என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு பெற்று அசத்தியுள்ளார்.
    • தனது பணிக்காலத்தில் நேர்மையாகவும் வழக்குகளை விரைந்து முடிக்க முயலுவேன் என தெரிவித்தார்.

    காஞ்சிபுரத்தில் சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு பெற்று அசத்தியுள்ளார்.

    காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை சாலியர் தெற்கு தெருவில் வசிக்கும் சலவை தொழிலாளியான கணேசன் - மேகலா தம்பதியரின் இரண்டாவது மகனான பாலாஜி, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.

    அதன் பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டு, கடந்த 11-ம் தேதி வெளியான முடிவுகளின் படி சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றார் பாலாஜி.

    நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்துப் பேசிய பாலாஜி, "நாள்தோறும் 8 மணி நேரம் இத்தேர்விற்காக பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். தனது பணிக்காலத்தில் நேர்மையாகவும் வழக்குகளை விரைந்து முடிக்க முயலுவேன்" என தெரிவித்தார்.

    • கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கொலை.
    • கணவர், அவரது தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு.

    கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சீதா என்ற பெண்ணை கொலை செய்து உடலையும் எரித்தனர்.

    கொலை தொடர்பாக சீதாவின் கணவர் சரவணன், கணவரின் தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    கடலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படத்தில் போதைப்பொருளை விற்பனையை தூண்டும் விதமாக காட்சிகள்.
    • பட குழுவினருக்கு படத்தில் போதை பொருள் பயன்படுத்தியது குறித்து நோட்டீஸ்.

    தெலுங்கில் சாய் தரம்தேஜ் நடிப்பில் கஞ்சா சங்கர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

    இந்தப் படத்தின் டிரைலர் காட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. படத்தின் டிரைலரைக் கண்ட தெலுங்கானா போதை பொருள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

    கஞ்சா சங்கர் என்ற சர்ச்சைக்குரிய தலைப்புடன் படத்தில் போதைப்பொருளை விற்பனையை தூண்டும் விதமாக பல்வேறு காட்சிகள் அமைப்பப்பட்டு இருந்தது.

    இதுபோன்ற படங்களில் சென்சார் போர்டு அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொண்டு தேவையற்ற காட்சிகளை நீக்க வேண்டும் என போதை பொருள் அமலாக்கப் பிரிவு இயக்குனர் சந்திப் சாண்டில்யா தெரிவித்தார்.

    மேலும், நடிகர் சாய் தரம் தேஜ், பட தயாரிப்பாளர் நாகவம்ஷி, இயக்குனர் சம்பத் நந்தி மற்றும் பட குழுவினருக்கு படத்தில் போதை பொருள் பயன்படுத்தியது குறித்து நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    • மொரட்டுப்பாளையம் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
    • தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த எந்திரம், பஞ்சுகள், துணி ரகங்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ளது மொரட்டுப்பாளையம். இங்குள்ள கே.எஸ்.ஆர். நகர் பகுதியில் வேஸ்ட் துணிகளை பஞ்சாக மாற்றும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் இந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் திடீரென தீ மளமளவென கொளுந்து விட்டு பற்றி எரிந்தது.

    இதனால் மொரட்டுப்பாளையம் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதுகுறித்து உடனடியாக ஊத்துக்குளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    இதனால் திருப்பூரில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து 10 தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டது.

    சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்றிரவு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த எந்திரம், பஞ்சுகள், துணி ரகங்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ்‌ கமிட்டி சார்பாக நடைபெற்ற மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த சகாய ஆன்டனி, ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்த இன்பன்ட் விஜய் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த நிடிஸோ ஆகியோர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இந்த நிறுவனம் இவர்களை வைத்து வேலை வாங்கி வந்தனர். சம்பளம் கேட்ட போது இவர்களை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தனர்.

