என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய சாலைகள் போடப்பட்டது. தி.மு.க.வினர் போட்டாலும் அந்த பணத்தை கொடுத்தது மோடிதான்.
    • அ.தி.மு.க. கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்று அவர்களுக்கு தெரியாது.

    திருமங்கலம்:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.கொக்குளம், குராயூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜல்ஜீவன் திட்டத்தில் உங்களுக்கு பிரதமர் மோடி குடிநீர் கொண்டு வந்தார். புதிய சாலைகள் போடப்பட்டது. தி.மு.க.வினர் போட்டாலும் அந்த பணத்தை கொடுத்தது மோடிதான். அது டெல்லியில் இருந்து வந்த பணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. வினர் கொடுத்த ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. எனவே உங்களுக்கு பணம் கொடுத்து உங்களை ஏமாற்ற நினைப்பார்கள்.

    இந்தியாவிலேயே பா.ஜ.க. மட்டும் தான் ஊழல் இல்லாத ஆட்சி. தி.மு.க.வில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்று அவர்களுக்கு தெரியாது. குரல் கொடுப்போம் என்கிறார்கள். ஆனால் நாங்கள் செய்யும் இடத்தில் இருக்கிறோம்.

    தமிழ் மொழி, தமிழ் மண்ணுக்காக கொடுக்கிற பிரதமர் இருக்கிறார். நான் உங்கள் பிரதிநிதியாக, ஆனால் நேரடியாக உங்களுக்கு வேண்டியதை செய்யச் சொல்வேன். இங்கு அதிகமாக மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலையும் வேண்டும் என்பதால் நறுமண தொழிற்சாலை கொண்டு வருவதற்கு முயற்சிப்பேன். அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதனால் இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கடையநல்லூர் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார்.
    • பிரசாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எந்தவிதமான அனுமதியும் அவர்கள் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    கடையநல்லூர்:

    தென்காசி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கடையநல்லூர் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார். ஆனால் பிரசாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எந்தவிதமான அனுமதியும் அவர்கள் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து தேர்தல் பிரிவு அலுவலர் ஜீவானந்தம் கொடுத்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் பா.ஜனதா மற்றும் அ.ம.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அண்ணாமலை ஒரு நல்ல தலைவர். சுறுசுறுப்பான இளைஞர்.
    • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் ராமரின் பெயரோடு தொடர்பு இருக்கிறது. தமிழகத்திலும் அப்படி இருக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தி.மு.க.வை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய போது தி.மு.க.வினர் அதனை கடுமையாக கேலி செய்து விமர்சனம் செய்தனர். எங்களை பானிபூரி வாலாக்கள் என்றனர். ஆனால் தமிழக மக்கள் காசிக்கு வந்து தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் தி.மு.க.வினர் விமர்சனங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை உணர்ந்தார்கள்.

    காசி உண்மையிலேயே வளர்ச்சியடைந்து விட்டதாக பெருமிதத்துடன் பேச தொடங்கினார்கள். இதனால் தி.மு.க. மீது தமிழக மக்களுக்கு அளவுக்கு அதிகமான வெறுப்பு வளர்ந்து இருக்கிறது.

    அந்த ஆத்திரமும் வெறுப்பும் தான் மக்களை பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் ஈர்த்துள்ளது.

    அண்ணாமலை ஒரு நல்ல தலைவர். சுறுசுறுப்பான இளைஞர். தனது ஐ.பி.எஸ். பணியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் அவர் இணைந்தார்.

    அவர் நினைத்திருந்தால் தி.மு.க.வில் போய் ஐக்கியமாகி இருக்கலாம். அங்கு அண்ணாமலைக்கு பெயரும், பதவியும் கிடைத்திருக்கும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்காகத்தான் வந்தார். பா.ஜனதா கட்சியை நம்பினார்.

    சனாதன எதிர்ப்பு பற்றிய கேள்வியை தான் வேறு விதமாக அணுக நினைக்கிறேன். இந்த கேள்வியை காங்கிரசிடம் தான் கேட்க வேண்டும். காங்கிரஸ் ஏன் கையறு நிலையில் உள்ளது.

    சனாதனத்துக்கு எதிரான கட்சியுடன் கை கோர்க்க வேண்டிய அவசியம். காங்கிரசுக்கு ஏன் வந்தது. சனாதன வெறுப்புணர்வில் தான் தி.மு.க. உருவெடுத்தது.

