என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதனிடையே, இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 28-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக் குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.
- கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக் குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.
தற்போது, 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட உள்ளது. கலைமாமணி விருது வழங்கக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்திட கலைப் பிரிவு வாரியாக வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன.
மேற்படி வல்லுநர் குழுக்களால் அளிக்கப்பட்ட தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவித்து உள்ளது.
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.
மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ந.முருகேச பாண்டியன், எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) - பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ், பாலசரசுவதி விருது (நாட்டியம்) - பத்மஸ்ரீ முத்து கண்ணம்மாள்.
அகில இந்திய விருது பெறும் கலை வித்தகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் சிறந்த கலை நிறுவனத்திற்கான கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற் கேடயம் பெறுவதற்குரிய கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழு கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறந்த கலை நிறுவனம் -தமிழ் இசைச் சங்கம், சென்னை (ராஜா அண்ணா மலை மன்றம்), சிறந்த நாடகக் குழு-கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றம், பாலமேடு, மதுரை மாவட்டம்.
சிறந்த கலை நிறுவனத்திற்கு வழங்கப்படும் கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கு வழங்கப்படும் சுழற் கேடயத்துடன் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில், 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள், அகில இந்திய விருதுகள், சிறந்த கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழுவினருக்கான கேடயங்கள் ஆகியவை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்படும்.
எழுத்தாளர்- க.திருநாவுக்கரசு, இயற்றமிழ்க் கவிஞர்- கவிஞர் நெல்லை ஜெயந்தா, சமயச் சொற்பொழிவாளர்- எஸ்.சந்திர சேகர் (எ) தங்கம் பட்டர், குரலிசை- பாபநாசம் அசோக் ரமணி, திருமறை தேவார இசை-பா.சற்குரு நாதன் ஓதுவார், தமிழிசைப் பாடகர்- டி.ஏ.எஸ்.தக்கேசி, மிருதங்கம்- திருச்சூர் சி.நரேந்திரன், கோட்டு வாத்தியம் - என்.நரசிம்மன், நாதசுர ஆசிரியர்- கோ.பில்லப்பன், நாதசுரம்- திருக்காட்டுப்பள்ளி டி.ஜே.சுப்பிரமணியன், கல்யாணபுரம் ஜி.சீனிவாசன், தவில் - திருவல்லிக்கேணி கே.சேகர், பரதநாட்டிய ஆசிரியர் - வழுவூர் எஸ்.பழனியப்பன், பரதநாட்டியம் - பிரியா கார்த்திகேயன்,
நாடக நடிகர்- பூச்சி எஸ்.முருகன், நாடக இயக்குனர் - காரைக்குடி நாராயணன், ஆர்மோனியம்- என்.ஏ. அலெக்ஸ், திரைப்பட நடிகர் - எஸ்.ஜே.சூர்யா, திரைப்பட நடிகை - சாய் பல்லவி, திரைப்பட இயக்குனர் - லிங்குசாமி, திரைப்பட அரங்க அமைப்பாளர்- ஜே.கே. (எ) எம்.ஜெயகுமார், திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் - சூப்பர் சுப்பராயன்,
சின்னத்திரை நடிகர்- பி.கே.கமலேஷ், இசை நாடக நடிகர் - எம்.பி. விசுவநாதன், கிராமியப் பாடகர் - வீர சங்கர், பொய்க்கால் குதிரை ஆட்டம் - நா. காமாட்சி, பெரிய மேளம்- எம்.முனுசாமி, நையாண்டிமேள நாதஸ்வரம்- பி.மருங்கன், வள்ளி ஒயில்கும்மி- கே.கே.சி.பாலு, ஓவியர்- வே.ஜீவானந்தன்.
