என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
- சில நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
சென்னை:
பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.
கடந்த மாதம் ஜனவரி 27-ந் தேதி ஸ்பெயின் புறப்பட்டுச் சென்ற அவர் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். அதன் மூலம் சில நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, ஐ.பெரியசாமி, பொன்முடி மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் விரைந்துள்ளனர்.
- தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததா என போலீசார் விசாரணை.
சென்னை தாம்பரம் மீனாம்பாள் தெருவில் வழக்கிறஞர் தியாகராஜன் என்பவர் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது வீட்டின் கண்ணாடி உடைந்ததால் வீட்டிற்குள் இருந்த தியாகராஜன் மனைவி, மகன் ஆகியோர் வீட்டில் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.
விமானப்படை அலுவலர் குடியிருப்பு பகுதியில் இருந்து தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் விரைந்துள்ளனர்.
- பா.ஜ.க. தேசிய தலைமையை சந்தித்து பேச்சுவார்த்தை.
- மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார்.
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அங்கு, பா.ஜ.க. தேசிய தலைமையை சந்தித்து கூட்டணி குறித்து அண்ணாமலை பேசவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது
- ஜாமின் மனு மீதான உத்தரவை பிப். 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
- பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.
ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை ஆந்திராவில் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
மனுதாரர்கள் தரப்பில், சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள்? இந்த விவகாரத்தில் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர். இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரிய வரும் என்று விவாதிக்கப்பட்டது. போக்சோ பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகள் ஜாமின் மனு மீதான உத்தரவை பிப். 6-ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.
- தமிழகத்தில் 36 இடங்களில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிப் 10 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை வேலூரில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று (06-02-2023) நடைபெற்றது. இதில் தென் கயிலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் மணிவண்ணன் அவர்கள் பங்கேற்று பேசியதாவது
"கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆவது ஆண்டாக மஹாசிவராத்திரி விழா மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 2 அன்று வேலூரை வந்தடைந்தது. இந்த ரதமானது வேலூர் நகரின் பல்வேறு இடங்களுக்கு பயணித்த பிறகு காட்பாடி, ஆற்காடு, சோளிங்கர், கே.வி.குப்பம், குடியாத்தம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு பிப் 10 ஆம் தேதி வரை பயணிக்க உள்ளது.
கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.
இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு கோவை ஈஷா யோக மையத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் 36 இடங்களில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள ராணி மஹாலில் இவ்விழா நேரடி ஒளிபரப்பு மூலம் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்."
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தென் கயிலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் குணசீலன் மற்றும் விஜயகுமார் உடன் பங்கேற்றனர்.
- வியாபாரம் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் வியாபாரிகள் போராட்டம்.
- சுமூக தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளிடம் விஜய் வசந்த் கேட்டுக் கொண்டார்.
மார்த்தாண்டத்தில் புதிய சந்தை கட்டப்பட்டு வரும் நிலையில் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரம் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக் கொண்டார்.
- மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
- மேயர், மருத்துவ துறை துணை இயக்குநர், கல்லூரி டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் ரூபாய் 6.02 கோடி மதிப்பீட்டில் 32 படுக்கை வசதியுடன் இரண்டு அறுவை சிகிச்சை கட்டிடத்தை திறந்து வைத்து, மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் தேசிய சுகாதார திட்ட நிதியிலிருந்து அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் மனோ தங்கராஜ், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட ஆட்சியர், நாகர்கோவில் மாநகர மேயர், மருத்துவ துறை துணை இயக்குநர், கல்லூரி டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆலோசனைக் கூட்டத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
- தேர்தல் நேரங்களில் ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச்செல்வது, தேர்தல் விதிகளை மீறிய செலவினங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக என்னென்ன தேவைப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, வருமான வரித்துறையினர் எவ்வளவு பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் தேர்தல் நேரங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பது, பணப்பட்டுவாடா, ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச்செல்வது, தேர்தல் விதிகளை மீறிய செலவினங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
கூட்டம் முடிந்ததும் சென்னையில் தங்கும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை காலை மீண்டும் ஆலோசனைக்கூட்டம் நடத்துகின்றனர். இந்திய துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ நாளை மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
- இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர்.
- அகதிகள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லெம்பலக்குடியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் அவர்களுக்கென புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்துவைத்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் முகாம்கள் 106 இருக்கின்றன. அந்த முகாம்களின் உள்ள 20 ஆயிரம் குடும்பங்களுக்கும் அதில் உள்ள 60 ஆயிரம் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அகதிகள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு.
கடல் தான் நம்மை பிரித்துள்ளது.தமிழர் என்ற உறவு நம்மை எப்போதும் இணைத்துதான் உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசிடம் அனுப்பியுள்ளோம். முதல் கட்டமாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 200 பேரை தேர்வு செய்து இலங்கை அரசு கொடுக்கப்பட்ட குடியுரிமை மூலம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் தமிழ்நாட்டின் சார்பில் முதல் கட்டமாக வந்தவர்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கான குழு அமைத்து சட்டத்துறை அமைச்சர் ஆலோசனைப்படி சட்ட குழு ஒன்று அமைத்து தீர்வு காணப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்ததை முடிப்பவர். அவர் எடுக்கின்ற எல்லா முயற்சிகளும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற முயற்சிக்கு மக்கள் ஆதரவாக இருக்கின்றனர். அதேபோல் இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர்.
எதிர்காலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமையை பெற்று தரவும். இலங்கை தமிழர்களில் உள்ள மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கும். வேளாண்மை கல்லூரியில் சேர்வதற்கும் அனுமதி வழங்கும்.
மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு தான் சட்ட சிக்கல் இருக்கின்றது. அதை மிக விரைவில் மத்தியில் அரசியல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நீட் தேர்வு என்ற அரக்கனை அகற்றிவிட்டு அதில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும்போது நம்மோடு இருக்கின்ற இலங்கை தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.
- அமுதவல்லி தன்னுடைய விருப்பப்படி, ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமுதவல்லி நன்றி கூறி மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டம், ஆண்டான் கோவிலைச் சேர்ந்தவர் கே. அமுதவல்லி. அவர் வீடுகளுக்குப் பயன்படும் ஆடைகள் தயாரிக்கும் சிறு தொழிலில் ஈடுபட ஆர்வம் கொண்டிருந்தார். அந்த ஆர்வத்துடன், மாவட்டத் தொழில் மையத்தை அணுகி தான் சுயமாகத் தொழில் புரிவதற்குக் கடன் உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டார்.
அமுதவல்லியின் தொழில் ஆர்வத்தின் அடிப்படையில், அவர் செய்ய விரும்பும் சிறு ஜவுளித் தொழிலை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் அவருக்கு உதவி செய்திட மாவட்டத் தொழில் மையம் முன் வந்தது. அதன் பரிந்துரையுடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமுதவல்லிக்கு அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டத்தின்கீழ் 9 லட்சத்து 87 ஆயிரம், ரூபாயை தொழில் கடனாக வழங்கியது. அதில் 35 சதவிகிதத் தொகை 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அரசு மானியமாக அமுதவல்லிக்கு கிடைத்தது.
மேலும், வங்கிக் கடன் தொகைக்குரிய வட்டியில் 6 சதவிகித வட்டித் தொகையையும் அரசு மானியமாக அவருக்கு அளித்தது.
இந்தக் கடன் உதவியோடு, அமுதவல்லி தன்னுடைய விருப்பப்படி, ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் மூலம் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் அவர் தயாரித்த ஆடைகள் விற்பனையாயின. இதில் அவருக்கு 8 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்தும் முதலமைச்சரின் திட்டம் சாதாரண ஒரு பெண்மணியைப் புதிய தொழில் முகவராக மாற்றிச் சாதனை படைத்துள்ளது.
மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் தன்னைத் தொழில் முதலாளியாக உயர்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமுதவல்லி நன்றி கூறி மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.
- மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கியது.
சென்னை:
திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை, சர்வாதிகார முறையில் நடைபெற்றது. இதனால் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.
இதனையடுத்து நீதிபதி, அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கியது.
- பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
- துர்நாற்றமும் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
வேளச்சேரி:
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
பெரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் தற்போது அதிக அளவில் குடியிருப்புகள் பெருகி மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. இதே போல் வாகன போக்குவரத்தும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்த நிலையில் பெரும் பாக்கம் ஊராட்சியின் பின் பகுதியில் ஜல்லடியான் பேட்டை பிரதான சாலையில் உள்ள காலி இடம் குப்பைகளை சேகரிக்கும் இடமாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு சேகரிக்கப் படும் குப்பைகள் பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம் ஓரகடம் அருகே உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சுற்றிலும் குடியிருப்புகள் உள்ள நிலையில் குப்பை சேகரிக்கும் இடம் தற்போது குப்பை கிடங்காக மாறி விட்டது. இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் அங்கேயே குவிந்து கிடப்பதால் தெருநாய்கள் மற்றும் மாடுகள் அந்த பகுதியில் அதிக அளவில் சுற்றி வருகின்றன.
நாய்கள் கழிவுகளை இழுத்து சாலையோரம் போட்டு செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். கடும் துர்நாற்றமும் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இங்கு கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி கிடங்கிற்கு மாற்ற ஊராட்சி நிர்வாகம் கடும் சிரமம் அடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, முறையாக பராமரிக்கப்படாத குப்பை கொட்டும் நிலையத்துக்குள் தெருநாய்கள், கால்நடைகள் அதிக அளவில் சுற்றி வருவதால் பெரும்பாக்கத்தில் இருந்து பள்ளிக்கரணை செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான நாட்களில், சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளில் பாதி மட்டுமே குப்பை கிடங்கிற்கு மாற்றப்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள குப்பை சேகரிப்பு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றனர்.






