என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    அந்த வகையில் கடந்த செவ்வாய்கிழமை இதுவரை இல்லாத உச்சமாக சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் நேற்று சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920-க்கு என்று புதிய உச்சத்தில் விற்பனையானது.

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,220-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 143 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,920

    11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-09-2025- ஒரு கிராம் ரூ.142

    11-09-2025- ஒரு கிராம் ரூ.140

    10-09-2025- ஒரு கிராம் ரூ.140

    09-09-2025- ஒரு கிராம் ரூ.140

    08-09-2025- ஒரு கிராம் ரூ.140

    • மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கும் விஜய் என்ன பேச போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    • விஜய் வருகையையொட்டி திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

    இன்று காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டார். மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கும் விஜய் என்ன பேச போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட பிரச்சனைகள் குறித்து விஜய் பேச வாய்ப்பு உள்ளது.

    திருச்சியில் பேசும்போது அந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை அவர் பட்டியலிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    த.வெ.க. தலைவர் விஜய் வருகையையொட்டி திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வரலாற்றில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் திருச்சி.
    • அறிஞர் அண்ணா முதன்முதலில் தேர்தலில் தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என முடிவெடுத்த இடமும் திருச்சி தான்.

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் இப்போதே தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மக்களை கவர வியூகம் வகுத்து களமாடி வருகிறார்கள்.

    இத்தகைய சூழலில் நடிகர் விஜயின் அரசியல் வருகை அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மாநாடுகளை நடத்தி தனது கொள்கைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும் மக்களிடம் கூறி வந்த நடிகர் விஜய், அடுத்த கட்டமாக தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தையும் தொடங்கிவிட்டார்.

    அவரது சுற்றுப்பயணத்தின் முதல் தேர்வு திருச்சி. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வரலாற்றில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் திருச்சி. 'சென்டிமென்ட்' விஷயங்களில் நம்பிக்கையுடைய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வின் 2-வது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தி திருப்புமுனையை உண்டாக்கினார். பின்னர் தனது ஆட்சியின் முக்கிய திட்டமான சத்துணவு திட்டத்தையும் திருச்சியிலேயே தொடங்கி வைத்தார். திருச்சியை 2-வது தலைநகராக மாற்றப்போவதாகவும் அறிவித்தார்.

    இவ்வளவு ஏன்? அறிஞர் அண்ணா முதன்முதலில் தேர்தலில் தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என முடிவெடுத்த இடமும் திருச்சி தான். திருச்சியில் நடத்துகிற மாநாடு உள்பட எந்த நிகழ்வாக இருந்தாலும் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது அரசியல் கட்சிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார் நடிகர் விஜய்.

    இந்த பிரசாரம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள், த.வெ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள். விஜய் பிரசாரம் செய்யப்போகும் மரக்கடை பகுதி பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பொதுக்கூட்டங்களை நடத்திய இடம். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தான் பிரசாரம் செய்தார். அந்தவகையில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு திருச்சி திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் மக்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
    • பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

    சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் மக்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக நவீன ரக பஸ்சை விஜய் பயன்படுத்த உள்ளார். இந்த பஸ்சில் தொண்டர்கள் யாரும் ஏறி விடாதபடி இரும்பு வேலிகள் பஸ்சின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. நவீன கேமராக்கள், ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளது.

    மக்கள் சந்திப்புக்காக விமானம் மூலம் விஜய் திருச்சி செல்கிறார். அவரது பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது.

    இன்று காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    அரியலூரில் விஜய் பிரசாரத்திற்கு 25 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    • என் கதாபாத்திரம் என்னவென்று எனக்கே புரியவில்லை.
    • இவ்வளவு பெரிய எதிர்வினை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த ஆகஸ்டு மாதம் 14ம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.

    இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியானது.

    இந்நிலையில், கூலி படத்தில் தான் நடித்த கதாப்பாத்திரம் குறித்து பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர் கான் வெளிப்படையாக பேசியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ரஜினி சாருக்காக கூலி படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என் கதாபாத்திரம் என்னவென்று எனக்கே புரியவில்லை.

    நான் படத்தில் ஏதோ உள்ளே வந்து ஒரு சில வசனங்களை பேசிவிட்டு மறைந்ததைப்போன்று தான் உணர்ந்தேன். உண்மையான நோக்கம் படத்தில் எதுவும் இல்லை. அதன் பின்னால் எந்த யோசனையும் இல்லை. எனது கதாப்பாத்திரம் மோசமாக எழுதப்பட்டது.