எழுத்தாளர் - சாந்த குமாரி சிவகடாட்சம், இலக்கியப் பேச்சாளர் - தி.மு.அப்துல்காதர், சமயச் சொற்பொழிவாளர் -சு.முத்துகணேசன், குரலிசை- ஜெயஸ்ரீ வைத்தியநாதன், சாரதா ராகவ், வயலின்- பகலா ராமதாஸ், மிருதங்கம் -நெய்வேலி ஆர்.நாராயணன், நாதசுரம் - செம்பனார் கோவில் எஸ்.ஜி.ஆர்.எஸ்.மோகன் தாஸ், சித்துக்காடு டி.ஜி.முருகவேல், தவில் - திருக்கடையூர் டி.ஜி.பாபு, சுதா காலட்சேபம்- சுசித்ரா பாலசுப்பிரமணியன், பரதநாட்டிய ஆசிரியர்- அமுதா தண்டபாணி, பாகவத மேளா-சுப்பிரமணிய பாகவந்தர், பரதநாட்டியக் குரலிசை - சுவாமிமலை கே.சுரேஷ்,
நாடக நடிகர்- பொன் சுந்தரேசன், நாடக இயக்குனர் - கவிஞர் ரா.நன்மாறன், நாடகத் தயாரிப்பாளர் - சோலை ராஜேந்திரன்,
திரைப்பட நடிகர் - விக்ரம் பிரபு, திரைப்பட நடிகை- ஜெயா வி.சி.குகநாதன், திரைப்பட பாடலாசிரியர் - விவேகா, திரைப்பட செய்தித் தொடர்பாளர்- டைமண்ட் பாபு, திரைப்பட புகைப்படக் கலைஞர் - டி.லட்சுமி காந்தன், சின்னத்திரை நடிகை- மெட்டிஒலி காயத்ரி, இசை நாடக நடிகர் - என்.சத்தியராஜ்,
தேவராட்டம்- ந.ரஞ்சி தவேல் பொம்மு, பொம்மலாட்டம்- மு.கலைவாணன், தப்பாட்டம்- எம்.எஸ்.சி.ராதா ரவி, நையாண்டி மேள நாதஸ்வரம் - கே.பாலு, பண்பாட்டுக் கலை பரப்புனர் - ஆர்.சாமிநாதன், ஓவியர்- கே.லோகநாதன்.
இயற்றமிழ்க் கவிஞர் - கே.ஜீவபாரதி, குரலிசை - ஆர்.காசியப் மகேஷ், வீணை- ஹேமலதாமணி, கிளாரினெட்- வே.பிரபு, நாதசுரம் - பி.பி.ரவிச் சந்திரன், ஞான நடராஜன், எம்.எஸ்.ஆர்.பரமேஸ்வரன், தவில் - ராமஜெயம் பாரதி, பா.ராதாகிருஷ்ணன், பரதநாட்டிய ஆசிரியர் - க.தனசுந்தரி, குச்சுப்பிடி நாட்டியம் - வி.ஜெயப் பிரியா,
பரதநாட்டியக் குரலிசை - கே.ஹரிபிரசாத், பழம் பெரும் நாடக நடிகர்- என்.ஜோதிகண்ணன், நாடக நடிகர்- வானதிகதிர் (எ) பெ.கதிர்வேல், விழிப்புணர்வு நாடக நடிகர் - வி.கே.தேவநாதன், திரைப்பட நடிகர் - கே.மணி கண்டன், திரைப்பட குணச் சித்திர நடிகர் - எம்.ஜார்ஜ் மரியான், திரைப்பட இசை அமைப்பாளர்- அனிருத், திரைப்பட பின்னணிப் பாடகி - ஸ்வேதா மோகன், திரைப்பட நடன இயக்குனர்- சாண்டி (எ) அ.சந்தோஷ்குமார், திரைப்பட செய்தித் தொடர்பாளர் - நிகில் முருகன், சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்- என்.பி.உமாசங்கர் பாபு, சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்- அழகன் தமிழ்மணி, இசை நாடக நடிகர்- ஏ.ஆர்.ஏ.கண்ணன், இசை நாடக நடிகை- ஆர்.எம்.தமிழ்ச் செல்வி, தெருக்கூத்து- கே.எம்.ராமநாதன், வில்லுப்பாட்டு- டி.ஜெகநாதன், நையாண்டி மேள தவில்- சி.மகாமணி, கிராமியப் பாடல் ஆய்வாளர்- ஆ.சந்திரபுஷ்பம், சிற்பி-சு.தீனதயாளன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தி.மு.க.வில் உள்ள அனைத்து பதவிகளையும் கருணாநிதி குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர்.
- காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொல்கிறார்.
ஊட்டி:
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
கூடலூர் பஸ் நிலையம் அருகே இன்று திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதல் இடம் பிடிப்பதற்கு அ.தி.மு.க. தான் காரணம். அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கையை 54 சதவீதமாக உயர்த்தியது அ.தி.மு.க அரசு தான். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, கல்வியில் புரட்சி செய்தது அ.தி.மு.க.
தி.மு.க. 4 ஆண்டு ஆட்சியில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியாவது கொண்டு வரப்பட்டதா? மத்திய அரசு கொடுக்கவில்லை என்பார்கள். ஆனால் அது தவறு. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம்.
நேற்று உதயநிதி ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார். அப்படியா செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் முதல் ரோல் மாடல் தான் ஸ்டாலினின் அரசு. கமிஷன், ஊழலில் ரோல்மாடல் தி.மு.க., குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் மற்றும் ஸ்டிக்கர் ஓட்டி திறப்பதில் ரோல் மாடல் தி.மு.க தான்.
எதிர்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் 525 வாக்குறுதிகளை கொடுத்தார். அதில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அத்தனையும் பொய். அதிலும் நீங்கள் ரோல் மாடல் தான். போட்டோ சூட் நடத்துவதிலும் நீங்கள் தான் ரோல் மாடல்.
கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தி.முக.வோடு அங்கம் வகிப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொல்கிறார். சாறை முழுவதுமாக குடித்து விட்டு சக்கையை வழங்குகிறார்கள் என தெரிவித்து இருந்தார்.
உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினையும், ஸ்டாலின் உதயநிதியையும் புகழ்ந்து பேசுகிறார்கள். இவர்கள் போதாது என்று இப்போது துர்கா ஸ்டாலினும் வந்து விட்டார். அவரும் ஸ்டாலினை புகழ்கிறார். இவர்களை நாட்டு மக்கள் புகழ்ந்து பேசவில்லை. குடும்ப மக்கள் தான் அவர்களை புகழ்ந்து பேசிக் கொள்கின்றனர்.
தி.மு.க.வில் உள்ள அனைத்து பதவிகளையும் கருணாநிதி குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர். தி.மு.க. குடும்ப கட்சி. கருணாநிதி குடும்பம் இருக்கும் வரை தி.மு.க.வில் யாரும் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. உழைப்பை சுரண்டும் குடும்பம் ஸ்டாலின் குடும்பம்.
நாட்டில் உள்ள எந்த கட்சியாலாவது இப்படி குடும்ப ஆட்சி நடப்பதை பார்க்க முடிகிறதா? கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் வரமுடியும். இப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? ஒரு குடும்பம் 8 கோடி மக்களை சுரண்டி பிழைப்பதற்கு நாம் அனுமதிக்கலாமா? இதற்கு ஒரு முடிவு கட்டுவிங்களா? என மக்களை பார்த்து கேட்டார்.
செல்வப்பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர். இவர் பல கட்சிகளுக்கு போய்விட்டு வந்து விட்டார். காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் ஆட்சியில் பங்கு கேட்டு பேசி வருகின்றனர். ஆனால் இவர் சொல்கிறார் ராகுல்காந்தி ஆட்சியில் பங்கு கேட்க சொல்லவில்லை என சொல்கிறார். உண்மையில் ஒரு காங்கிரஸ் தொண்டனாக இருந்திருந்தால் அந்த எண்ணம் இவருக்கு வந்திருக்குமா?. அவர் தி.மு.க.வை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பார்க்கவில்லை.
செல்வப்பெருந்தகை காங்கிரசுக்கு விசுவாசமாக இல்லை. தி.மு.க.வுக்கு தான் விசுவாசமாக உள்ளார்.
தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு வந்துவிட்டது. ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தி.மு.க கூட்டணி நிலையான கூட்டணியாக உள்ளது. ஆனால் அ.தி.மு.க அடிக்கடி கூட்டணி மாறுவதாக சொல்கிறார்கள்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை எப்போதும் கூட்டணியை நம்பி இருந்தது இல்லை. ஆனால் தி.மு.க எப்போதும். கூட்டணியை நம்பி தான் இருக்கிறது. மக்கள் எங்களோடு கூட்டணி வைத்துள்ளார்கள். 2026 தேர்தலில் அ.தி.மு.க வெல்லும். ஆட்சிக்கு வரும். அதனை ஸ்டாலின் பார்க்க தான் போகிறார்.
மக்களின் எழுச்சியே எங்களது ஆட்சி வருவதற்கான அடையாளம். தேர்தலில் அ.தி.முக. தான் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்துக்கு தான் தற்போது மற்ற கட்சிகள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.
அ.தி.மு.க. பா.ஜ.க.வின் அடிமை என ஸ்டாலின் பேசுகிறார். தலைவன் மட்டும் அல்ல தொண்டன் கூட யாருக்கும் அடிமை இல்லை. நாங்கள் சொந்த காலில் நிற்கிறோம்.
உங்களை போன்று கூட்டணியை நம்பி இல்லை. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. தேர்தல் நேரத்தில் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்கே கூட்டணி அமைக்கிறோம். உங்களை போன்று பல கட்சிகளை கூட்டணியில் வைத்து அவர்களை அடிமையாக்க நாங்கள் விரும்பவில்லை. எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தி.மு.க. தான் நியமிக்கிறது. தி.மு.க. யாரை பரிந்துரை செய்கிறதோ அவரை தான் காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கிறது. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி தி.மு.க.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.ம.வேலு சாமி, மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- விஜய் பிரசாரம் செய்யும் பகுதிகளில் போலீசார் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.
திருச்சி:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 13-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் நாளான 13-ந் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டார். ஆனால் திருச்சியில் திரண்ட கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் பிரசாரம் தாமதமானது.
