என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர் புரட்சித் தலைவர்.
    • புரட்சித் தலைவர் இந்த நாட்டில் செய்து காட்டிய சாதனைகளை ஒரு மடலில் சொல்லி விட முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரு மனிதர் மறைந்த பிறகும் நீண்ட காலம் நினைக்கப்படுகிறார் என்றால் அவர் நல்ல மனிதர்; மறைந்து பல ஆண்டுகள் கழித்தும் மக்கள் மனங்களில் ஒரு மனிதர் சிம்மாசனமிட்டு அமர்ந்து, உள்ளங்களை ஆட்சி செய்கிறார் என்றால், காலத்தால் வெல்லப்பட முடியாத நாயகராக வீற்றிருக்கிறார் என்றால் அவர் மாமனிதர்; அவரே மனிதருள் மாணிக்கம்; அவர் தான் நம் புரட்சித் தலைவர்.

    கொடூர வறுமையின் கோரப்பிடியில் பிறந்து, தன் உழைப்பால், தன் ஆற்றலால், தனது விடா முயற்சியால் வறுமையில் இருந்து மீண்டு, யாரும் தொடாத புகழின் உச்சத்தைத் தொட்டு நின்ற நாளிலும், மக்கள் வறுமையைக் களைய வேண்டும் என்று அரசியல் களம் புகுந்து அதிலும் வென்று காட்டிய புரட்சித் தலைவரின் புகழ் வாழ்க்கை சொல்லச் சொல்ல தீராத காவியம்!

    'தர்மம் தலைகாக்கும்' என்பார்கள். அவர் செய்த தர்மம் அவர் தலையை மட்டுமல்ல, அவரின் தலைமுறையையே காக்கிறது. அவர் தொடங்கிய கழகம், அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எதிரிகளாலும், துரோகிகளாலும் வீழ்த்தப்பட முடியாதபடி அவர் செய்த தர்மம் காத்து நிற்கிறது. அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர் புரட்சித் தலைவர்.

    இன்றைக்கும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் பேருவகையோடு நோக்குகிற, "தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தை" தன்னுடைய தமிழ் மீதான ஆர்வத்தாலும், தொலைநோக்காலும் உருவாக்கி உயிர் கொடுத்தவர் புரட்சித் தலைவர்.

    இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு பேரறிஞர் அண்ணா கண்டார். அவரின் பாதையிலேயே அரசியல் நடத்திய புரட்சித்தலைவர் 5-ம் உலகத்தமிழ் மாநாட்டை உலகே வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டினார்.

    ஏழை, எளிய மக்கள் உள்ளம் குளிர்ந்ததும் புரட்சித்தலைவரின் ஆட்சியில்தான். குடில்களில் மின்சார விளக்குகள் எரிந்ததும் அவரின் பொற்கால ஆட்சியில்தான்.

    பரம்பரை பரம்பரையாய் அதிகாரம் செலுத்தி வந்த நிலையை, வாரிசுகள் அதிகாரம் செலுத்தும் கிராம முன்சீப் பதவி முறையை ஒழித்து, தகுதி உள்ளவர்கள் அதிகாரத்திற்கு வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு முறையைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் குடியாட்சிக்கு வலுசேர்த்தவர் நம் புரட்சித் தலைவர். 

    இந்திய மாநிலங்களில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சகோதர, சகோதரிகள் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை இன்று பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எடுத்த உறுதியான மனிதநேயமிக்க சமூக நீதியை நிலைநாட்டும் 68 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் முடிவுதான் காரணம்.

    ஒன்றா, இரண்டா சாதனைகள்? புரட்சித் தலைவர் இந்த நாட்டில் செய்து காட்டிய சாதனைகளை ஒரு மடலில் சொல்லி விட முடியாது. அந்த மாபெரும் மக்கள் தலைவர் காட்டிய பாதையில் நாம் பெருமையுடன் நடைபோடுகிறோம். அந்த மாசற்ற தலைவர் உருவாக்கிய இயக்கத்தை புரட்சித் தலைவி அம்மாவின் காலத்திற்குப் பிறகு எதிரிகளும், துரோகிகளும் சூறையாட முனைந்த நேரத்தில், புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான, புரட்சித் தலைவியின் போர்ப்படை வீரர்களான உங்கள் அனைவரின் துணையோடு அவர்களை வீழ்த்தி, நாம் அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காத்து வருகின்றோம்.

