என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னையில் மட்டும் 124 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
- தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. இந்த ஆண்டில் காலியாக உள்ள 90 பணியிடங்களுக்கு முதல் நிலை எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
துணை கலெக்டர் பதவிக்கு 16 இடங்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு 23 இடங்கள், வணிகவரித்துறை உதவி ஆணையர் பதவிக்கு 14 இடங்கள், கூட்டுறவு துறை துணை பதிவாளர் பதவிக்கு 21 இடங்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பதவிக்கு 14 இடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 1 இடம், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பதவிக்கு 1 இடம் என மொத்தம் 90 இடங்களை நிரப்புவதற்கு இன்று தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆண்கள் 1,25,726 பேர், பெண்கள் 1,12,501 பேர், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ஆவர்.
குரூப் 1 தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 797 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் மட்டும் 124 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் இன்று சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குரூப் 1 தேர்வை எழுதினார்கள்.

சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளியில் குரூப் 1 தேர்வு எழுத வந்தவர்களை காணலாம்.
சென்னையில் மட்டும் 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. பொது அறிவு பிரிவு, பட்டப்படிப்பு தரத்தில் 175 கேள்விகளும், திறனறிவு, மனக்கணக்கு, நுண்ணறிவு பிரிவு, பத்தாம் வகுப்பு தரத்தில் 25 கேள்விகளும் கேட்கப்பட்டன. மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் இருந்தது. கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்று இருந்தன.
தேர்வை நடத்துவதற்காக முதன்மை கண்காணிப்பாளர்களாக 797 பேர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லவும், மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
தேர்வு அறையில் தேர்வு நடைமுறை விதிமுறைகளை தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. 9 மணிக்கு மேல் வந்த யாரையும் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இருந்தாலும் ஒரு சிலர் 9.03 மணியளவில் வந்தனர். அவர்களை தேர்வு எழுத அனுமதித்தனர். தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டு இருந்தது. தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 பணிகளுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என 2 தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலை தேர்வு தகுதி தேர்வு மட்டுமே. இந்த தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் பணி நியமனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- திமுகவிற்கு தோல்வி பயத்தை பாமக ஏற்படுத்தியது.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளும் பாமகவிற்கு வந்துள்ளது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக தோல்வியடைந்தது குறித்து வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுக பணம் கொடுத்தது. பரிசுப்பொருட்கள் மூலமாகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
* திமுகவிற்கு தோல்வி பயத்தை பாமக ஏற்படுத்தியது.
* இடைத்தேர்தலில் தோல்வி பயத்தை திமுகவிற்கு ஏற்படுத்த முடிந்தது என்பதே மனநிறைவு.
* அப்பாவி மக்களிடம் ரூ.1000, ரூ.500 காட்டி அவர்களை ஏமாற்றி திமுக வாக்கை பெற்றுள்ளது. இதற்காக பெருமைப்படக்கூடாது.
* விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளும் பாமகவிற்கு வந்துள்ளது என்று கூறினார்.
- நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர்.
- சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வழுதலைக்குடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால் திருமுல்லைவாசல் ஊராட்சியில் இருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. வருகின்ற குடிநீரும் அழுக்காக நிறம் மாறி வந்தது. இதனால் அந்த நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை வழுதலைக்குடி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து வந்த சீர்காழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக பெண்கள் கூறினர். தொடர்ந்து சாலை மறியல் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தால் சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கர்நாடகா, மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
- கலெக்டர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும். கர்நாடகா தற்போது தேக்கி வைத்துள்ள தண்ணீரை உடனடியாக டெல்டா மாவட்ட பாசனத்துக்கு திறந்து விட வேண்டும். கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாத நிலையில் வறட்சி ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் பானைகளை தலையில் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பானை மற்றும் செடிகளை தலையில் தூக்கியப்படி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நுழைய முற்பட்டனர். ஆனால் வாயில் கதவை மூடி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அலுவலகம் வெளியே சாலையில் படுத்து கிடந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகா, மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் பயன் அடைய உள்ளனர்.
- சிறுநீரகங்கள் ஆகியவை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மேரிஸ்ஹல் பகுதியை சேர்ந்தவர் எமிலி (வயது63).
உடல்நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் எமிலி திடீரென மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது உறவினர்கள் முன்வந்தனர். இது தொடர்பாக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து டாக்டர்கள் மூளைச்சாவு அடைந்த எமிலியின் உடலில் இருந்து கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவற்றை தனியாக பிரித்து எடுத்தனர்.