    அதனால் அவர்களிடம் இந்த கேள்வியை கேட்க தான் பொறுத்தமானதாக இருக்கும். காங்கிரஸ் தனது பூர்வீக குணத்தை இழந்து விட்டதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் ராமரின் பெயரோடு தொடர்பு இருக்கிறது. தமிழகத்திலும் அப்படி இருக்கிறது. கிராமத்துக்கும், தனி நபர்களுக்கும் ராமரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி தேசத்தை பிரித்து பார்க்க முடியும். இருந்தாலும் சில வேற்றுமைகள் தமிழகத்தில் இருக்கின்றன.

    பஞ்சாப்பை போல நாகலாந்து கிடையாது. காஷ்மீரை போல குஜராத் கிடையாது. அந்த வேற்றுமைதான் நமது பலம். அதனை நாம் கொண்டாட வேண்டும்.

    உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. அந்தந்த மாநிலங்களுக்கே உரித்தான உடையை தான் உடுத்தினாலும் அவர்கள் என்னை குறை கூறுகிறார்கள்.

    தமிழ் மொழியை நாங்கள் போற்றுகிறோம். வணங்குகிறோம். அவரவர் தாய் மொழியை நிச்சயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு வரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவெடுக்க விரும்புகிறார்கள்.

    கடிதம் எழுதும்போதும், கையெழுத்திடும் போதும் தாய் மொழியிலேயே எழுதுங்கள். அதனை பெருமையாக நினையுங்கள். அதுதான் உண்மையான மொழிபற்றாகும். உலகிலேயே மிகப்பழமையான மொழி தமிழ் மொழியாகும்.

    எனவேதான் அதன் சிறப்பை உலகறிய செய்து வருகிறோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்

    • வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 79 நாட்களுக்கு பிறகு இன்று காலை மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
    • ஏற்கனவே 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி முதல் அணு உலையில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது.

    வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 79 நாட்களுக்கு பிறகு இன்று காலை மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கியது. சுமார் 300 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் படிப்படியாக அதிகரித்து நாளைக்குள் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை எட்டிவிடும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    • நட்சத்திர ஏரியில் படகு சவாரி.
    • பொழுதை கழிக்கும் சுற்றுலா பயணிகள்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை வெயில் காரணமாகவும், பள்ளி, கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் முக்கிய பொழுதுபோக்கு இடமாக நட்சத்திர ஏரியை தேர்வு செய்து அங்கு ஆனந்தமாக படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கொடைக்கானலில் நகர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி ஏரியைச்சுற்றி ஒரு சில இடங்களில் உள்ளது.இதில் தமிழ்நாடு அரசு இல்ல படகு குழாம், நகராட்சி படகுக்குழாம் என இரு வேறு படகுக் குழாம்கள் இயங்கி வருகிறது. இதில் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியை ஒட்டிய ஏரிப்பகுதியில் ஒரு நகராட்சி படகு குழாம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும் நட்சத்திர ஏரிக்குள் சென்று படகில் ஏறி சவாரி செய்யும் விதமாகவும் அனைவரையும் ஈர்க்கும் விதமாக மிதவை நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

    பயணிகள் ஓய்வறை, பாதுகாப்பான நடைமேடை, சுற்றுலா பயணிகள் நெரிசல் இல்லாமல் உள்ளே செல்லும் வகையில் வழித்தடங்கள் என சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஏரிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் நடைமேடையில் சுற்றுலா பயணிகள் அச்சமின்றி நடக்கும் விதமாக தார்பாய்கள் அமைத்து பயணிகள் பாதுகாப்பை நகராட்சி உறுதிப்படுத்தியுள்ளது. நடைமேடையில் பயணித்து நட்சத்திர ஏரியினுள் குறுகிய தூரம் வரை சென்று படகில் ஏறி சவாரி செய்வது மிகுந்த உற்சாகத்தை தருவதாக சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

    • உசிலம்பட்டியில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வரும் கடைகள் மூடப்பட்டன.
    • கடைகள் அடைக்கப்பட்டதால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் தேனி பிரதான சாலையில் அமைந்துள்ள முக்கியமான ஊராக உசிலம்பட்டி விளங்கி வருகிறது. உசிலம்பட்டியை சுற்றி உள்ள ஏராளமான கிராம மக்களுக்கு இந்த ஊரே பிரதான வர்த்தக மையமாக இருந்து வருகிறது.

    மேலும் பல ஆண்டுகளாக உசிலம்பட்டி பஸ் நிலையம் அருகே சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் நூற்றுக்கும் அதிகமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளை நம்பி சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகளின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் உள்ளது.

    உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான சிறு வியாபாரிகளும், கூலித் தொழிலாளர்களும், உசிலம்பட்டி வழியாக வந்து செல்லும் பயணிகளும், கிராம மக்களும் இந்த கடைகளையே நம்பியுள்ளனர். இந்நிலையில் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதையொட்டி பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் சந்தை பகுதியில் அமைந்துள்ள 140 கடைகளின் கட்டிடங்களை இடித்து விட்டு அப்பகுதியில் பஸ் நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நம்பி வாழ்ந்து வரும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நகராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து இன்று ஒருநாள் அடையாள கடையடைப்பு வேலை நிறுத்தத்திற்கு வர்த்தக சங்கத்தினரும், வியாபாரிகளும், அனைத்து கட்சியினரும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.

    இதைத்தொடர்ந்து இன்று பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்காக கடைகளின் கட்டிடங்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டியில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வரும் கடைகள் மூடப்பட்டன.

    இந்த போராட்டத்திற்கு உசிலம்பட்டி வட்டார வர்த்தக சங்க தலைவர் ஜவகர், தேனி ரோடு பஜார் வியாபாரிகள் சங்க தலைவர் இலைக்கடை ரமேஷ், செயலாளர் ராம ராஜ், பொருளாளர் சசி, ஆனந்தகுமார், பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் வர்த்தக சங்கத்தினர் வியாபாரிகள், தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

    கடையடைப்பு போராட்டம் காரணமாக தேர்தல் பிரசாரத்தின் இறுதி கட்ட சூழலில் உசிலம்பட்டி பரபரப்பாக காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசியல் கட்சியினர் மார்க்கெட் பகுதியில் பிரசாரம் செய்ய இயலாமல் போனதால் அங்கும் மக்கள் நடமாட்டம் குறைந்து அமைதியாக காணப்பட்டது. மார்க்கெட் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • பாம்பை பிடித்துக் கொண்டும், பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்தார்.
    • வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அவர் பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது அந்த கூட்டத்திற்கு வாலிபர் ஒருவர் வயல் வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றை பிடித்து கழுத்தில் போட்டுக்கொண்டு வந்தார். 2 கைகளிலும் பாம்பை பிடித்துக் கொண்டும், பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்தார். இதைக்கண்ட அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


    ஆனால் அந்த வாலிபர் பிரசாரம் முடியும் வரை, அந்த பகுதியை சுற்றிச்சுற்றி வந்தார். டி.எம்.செல்வகணபதி தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிறகு தான் அந்த வாலிபரும் அந்த இடத்தில் இருந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதை அறிந்த மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பாம்புடன் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வந்த அந்த வாலிபரை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சேலம் தெற்கு வனச்சரகர் துரை முருகன் அந்த வாலிபர் யார்? என விசாரணை நடத்தியபோது பாம்புடன் பிரசார கூட்டத்திற்கு வந்தவர் கருப்பூர் பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 918 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.1 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 891 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நடைமுறை கடந்த மாதம் 17-ந் தேதி முதல் அமலானது. தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள், மதுபானங்கள் கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி முதல் இன்று வரை ரூ.3 கோடியே 27 லட்சத்து 71 ஆயிரத்து 428 பணத்தை பறக்கும்படை, நிலைக்கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.18 லட்சத்து 90 ஆயிரத்து 471 மதிப்பிலான பொருட்களையும், மது மற்றும் போதைப்பொருட்கள் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், டி.வி., பாத்திரங்கள், சால்வை, அரிசி, வேட்டி, சேலைகள், டி-சர்ட்டுகள், பனியன்கள் உள்பட ரூ.24 லட்சத்து 42 ஆயிரத்து 170 மதிப்பிலும் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.3 கோடியே 78 லட்சத்து 64 ஆயிரத்து 71 மதிப்பிலான பணம்-பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 918 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.1 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 891 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 178 பணம் பறிமுதல் வழக்குகள் தொடுக்கப்பட்டதில், 134 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் பணம் விடுவிக்கப்பட்டுள்ளன. 47 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேர்தல் செலவின பிரிவு பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 090 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இன்றைய தினம் திருமங்கலத்தில் உள்ள 2000-க்கு மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
    • கார், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நகர்புற எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் விதிமுறைக்கு புறம்பாக 2 கிலோ மீட்டர் தொலைவிலேயே சுங்கச்சாவடியை வைத்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வப்போது போராட்டம் நடத்தும்போது கட்டண விலக்கு அளிப்பதும், பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதுமாக சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் உள்ளூர் வாகன உரிமையாளர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.

    இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் முதல் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து வருகிறது. இதை கண்டித்தும், கப்பலூர் சுங்கச்சாவடியை உடனே அகற்ற வேண்டும் என எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லாததால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி இன்று (16-ந் தேதி) திருமங்கலம், கப்பலூர் சிட்கோ பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம், மோட்டார், வாகன ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    அதன்படி இன்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம், கப்பலூர் சிட்கோவில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருமங்கலம் நகர் பகுதி மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்.

