத்து விடுமா?
    • நான் முதல்வராக வந்தால் முதல் கையெழுத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்து வருபவர்களுக்கு அரசு வேலை என்பதுதான்.

    மதுரை:

    மதுரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சியில் வருகிற பிப்ரவரி 7-ந்தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஒரு கட்சியின் மாநாடு என்றால் எப்படி நடத்த வேண்டும்? என வருகிற பிப்ரவரி 7-ந்தேதி திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாட்டை பாருங்கள். அந்த மாநாட்டில் எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என பொறுத்திருந்து பாருங்கள்.

    ஒரு மாநாட்டு உரை என்பது எப்படி இருக்கும் என்பதை அப்போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் விஜய்யின் பேச்சை மூத்த தலைவர்கள் விமர்ச்சிக்கிறார்கள். அணில் ஏன் அங்கிள், அங்கிள் என கத்துகிறது. ஜங்கிள், ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் சி.எம். சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார்.

    த.வெ.க. மாநாட்டில் மரணம் என்பதை கட்சி மரணம் என்று பார்க்க முடியவில்லை. விஜய்யின் பவுன்சர்கள் அத்துமீறல் குறித்து ஓட்டு கேட்கும் போது நீங்கள் இவ்வாறு ஆக வர முடியாது அல்லவா? விஜய் மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை பார்க்காதீர்கள். நான் வைத்திருப்பது விதை நெல். பதர் கிடையாது.

    விஜயகாந்த் பற்றி பேசுவதனால் வாக்குகள் கிடைத்து விடுமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள். மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று. புயல், சுனாமியே வந்தாலும் எனது தம்பிகள், தங்கைகள், தாய்மார்கள் என்னுடன் நிற்பார்கள்.

    புதிய மசோதா அனைவருக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள். குஜராத் கலவரத்திற்கும், பா.ஜ.க. விற்கும் தொடர்பில்லை என்று கூறுகிறார். அதை நீங்கள் ஏற்கிறீர்களா? அமலாக்கத்துறை சோதனை செய்வது எந்த கட்சியில்? எலக்ட்ரோ பாண்டு அதிகம் பெற்றது எந்த கட்சி?

    பீகார் முதல்வர் சொல்வது குறித்து ஈரோட்டில் காசு கொடுக்கும்போது தடுக்காத தேர்தல் ஆணையம், கள்ள ஓட்டு போடும் போது தடுக்காத தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் எப்படி நேர்மையாக இருக்கும். மொத்தமாக தவறாக தான் இருக்கும். வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும். இந்த மெஷினை ஜப்பான் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. ஆனால் ஜப்பானில் எந்திர வாக்குப்பதிவா நடக்குது.

    பின்னர் எதற்கு 42 நாள் வாக்குப்பதிவு மெஷினை உள்ளே வைக்கிறீர்கள். போலீசே அதற்கு பாதுகாப்பு. உன்னிடம் சம்பளம் வாங்கக்கூடிய போலீஸ் தான் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். வாக்கு பெட்டியை மாற்றமாட்டார்களா?

    முதலீடு ஈர்க்க முதல்வர் வெளிநாடு செல்கிறார். முதலீடுகள் ஈர்க்க சென்றால் ஏற்கனவே ஈர்க்க சென்றது என்ன ஆனது எனக்கூறினாரா?. தேர்தலில் நான் தனியாகத்தான் நிற்பேன். கூட்டணி வைத்து ஏதாவது பிரச்சனையை இதுவரை சரி செய்து உள்ளார்களா? என்ன சாதித்துள்ளார்கள்.

    நான் முதல்வராக வந்தால் முதல் கையெழுத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்து வருபவர்களுக்கு அரசு வேலை என்பதுதான். இதுபோல 100 கையெழுத்து போட்டு நாட்டின் தலை எழுத்தை மாற்ற வேண்டும். கம்யூனிஸ்டு கட்சி ஆபீசை கல்யாண மண்டபமாக மாற்றி வருகிறார்கள். பா.ஜ.க. ஆபீசில் இஸ்லாமிய ஆணையும், இந்து பெண்ணையும் திருமணம் முடித்து வைப்பார்களா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உயர்ந்த வகுப்பினருக்கும், தாழ்ந்த வகுப்பினருக்கும் கல்யாணம் நடத்தி வைப்பார்களா?