    புரட்சித் தலைவரின் பிறந்தநாளை முன்னெடுக்கின்ற கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பெருந்துயரால் பாதிக்கப்பட்டு ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டு நிற்கின்ற லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைப் பாதுகாக்கின்ற வகையில் அவர்களோடு தோளோடு தோள் நின்று, முடிந்தவரை நலத்திட்ட உதவிகளை நல்கி, எப்போதும் போல் கழகம் மக்களோடு நிற்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த வேண்டும் என்று பேரன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    வந்திருக்கும் தை மகள் நல்லதொரு வழியைக் காட்டுவாள். தமிழ் நாட்டு மக்கள் தேர்தல் களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மகத்தான வெற்றிபெறச் செய்வார்கள். புரட்சித் தலைவரின் பிறந்த நாளில் தீய சக்திகளை தேர்தல் களத்தில் அப்புறப்படுத்த, கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் சூளுரை ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
    • காதர்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு உள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் மதுரை. தேனி, கிருஷ்ணகிரி, திருச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சகணக்கான மக்கள் திருப்பூரிலேயே தங்கி இருந்து பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

    இதுதவிர திருப்பூரில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளை பெரும்பாலும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகிறார்கள். இவ்வாறு திருப்பூரில் தங்கி பணியாற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


    இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பின்னலாடை நிறுவனங்களுக்கு கடந்த 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். இதனால் திருப்பூர் பிரதான சாலைகளான திருப்பூர் குமரன் சாலை, காதர் பேட்டை, அரிசி கடை வீதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் இன்று குறைந்து காணப்பட்டது.

    அதே போல் பின்னலாடை நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள கொங்கு மெயின் ரோடு, சிட்கோ உள்ளிட்ட பகுதிகளிலும், சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனைக்கு பெயர்போன காதர்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியானது வெறிச்சோடி காணப்படுகிறது. விடுமுறை முடிந்து பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த வார இறுதிநாளான 21ந்தேதிக்கு பின்னரே திருப்பூர் திரும்புவார்கள். அதன்பிறகே திருப்பூரின் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
    • அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

    சென்னை:

    திருவள்ளுவர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

    133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.

    குறள் நெறி நம் வழி!

    குறள் வழியே நம் நெறி!

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ரோஜா பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    • தொடர்ந்து விடுமுறை உள்ளதால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் இன்னும் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகவும், அதிகளவில் சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    சுற்றுலா பயணிகள் அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கி, சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பார்க், கோத்தகிரி நேரு பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகளை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    மேலும் அங்குள்ள புல்வெளியில் அமர்ந்து குடும்பத்துடன் பேசி மகிழ்ந்தனர். தனது குழந்தைகளுடன் அங்கு விளையாடியும் மகிழ்ந்தனர். நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் 2 நாட்களில் 49,013 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் 2 நாளில் 29 ஆயிரத்து 611 பேர் வந்துள்ளனர்.


    கடந்த 14-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 15,977 பேர் வந்திருந்த நிலையில் நேற்று 13 ஆயிரத்து 634 பேர் வந்திருந்தனர். கல்லாருக்கு நேற்று முன்தினம் 267 பேரும், நேற்று 910 பேரும் வந்தனர்.

    கல்லட்டிக்கு நேற்றுமுன்தினம் 719 பேரும், நேற்று 1,339 பேரும் வந்திருந்தனர். ரோஜா பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 3,619 பேரும், நேற்று 4,783 பேரும், சிம்ஸ் பூங்காவுக்கு நேற்று முன்தினம் 2,360 பேரும், நேற்று 3,312 பேரும், தேயிலை பூங்காவுக்கு நேற்று முன்தினம் 792 பேரும், நேற்று, 1063 பேரும், அரோபிட்டத்திற்கு நேற்றுமுன்தினம் 117 பேரும், நேற்று 121 பேரும் வந்துள்ளனர்.

    தொடர்ந்து விடுமுறை உள்ளதால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் இன்னும் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி சிறப்பு பூஜை செய்து வழிபடும் பண்பாடு இம்மண்ணுக்கு உரியது.
    • தமிழகத்திலேயே தருமபுரியை கல்வெட்டு பூமி என சொல்வதுண்டு.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் காடுகளையும் காடுகளையொட்டிய வாழ்வியலை உள்ளடக்கய பூமி. தமிழ் நிலங்களில் குறிஞ்சியும், முல்லையும் நிரம்பியிருந்தாலும் முல்லை பூமியாக இருக்கிறது. இங்கு ஆதிகாலம் தொட்டே கால்நடைகளை மேய்பதும், வளர்பதும், மேட்டு நிலங்களை பண்படுத்தியும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலத்தில் பொங்கல் திருவிழா காலம் காலமாக ஆட்டுப்பட்டி பொங்கல் மாட்டுப்பட்டி பொங்கல் என பட்டிப் பொங்கல் மிக பிரசக்தி பெற்றது.