அரியலூரில் நள்ளிரவை கடந்து பிரசாரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்று பெரம்பலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
3-வது கட்ட பிரசாரம் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சென்னை பிரசாரம் வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டது. அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
27-ந் தேதி காலையில் நாமக்கல்லிலும் பின்னர் கரூரிலும் பிரசாரம் செய்ய உள்ளார். விஜய் பேசுவதற்கு கரூரில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், வெங்கமேடு எம்ஜிஆர் சிலை அருகில், ஈரோடு ரோடு வேலுச்சாமிபுரம், 80 அடி சாலை ஆகிய நான்கு இடங்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் தேர்வு செய்துள்ளனர்.
இதற்காக காவல்துறை அனுமதி கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று அல்லது நாளை கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே விஜய் பிரசாரம் செய்யும் பகுதிகளில் போலீசார் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் கரூரில் அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ள 4 இடங்களில் ஏதேனும் ஒரு இடம் பிரசாரத்துக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.
விஜய் கரூர் வருகையை முன்னிட்டு அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய்க்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
- மக்களுக்கு சுமையாக இருந்தோம் என தோல்வியை ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.
- 2026 தேர்தல் மற்றவர்களுக்கு ஒரு தேர்தல். எங்களுக்கு அப்படி இல்லை.
சென்னை:
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அவருடைய உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
நடிகை விஜயலட்சுமிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருப்பதாக கேட்கிறீர்கள். நீங்களாக ஒரு தீர்ப்பை எழுதக்கூடாது.
முதலில் ஜி.எஸ்.டி. வரியை விதித்தது யார்.? அதன் பின்பு வரியை குறைத்தது யார்.? ஏன் குறைத்தார்கள் என்றால் இந்த வரி மக்களுக்கு சுமையாக இருந்தது.
சுமையாக இருக்கும் என்று கூட தெரியாமல் வரியை விதித்த நீங்கள் என்ன ஆட்சியாளர்? என்ன தலைமை? இதில் பயன் இருக்குமா? வளர்ச்சிக்கு உதவுமா இல்லை வீழ்ச்சிக்கு தள்ளி விடுமா என்று கூட தெரியாமல் அதிகாரத்திற்கு எப்படி வந்தீர்கள்?
மக்களுக்கு சுமையாக இருந்தோம் என தோல்வியை ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேட்கவேண்டும். இதேபோல் தான் பணம் செல்லாது என்று சொன்னார்கள். அதனால் நடந்த ஒரே ஒரு நம்மை யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்..? இதனால் ஊழல் ஒழியும் என்றார்கள் ஒழிந்துவிட்டதா?
2026 தேர்தல் மற்றவர்களுக்கு ஒரு தேர்தல். எங்களுக்கு அப்படி இல்லை. இது ஒரு தேசிய இனத்தின் விடுதலை. பா.ஜ.க. என் கொள்கை எதிரி திமுக என் அரசியல் எதிரி என்று விஜய் பேசுகிறார்.
அப்போது தி.மு.க.வின் கொள்கையில் உடன்பாடா? பா.ஜ.க.வின் அரசியல் செயல்பாடுகளில் உங்களுக்கு உடன்பாடா?
பா.ஜ.க. கொள்கை எதிரி என்றால் காங்கிரஸ் உங்கள் கொள்கை நண்பனா? என்ற கேள்வி வருகிறது. பா.ஜ.க. கொள்கைக்கும், காங்கிரஸ் கொள்கைக்கும் ஒரே ஒரு வேறுபாடு காட்டுங்கள்.
பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒரே கொள்கைதான். கட்சியின் பெயர்தான் வேறு. கொடியில் வண்ணம் மாறும் கொள்கையில் எண்ணம் மாறாது.
விஜய்யை எதிர்த்து வலுவான கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள் வரும் தேர்தலில் விஜய் எதிர்த்து போட்டியிடுவீர்களா என்று கேட்கிறீர்கள். இதுபோன்று சிறுபிள்ளைத்தனமாக கேட்கக்கூடாது. அண்ணன் தம்பி இடையே சண்டையை இழுத்து விடாதீர்கள். எங்களுக்குள் கருத்து முரண் இருக்கின்றது அதை சரி செய்துகொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம்.
உன் மேல் இருக்கும் அக்கறையில் அவருடைய கருத்துக்களை எதிர்த்து வருகிறேன். 'அடுத்தவன் பேச்சை கேட்காதே அண்ணன் பேச்சைக் ஒருமுறை கேளு' உனக்கு எழுதி கொடுப்பவர்கள் தப்பு தப்பாக எழுதிக் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறேன். அது அவருக்கு புரியவில்லை.
இவ்வாறு சீமான் கூறினார்.