    முதல்வர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது அவரவருடைய விருப்பம். சகிக்க முடியாத சொத்து வரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு பற்றி பேசுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவுரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ.10,000 தான் ஊதியம் வழங்கப்பட்டது.
    • தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு, நிரந்தர உதவிப் பேராசிரியர்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஒரே மாதிரியான பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாடான வகையில் ஊதியம் வழங்கப்படுவது கண்ணியமற்ற செயல் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், இதற்கு காரணமான மாநில அரசுகள் தலைகுனிய வேண்டும்.

    கவுரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ.10,000 தான் ஊதியம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளைக் கடந்து இப்போதும் கூட ரூ.25,000 மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு இந்தியாவிலேயே மிகக் குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழகம் தான். இது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு. தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இயங்குவதற்கு காரணமே கவுரவ விரிவுரையாளர்கள் தான். மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் உள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை 8000க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து தான் தமிழக அரசு சமாளித்து வருகிறது. பல கல்லூரிகளில் பல துறைகளில் ஒரே ஒரு நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலையில், அத்துறைகளின் துறைத் தலைவர் பொறுப்புகளையும் கவுரவ விரிவுரையாளர்கள் தான் கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.25,000 மட்டுமே ஊதியம் தரப்படுகிறது.

    கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாட வேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு 28.01.2019-ந் தேதி ஆணையிட்டது. அதை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடியாது என்று தமிழக அரசு அறிவித்து விட்டது. கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு எவ்வளவு கண்ணியக்குறைவாகவும், அவமரியாதையாகவும் நடத்துகிறது என்பதற்கு இதுவே சாட்சி.

    குஜராத் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் வழக்கில் இப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகள் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த உச்சநீதி மன்றத்தின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பணி நிலைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சிலைகளை வடிப்பது - பார்வதி பிள்ளையாரை படைத்த நிகழ்வை குறிக்கிறது.
    • உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி திருநாளில் தடைகள் நீங்கட்டும், புத்தி மலரட்டும் என சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியிருப்பதாவது, "விநாயகர் ஞானத்திற்கான கடவுள், கல்வியும் அறிவும் அருள்பவர், தடைகளை நீக்குபவர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நம் தேசத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு வருடமும் பருவமழை பொழிந்து முடித்து, கார்மேகங்கள் மறைய தொடங்கியவுடன், நாடெங்கும் உற்சாகமும் எதிர்பார்ப்பும் காற்றில் பரவ, லட்சக்கணக்கானவர்கள் அன்பிற்குரிய ஆனைமுகத்தானை கொண்டாட தயாராகிக் கொண்டிருப்பார்கள். இப்படி விழாக்கோலமும், பலகாரங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் கதை ஒன்று வெறும் புராணமாக இருந்துவிடாமல், புத்தி, படைப்பாற்றல் மற்றும் மாற்றத்திற்கான மகத்தான அறிகுறியாக திகழ்கிறது.

    கதை இப்படி ஆரம்பிக்கிறது. சிவன் - அவர் பரமயோகி - தன் இல்லத்தையும், மனைவி பார்வதியையும் விட்டு நீண்ட காலம் சென்றிருக்கிறார். தனிமையும், தாய்மைக்கான ஏக்கமும் அதிகரித்ததால் அவள் அசாதாரண படி ஒன்றை எடுக்கிறாள். தன் உடலில் பூசியிருந்த சந்தனத்தை சேகரித்தாள். தனது தோலின் அம்சங்களை கொண்டிருந்த அந்த சந்தனத்தை மண்ணுடன் கலந்தாள், அதை ஒரு பிள்ளை வடிவத்தில் பிடித்து வைத்தாள். அவள் வடித்த இந்த உருவத்திற்கு உயிர் ஊட்டினாள்.

