என் மலர்
உள்ளூர் செய்திகள்
- முன்பெல்லாம் திருமணம் என்றால், உணவுக்குத்தான் அதிகப்படியாக செலவாகும்.
- முன்பெல்லாம் திருமணம் என்றால், உணவுக்குத்தான் அதிகப்படியாக செலவாகும்.
இந்தியாவில் தற்போது மிகப்பெரிய வணிகமாக மாறியிருக்கிறது திருமண நிகழ்வுகள். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த திருமண நிகழ்வுடன் தற்போது நடக்கும் திருமணங்களை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. பார்க்கவும் கூடாது.
வருவாய் உயர்வு மற்றும் செலவிடும் திறன் அதிகரித்திருப்பது போன்றவை ஆடம்பர திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டன. வாழ்வில் மறக்க முடியாத தருணம் தான் திருமணம். ஆனால்.. அதற்காக இப்படியா? என்று வாய்பிளக்க வைக்கிறார்கள்.
இந்தியாவில், தை, மாசி போன்ற முகூர்த்த காலங்களில் 40 லட்சம் திருமணங்கள் நடக்கின்றன. இதற்கு செலவிடும் தொகை ரூ.4.75 லட்சம் கோடிகளாம். இது கடந்த ஆண்டு கணக்கு என்றால், இந்த ஆண்டு கணக்கை இனிதான் எண்ண வேண்டும்.
ஒரு சில நாடுகளின் ஒட்டு மொத்த பொருளாதாரக் குறியீட்டுத் தொகை அளவுக்கு நம் நாட்டில் ஒரே ஒரு திருமணம் நடப்பதாகவும் புள்ளிவிவரங்கள் நமது முகத்தில் அறைந்தார் போல சொல்கின்றன.
ஒருபக்கம் திருமணத்துக்காக எவ்வளவு பெரிய தொகையையும் செலவிடத் தயாராக இருக்கும் பெற்றோரும், திருமணத்தை திட்டமிட்டு செயல்படுத்திக் கொடுக்கும் தனியார் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன.
சாதாரண எளிய மக்கள் கூட, நட்சத்திரங்களைப் போல திருமணம் செய்ய ஆசைப்படும்போது, நட்சத்திரங்களாக இருப்பவர்கள் என்ன செய்வார்கள். ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் தற்போது ரூ.7 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை செலவாகும் என்கிறார்கள் திருமண ஏற்பாட்டாளர்கள்.
முன்பெல்லாம் திருமணம் என்றால், உணவுக்குத்தான் அதிகப்படியாக செலவாகும். இப்போதெல்லாம் எல்லாமே அதிகப்படியான செலவாகிவிட்டது. எனினும் டாப் லிஸ்ட் உணவுக்குத்தான். அடுத்தது மண்டபம், ஆடைகள் என விரிகிறது.
கூரைப் புடவையுடன் திருமண மக்களைப் பார்க்கவே முடிவதில்லை. அதிலும் டிசைனர் என்று வந்துவிட்டப் பிறகு ஒட்டு மொத்த மணமக்களின் குடும்பமும், யார் மணப்பெண் என்று தெரியாத அளவுக்கு வந்திறங்குகிறார்கள். இதில் மணமகளின் மேக் அப் செலவு எல்லாம் தனிக்கதை. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், உறவினர் திருமணத்துக்கு தனது மனைவி ரூ.25 ஆயிரம் செலவிட்டு எச்டி மேக்கப்போட்டு அதற்குண்டான மாதத் தவணையை தான் இன்னமும் கட்டி வருவதாக இளைஞர் ஒருவர் பகிர்ந்த வேதனை தான் அனைத்துக்குமான ஒரே சாட்சி.
இந்தியாவில் மிகப் பிரம்மாண்ட திருமணத்தை நடத்த ஒரு கோடி செலவாகும் என்றால், அதனை தாய்லாந்து போன்ற நாடுகளில் நடத்தினால் செலவும் அதே அளவில் இருக்க, பிரம்மாண்டம் வேற லெவலில் இருக்கும் என்பதால் வெளிநாடு பறக்கிறார்கள் என்று திருமண சேவை அளிக்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.
