என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகத்தில் தற்போது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அடுத்த வாரம் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தமிழகம் வர உள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகளை பாரதிய ஜனதா மேலிடம் முடுக்கி விட்டு உள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகளுக்கான பொறுப்பாளர்களாக சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் தற்போது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். பிப்ரவரி 2-வது வாரம் அந்த பயணம் நிறைவு பெற உள்ளது. இது தொடர்பான விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதற்கு முன்னதாக பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வந்து பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி அடுத்த வாரம் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தமிழகம் வர உள்ளார்.


    இதற்கிடையே பாரதிய ஜனதா தேசிய தலைவர் நட்டா 11-ந்தேதி தமிழகம் வர திட்டமிட்டுள்ளார். அவர் பாரதிய ஜனதாவின் தேர்தல் பணிகளை தொடங்கி வைத்து பிரசாரத்தையும் ஆரம்பித்து வைப்பார்.

    அதுமட்டுமின்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் அவர் சில முக்கிய முடிவுகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த வாரம் தொடங்கி 2-வது வாரம் வரை தமிழக பாரதிய ஜனதா வட்டாரத்தில் மிகவும் விறுவிறுப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்தது.
    • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

    கடந்த 2021-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்ததால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 112 ரூபாய் வரை எட்டியது. அதுபோல டீசல் விலையும் 103 ரூபாய் என்ற அளவுக்கு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 காசும் குறைக்க முடிந்தது.

    கடந்த 620 நாட்களாக இந்த விலை குறைப்பு அமலில் உள்ளது. கடந்த 620 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை எந்தவிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்தது.

    இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது பற்றி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வந்தன.

    பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.10-ம், டீசல் விலையில் ரூ.7-ம் குறைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. நாளை (பிப்ரவரி 1) முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரலாம் என்று கூறப்பட்டது. எனவே இது தொடர்பான அறிவிப்பு இன்று இரவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • போராட்டம் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் மறியல், முழு அடைப்பு உள்ளிட்ட பல வடிவங்களில் நடைபெற உள்ளது.
    • போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்கள், வினியோகிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை அதிகப்படுத்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    வருகிற 16-ந்தேதி நடைபெறும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள், தபால் தொலை தொடர்புதுறை, ரெயில்வே, மின்வாரியம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள தொழிற்சங்கத்தினர் பங்கெடுக்க உள்ளனர்.

    இந்த போராட்டம் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் மறியல், முழு அடைப்பு உள்ளிட்ட பல வடிவங்களில் நடைபெற உள்ளது. போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்கள், வினியோகிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்கு பெற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதற்கான ஆலோசனைக்கூட்டம் சென்னை தொ.மு.ச. தலைமையகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., டி.டி.எஸ்.எப். உள்பட 9 சங்கங்கள் சார்பில் அதன் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.

    இதில் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய அளவில் பிப்ரவரி 16-ந் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தையும், மறியல் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுபற்றி சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன் கூறுகையில், "மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முழுமையாக பங்கேற்க உள்ளது.

    இதனால் 16-ந்தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும்.

    அன்றைய தினம் தொழிலாளர்கள் 'ஸ்டிரைக்கில்' பங்கேற்கும்போது அதே நாளில் மறியல் போராட்டங்களும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போக்குவரத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதால் பஸ்கள் ஓடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "அத்தியாவசிய சேவை பணியில் போக்குவரத்து வருவதால் பஸ்களை இயக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றார்.

    ஆனால் நடைமுறையில் அன்றைய தினம் பாதியளவு பஸ்கள் தான் ஓடும் என தெரிகிறது.

    • தமிழகம் முழுவதும் தேர்வினை எழுத 41,485 விண்ணப்பித்து இருந்தனர்.
    • தேர்வுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் முழு வீச்சில் செய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல வட்டார வள மைய ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வினை நடத்த அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். 2,222 ஆசிரியர்கள் இதன்மூலம் தேர்வு செய்யப்பட்டு காலி இடங்களில் நிரப்பப்படுகிறார்கள்.

    ஜனவரி மாதம் 7-ந்தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான ஹால் டிக்கெட் இணையதளம் மூலம் டிசம்பர் மாதத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்தனர். ஆனால் டிசம்பர் மாத இறுதியில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பிப்ரவரி 4-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


    ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டதால் தேர்வர்கள் மேலும் படிப்பதற்கு அவகாசம் கிடைத்தது. தமிழகம் முழுவதும் இத்தேர்வினை எழுத 41,485 விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் பலர் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு கடந்த சில மாதங்களாக சென்று ஆயத்தமாகி வருகின்றனர். தேர்வுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் முழு வீச்சில் செய்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் 130 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. 41,485 பேர் எழுதுகிறார்கள். காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

    • புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.
    • 2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர்.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காவயல் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதி அதிகளவில் தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக கடந்த 1982-ம் ஆண்டு 5 ஏக்கரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று கட்டப்பட்டது. இந்த பள்ளியில் அந்த தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    முதலில் இங்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது.

    குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் டேன்டீ தொழிலாளர்களின் இடம் பெயர்வு போன்ற காரணங்களால் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

    இந்த பள்ளி கட்டிடம் ஓட்டுச்சாவடி மையமாக உள்ளதால் அரசு நிர்வாகம் இதனை மூடாமல் பெயர் அளவிற்கு செயல்படுத்தி வருகிறது. பள்ளியில் தற்போது 4 மற்றும் 3-ம் வகுப்புகளில் தலா ஒரு மாணவிகள் வீதம் 2 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த பள்ளிக்கு புதிததாக ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதுகுறி த்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பள்ளியில் 2 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வகுப்பறை நன்றாகவே இருந்தது. ஆனால் கட்டிடத்தை இடித்து விட்டு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.