    சிவன் பல வருடங்கள் கழித்து வீடு திரும்புகிறார். தன் தாய்க்கு காவலாக வாசலில் ஒரு பாலகன் நின்று கொண்டிருந்தான். இருவரும் நேருக்கு நேர் நின்றுகொண்டிருக்கிறார்கள், ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. கோபத்தில் சிவன் பாலகனின் தலையை துண்டித்துவிடுகிறார். பார்வதியின் துக்கமும் ஆத்திரமும் தீவிரமாக இருந்தது. இந்த துன்பத்தை சரிசெய்ய நினைக்கிறார் சிவன். அவருடன் எப்போதும் கூடவே இருக்கும் கணங்கள், அந்த கணங்களின் தலைவரான ஒருவரின் தலையை எடுத்து பாலகனின் தலைக்கு பதிலாக மாற்றிவைத்தார் சிவன்.

    சிவ கணங்கள் - அவர்கள் விசித்திரமான வேற்றுகிரக வாசிகள் - இவர்களின் உடல் அமைப்பு மனிதர்களைப் போல் அல்லாமல் எலும்புகளற்ற கைகள் கொண்டவர்களாக கூறப்படுகிறார்கள். இதுவே ஓவியர்கள் விநாயகரை தும்பிக்கை கொண்டவராக, ஆனைமுகத்தானாக சித்தரிக்க காரணமானது. ஆனாலும், இன்றும் ஒவ்வொரு மந்திரமும், ஒவ்வொரு பக்திப் பாடலும், அவரை கணபதி என்றுதான் சொல்கிறதே தவிர, கஜபதி என்று அல்ல.

    விநாயகர் தோன்றியது இப்படித்தான்: பார்வதியின் உயிர்-படைக்கும் ஆற்றல் மூலம் தோன்றி, சிவகணத்தின் தலையை கொண்டவர் ஆனார் - புத்திசாலித்தனம், உயிர்மூலம் ஆகியவற்றின் அறிகுறி ஆனார். சமநிலையான புத்திசாலித்தனத்தின் வடிவமானவர் கணபதி.

    விக்னங்களை, அதாவது தடைகள் அனைத்தையும் தகர்ப்பவர் - அதனால் விக்னேஸ்வரன் என்று வணங்கப்படுகிறார். அப்படியென்றால், கஷ்டங்களை மாயமாக மறையச் செய்துவிடுவார் என்று அர்த்தம் அல்ல. அவர் கூறும் ஞானம் சூட்சுமமானது: அதாவது, நமக்குள் புத்திசாலித்தனம், சமநிலை, தெளிவு ஆகியவற்றை நாம் வளர்த்துக்கொள்ளும் போது, தடைகள் தாமாகவே கரைந்து போய்விடும். அவை இனி தடைகளாக இல்லாமல் படிக்கற்களாக மாறிவிடும். இங்கு புத்திசாலித்தனம் என்பது தந்திரமாக இருப்பதையோ, சாமர்த்தியமான கணக்குகளையோ குறிக்கவில்லை - இந்த பிரபஞ்சத்துடன் ஒத்திசைவில் இருப்பதையே குறிக்கிறது - உள்ளுக்குள் அமையும் சமநிலை காரணமாக நமக்குள்ளும், வெளிபுறத்திலும் வாழ்க்கையை சுகமாக கடக்க முடிகிறது.

    இந்த புரிதலே விநாயகர் சதுர்த்தியின் ஐதீகமாக வெளிப்படுகிறது. பல நாட்களுக்கு பக்தர்கள் விநாயகர் சிலைகளை வடிப்பார்கள், ஆடல் பாடலுடன் அவரை ஆராதிப்பார்கள், அவருக்கு உணவு படைப்பார்கள், பக்திப் பரவசத்துடன் அவரை கொண்டாடுவார்கள். அதேசமயம், அந்த மூர்த்தியை நீரில் கரைப்பதுடன் விழா நிறைவு பெறும். சிலைகளை வடிப்பது - பார்வதி பிள்ளையாரை படைத்த நிகழ்வை குறிக்கிறது. நீரில் அமிழ்த்துவது - சிவன் நிகழ்த்திய செயலான அழித்தலையும், புதுப்பித்தலையும் குறிக்கிறது. இவை இரண்டும் சேர்ந்து ஒரே சுழற்சியை குறிக்கின்றன - உருவத்தைப் படைப்பது, அதன் மூலம் கற்றுக்கொள்வது, கடைசியில் அதை விடுவிப்பது.