    மேலும் இவர்கள் பாஸ்போர்ட்டை இந்த நிறுவனம் கையகப்படுத்தி இவர்கள் ஊருக்கு திரும்ப விடாமல் செய்து விட்டனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வேதனைக்கு உள்ளான இந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேறு வழி இல்லாமல் அங்கிருந்த ஒரு படகில் ஏறி இந்தியாவிற்கு வந்தனர். மும்பை கடற்கரை பகுதியினுள் ஒதுங்கிய இவர்களை கொலாபா போலீஸ் கைது செய்தனர்.

    இந்த செய்தியை அறிந்து மும்பையில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் உதவியுடன் ஒரு வழக்கறிஞரை நியமித்து

    அவர்களது விடுதலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முயற்சிகள் மேற்கொண்டார்.

    முயற்சிகளின் பலனாக நேற்று இவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து சிறையிலிருந்து விடுதலை பெற்ற இவர்களை விமானம் மூலம் குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்து விஜய் வசந்தின் நாகர்கோவில் அலுவலகத்தில் காத்திருந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


    குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்ற மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மத்திய பாரதிய ஜனதா அரசினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் விலைவாசி உயர்வினையும் மகளிர் வீடு வீடாக சென்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும் நிலைநாட்டிட பாரதிய ஜனதா கட்சியை தோற்கடித்தே ஆக வேண்டும்.

    மகளிர் காங்கிரஸ் மாவட்டத் தலைவி ஷர்மிளா ஏஞ்சல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பினுலால் சிங், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 592 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 திருக்கோவில்களில் கட்டப்படவுள்ள புதிய இராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம் போன்ற 43 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், அறநிலையத்துறை அதிகாரிகள், பேரூராட்சி தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    • அழியக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சிலேற்றியவர் உ.வே.சா.
    • தமிழுக்கு தந்த பங்களிப்பினால் ‘தமிழ்த்தாத்தா’ என்று நிலைத்துவிட்ட நீடுபுகழ்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    அழியக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சிலேற்றி, அழகிய நடையில் அவற்றுக்கு உரையும் எழுதி, தமிழுக்குத் தாம் தந்த பங்களிப்பினால் 'தமிழ்த்தாத்தா' என்று நிலைத்துவிட்ட நீடுபுகழ் உ.வே.சா பிறந்தநாளில் அவரது தமிழ்த் தொண்டைப் போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சைக்கோ ஆசாமி ஒருவர் உருட்டு கட்டையால் தாக்கும் சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
    • மர்ம ஆசாமியை பிடிக்கும் வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் ஓ.எம்.ஆர். சாலையில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு பணிபுரிபவர்கள் துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்கள். பெண் ஊழியர்கள் பலர் விடுதிகளில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

    அவர்கள் தங்களின் அலுவலகங்களுக்கு, வீடுகள் மற்றும் விடுதிகளில் இருந்து நடந்து செல்வது வழக்கம். தூரத்தில் வசிப்பவர்கள் வாகனங்களில் வந்து பஸ் நிறுத்தத்தில் இறங்கி அலுவலகங்களுக்கு நடந்து செல்வார்கள். இப்படி நடந்து செல்பவர்களை 50 வயது மதிக்கத்தக்க சைக்கோ ஆசாமி ஒருவர் உருட்டு கட்டையால் தாக்கும் சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த சைக்கோ ஆசாமி, துரைப்பாக்கம் 200 அடி சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தோழிகளுடன் நடந்து சென்ற சுவேதா (வயது 25) என்ற பெண்ணை அந்த சைக்கோ ஆசாமி உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி ஓடினார். அவருடன் வந்த தோழிகளும் தப்பி ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சைக்கோ ஆசாமி நின்று கொண்டிருந்தார். அவரிடம் இருந்து உருட்டுக்கட்டையை பறித்துக்கொண்டு அவரை அங்கிருந்து விரட்டினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செம்மஞ்சேரியை சேர்ந்த குமரன் என்பவர் துரைப்பாக்கத்தில் இருந்து நீலாங்கரைக்கு செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே மர்ம ஆசாமி உருட்டுக்கட்டையால் குமரனை தாக்க முயற்சித்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இந்த சைக்கோ ஆசாமி பற்றிய தகவல் தற்போது துரைப்பாக்கம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் துரைப்பாக்கம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார்கள்.

