search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur Fire Accident"

    • மொரட்டுப்பாளையம் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
    • தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த எந்திரம், பஞ்சுகள், துணி ரகங்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ளது மொரட்டுப்பாளையம். இங்குள்ள கே.எஸ்.ஆர். நகர் பகுதியில் வேஸ்ட் துணிகளை பஞ்சாக மாற்றும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் இந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் திடீரென தீ மளமளவென கொளுந்து விட்டு பற்றி எரிந்தது.

    இதனால் மொரட்டுப்பாளையம் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதுகுறித்து உடனடியாக ஊத்துக்குளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    இதனால் திருப்பூரில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து 10 தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டது.

    சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்றிரவு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த எந்திரம், பஞ்சுகள், துணி ரகங்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீ விபத்து காரணமாக சுற்றுவட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் நியூ வாவிபாளையம் ஜெய்ஸ்ரீநகர் பகுதியில் மகேஸ்வரன், பரமசிவம் ஆகியோருக்கு சொந்தமான பனியன் எலாஸ்டிக் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் அறையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். மாலை 4.30 மணிக்கு நிறுவனத்தின் அருகில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தொழிலாளர்கள் தண்ணீரை எடுத்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது தீ பனியன் எலாஸ்டிக் நிறுவனத்திற்கும் பரவியது. அந்த தீ சிறிது நேரத்தில் எலாஸ்டிக் நிறுவனம் முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் தலைமையில் திருப்பூர் வடக்கு மற்றும் அவினாசி தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்களுடன் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மின் இணைப்பை துண்டித்து விட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனாலும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு கட்டிடத்தை இடித்து உள்ளே சென்று தீயை அணைக்க போராடினர். இரவு 10 மணி ஆகியும் தீயை முழுவதுமாக அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்து காரணமாக சுற்றுவட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த இறக்குமதி எந்திரங்கள், எலாஸ்டிக், பனியன் துணி, நூல் என மொத்தம் ரூ.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×