    ஆடுகளை காட்டில் மேய்ந்துவிட்டு வந்து அடைக்கப்படும் பட்டியிலும் விவசாயமாடுகள் வாழும் வீடான பட்டியிலும் பொங்கல் வைத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் இந்த மண்ணில் பொங்கல் திருவிழாவில் கால்நடைகளுக்கு நன்றி சொல்லி மரியாதை செலுத்தும் மாட்டுப்பொங்கலை வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி சிறப்பு பூஜை செய்து வழிபடும் பண்பாடு இம்மண்ணுக்கு உரியது.

    தமிழகத்திலேயே தருமபுரியை கல்வெட்டு பூமி என சொல்வதுண்டு. இப்போது வாழ்வியலை புத்தகத்தில் பதிவு செய்வது போல அக்கால கல்வெட்டில் ஆட்சியாளர்களை பற்றிய குறிப்புகளும் தாம் வாழும் காலத்திய அடையாளங்களையும் கல்வெட்டில்பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் உழவுத்தொழில் செய்யும் கல்வெட்டு இருப்பது ஆச்சரியம்தானே!

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திலிருந்து ஏரியூர் செல்லும் சாலையில் இருக்கிறது அளேபுரம்.

    குளத்தங்கரையை தாண்டி அளேபுரத்திற்கு செல்லும் வழியில் இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

    இந்த கல்வெட்டில் ஏர் உழும் காட்சியை கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழகத்திலேயே ஏர் உழுதலை போன்ற கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

    பொங்கல் திருநாளில் உழவுக்கு உதவிய மாடுக ளுக்கு மரியாதை செலுத்தும் இந்த நேரத்தில் இந்த கல்வெட்டிற்கும் நாம் மரியாதை செலுத்துவோம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.
    • புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.

    அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது.

    இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    • பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் டி.எஸ்.பி. தலைமையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2-ந் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

    இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

    போட்டி காலை 7 மணிக்கு தொடங்கியது இந்த ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் மாடு முதலில் அவிழ்த்து விடப்பட்டது அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது இந்த போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.


    முன்னதாக கால்நடை இணை இயக்குனர் மும்மூர்த்தியை தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா ஜல்லிக்கட்டு போட்டிக்கு கலந்து கொள்வதற்கு உரிய தகுதி உள்ளதா என்பதை மருத்துவ ஆய்வு செய்தனர். அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

    அதேபோல் திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதை பொருட்கள் உட்கொண்டு உள்ளார்களா என்பதை பரிசோதனையும் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைபவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சையும் அளிக்கின்றனர்.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருவெறும்பூர் டி.எஸ்.பி. தலைமையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளிக்கும் விதமாக கேலரிகள் மற்றும் தடுப்பு வேலியை அருகில் வாகனங்களை பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளது.

    • பாலார்பட்டியில் பொங்கல் வைத்து பெண்கள் ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
    • மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தேனி:

    தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் தேனி மாவட்ட மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அன்றைய தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்படுவதால் லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:-

    தேனி மாவட்டம் இயற்கை சூழல் மிகுந்ததாக உள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். பசுமை மிகுந்த மாவட்டமாக என்றும் தேனி மாவட்டத்தை கொண்டு செல்வது நம் அனைவரின் கடமையாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி, தி.மு.க. நகர செயலாளர் லோகன்துரை உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அ.தி.மு.க. சார்பில் ஜக்கையன், முருக்கோடை ராமர், கூடலூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்தனர்.

    பாலார்பட்டியில் பொங்கல் வைத்து பெண்கள் ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கோலிகுண்டு, கிட்டி, மான்கொம்பு சுற்றுதல், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளும் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் தப்பாட்டம், தேவராட்டம், கரகாட்டம், கிழவன்கிழவி, மாடாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தென்னங்கீற்றுகளால் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உரல், அம்மிக்கல் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உழவர்களின் ஏர் கலப்பை வடிவத்தில் செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டிருந்தது.

    • முன்பெல்லாம் திருமணம் என்றால், உணவுக்குத்தான் அதிகப்படியாக செலவாகும்.
    • முன்பெல்லாம் திருமணம் என்றால், உணவுக்குத்தான் அதிகப்படியாக செலவாகும்.