தாய் பாசம் உள்ள தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நாகையில் விஜய் பேசிய கருத்திற்கு பதில் அளித்த அவர், கொடுக்கட்டும் கொடுக்கட்டும். என் தம்பி விஜய் திடீரென்று மீனவர்கள், ஈழத்தமிழர்கள் பற்றி பேசுவது மோடி தமிழில் திருக்குறள் சொல்வது போல உள்ளது என்றார்.
- பத்திரிகை உலகில் முடிசூடா மன்னர், பன்முக தன்மை கொண்டவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
- தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு சென்னையில் எம்.ஜி.ஆர். காலகட்டத்தில் சிலை அமைக்கப்பட்டது.
நெல்லை:
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
பத்திரிகை உலகில் முடிசூடா மன்னர், பன்முக தன்மை கொண்டவர், அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டு அவர்களால் அன்போடு சின்னையா என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த மணிமண்டபம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆய்வு கூட்டம் மற்றும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தபோது தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கோரிக்கையை ஏற்று மணிமண்டபம் கட்டுவதற்கு உடனடியாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து அப்போது செய்தித்துறை அமைச்சராக இருந்த நான், முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் மணிமண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் புகழுக்கு காலத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த மணிமண்டபம் அ.தி.மு.க. அரசால் கட்டப்பட்டது. தொடர்ந்து இதனை பொதுமக்களும் கலந்து கொள்ளும் விதமாக மிகப்பெரிய விழாவாக நடத்தி எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பல்வேறு மன்னர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்ட நிலையில், பத்திரிகை உலகை சேர்ந்தவருக்கு சிலை அமைத்த முதல் பெருமை அ.தி.மு.க.வுக்கு தான் இருக்கிறது. இதே போல் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு சென்னையில் எம்.ஜி.ஆர். காலகட்டத்தில் சிலை அமைக்கப்பட்டது. அவரது பிறந்தநாள் விழாவையும் அரசு விழாவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் அறிவித்தார்.
சி.பா. ஆதித்தனார் மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆகியோரது புகழுக்கு மேலும் புகழ் சேர்த்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சிதான் என்ற பெருமை எங்களுக்கு எப்போதும் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
- பா.ஜ.க. கூட்டணியில் இருப்பது எங்க விருப்பம். உங்களுக்கு ஏன் வலிக்கிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போகின்ற இடமெல்லாம் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சியில் ஒரே குடும்பமான கோபாலபுரத்து குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழகத்தில் விலைவாசியை உயர்த்தி உள்ளனர். ஆனால் கூலியும், சம்பளமும் உயரவில்லை. ஊழல் மட்டும் உயர்ந்துள்ளது. தி.மு.க.வில் குடும்பத்தினரை தவிர வேறு யாரு முதலமைச்சராக அந்த இயக்கத்தில் வர முடியாது. சாதாரண தொண்டனாக இருந்த எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளராக வந்துள்ளார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டதில் இருந்து ஸ்டாலினுக்கு தூக்கம் போச்சு. இந்தியாவை 11 ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருக்கிற ஒரு பிரதமராக மோடி இருக்கிறார். பா.ஜ.க.-அ.தி.மு.க. குறித்து பேச ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத இடமே இல்லை. இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலை நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம் நடத்திய போது முதலமைச்சர் ஸ்டாலின் ரஜினி படம் பார்த்து கொண்டிருந்தார். பா.ஜ.க. கூட்டணியில் இருப்பது எங்க விருப்பம். உங்களுக்கு ஏன் வலிக்கிறது. அ.தி.மு.க. எத்தனை பிரிவாக இருந்தால் உங்களுக்கு என்ன, அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு சாத்தியம் இல்லை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவரை கட்சியில் ஏன் சேர்க்க வேண்டும். பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.விற்கும் நல்ல பெயர் வந்துவிட கூடாது என ஸ்டாலின் நினைக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- ‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 90-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 'தினத்தந்தி' குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மாலதி சிவந்தி ஆதித்தன், அனிதாகுமரன், சம்யுக்தா ஆதித்தன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-
முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் மனோ தங்கராஜ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், ஓய்வு பெற்ற வருமான வரித்துறை முதன்மை ஆணையர் மகாலிங்கம்,
தி.மு.க. சார்பில் வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம், விவசாய அணி மாநில துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன், வர்த்தகர் அணி நிர்வாகிகள் தமிழ்மணி, சுரேஷ், ராஜமாணிக்கம், கனிமொழி, அல்லிராஜ், சரவணன் சீனிவாசன், வெங்கடேசன், ரங்கநாதன், பாபு, ஆறுமுகம், தி.நகர் சீனிவாசன், கோபி, ரஞ்சித், ஆனந்தன், பாலாஜி.