    எனவே போலீசார் மற்றும் அதிகாரிகள், அந்த சைக்கோ ஆசாமியை பிடித்து மனநல காப்பகத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த மர்ம ஆசாமியை பிடிக்கும் வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

    • திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டல் இயங்கும் கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் வரிபாக்கி நிலுவையில் உள்ளது.
    • மாநகராட்சி சார்பில் கட்டிட உரிமையாளருக்கு 2 முறை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு ஏதுவாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் மையம் செயல்பட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இப்படி வரி செலுத்த ஏதுவாக மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் வரி செலுத்தாத கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டல் இயங்கும் கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் வரிபாக்கி நிலுவையில் உள்ளது. இதனை கட்டுமாறு மாநகராட்சி சார்பில் அந்த கட்டிட உரிமையாளருக்கு 2 முறை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் வரி பாக்கி செலுத்தவில்லை. இதனால் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் பிரபல ஓட்டல் இயங்கும் கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன் என்பவரின் உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (வயது 59). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக டிரைவரான இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் சாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த பாலசுப்பிரமணியன், திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த சையத்அலி பாத்திமா என்பவரை 28 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அன்வர் உசேன் எனவும் மாற்றிக்கொண்டார்.

    இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர்.

    ஆனால் திடீரென்று அங்கு வந்த முதல் மனைவி சாந்தி தரப்பினர், பாலசுப்பிரமணியனின் பூர்வீக ஊரான ராமநாதபுரம் மாவட்ட பேரையூரில் இந்து முறைப்படி தான் அடக்கம் செய்ய போவதாகவும் உடலை தங்களிடம் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் இரு தரப்பினரும் சென்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து இருத்தரப்பினரிடமும் வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சையத்அலி பாத்திமா தரப்பினர் கூறுகையில், ஏற்கனவே சாந்தியை விவகாரத்து செய்து விட்டார். இதனால் நாங்கள் தான் அடக்கம் செய்வோம் என்று கூறினார்.

    ஆனால் சாந்தி தரப்பினர் கூறுகையில், விவகாரத்து உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் எங்களிடம் தான் உடலை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். இப்பிரச்சனையில் காவல் துறையினர் முடிவெடுக்க முடியாமல், உடலை கைப்பற்றி காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர்.

    கணவர் உடலை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு மனைவிகளும் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்று உடலை பெற்று கொள்ளுமாறு கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். உயிருடன் இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனைகளை விட பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன், இறந்த பின்னர் சந்தித்த பிரச்சனைகள் தான் அதிகம் என்று இறுதிச்சடங்குக்கு வந்தவர்கள் முணுமுணுத்தப்படி சென்றனர்.

    • தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு.
    • பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

    பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அண்மையில் ஓஷன் லைஜப் ஸ்பேஷஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    ரூ.50 கோடி வரை பணிபரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இந்நிலையில், தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு என நீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் வாதம் செய்தது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாக கட்டுமான நிறுவனம் வாதித்தது.

    வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்ததோடு, பதிலளிக்குமாறும் அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • ரூ.15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
    • தீர்ப்பை தொடர்ந்து எஸ்.வி.சேகர் அபராத தொகையை செலுத்தினார்.

    நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    "சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன" என்று நீதிபதி ஜி.செயவேல் உத்தரவிட்டுள்ளார்.

    உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்ததை அடுத்து சிறை தண்டனை நிறுத்திவைப்பு. அபராத தொகையை செலுத்தினார்.

    • ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது
    • பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது என போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், " தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதன்படி சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளும் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது

    இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    இதனை மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

    ×