என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோவை புளியகுளம்  முந்தி விநாயகருக்கு 4 டன் மலர்களால் ராஜ அலங்காரம்- பக்தர்கள் வழிபாடு
    X

    கோவை புளியகுளம் முந்தி விநாயகருக்கு 4 டன் மலர்களால் ராஜ அலங்காரம்- பக்தர்கள் வழிபாடு

    • விநாயகருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
    • காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு விநாயகரை வழிபட்டனர்.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் கோவில்களில் திரண்டு வழிபாடு செய்தனர்.

    கோவை புளியகுளத்தில் பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை ஆசியாவிலேயே மிகப்பெரியது ஆகும். 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது.

    இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா தொடங்கி நடந்து வந்தது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோம பூஜை நடந்தது. 4.30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 4 டன் மலர்களால் விநாயகருக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. முகத்தில் மட்டும் 40 கிலோ சந்தனத்தை கொண்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர்.

    மேலும் விநாயகருக்கு கொழுக்கட்டை, லட்டு, அதிரசம், வடை, எள் உருண்டை, முறுக்கு என 36 வகையான நைவேத்ய பிரசாதங்கள் படைக்கப்பட்டு பூஜை நடந்தது. 5.45 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு விநாயகரை வழிபட்டனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர்.

    இதேபோல ஈச்சனாரி விநாயகர் கோவில், ரேஸ்கோர்ஸ் 108 விநாயகர் கோவில் உள்பட கோவையில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

    Next Story
    ×