    விநாயகர் சதுர்த்தி மூலம் நாம் இதைத்தான் கற்றுக்கொள்கிறோம். அதாவது, உண்மையான புத்திசாலித்தனம் என்பது ஒருபோதும் இறுக்கமானது அல்ல, பற்றுகள் சார்ந்தது அல்ல. அது நீர் போல இளகிய தன்மை கொண்டது, கட்டுகள் அற்றது - அதாவது, தொடர்ச்சியாக படைப்பிற்கு உள்ளாகி, அதன்பின் கரைந்துபோகும் உயிர்த்தன்மையை போன்றதே புத்திசாலித்தனமும்.

    பிள்ளையார் வடிவத்தை உருவாக்கி அதன்பின் அதை நீரில் கரைக்கும் வழக்கம் ஒருவிதத்தில் இந்த பிரபஞ்சத்தின் அறுதியற்று மாறக்கூடிய இயல்பை குறிக்கிறது - சும்மா கண்மூடித்தனமாக உருவங்களை பற்றிப்பிடித்துக் கொண்டிருக்காமல், அந்த உருவத்தின் குணங்களை உள்வாங்கிக்கொண்டு, அவற்றை விட்டுவிட வேண்டும் என்கிறது.

    மொத்தத்தில், விநாயகர் சதுர்த்தி என்பது உருவத்திலிருந்து உருவமற்ற தன்மைக்கு நகர்வதைக் கொண்டாடும் விழாவாக உள்ளது. உண்மையான புத்திசாலித்தனம் என்பது அறிவை சேகரிப்பது அல்ல, சாமர்த்தியமாக இருப்பதும் அல்ல; இந்த பிரபஞ்சத்துடன் ஒன்றாக இசைந்து வாழும் திறனாகும் - எதிர்ப்பில்லாமல் மிதந்து வாழ்ந்து, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, நம் கட்டுப்பாடுகளை கடந்து விரிவடைவது ஆகும்.

    இப்படியாக, இந்த கோலாகலமான பண்டிகையை கொண்டாடுங்கள், கொழுக்கட்டைகளை உள்ளே தள்ளுங்கள், அழகு அழகான விநாயகர் சிலைகளின் கலைவண்ணத்தை கண்டுகளியுங்கள். கூடவே கணபதி என்பவர் உணர்த்தும் ஆழ்ந்த உட்பொருளை கருத்தில் கொள்ளுங்கள் - தடைகளை கரைந்துபோகச் செய்யும், ஒற்றுமையைக் கொண்டாடும், உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    படைப்பின் சமநிலையை, எல்லையற்ற புத்திசாலித்தனத்தை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாள் உங்களுக்குள் உயிர்த்தெழச் செய்யட்டும்! வாழ்த்தும் ஆசியும்!" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விநாயகருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
    • காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு விநாயகரை வழிபட்டனர்.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் கோவில்களில் திரண்டு வழிபாடு செய்தனர்.

    கோவை புளியகுளத்தில் பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை ஆசியாவிலேயே மிகப்பெரியது ஆகும். 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது.

    இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா தொடங்கி நடந்து வந்தது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோம பூஜை நடந்தது. 4.30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 4 டன் மலர்களால் விநாயகருக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. முகத்தில் மட்டும் 40 கிலோ சந்தனத்தை கொண்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர்.

    மேலும் விநாயகருக்கு கொழுக்கட்டை, லட்டு, அதிரசம், வடை, எள் உருண்டை, முறுக்கு என 36 வகையான நைவேத்ய பிரசாதங்கள் படைக்கப்பட்டு பூஜை நடந்தது. 5.45 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு விநாயகரை வழிபட்டனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர்.