    நான் இப்படத்தில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவில்லை, எனவே இறுதி தயாரிப்பு எப்படி இருக்கும் என்றும் எனக்குத் தெரியவில்லை.

    எனது கதாப்பாத்திரம் ஒரு வேடிக்கையான தோற்றமாக இருக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால் அது வெற்றிபெறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வளவு பெரிய எதிர்வினை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

    ஆனால் திரும்பிப் பார்க்கும்போது, மக்கள் ஏன் ஏமாற்றமடைந்தார்கள் என்பது எனக்குப் புரிகிறது. கூலி படத்தில் நான் நடித்தது ஒரு பெரிய தவறு. எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என ஆமிர் கான் கூறியதாக நேற்று தகவல்கள் பரவியது. மேலும் அவர் கூறி அது ஆங்கில பத்திரிக்கைகளில் வெளியானது போல ஒரு புகைப்படம் இணைய தளத்தில் வெளியானது. தற்போது அது ஏ.ஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது எனவும். ஆமிர் கான் அப்படி எந்தவித கருத்தும் முன் வைக்கவில்லை என கூறப்படுகிறது.

    • வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
    • தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    இது, அடுத்த 2 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.
    • அதிக அளவில் வரிகளை விதித்து மக்கள் மீது திமுக சுமைகளை ஏற்றி வைத்துள்ளது.

    மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இன்று திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திருப்பூர் மண்ணிலே பிறந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நாட்டின் உயரிய பதவி கிடைத்திருப்பது தமிழக மக்களுக்கு பெருமை.

    திமுக ஆட்சி பொறுப்பேற்று 52 மாதத்தில் ஒரு புதிய திட்டம் கூட திருப்பூருக்கு கொண்டுவரப்படவில்லை.

    தொழிலாளர்கள், ஏழைகள் நிறைந்த பகுதியான திருப்பூரில் அரசு மருத்துவமனையை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம்.

    அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது.

    திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அதிக அளவில் வரிகளை விதித்து மக்கள் மீது திமுக சுமைகளை ஏற்றி வைத்துள்ளது.

    கஞ்சா விற்பனைக்கு திமுக ஆட்சியாளர்கள் துணை போகிறார்கள். போதைப்பொருள் தங்குதடையின்றி கிடைக்கிறது.

    தமிழ்நாட்டில் போதைப் பொருளை கட்டுப்படுத்தாமல் ஓய்வு பெறும் வரை ஓ போட்டவர் முன்னாள் டிஜிபி.

    கொங்கு மண்டலத்தில் முதிய தம்பதிகளை குறிவைத்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
    • லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    இது, அடுத்த 2 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும்.
    • கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நம் வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (13.09.2025) முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து, தொடர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார் என்பதை அனைவரும் அறிவீர்கள். தமிழக வெற்றிக் கழகம், தகுதி மற்றும் பொறுப்பு மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. நம் தலைவர் அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் எல்லையில்லா அன்பினால் மனம் நெகிழ்ந்துள்ள அவர், இந்தச் சுற்றுப் பயணத்தின்போது உங்களைச் சந்திப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார்.

    ஆனாலும் தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் அவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே நம் வெற்றித் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.

    1. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    2. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    3. நம் கழகத் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போதும், தலைவர் அவர்களின் வருகை உள்ளிட்டவற்றின்போதும் கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    4.காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

    5. வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

    6. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

    7. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    8. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    9. மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

    பள்ளி 10.தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.

    11. காவல் துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.

    12.தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் நிதானமாகக் கலைந்து செல்ல வேண்டும்.

    நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்றி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    • புதுதில்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும்.

    நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று இந்தியா திரும்பிவிட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டுவருவதற்கு புதுதில்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாள நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்டுவர புதுதில்லி, தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

    நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த தமிழ்நாட்டைச் சார்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று (11.09.2025) இந்தியாவிற்கு திரும்பிவிட்டனர்.