    2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்கி வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த பள்ளி கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது. அதனால் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

    • பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
    • விண்ணப்பம் செய்வதற்காகக் குறிப்பிட்டிருந்த முதல் நாளான டிசம்பர் 17-ந்தேதி அன்றே டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    ெசன்னை, ஜன.31-

    பாராளுமன்றத் தேர்த லில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கி தருமாறு தேர்தல் ஆைண யத்தில் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    பாராளுமன்றத் தேர்த லில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. விண்ணப்பம் செய்வ தற்காகக் குறிப்பிட்டிருந்த முதல் நாளான டிசம்பர் 17-ந் தேதி அன்றே டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக் கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி யின் தலைவர் கமல் ஹாசன் வெளிநாடு செல்லவிருப்ப தால், கட்சியின் துணைத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் ஆகி யோருடன் 'பாராளு மன்றத் தேர்தல்' குறித்து ஆலோ சனை மேற்கொண்டார்.

    ஆலோசனைக்குப் பின், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செயல் திட் டங்களை உருவாக்குவதற் கும், செயல்படுத்துவதற்கும், பிற குழுக்களை அமைப்ப தற்கும் கமல்ஹாசன் 'தேர் தல் பணி ஒருங்கிணைப்பு குழுவினை' உருவாக்கி உள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி யின் துணைத் தலைவர்க ளான மவுரியா, தங்கவேலு, பொதுச் செயலாளர் அரு ணாச்சலம் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பி னர்களாகச் செயல்படு வார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி யின் மனுவை ஏற்றுக் கொண்டு தேர்தல் ஆணை யம் கமல் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கு மா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
    • மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    சென்னை:

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில் பிப்ரவரி 4-ந்தேதி 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    இதே போல தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

    இந்த சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25 ஏப்ரல் 1-ந் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

    திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே ஓடும் சிறப்பு ரெயிலும் பிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

    • வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 46,880-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு சவரன் ரூ.5,850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    • சிறுமியின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கினர்.
    • சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் திருமுருகவேளை சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி மும்முடி, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது 10 வயது மகள் தலைவாசல் அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த டிசம்பர் மாதம் 22-ந் தேதி வகுப்பறையில் இருந்தபோது தலைமை ஆசிரியர் திருமுருகவேள் (57), பாடம் தொடர்பாக கேள்வி கேட்டு, அவர் வைத்திருந்த மூங்கில் குச்சியை மாணவியை நோக்கி வீசினார்.

    அப்போது அருகில் இருந்த மற்றொரு மாணவியின் இடது கண் மீது அந்த குச்சி விழுந்தது. இதில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் பார்வை கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழும் வழங்கினர்.

    இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 24-ந் தேதி தலைவாசல் போலீசார் திருமுருகவேள் மீது வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் திருமுருகவேளை சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவியின் மருத்துவ அறிக்கை பெறப்பட்டு, அரசு சார்பில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும், அரசின் அறிவிப்புபடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

    • டாக்டர் நெய்வேலியில் தங்கி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவமனையில் பணிபுரிவதாக தெரிவித்தார்.
    • ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர், உங்கள் பணிக்கான நேரம் என்ன, உங்கள் வீடு எங்கே உள்ளது என்றார்.

    விருத்தாசலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாலை உளுந்தூர்பேட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலக்கொல்லை வரை நடைபயிற்சி மேற்கொண்டார்.

    பின்னர் அவர், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கு பணியில் இருந்த ஒரு சில செவிலியர்களிடம் குறைகள் பற்றி கேட்டறிந்ததுடன் டாக்டர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர் எனவும் கேட்டார். அதற்கு 2 டாக்டர்கள் பணியில் உள்ளதாக செவிலியர் கூறினார்.

    தொடர்ந்து அவர், வட்டார மருத்துவ அதிகாரி யார், அவர் எத்தனை முறை இந்த மருத்துவமனைக்கு வருவார், மாவட்ட துணை சுகாதார இயக்குனர் யார், அவர் எத்தனை முறை வருவார் எனவும் செவிலியரிடம் கேட்டறிந்தார்.

    இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரைசெல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் உங்கள் பணிக்கான நேரம் என்ன, உங்கள் வீடு எங்கே உள்ளது என்றார். அதற்கு டாக்டர் நெய்வேலியில் தங்கி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவமனையில் பணிபுரிவதாக தெரிவித்தார்.

    அப்போது மா.சுப்பிரமணியன், டாக்டரிடம் மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க கடிதம் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன், காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து விடுங்கள் எனவும் கூறினார்.

    • விளைச்சல் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக பூண்டின் விலை உயர்ந்துள்ளது.
    • 70 சதவீதம் வரை பூண்டு வரத்து குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை கோயம்போடு காய்கறி சந்தையில் பூண்டு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    வழக்கமாக ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், சமீபகாலமாக சற்று விலை உயர்ந்தது.

    இந்நிலையில் பூண்டின் விலை தற்போது 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உத்தரபிரதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, நடப்பாண்டில் விளைச்சல் குறைந்துள்ளது.

    விளைச்சல் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக பூண்டின் விலை உயர்ந்துள்ளது. 70 சதவீதம் வரை பூண்டு வரத்து குறைந்திருப்பதாகவும் அடுத்த ஒரு மாத காலத்திற்கு விலை ஏற்றம் இருக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.

    வண்டலூர்:

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி மற்றும் பல பகுதிகளை இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.


    இதனிடையே, பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

    நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் இணைய வழி மூலமாக பெறப்படும். டெண்டருக்கு பிப்ரவரி 14-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    ×