    இந்தியாவில் தற்போது மிகப்பெரிய வணிகமாக மாறியிருக்கிறது திருமண நிகழ்வுகள். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த திருமண நிகழ்வுடன் தற்போது நடக்கும் திருமணங்களை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. பார்க்கவும் கூடாது.

    வருவாய் உயர்வு மற்றும் செலவிடும் திறன் அதிகரித்திருப்பது போன்றவை ஆடம்பர திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டன. வாழ்வில் மறக்க முடியாத தருணம் தான் திருமணம். ஆனால்.. அதற்காக இப்படியா? என்று வாய்பிளக்க வைக்கிறார்கள்.

    இந்தியாவில், தை, மாசி போன்ற முகூர்த்த காலங்களில் 40 லட்சம் திருமணங்கள் நடக்கின்றன. இதற்கு செலவிடும் தொகை ரூ.4.75 லட்சம் கோடிகளாம். இது கடந்த ஆண்டு கணக்கு என்றால், இந்த ஆண்டு கணக்கை இனிதான் எண்ண வேண்டும்.

    ஒரு சில நாடுகளின் ஒட்டு மொத்த பொருளாதாரக் குறியீட்டுத் தொகை அளவுக்கு நம் நாட்டில் ஒரே ஒரு திருமணம் நடப்பதாகவும் புள்ளிவிவரங்கள் நமது முகத்தில் அறைந்தார் போல சொல்கின்றன.

    ஒருபக்கம் திருமணத்துக்காக எவ்வளவு பெரிய தொகையையும் செலவிடத் தயாராக இருக்கும் பெற்றோரும், திருமணத்தை திட்டமிட்டு செயல்படுத்திக் கொடுக்கும் தனியார் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன.

    சாதாரண எளிய மக்கள் கூட, நட்சத்திரங்களைப் போல திருமணம் செய்ய ஆசைப்படும்போது, நட்சத்திரங்களாக இருப்பவர்கள் என்ன செய்வார்கள். ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் தற்போது ரூ.7 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை செலவாகும் என்கிறார்கள் திருமண ஏற்பாட்டாளர்கள்.

    முன்பெல்லாம் திருமணம் என்றால், உணவுக்குத்தான் அதிகப்படியாக செலவாகும். இப்போதெல்லாம் எல்லாமே அதிகப்படியான செலவாகிவிட்டது. எனினும் டாப் லிஸ்ட் உணவுக்குத்தான். அடுத்தது மண்டபம், ஆடைகள் என விரிகிறது.

    கூரைப் புடவையுடன் திருமண மக்களைப் பார்க்கவே முடிவதில்லை. அதிலும் டிசைனர் என்று வந்துவிட்டப் பிறகு ஒட்டு மொத்த மணமக்களின் குடும்பமும், யார் மணப்பெண் என்று தெரியாத அளவுக்கு வந்திறங்குகிறார்கள். இதில் மணமகளின் மேக் அப் செலவு எல்லாம் தனிக்கதை. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், உறவினர் திருமணத்துக்கு தனது மனைவி ரூ.25 ஆயிரம் செலவிட்டு எச்டி மேக்கப்போட்டு அதற்குண்டான மாதத் தவணையை தான் இன்னமும் கட்டி வருவதாக இளைஞர் ஒருவர் பகிர்ந்த வேதனை தான் அனைத்துக்குமான ஒரே சாட்சி.

    இந்தியாவில் மிகப் பிரம்மாண்ட திருமணத்தை நடத்த ஒரு கோடி செலவாகும் என்றால், அதனை தாய்லாந்து போன்ற நாடுகளில் நடத்தினால் செலவும் அதே அளவில் இருக்க, பிரம்மாண்டம் வேற லெவலில் இருக்கும் என்பதால் வெளிநாடு பறக்கிறார்கள் என்று திருமண சேவை அளிக்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.

    ஒரு 200 பேர் பங்கேற்கும் திருமணத்தை நான்கு நட்சத்திர விடுதியில் நடத்த ரூ.80-90 லட்சம் செலவாகும் என்றால், அதை தாய்லாந்தில் செய்ய வேண்டும் என்றால் ரூ.1.20 கோடிதான் ஆகுமாம். ஆனால் திருமணம் நட்சத்திரங்களின் திருமண வைபவம் போல இருக்குமாம்.

    நவம்பர் மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

    சில பெரிய குடும்பங்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்கிறார்கள். இதனால் மிகப்பெரிய தொகை வெளிநாடுகளில் செலவிடப்படுகிறது. இது இந்தியாவில் செலவிடப்பட்டால் பலருக்கும் வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சரி இந்தியாவிலேயே திருமணம் செய்யலாம் என்றால், எந்தெந்த இடங்கள் சரியானதாக இருக்கும் என்று பார்த்தால், கோவா, ராஜஸ்தான், இமாச்சல், அந்தமான் போன்றவை மிகச் சிறந்த தருணங்களை ஏற்படுத்தும்.

    • உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    காணும் பொங்கல் தினமான நாளை கூட்டம் அலைமோதும் என்பதால் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநகர போலீசார் விரிவான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காணும் பொங்கலையொட்டி, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் சென்னையில் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 1500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி 3 போலீசார் பைனாகுலரில் கண்காணிக்க உள்ளனர். அங்கிருந்தபடியே மெகாபோன் மூலமாக அவர்கள் தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள். தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக வாட்ஸ்அப் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையோரமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாகவும் ரோந்து சென்று குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை போலீஸ் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர்காக்கும் பிரிவின் 85 போலீசார் அடங்கிய தனிப்படையும் பொதுமக்கள் கடலில் இறங்காமல் இருப்பதற்காக கடலோர பகுதிகளில் கண்காணிக்க உள்ளனர்.

    மெரினாவை போன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினாவை போன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்டு அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களை நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர் பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர்.

    ஆகவே குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

    மெரினா கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.

    காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், மற்றும் திரை அரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து இடங்களிலும் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    காணும் பொங்கல் அன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள்.

    இதுமட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. ரோடு மற்றும் முக்கிய சாலைகளில் பைக்ரேஸ் தடுப்பு நடவடிக் கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் என்ன, அவர் கையையா பிடித்துள்ளோம்.
    • தோழமைக் கட்சிகள் எங்களுடன் இருப்பார்கள் என பலமாக நம்புகிறோம்.

    வேலுார்:

    பொங்கல் விழாவையொட்டி, தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் தி.மு.க. தொண்டர்களை சந்தித்தார்.

    தேவகவுடா பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமராக இருந்தபோதும் மட்டுமின்றி, இப்போதும் கூட தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியிலிருந்து தரக்கூடாது என்பதில் வைராக்கியமாக உள்ளார்.

    அவரிடமிருந்து தமிழகத்துக்கு சாதகமான வார்த்தைகள் வராது. இவர் தீர்ப்பாயம் அமைப்பதை எதிர்த்தார்.

    அரசிதழில் வெளியிடுவதை எதிர்த்தார். அவர் காலம் முழுவதும் தமிழகத்துக்கு எதிராகத்தான் பேசுவார்.

    மோடிக்கு சாதகமாக பேசினால்தான் அவருடைய பிள்ளைகளால் அரசியல் நடத்த முடியும் என்று நினைக்கிறார். அதை பற்றி எல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    தேவகவுடா ஆதாயத்துக்காக பேசுகிறாரோ அல்லது வெறுப்பாக பேசுகிறாரோ, எப்படி இருந்தாலும் தமிழகத்துக்கு எதிர்ப்பாகத்தான் பேசுவார்.


    அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் என்ன, அவர் கையையா பிடித்துள்ளோம். நாளைக்கே தேர்தல் வந்தாலும் தி.மு.க. சந்திக்கும்.

    இது கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணியை அறிவிப்போம். இப்போதைக்கு கூட்டணி பற்றி சொல்ல முடியாது. இப்போதுள்ள தோழமைக் கட்சிகள் எங்களுடன் இருப்பார்கள் என பலமாக நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, "தமிழகத்தில் அதிகார மையங்கள் அதிகமாகிவிட்டது என பழனிசாமி கூறியுள்ளாரே" என கேட்டதற்கு, "அவர் எதிர்க்கட்சி, அப்படித்தான் கூறுவார்.

    என துரைமுருகன் பதிலளித்தார்.

    • ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 8.25 அடி அகலம் கொண்டது.
    • நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் உலக புகழ் பெற்றதாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த கோவிலில் மிகப்பெரிய நந்தியெம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 8.25 அடி அகலம் கொண்டது. மொத்தம் 20 டன் எடை உடையது. இந்த நந்தியெம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி மாட்டுப் பொங்கலான இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு காலையில் நந்தியெம் பெருமானுக்கு 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கத்தரிக்காய், முட்டைக்கோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை உள்பட பல வகையான பழங்களாலும், பால்கோவா உள்பட இனிப்புகளாலும், பல்வேறு வகையான மலர்களாலும் நந்தியெபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஞ்சள், பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ-பூஜை நடந்தது.

    பின்னர் நந்திக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

    ×