ஒரு 200 பேர் பங்கேற்கும் திருமணத்தை நான்கு நட்சத்திர விடுதியில் நடத்த ரூ.80-90 லட்சம் செலவாகும் என்றால், அதை தாய்லாந்தில் செய்ய வேண்டும் என்றால் ரூ.1.20 கோடிதான் ஆகுமாம். ஆனால் திருமணம் நட்சத்திரங்களின் திருமண வைபவம் போல இருக்குமாம்.
நவம்பர் மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
சில பெரிய குடும்பங்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்கிறார்கள். இதனால் மிகப்பெரிய தொகை வெளிநாடுகளில் செலவிடப்படுகிறது. இது இந்தியாவில் செலவிடப்பட்டால் பலருக்கும் வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சரி இந்தியாவிலேயே திருமணம் செய்யலாம் என்றால், எந்தெந்த இடங்கள் சரியானதாக இருக்கும் என்று பார்த்தால், கோவா, ராஜஸ்தான், இமாச்சல், அந்தமான் போன்றவை மிகச் சிறந்த தருணங்களை ஏற்படுத்தும்.
- உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
காணும் பொங்கல் தினமான நாளை கூட்டம் அலைமோதும் என்பதால் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநகர போலீசார் விரிவான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காணும் பொங்கலையொட்டி, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் சென்னையில் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 1500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி 3 போலீசார் பைனாகுலரில் கண்காணிக்க உள்ளனர். அங்கிருந்தபடியே மெகாபோன் மூலமாக அவர்கள் தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள். தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக வாட்ஸ்அப் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையோரமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாகவும் ரோந்து சென்று குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
சென்னை போலீஸ் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர்காக்கும் பிரிவின் 85 போலீசார் அடங்கிய தனிப்படையும் பொதுமக்கள் கடலில் இறங்காமல் இருப்பதற்காக கடலோர பகுதிகளில் கண்காணிக்க உள்ளனர்.
மெரினாவை போன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினாவை போன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்டு அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களை நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர் பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர்.
ஆகவே குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மெரினா கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.
காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், மற்றும் திரை அரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து இடங்களிலும் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
காணும் பொங்கல் அன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள்.
இதுமட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. ரோடு மற்றும் முக்கிய சாலைகளில் பைக்ரேஸ் தடுப்பு நடவடிக் கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் என்ன, அவர் கையையா பிடித்துள்ளோம்.
- தோழமைக் கட்சிகள் எங்களுடன் இருப்பார்கள் என பலமாக நம்புகிறோம்.
வேலுார்:
பொங்கல் விழாவையொட்டி, தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் தி.மு.க. தொண்டர்களை சந்தித்தார்.
தேவகவுடா பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமராக இருந்தபோதும் மட்டுமின்றி, இப்போதும் கூட தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியிலிருந்து தரக்கூடாது என்பதில் வைராக்கியமாக உள்ளார்.
அவரிடமிருந்து தமிழகத்துக்கு சாதகமான வார்த்தைகள் வராது. இவர் தீர்ப்பாயம் அமைப்பதை எதிர்த்தார்.
அரசிதழில் வெளியிடுவதை எதிர்த்தார். அவர் காலம் முழுவதும் தமிழகத்துக்கு எதிராகத்தான் பேசுவார்.
மோடிக்கு சாதகமாக பேசினால்தான் அவருடைய பிள்ளைகளால் அரசியல் நடத்த முடியும் என்று நினைக்கிறார். அதை பற்றி எல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
தேவகவுடா ஆதாயத்துக்காக பேசுகிறாரோ அல்லது வெறுப்பாக பேசுகிறாரோ, எப்படி இருந்தாலும் தமிழகத்துக்கு எதிர்ப்பாகத்தான் பேசுவார்.

அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் என்ன, அவர் கையையா பிடித்துள்ளோம். நாளைக்கே தேர்தல் வந்தாலும் தி.மு.க. சந்திக்கும்.
இது கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணியை அறிவிப்போம். இப்போதைக்கு கூட்டணி பற்றி சொல்ல முடியாது. இப்போதுள்ள தோழமைக் கட்சிகள் எங்களுடன் இருப்பார்கள் என பலமாக நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, "தமிழகத்தில் அதிகார மையங்கள் அதிகமாகிவிட்டது என பழனிசாமி கூறியுள்ளாரே" என கேட்டதற்கு, "அவர் எதிர்க்கட்சி, அப்படித்தான் கூறுவார்.
என துரைமுருகன் பதிலளித்தார்.
- ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 8.25 அடி அகலம் கொண்டது.
- நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் உலக புகழ் பெற்றதாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோவிலில் மிகப்பெரிய நந்தியெம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 8.25 அடி அகலம் கொண்டது. மொத்தம் 20 டன் எடை உடையது. இந்த நந்தியெம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி மாட்டுப் பொங்கலான இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலையில் நந்தியெம் பெருமானுக்கு 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கத்தரிக்காய், முட்டைக்கோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை உள்பட பல வகையான பழங்களாலும், பால்கோவா உள்பட இனிப்புகளாலும், பல்வேறு வகையான மலர்களாலும் நந்தியெபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஞ்சள், பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ-பூஜை நடந்தது.
பின்னர் நந்திக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
- ராட்சத அலை மகேஷ் உள்பட 5 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது.
- சிறிது நேரத்தில் கடலில் மூழ்கிய மகேசும், வருண்குமாரும் பிணமாக அதே பகுதியில் கரை ஒதுங்கினர்.
சோழிங்கநல்லூர்:
வேளச்சேரியைச் சேர்ந்தவர் மகேஷ்(வயது28). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான வருண்குமார்(28) உள்பட 4 பேருடன் ஈஞ்சம்பாக்கம் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
பின்னர் நண்பர்கள் அனைவரும் அங்குள்ள கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலை மகேஷ் உள்பட 5 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு வந்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் மகேஷ், வருண்குமார் ஆகியோர் கடலில் மூழ்கி மாயமானார்கள். மற்ற 3 பேரையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர்.
சிறிது நேரத்தில் கடலில் மூழ்கிய மகேசும், வருண்குமாரும் பிணமாக அதே பகுதியில் கரை ஒதுங்கினர். இதனை கண்டு அவரது நண்பர்கள் கதறி துடித்தனர். கடலில் மூழ்கியவர்களில் மீட்கப்பட்ட ஒருவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் மற்றும் போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள கடற்கரையில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறித்தி உள்ளனர். இதனை மீறி கடலில் இறங்கிய நண்பர்கள் 2 பேர் பலியாகிவிட்டனர். நாளை காணும் பொங்கலையொட்டி வரும் பொதுமக்கள் கடல் பகுதியில் இறங்காமல் இருக்க கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
- கோவிலில் சாமி முன்பு கட்டி இருந்த சுமார் 35 பல்வேறு அளவிலான வெண்கல மணிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
- கோவில் பூசாரி பிச்சப்பிள்ளை குன்னம் போலீசில் புகார் செய்தார்.
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள அசூர் கிராமத்தில் அசூர் கிராமத்தில் இருந்து அந்தூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் சேரா குலத்தார் காட்டு கோவில் உள்ளது.
இந்த கோவிலில் அசூர் மற்றும் அந்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இந்த கோவிலில் பூசாரியாக பிச்சபிள்ளை என்பவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 14-ம் தேதி மாலை பூஜை செய்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார் பின்னர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை பூஜை செய்வதற்காக சென்றார்.
அப்போது கோவிலில் சாமி முன்பு கட்டி இருந்த சுமார் 35 பல்வேறு அளவிலான வெண்கல மணிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து கோவில் பூசாரி பிச்சப்பிள்ளை குன்னம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குன்னம் போலீசார் விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து கோவில் மணிகளை திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க.வின் சாதனை.
- தி.மு.க.விற்கு பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் அமைய வேண்டும்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள திண்டமங்கலம் கிராமத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுடன் சேர்ந்து 108 பொங்கல் வைத்து கொண்டாடினார்.
முன்னதாக அவர் ஓமலூரில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விழா நடைபெறும் இடத்திற்கு மாட்டு வண்டி ஓட்டி வந்தார். தொடர்ந்து அவருக்கு வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 108 பொங்கல் வைக்கும் இடத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமி பொங்கல் பானையில் பச்சரிசியை போட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடினார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஏழைகளுக்காக திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற அரசு அ.தி.மு.க. தான். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க.வின் சாதனை.
விவசாயிகளுக்காக தலைவாசலில் திறக்கப்பட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை பூங்கா மூடிக்கிடப்பது வருத்தம் அளிக்கிறது. மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்படாமல் தி.மு.க. அரசு செயல்படுகிறது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முக்கிய தேர்தல். இந்த தேர்தல் தி.மு.க. அரசுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
தமிழகம், புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். தை பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவது போல தேர்தல் வெற்றியை நாம் கொண்டாடும் காலம் வந்து விட்டது.
சேலம் அ.தி.மு.க.வின் கோட்டை. சேலத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. தான்.
தமிழகத்திலேயே சேலம் பாராளுமன்ற தொகுதியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க.விற்கு பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1199 கிராம்.
கே.கே. நகர்:
வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏற்றப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கடத்தப்படும் தங்கத்தினை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பேட்டிக் ஏர் மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் பயணம் செய்த பயணிகளிடம் சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சி விமான நிலைய மத்தியவான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த விமானங்களில் பயணம் செய்த பயணிகள் 3 பேர் தங்கள் கொண்டு வந்த லக்கேஜ் அட்டைப்பெட்டியில் தலா 40 கிராம் எடையுள்ள 30 தங்க நாணயங்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து தங்க நாணயங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1199 கிராம்.
அதன் இந்திய ரூபாயின் மதிப்பு 76 லட்சம் என தெரிய வருகிறது.
- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம்.
- 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி இன்று உற்சவம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் மரக்கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். இதனையடுத்து காலை 7.28 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை,வெள்ளி சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
10-ம் நாளான 25-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தைப்பூச விழாவிற்காக அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வடக்காவேரிக்கு சென்று அடைகிறார். அன்று மாலை கொள்ளிடம் வடகாவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது .
இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை பெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 26-ந் தேதி இரவு ஒரு மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்று காலை முதல் இரவு வரை அம்மன் வழிநடை உபயம் கண்டருளுகிறார். பின்னர் இரவு பாஸான மண்டபத்திற்கு சென்றடைகிறார்.
அங்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் கொடி மரம் முன்பு எழுந்தருளி கொடி இறக்கப்படுகிறது. தொடர்ந்து நள்ளிரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள் செய்து வருகின்றனர்.
- செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது.
- வண்டலூர் பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
வண்டலூர் பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். இதற்கிடையில், இன்று (செவ்வாய்கிழமை) மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால், வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா, சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்திருக்கும்.
- பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
- 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், மெட்ரோ ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், இன்றும் நாளையும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காளை மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
- வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
மதுரை:
தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாகக் கருதப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது, தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.
இதற்கிடையே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், மதுரை பாலமேட்டில் இன்று காலை மாடுபிடி வீரர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் உறுதி மொழி ஏற்றனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் 1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ளன. முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்ற உள்ளனர்.
இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கார் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமாக மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.