    இன்றைய தினம் திருமங்கலத்தில் உள்ள 2000-க்கு மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் கார், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை.

    இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக் குழுவினர் கடைகள் தோறும் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக வியாபாரிகள், பொதுமக்கள் கூறுகையில், சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திருமங்கலம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் மட்டுமல்லாது வருகிற பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க போவதாகவும், வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி 28 மில்லிமீட்டரும், நாலுமுக்கு, காக்காச்சியில் தலா 21 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    பாபநாசத்தில் அதிகபட்சமாக 58 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 38 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 24 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 26.80 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாநகர் பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஒரு சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. அங்கு 28 மில்லிமீட்டர் மழை பதிவானது. பாளையில் 2 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் லேசான சாரல் அடித்தது. களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கரைகளில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை கடனா அணையில் 3 மில்லிமீட்டரும், ராமநதியில் 9 மில்லிமீட்டரும், குண்டாறில் 1 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது. இன்று காலை வரையிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பாவூர்சத்திரம், சுரண்டை, வி.கே.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • மோடிக்கு நிகர் யாரும் இல்லை. மோடிக்கு நிகர் மோடி மட்டுமே.
    • 2014-ல் மோடி இந்தியாவிற்கு தேவைப்பட்டார். 2024-ல் மோடி உலகத்திற்கு தேவைப்படுகிறார்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை இன்று காலை சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்தியாவின் பிரதமராக வரக்கூடிய தகுதி இருக்க கூடிய ஒரு நபர் நரேந்திர மோடி மட்டுமே. பிரதமருக்கு என்று பொறுப்பு இருக்கிறது. பலம் இருக்கிறது.

    அந்த பொறுப்பில் இருந்து நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். இத்தனை பிரதமர்கள் இருந்தாலும் மோடிக்கு என்று தனித்தன்மை இருக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிக பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014-ம் ஆண்டில் இந்தியா உலக பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்தது.

    கடந்த 10 ஆண்டு ஆட்சியில் தற்போது இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியா உலக பொருளாதாரத்தில் 3-வது இடத்திற்கு முன்னேறும். தனிநபர் வருமானத்தையும் இரட்டிப்பு செய்துள்ளோம்.

    இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைவரையும் மையப்படுத்தி இந்த ஆட்சி நடந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு என்று எண்ணற்ற மாபெரும் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளது. வருடா வருடம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு வங்கி கணக்கு உள்ளது.

    கடந்த 10 ஆண்டில் 4 கோடி ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்படும்.

    பிரதமர் மோடி மக்களுக்காக வேலை செய்துள்ளார். மக்களின் வாழ்வை உயர்த்தி உள்ளார். நாடு நன்றாக இருப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு செயல்பட்டு வருகிறார்.

    சிலர் பிரதமர் வேண்டாம் என்று சொல்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் உங்களுக்கு தெரிந்த இன்னொரு தலைவரின் பெயரை மட்டும் சொல்லுங்கள்.

    நாளையுடன் பிரசாரம் முடிய போகிறது. ஆனால் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் இந்தியா கூட்டணி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காக்க என்னோடு வாருங்கள் என்று அழைக்கிறார். உங்களிடம் இருந்தும், உங்கள் குடும்பத்திடம் இருந்தும் மக்களை காக்க தான் நாங்கள் வீதியில் வந்து நின்று கொண்டிருக்கிறோம்.

    தமிழகத்தில் 21 இடங்களில் தான் தி.மு.க போட்டியிடுகிறது. 21 இடத்தில் நிற்கும் தி.மு.க. 543 பாராளுமன்ற தொகுதி உள்ள நாட்டில் எதனை போய் காப்பாற்ற போகிறார்கள்.

    மோடிக்கு நிகர் யாரும் இல்லை. மோடிக்கு நிகர் மோடி மட்டுமே.

    ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படி உலகம் 3-வது உலக போரை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலகத்தில் எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும், அதனுடைய தாக்கம் இந்தியாவில் இருக்கிறது. இந்திய பொருளாதாரம் என்பது உலகம் முழுவதும் பின்னி பிணைந்துள்ளது.

    2014-ல் மோடி இந்தியாவிற்கு தேவைப்பட்டார். 2024-ல் மோடி உலகத்திற்கு தேவைப்படுகிறார். உலக தலைவனை இந்தியாவில் இருந்து நாம் அனுப்ப உள்ளோம். உலக பிரச்சனைக்கு தீர்வாக இந்தியா இருக்கும். நமது வளர்ச்சியும் வரலாற்று சிறப்பு மிக்க வளர்ச்சியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×