என் மலர்
நீங்கள் தேடியது "amudhavalli"
- அமுதவல்லி தன்னுடைய விருப்பப்படி, ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமுதவல்லி நன்றி கூறி மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டம், ஆண்டான் கோவிலைச் சேர்ந்தவர் கே. அமுதவல்லி. அவர் வீடுகளுக்குப் பயன்படும் ஆடைகள் தயாரிக்கும் சிறு தொழிலில் ஈடுபட ஆர்வம் கொண்டிருந்தார். அந்த ஆர்வத்துடன், மாவட்டத் தொழில் மையத்தை அணுகி தான் சுயமாகத் தொழில் புரிவதற்குக் கடன் உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டார்.
அமுதவல்லியின் தொழில் ஆர்வத்தின் அடிப்படையில், அவர் செய்ய விரும்பும் சிறு ஜவுளித் தொழிலை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் அவருக்கு உதவி செய்திட மாவட்டத் தொழில் மையம் முன் வந்தது. அதன் பரிந்துரையுடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமுதவல்லிக்கு அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டத்தின்கீழ் 9 லட்சத்து 87 ஆயிரம், ரூபாயை தொழில் கடனாக வழங்கியது. அதில் 35 சதவிகிதத் தொகை 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அரசு மானியமாக அமுதவல்லிக்கு கிடைத்தது.
மேலும், வங்கிக் கடன் தொகைக்குரிய வட்டியில் 6 சதவிகித வட்டித் தொகையையும் அரசு மானியமாக அவருக்கு அளித்தது.
இந்தக் கடன் உதவியோடு, அமுதவல்லி தன்னுடைய விருப்பப்படி, ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் மூலம் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் அவர் தயாரித்த ஆடைகள் விற்பனையாயின. இதில் அவருக்கு 8 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்தும் முதலமைச்சரின் திட்டம் சாதாரண ஒரு பெண்மணியைப் புதிய தொழில் முகவராக மாற்றிச் சாதனை படைத்துள்ளது.
மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் தன்னைத் தொழில் முதலாளியாக உயர்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமுதவல்லி நன்றி கூறி மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