இலக்கிய அணி துணை செயலாளர்கள் இ.சி.சேகர், கே.எஸ்.மலர்மன்னன்,
காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ் எம்.பி., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் தி.நகர் ஸ்ரீராம், சைதை வில்லியம்ஸ், புதூர் பிரகாஷ், நந்தனம் ஆதியார், அருள் பெத்தையா, ஜி.கே.தாஸ், சிவாஜிநாதன், சேவியர்.
த.மா.கா. பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராஜம் எம்.பி.நாதன், ஆர்.எஸ்.முத்து, மாவட்ட தலைவர் சென்னை நந்து, எஸ்.ஆர்.கேஸ்டில் ரவி,
சமத்துவ மக்கள் கழக தலைவரும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன், மாநில பொருளாளர் கண்ணன், துணை பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி, வண்ணாரப்பேட்டை நாடார் சங்க செயலாளர் ராஜேஷ், கடையல் நாடார் சங்கத் தலைவர் தாஸ், ஆலடிப்பட்டி நாடார் இளைஞர் சங்க தலைவர் மாசிலாமணி, அத்திகுளம் நாடார் சங்க பொருளாளர் சங்கரபாண்டியன், சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு உறுப்பினர் சாபுதீன்.
நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், இணை செயலாளர் மாரிமுத்து, நிர்வாகிகள் சந்திரமோகன், கரு.சின்னதுரை, மனோக ரன், கிப்சன், முருகேசன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நிர்வாகிகள் பாஸ் கர், பத்மநாபன், மருதவேல், மேகவேல்.
தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் என்ஜினீயர் டி.விஜயகுமார், நாடார் சங்கங்களின் கூட் டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் நாடார்.
சேலம் நாடார் சங்க துணைத் தலைவர் மாடசாமி, திருச்சி அனியாப்பூர் நாடார் சங்க தலைவர் அமுல்நாதன், செயலாளர் ராஜேந்திரன், ஆலந்தூர் வட்டார நாடார் சங்க தலைவர் கணேசன் நாடார், துணை தலைவர் கதிரேச பெருமாள், பொருளாளர் லட்சுமணன், கமிட்டி உறுப்பினர் ஸ்டீபன்,
திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் சுந்தர், செயலாளர் திருபுகழ், பொருளாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் ராஜதுரை, மாணிக்கவேல், அரிதாஸ், தாமஸ், பச்சையப்பன், வில்சன், தேவசகாயம், மாசானமுத்து, ராமசாமி, சுரேஷ் பொன்ராஜ், குணசீலன், தங்கராஜ், திருமலை, ராமகிருஷ்ணன், முருகேசன்.
நாடார் தேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள் படப்பை சேவியர், சைமன் பொன்ராஜ், முருகேசன், ஆலயா ரமேஷ் கண்ணன், ஆல்பர்ட் தேவதாஸ்,
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், பொதுச்செயலாளர் ஜெகதீஷ் சவுந்தர்முருகன், பொருளாளர் நசீர் அகமது, துணை செயலாளர் பால முனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காயல் இளவரசு, ஆறுமுக நயினார், அயன்புரம் கிளை மன்ற நிர்வாகிகள் பிரபு சவுந்தர் முருகன், சந்திரசேகர், சச்சிதானந்தம், துரைராஜ், பால்ராஜ், செங்குட்டுவன், ஜஸ்டின், பாலமுருகன், ராமலிங்கம், மனோகரன், நந்தகுமார், புகழ், அருண் பாண்டியன், சதீஷ், சிவபிரகாசம், பார்வதி செல்வன்,
மணலி புதுநகர் அய்யா வைகுண்டபதி தலைவரும், நற்பணி மன்ற மாவட்ட தலைவருமான துரை பழம், நிர்வாகிகள் ராமையா, வன்னியராஜன், பாண்டியன், மீஞ்சூர் கிளை நிர்வாகி வி.எஸ்.லிங்கம், திருத்தணி நகர நற்பணி மன்ற தலைவர் ராமச்சந்திரன், ஆர்.கே.நகர் பகுதி மன்ற தலைவர் வேல்ராஜா.
தென்காசி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற லோட்டஸ் முருகன், திருச்சி அனியாப்பூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் சிவக்குமார், துணை தலைவர் ராஜா, செயலாளர் காமராஜ், பொருளாளர் சந்திரன்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, நிர்வாகிகள் பாண்டியராஜன், ஜெகன், லயன்முருகன், செல்வம், தர்மராஜ், கார்மேகம், ஜான்வெஸ்லி, பாலன், தேவராஜ், வேல்குமார், டேவிட், அந்தோணி, முகைதீன், சத்தியரீகன், வில்வநாதன், தர்மலிங்கம், செல்வம், மீரான், தமிழ்நாடு வணிகர் மகாஜன சங்க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எட்வர்ட் ராஜா.
வடசென்னை வியாபாரி சங்கத் தலைவர் ராபர்ட், செயலாளர் சேவியர், துணை தலைவர் எட்வர்ட் துணை செயலாளர் செந்தில்.