    மேலும், நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும். நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கும் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24x7 கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    தொலைபேசி எண்: 011-24193300

    கைபேசி எண்: 9289516712 (whatsApp)

    மின் அஞ்சல்: Inhouse@tn.gov.in. proofficetnh@gmail.com

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஒன்றிய அரசு சில சுரங்கத் திட்டங்களுக்கு பொது மக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
    • அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையினைத் திரும்ப பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பிரிவால் 08.09.2025 அன்று (எண். IA-Z-11013/136/2025-IA-I) வெளியிடப்பட்டுள்ள அலுவலகக் குறிப்பாணையின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அந்தக் குறிப்பாணையின் மூலம், பகுதி B-ல் அறிவிக்கப்பட்ட அணு கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி D-ல் அறிவிக்கப்பட்ட முக்கியமான மற்றும் அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும், அத்தகைய அனைத்துத் திட்டங்களும் சம்பந்தப்பட்ட குத்தகைப் பகுதியின் அளவைக் கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் கடற்கரை மணல் அமைப்புகளில் படிந்துள்ள அரிய மண் கனிம கூறுகளின் படிவுகளைக் கொண்டுள்ளன என்றும், இந்தக் கடற்கரைகள் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவின் மணல் கடற்கரைகள் அழிந்து வரும் ஆமைகளின் இனப்பெருக்கம், பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு தாயகமாக உள்ளன என்றும், அவை கடலரிப்பு மற்றும் சூறாவளி நிகழ்வுகளுக்கு எதிராக இயற்கைக் கேடயங்களாகச் செயல்படுகின்றன என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    மேலும், இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்லுயிரியலை நிலைநிறுத்துகின்றன கரையோரங்களை உறுதிப்படுத்துகின்றன: கார்பனை பிரித்தெடுக்கின்றன மற்றும் கடல் அரிப்பிலிருந்து சமூகங்களைப் பாதுகாக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய பகுதிகளில் சுரங்கம் என்பது இயல்பாகவே சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கொண்டது என்றும், எனவே, உள்ளூர் சமூகங்களின் முழுமையான ஈடுபாட்டுடன் கடுமையான ஆய்வு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    1997-ம் ஆண்டு திருத்தப்பட்ட 1994-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிப்பு, கட்டாய பொது மக்கள் கருத்துக் கேட்புகளை அறிமுகப்படுத்தியது என்பதை நினைவு கூர்ந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தப் பங்கேற்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி, ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    இந்தப் பாதுகாப்பு 2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிப்பில் வலுப்படுத்தப்பட்டது என்றும், பொது மக்கள் கருத்துக் கேட்பிருந்து திட்டங்களுக்கு விலக்கு அளிப்பது என்பது, வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான நியாயமான கவலைகளை எழுப்பும் உள்ளூர் சமூகங்களின் உரிமையைப் பறிக்கும் என்றும், இது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தும் என்றும் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

    ஒன்றிய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தக் குறிப்பாணை, கடுமையான சட்டரீதியான கவலைகளையும் எழுப்புகிறது என்றும், மாண்புமிகு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த காலங்களில் சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீர்த்துப்போகச் செய்யும் இத்தகைய அலுவலகக் குறிப்பாணைகளை ரத்து செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு 5 , Alembic Pharmaceuticals Ltd. v. Rohit Prajapati & Ors. (2020) வழக்கில், மாண்புமிகு உச்சநீதிமன்றம், அலுவலகக் குறிப்பாணைகள் போன்ற நிர்வாக அறிவுறுத்தல்கள் மூலம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) கட்டமைப்பில் கணிசமான திருத்தங்களைக் கொண்டு வரமுடியாது என்றும், அத்தகைய கருவிகள் சட்டப்பூர்வ அறிவிப்புகளை மீற முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், தற்போதைய அலுவலகக் குறிப்பாணை பொது மக்கள் கருத்துக் கேட்பிற்கு வழிவகுக்காமல், அனுமதிக்க முடியாத நிர்வாகச் சட்டத் திருத்தத்திற்குச் சமமாக உள்ளது என்றும், எனவே இது நிலைக்கத்தக்கதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்கள் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும், மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் உரிய ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மேற்கூறிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளியிடப்படும் இத்தகைய அறிவிப்புகள் கூட்டாட்சி உணர்வுக்கும், நமது நாட்டின் மக்களாட்சி நெறிமுறைகளுக்கும் எதிரானதாக இது அமையும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு. 08.09.2025 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணைமய உடனடியாகத் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை தான் வலியுறுத்துவதாகவும். கடந்த காலங்களில் எப்போதும் செய்யப்பட்டது போல. நாட்டின் முன்னேற்றத்திற்கு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு பங்களிப்பதற்கான தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை இத்தருளணத்தில் மீண்டும் தான் வலியுறுத்த விரும்புவதாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ×