என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அனுமதி பெறாமல் வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
- சம்பந்தப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மதுரை:
மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த வாசுமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தமிழ்நாடு அரசின் முறையான அனுமதி பெற்று, கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பேரையூர் அருகே உள்ள சூலப்புரம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறேன்.
இந்நிலையில் சிலர் எனது இ-சேவை மையத்தின் முன்பு கட்டிடத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்தனர். இதனையடுத்து நாங்கள் பிளக்ஸ் போர்டை சிறிது தூரம் தள்ளி வைத்தோம். இதற்காக தேவையற்ற பிரச்சனையை எழுப்பி என் மீதும் எனது குடும்பத்தினர் மீது டி.கல்லுப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர். இதனையடுத்து மீண்டும் இ-சேவை மையத்தை மறைக்கும் வகையில் எதிர்தரப்பினர் பிளக்ஸ் போர்டை மாற்றி வைத்தனர். இதுகுறித்து மீண்டும் எனது குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய போது, எனது மாமியார் மற்றும் மாமனாரை கடுமையாக தாக்கி இழிவான வார்த்தைகளால் திட்டினர். ஏற்கனவே அனுமதி பெறாமல் வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சமூக ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் பயன்படுத்தும் இ-சேவை மையத்தை மறைத்து அனுமதியின்றி சட்டவிரோதமாக குறிப்பிட்ட சாதி சமூகத்தினர் வைத்துள்ள பிளக்ஸ் போர்டை அகற்ற வேண்டும். கொலைமிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சத்தி குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பேனர் உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், இந்த விவகாரத்தில் போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.
- திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
- 2 மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ள 1374 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் 80 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் 270 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் பள்ளிக் கட்டிடங்கள், ரூ.3.92 கோடி செலவில் நூலகக் கட்டிடம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் 59.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், 15 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள், 2 மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 29.93 கோடி ரூபாய் செலவில் காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்று நோய் பிரிவுக் கட்டிடம், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் 3 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 502 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ளன. இந்த பல்வேறு துறைக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 592 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 கோவில்களில் கட்டப்பட உள்ள புதிய ராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம் போன்ற 43 புதிய திட்டப் பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நாமக்கல் மாவட்டம், போதமலையில் அமைந்து உள்ள கீழூர் ஊராட்சியில் 139 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணி என மொத்தம் 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும் இன்போசிஸ் அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அம்மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.
நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள், பாராளுமன்ற, எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
- இதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன.
இதற்கிடையே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 ஆண்கள், 4 பெண்கள் அடங்குவர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் வெம்பம்கோட்டை பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
- கழக மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஏற்பாட்டில் கட்சிக்காக உழைத்த உங்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
- நீங்கள் இல்லாமல் கலைஞர் இல்லை, கலைஞர் இல்லாமல் நீங்கள் இல்லை.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் ஏற்பாட்டில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொற்கிழி, பதக்கங்களையும் வழங்கி பேசியதாவது:-
மக்கள் அனைவரும் என்னை இளையவர் என்றும், சின்னவர் என்றும், அமைச்சர் என்றும் அழைக்கின்றார்கள். ஆனால் உங்கள் மத்தியில் நான் வயதிலும் சரி, அனுபவத்திலும் சரி சின்னவன் தான். நான் அமைச்சராக பதவியேற்று முதன் முதலில் வருகை புரிந்ததும் இந்த சிவகங்கை மண்ணிற்கு தான். இன்று கழக மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஏற்பாட்டில் கட்சிக்காக உழைத்த உங்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
நான் பெரியாரையோ, அண்ணாவையோ நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவர்களோடு சேர்ந்து கட்சிக்கு பாடுபட்ட உங்களை இன்று நேரில் பார்க்கும் நான் அவர்கள் ரூபத்தில் உங்களைப் பார்க்கிறேன். நான் ஒவ்வொரு மாவட்ட கழக நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்கு முன்பாக அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். நான் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதலாவதாக கட்சிக்காக உழைத்த கழக முன்னோடிகளை கௌரவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன் வைப்பேன்.

அந்த அடிப்படையில் நான் அமைச்சர் பதவியேற்ற ஒரு வருட காலத்தில் கலந்து கொண்ட எந்த ஒரு கழக நிகழ்ச்சியிலும் கழக முன்னோடிகளான உங்களை குறித்து நான் பேசுவதுண்டு. நீங்கள் இல்லாமல் கலைஞர் இல்லை, கலைஞர் இல்லாமல் நீங்கள் இல்லை. அந்த அளவுக்கு உங்களை பார்க்கும் போது பெருமையாகவும், பொறாமையாகவும் கருதுகிறேன். எனவே இளைஞர்களாகிய எங்களை வழிநடத்தும் ஆற்றல் மிகும் சக்தியாக நீங்கள் தான் கழகத்தில் இருக்கிறீர்கள்.
வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் அதே உத்வேகத்தோடு பாடுபட்டு வெற்றியடைய செய்யுங்கள் என்று உங்களை இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட கழக நிர்வாகிகளான மணி முத்து, சேங்கை மாறன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர கழக, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
- சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில் சேவை இன்று முதல் 6 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
- கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் 44 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படாது.
* கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில் சேவை இன்று முதல் 6 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
* இதேபோல் இன்று முதல் 22-ந்தேதி இரவு 10.45 மணி முதல் காலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
* தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.15 மணிக்கு பின், புறப்படும் புறநகர் ரெயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படும்.
- டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பாலைவனமாகும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி பிரச்சனையாக இருந்தாலும், மேகதாது அணைப் பிரச்சனையாக இருந்தாலும் கர்நாடகத்தை ஆண்ட பாரதிய ஜனதா அரசும், காங்கிரஸ் அரசும் தமிழகத்திற்கு எதிராக செய்த துரோகங்களை அம்மாவின் அரசு அவ்வப்போது அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்தது; தடுத்து நிறுத்தியது.
தி.மு.க. அரசு பதவியேற்ற நாள்முதல், தங்கள் கூட்டாளியான காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தமிழக நலனை காவு கொடுத்து வருவதை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டசபையிலும் நான் தொடர்ந்து எடுத்துக் கூறி வந்தேன்.
குறிப்பாக, கடந்த 14-ந்தேதி அன்று சட்டமன்றத்தில் நான், எங்களது ஆட்சிக் காலத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்றும், 2018-ம் ஆண்டு மேகதாது அணை குறித்த பிரச்சனை மத்திய நீர்வள கமிஷனின் பார்வைக்குச் சென்றபோது எனது அரசு, 5.12.2018 அன்று மத்திய நீர்வள கமிஷனின் அன்றைய இயக்குநர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இன்னும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து பலமுறை நான் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் விரிவாகப் பேசியும், அதற்கு பதில் அளிக்காமல், உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்துவரும் மிகப்பெரிய துரோகமாகும் என்பதை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்கிறேன்.
ஆணையம் அதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு மேகதாது அணை குறித்த பொருளை (அஜண்டாவை) 28-வது ஆணையக் கூட்டத்தில் எடுத்துக்கொண்டது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக ஆணையத்தின் தலைவர் அந்தப் பொருளை அனுமதித்ததோடு, அதை மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு. இந்த ஆணையக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை கவனமாக அனுப்பி வைத்து அதை எதிர்க்காமல், தமிழகத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க தி.மு.க. அரசு அனுமதித்தது மிகப்பெரிய துரோகமாகும்.
காவிரி நதிநீர் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பாலை வனமாகும்.
மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தவறினால், தமிழகத்திற்கு துரோகத்தை செய்யத் துணியும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளையும் கண்டித்து, அ.தி.மு.க. விவசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.
- தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.
தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது. விபத்து காரணமாக மற்றொரு தண்டவாளத்தில் விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தண்டவாளத்தை சீரமைத்து, ரெயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
- திரையரங்குகள், பூங்காக்கள், பள்ளிகள், கடற்கரைகள், கோவில் விழாக்களை அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் 'ரோடமைன்-பி' எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவு 3(1) (zx) பிரிவு 3(1) (zz) (iii) (v) (viii) & (xi) மற்றும் பிரிவு 26(1) (2) (i)(ii) &(v) ன்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006 ன்படி 'ரோடமைன்-பி' எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும், இதுகுறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையரால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தொடர் சோதனையில் ஈடுபட அறிவுறுத்தி உள்ளது.
திரையரங்குகள், பூங்காக்கள், பள்ளிகள், கடற்கரைகள், கோவில் விழாக்களை அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக விற்பனையாகும் தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயை யாரும் வாங்கி உண்ண வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தி.மு.க. கூட்டணியில் இந்த முறை காங்கிரசுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
- பேச்சுவார்த்தையின்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்குமா? என்று அ.தி.மு.க. தரப்பில் எதிர் பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்குவோம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் ரகசியமாக காய் நகர்த்தி வருகிறார். தி.மு.க. கூட்டணியில் இந்த முறை காங்கிரசுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் மற்ற கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதியை எதிர் பார்க்கின்றன. இந்த பேச்சுவார்த்தையின்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்குமா? என்று அ.தி.மு.க. தரப்பில் எதிர் பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு முடிவுக்காக அ.தி.மு.க. காத்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
அப்படி கூட்டணி மாற்றம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்? என்பது பற்றியும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகவும், இதன் காரணமாகவே பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- காதல் பிரச்சனையில் இளைஞர் பிரணவ் வெட்டி கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
- இளைஞரை கொன்றதாக சூலூர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுவன் சரணடைந்துள்ளான்.
கோவை:
கோவை மாவட்டம் ஒண்டிபுதூரில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
காதல் பிரச்சனையில் இளைஞர் பிரணவ் வெட்டி கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இளைஞரை கொன்றதாக சூலூர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுவன் சரணடைந்துள்ளான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
- மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
- மாடுகள் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று, லட்சுமி மீது ஏறியது.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஆத்துப்பாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவர் திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். மகள், குழந்தைகளை பார்த்து விட்டு இன்று வீடு திரும்பினார். லட்சுமியை மருமகன் தனசேகர், தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் செல்லாண்டி அம்மன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்ற போது சாலையில் இருந்த மண்ணில் இருசக்கர வாகனத்தின் சக்கரம் சரிந்து சாலையோரம் இருந்த குப்பைத்தொட்டி மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி லட்சுமி சாலையின் நடுவே விழுந்தார். அப்போது மாடுகள் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று, லட்சுமி மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