பழைய வண்ணாரப் பேட்டை முருகன் டாக்கீஸ் பாலசுப்பிரமணியன்.
- கல்வி தான் கடைசி வரை துணையாக இருக்கும்.
- கல்வியால் பெறப்படும் அறிவை கொச்சைப்படுத்த பலர் முயற்சிக்கிறார்கள்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.22.14 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் கொளத்தூர் தொகுதி ரங்கசாமி தெருவில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, மேயர் முனுசாமி மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.
இதையடுத்து கொளத்தூர் தொகுதி சோமையா ராஜா தெருவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியை திறந்து வைத்த முதலமைச்சர் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* அனிதா அகாடமி நிகழ்ச்சிக்கு வந்ததால் களைப்பு விடுபட்டு உற்சாகம் வந்துள்ளது.
* ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர் அமைச்சர் சேகர்பாபு.
* கடமையை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டுள்ளது.
* என் உடலில் உயிர் இருக்கும் வரை என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன்.
* நான் இருக்கிறேன். யாரும் கவலைப்பட வேண்டாம்.
* கலைஞர் கற்றுத்தந்த உழைப்பை வைத்து உங்களுக்காக கடமையாற்றுவேன்.
* தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அனைவரும் உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
* கல்வி தான் கடைசி வரை துணையாக இருக்கும்.
* கல்வியால் பெறப்படும் அறிவை கொச்சைப்படுத்த பலர் முயற்சிக்கிறார்கள்.
* கவர்ச்சியான வார்த்தைகளை கூறி பின்னோக்கி இழுத்துச் சென்று விடுவார்கள்.
* உங்களுக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். மறந்து விட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு உள்ளன.
- மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
சென்னை:
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக தெரிவு செய்ய இன்று (24-ந்தேதி) முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க 2025-26-ம் கல்வியாண்டில் ஏழை எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும் என்பதற்காக பாடப்பிரிவுகளில் 15,000-க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப் பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு உள்ளன. கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க ஏற்கனவே 574 இடங்களுக்கு தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டது அதில் 516 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, மேலும், 881 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக இன்று முதல் தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி நாள் 8.10.2025 ஆகும். மேலும், 21.7.2025-ம் செய்தி அறிவிப்பின்படி, ஏற்கனவே கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும்போது, தங்களின் விண்ணப்ப எண்களை பதிவு செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.
தமிழ்நாடு அரசின் நெறி முறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீ டுகளின் அடிப்படையிலும் கவுரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார்.
- விக்டோரியா ஹாலின் முழு கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன
- புனரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், மீதமுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்று விக்டோரியா பப்ளிக் ஹால்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கும்- மாநகராட்சி கட்டிடத்துக்கும் இடையில் சிவப்பு வண்ணத்தில் கம்பீரமான கோபுரத்துடன் காட்சியளிக்கும் இந்த கட்டிடம் இந்தோ-சராசெனிக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
1882-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில், சென்னைக்கு பொதுவாக ஒரு அரங்கு கட்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு 1890-ம் ஆண்டு திருவாங்கூர் மகாராஜா, மைசூர் மகாராஜா, புதுக்கோட்டை அரசர் உள்ளிட்டவர்களின் உதவியுடன் ரூ.16,423 செலவில், சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 57 கிரவுண்ட் பரப்பளவில் விக்டோரியா பொது அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது.
அந்த ஆண்டு இங்கிலாந்து மகாராணி விக்டோரியா ராணியாகப் பட்டம் ஏற்று 50-வது ஆண்டு நிறைவு பெற்றிருந்தது. அதற்கான பொன் விழாவை ஆங்கிலேயர் அரசு கொண்டாடியது. இந்த விழா தொடங்கும் போது, இந்த கட்டடப் பணிகளும் நிறைவடைந்திருந்ததால், இந்த கட்டடத்திற்கு 'விக்டோரியா பப்ளிக் ஹால்' என்று ஆங்கிலேயரால் பெயர் சூட்டப்பட்டது.
பின்னர் சென்னை மாநகரத்தின் கலையரங்கமாகவும், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடமாகவும் மாறியது விக்டோரியா ஹால். 1893 -ம் ஆண்டு பிரம்ம ஞான சபையின் முதல் கூட்டம் விக்டோரியா அரங்கத்தில் தான் கூட்டப்பட்டது. 1897 -ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இங்கு பொதுக்கூட்டம் நடத்தி சொற்பொழிவாற்றியதும் உண்டு.
திராவிட கட்சிக்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சி முதன்முதலில் தனது பொதுக்கூட்டத்தை நடத்தியது விக்டோரியா ஹாலில் தான்.
மூன்று தளங்கள் கொண்ட இந்த விக்டோரியா அரங்கில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. கீழ்த்தளத்தில் மியூசியமும், நூலகமும் இருந்தன. முதல் தளத்தில் நாடகங்களும் பல கூட்டங்களும் நடத்தப்பட்டன. அந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி, கலைகளை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விக்டோரியா அரங்கம் கட்டப்பட்டதாகவும், சென்னையில் முதன் முதலில் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்கம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
இவ்வளவு பெருமைகளையும் கொண்ட விக்டோரியா பொது அரங்கத்தை, சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள 2023-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், விக்டோரியா ஹாலின் முழு கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
தற்போது வரை, நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு, மரத்தளம் மற்றும் மரப்படிகட்டுகள் சீரமைப்பு, கட்டடத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் ஆகிய பகுதிகள் சீரமைப்பு, கட்டடத்தின் மையப் பகுதியில் உள்ள கலை அரங்கங்கள் புதுப்பிக்கப்பட்டு வண்ண ஓவியங்கள் தீட்டப்படுவது போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், கட்டடம் முழுவதும் காண்போரை கவரும் வகையில், முகப்பு விளக்குகள் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது. முதல் தளத்தில் முக்கியஸ்தர்களின் நிர்வாக இடமாகவும், கலாச்சார இடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, விக்டோரியா ஹாலில் மேற்கூரையை சீரமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த பணிகளும் முழுவதுமாக நிறைவடைந்துள்ளன.
அதே போல், கட்டடத்தின் சுவர்களை சீரமைப்பது, சுண்ணாம்புப் பூச்சு வேலை, மரத்திலான படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, முதல் தளத்திலிருந்து மேல் தளங்களுக்கு செல்ல நவீன முறையில் "கண்ணாடி லிப்ட்" அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கென தனித்தனியாக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு வடிகால்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இப்போது கட்டடத்திற்கு வண்ணம் பூசுதல், ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட சில வேலைகள் மட்டுமே உள்ளன. மேலும், கட்டிடத்தின் வெளிப் பகுதியில் பசுமையான புல் தரைகள், கட்டடத்தைச் சுற்றியும் சிமெண்டில் ஆன இன்டர் லாக்கிங் கற்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன"
புனரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், மீதமுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்பட உள்ளது. அதனால் விக்டோரியா ஹாலை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அடுத்த மாதம் திறக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆன்லைன் மற்றும் செல்போன் வழியாக போன் செய்து தேவையான இனிப்புகளை ஆர்டர் செய்யலாம்.
- அரசு நிறுவனங்கள், தனியார் அலுவலகங்களிடம் இருந்து ஆர்டர் பெறப்படுகிறது.
சென்னை:
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனம் சிறப்பு இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறது.
பொதுமக்கள் தொழில் நிறுவனங்கள் ஆவின் இனிப்பு வகைகளை வாங்குவதற்கு வசதியாக ஆர்டர்கள் பெறப்படுகிறது.
ஆன்லைன் மற்றும் செல்போன் வழியாக போன் செய்து தேவையான இனிப்புகளை ஆர்டர் செய்யலாம். காஜு கத்திலி, காஜு பிஸ்தா, நட்ஸ் அல்வா, நட்ஸ் பாதுஷா ஆகிய சிறப்பு சுவீட்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் விலை கிலோ ரூ.700 முதல் ரூ.1000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர கோவா சுவீட், மைசூர்பாகு, மில்க் கேக், மில்க் பேடா, ரசகுல்லா, குலோப்ஜாமூன், பேரீச்சம் கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகள் கிலோ ரூ.450 மற்றும் ரூ.500-க்கு விற்கப்படுகிறது.
மேலும் மிக்சர், முறுக்கு, கார வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் ஆவின் சுவீட் வகைகளை குறைந்த விலையில் வாங்குவதற்கு வசதியாக 30 லட்சம் பால் பாக்கெட்டுகளிலும் ஆர்டர் கொடுக்கக்கூடிய தொடர்பு எண்.7358018395 அச்சிடப்பட்டுள்ளது. அதில் தொடர்பு கொண்டு ஆவின் சுவீட் வகைகளை முன்பதிவு செய்து பெறலாம்.
இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆயுத பூஜைக்கு தேவையான சுவீட் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்கள், தனியார் அலுவலகங்களிடம் இருந்து ஆர்டர் பெறப்படுகிறது. பொதுமக்கள் நந்தனம் ஆவின் பார்லர் மற்றும் சென்னையில் உள்ள 35 பார்லர்களிலும் ஆவின் சுவீட்டுக்கு முன்பதிவு செய்யலாம். நேரில் சென்றும் தேவையான அளவு வாங்கலாம்.
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் கூடுதலாக சுமார் 180 டன் சுவீட் தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