    இதேபோல ஈச்சனாரி விநாயகர் கோவில், ரேஸ்கோர்ஸ் 108 விநாயகர் கோவில் உள்பட கோவையில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. 

    • பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குடவரை கோவிலான இங்கு விநாயகப்பெருமான் மற்ற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இரண்டாம் நாள் விழாவில் இருந்து இரவில் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குறிப்பாக ஆறாம் நாள் கஜமுக சூரசம்காரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், 9-ம் நாளான நேற்று மாலை விநாயகரும், சண்டிகேஸ்வரரும் வெவ்வேறு இருதேர்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இதில் சண்டிகேசுவரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர்.

    தொடர்ந்து இரவு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக் காப்பு அலங்காரம் மூலவருக்கு நடத்தப்பட்டது. இரவில் யானை வாகனத்தில் விநாயகர் வீதியுலா வந்தார். பத்தாம் நாளான இன்று சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக தங்க மூஷிஷ வாகனத்தில் நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானும், வெள்ளி பல்லக்கில்அங்குச தேவரும், சிவனின் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள திருக்குளப்படித்துறையில் எழுந்தருளினர். அங்கு காலை 10 மணிக்கு பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் முக்குறுணி மோதகம் படையலும் நடைபெறுகிறது.

    சதுர்த்தி விழாவையொட்டி கைகளில் அருகம்புலுடன் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.

    சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மாவட்ட சூப்பிரண்டு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்பட்டுள்ளது. 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான வழிகள், குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுள்ளது.

    • அதிகாலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர்.

    இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். 



    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    தருமபுரி:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6,500 கனஅடி வந்தது. இன்று காலையும், அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கும் நேற்று சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,840-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் சுப முகூர்த்தநாளையொட்டி தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,390-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,120-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 130 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,840

    25-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440

    24-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520

    23-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520

    22-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,720

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-08-2025- ஒரு கிராம் ரூ.130

    25-08-2025- ஒரு கிராம் ரூ.131

    24-08-2025- ஒரு கிராம் ரூ.130

    23-08-2025- ஒரு கிராம் ரூ.130

    22-08-2025- ஒரு கிராம் ரூ.128

    • அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 871 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • அணையில் தற்போது 92.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக இந்தாண்டு அணை 5 முறை நிரம்பியது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.66 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 871 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 92.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி, நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் பூஜைப்பொருட்களையும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர். மேலும், தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.


    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 



    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • புதுப்பாக்கம், சிறுசேரி, அனுமன் நகர், காரனை கிராமம்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    தாம்பரம்: சிடிஓ காலனி, சசிவரதன் நகர், FCI நகர், காசா கிராண்ட், குட்வில் நகர், மூகாம்பிகை நகர், பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர்.

    ஈஞ்சம்பாக்கம்: விஜிபி லேஅவுட், சீத்தாராம் அவென்யூ, பெரியார் தெரு, பொதிகை தெரு, முனிசுவரன் கோவில் தெரு, கௌரிஅம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, ஷாலிமார் கார்டன், எம்.கே.ராதா அவென்யூ, ரேடியன்ட் அவென்யூ, கங்கையம்மன் கோவில் தெரு, தேவி நகர், பெத்தல் நகர்.

    ஐடி காரிடார் : புதுப்பாக்கம், சிறுசேரி, அனுமன் நகர், காரனை கிராமம், காசா கிராண்ட், ஒட்டியம்பாக்கம் சாலை, எல்&டி ஈடன் பார்க்.

    ஆவடி: பத்மாவதி நகர், தென்றல் நகர், மூர்த்தி நகர், முல்லை நகர், வெங்கடேஸ்வரா பள்ளி தெரு, வள்ளலார் நகர்.

    • வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
    • தர்பங்காவில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.

    பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் கடந்த 17-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணத்தில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.

    இதைத்தொடர்ந்து பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். சிறப்பு விமானத்தில் புறப்பட்ட முதல்வர் பீகார் மாநிலம் தர்பங்கா விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் NH 57 பகுதியில் நடைபெறும் பேரணியில் காலை 10.30 மணி அளவில் பங்கேற்கிறார்.

    ×