பின்னர் தானமாக பெறப்பட்ட கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் ஆகியவை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

கல்லீரல் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், கண்கள் சங்கரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இவரது உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் பயன் அடைய உள்ளனர்.
ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட முதல் உறுப்பு தானம் இதுவாகும். மேலும் இறக்கும் முன்பு உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில், முதல்முறையாக உடல் உறுப்பு தானம் செய்த எமிலியின் உடலுக்கு அரசு சார்பில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டது. மேலும் கலெக்டர் அருணா நேரில் சென்று உடல் உறுப்பு தானம் செய்த எமிலியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர், உதவி இருப்பிட மருத்துவ அலுவலர்கள் வினோத்குமார், மணிகண்டன், மயக்கவியல் மருத்துவர் கார்த்திக், ஊட்டி தாசில்தார் சரவண குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
- இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத ஒரு சோதனை எங்களுக்கு ஏற்பட்டது.
- மக்கள் எப்போதும் தெளிவாக வாக்களிக்கக்கூடியவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.
சென்னை:
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் முடிந்து நாங்கள் 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்தே தி.மு.க. அரசுக்கு, இந்தியாவிலேயே இதுவரை எந்த ஆட்சிக்கும் இடைத்தேர்தல் நேரத்தில் வராத சவால்கள் வந்தது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு மிக அருகாமையில் இருக்கிற கள்ளக்குறிச்சியில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்தது. அதை பா.ஜ.க.வினர் பூதாகரமாக்கி பிரளயமே ஏற்பட்டு விட்டதை போல, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடைபெற்றதை மறைத்து விட்டு இங்கு மிகப்பெரிய நாடகத்தை நடத்தி தி.மு.க.வின் வெற்றியை குலைத்துவிட வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டார்கள்.
தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கொலை நடந்தது. அதற்கு அரசியல் சாயம் பூசி அதையும் இந்த தேர்தலில் மிகப்பெரிய பிரச்சனையாக்க முயற்சித்தார்கள்.
இந்த 2 மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு காலம் நேர்மையாக ஆட்சி நடத்தியதை மக்கள் ஏற்றுக்கொண்டு மக்களாகிய நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய மகத்தான வெற்றியை தேடிக்கொடுத்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு தி.மு.க. வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டு உள்ளது.
இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத ஒரு சோதனை எங்களுக்கு ஏற்பட்டது. இந்த சவால்களுக்கு மத்தியில் தி.மு.க. தொண்டர்கள் கொஞ்சமும் சலிப்பில்லாமல் உறுதியோடு பணியாற்றியுள்ளனர். ஜாதியை தூண்டி விட்டு பேசியவர்கள் மத்தியில் கரியை பூசி இருக்கிறார்கள். மக்கள் எப்போதும் தெளிவாக வாக்களிக்கக்கூடியவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு பகலாக உழைத்து வாக்கு சேகரித்தார். அவர் அரசியலில் கால் வைத்த பிறகு அரசியலில் எங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது. இதன் மூலம் இன்னொரு வெற்றியும் தி.மு.க.வுக்கு கிடைத்திருகிறது. இந்த ஒரு மாதமாக பல தரப்பினரும் சேர்ந்து மனகுடைச்சல் கொடுத்தார்கள். அவை அத்தனையையும் தாங்கிக்கொண்டு உழைத்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார்.
- 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதன்படி, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதேபோல், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், தமிழகத்தில் இடைத்தேரத்லில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
மற்ற மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 2019ம் ஆண்டு முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மகத்தான மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நாற்பது தொகுதியிலும் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி பெற்றது.
சாதாரண வெற்றியல்ல, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியைப் பெற்றோம். அதிமுக கூட்டணி படுதோல்வியை அடைந்தது. பாஜக கூட்டணி, பாதாளத்தில் விழுந்தது. இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டோம்.
விக்கிரவாண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய புகழேந்தி அவர்கள் உடல்நிலை காரணமாக மறைவெய்தியதைத் தொடர்ந்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக ஆற்றமிகு உடன்பிறப்பு அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தோம்.
நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது. பாஜக, தனது அணியில் இருக்கும் பா.ம.க.வை நிறுத்தியது.
'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பா.ம.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை.
தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேரகாலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும், தினந்தோறும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நன்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியை நான் பார்க்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழக ஆற்றல்மிகு வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற வைக்க பொறுப்பேற்றுக் கொண்ட கழக துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் க.பொன்முடி கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் களம் கண்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் என பலரும் களப்பணி ஆற்றினார்கள்.
பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன், இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி உள்ளிட்ட முன்னணியினர் பலரும் தேர்தல் பரப்புரை செய்தார்கள். நமது இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார்கள். இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் உடன்பிறப்புகளும் - தோழமைக் கட்சித் தோழர்களும், உதயசூரியனின் வெற்றிக்கு இரவு பகல் பாராது கண்துஞ்சாது உழைத்த அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.
விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பொன் கௌதமசிகாமணி உள்ளிட்ட ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது.
திமுக கழக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது.
நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும் பயணத்தையும் தொடர்கிறோம். வெற்றிப் மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.
- பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.
இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.
இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.
இந்நிலையில் 20 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டநிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது.
எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.
- பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது
- கொடிவேரி அணைப்பகுதியில் 1020 கன அடி தண்ணீர் அணையிர் இருந்து வெளியேறி வருகிறது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.
இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும் ரசிப்பதற்கும் கோபி, சக்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செய்கிறார்கள்.
அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் கோபி நம்பியூர் மற்றும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்று மாலை மற்றும் இரவில் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பலத்த மழை கொட்டியது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பவானி ஆற்றில் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைப்பகுதியில் 1020 கன அடி தண்ணீர் அணையிர் இருந்து வெளியேறி வருகிறது.
இதனால் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் வெளியேறி வருவதால் கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் இன்று தடைவிதித்துள்ளனர். இதனால் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதையடுத்து இன்று காலை பொதுமக்கள் அணை அருகே உள்ள பாலத்தின் மீது நின்று அணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை ரசித்தும் புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.
இதை போன்று அணையின் மேல் பகுதியிலும் கீழ் பகுதியில் பரிசல் இயக்கவும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் துணித்து வைத்தல் போன்றவைக்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இது குறித்து நுழைவு வாயில் பகுதியில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
- இடைத்தேர்தல் வெற்றி முகத்தை தொடர்ந்து முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து.
- மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல துரைமுருகன் அறிவாலயம் வந்தார்.
தமிழக அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி முகத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல துரைமுருகன் அறிவாலயம் வந்திருந்தார்.
அப்போது, துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. துரைமுருகனுக்கு ரத்த சர்க்கரை அளவு குறைபாடு ஏற்பட்டதால் அவர் மயங்கிய நிலையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது.
- தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு இதமான காற்றும் வீசியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து சில இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. களக்காடு பகுதியில் 2.8 மில்லிமீட்டரும், கன்னடியன் பகுதியில் 1.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணை பகுதிகளிலும் நேற்று மாலையில் தொடங்கி இரவு வரையிலும் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று பகலில் சுமார் 350 கனஅடி நீர்மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், தொடர்மழையால் இன்று காலை 2649 கனஅடி நீர் வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று 102 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், இன்று காலை 104.10 அடியாக இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 113 அடியாக இருந்த நிலையில் நீர் வரத்து அதிகரிப்பால் இன்று ஒரே நாளில் 7 அடி அதிகரித்து 120.44 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர் மட்டம் 2 அடி அதிகரித்து 40 அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு இதமான காற்றும் வீசியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கடையம் அருகே உள்ள கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ராமநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 11 மில்லிமீட்டரும், கடனா அணையில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
மேலும் அடவிநயினார் அணை பகுதியில் அதிகபட்சமாக 37 மில்லிமீட்டரும், குண்டாறில் 31 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 76 அடியை எட்டியுள்ளது. கடனா அணை நீர்மட்டம் 55.30 அடியாகவும், கருப்பாநதி அணை 47.73 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணையில் 95.75 அடியும் நீர் இருப்பு உள்ளது.
தென்காசி நகர் பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்த நிலையில், இன்றும் காலை முதலே நகர் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கோட்டை, குற்றாலம், தென்காசி, ஆய்க்குடி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தூத்துக்குடியில் நேற்று மாநகர பகுதியில் திடீர் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ததோடு ஆலங்கட்டி மழையும் பெய்தது. மாநகர பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. கீழ அரசடி பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மற்ற இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
- நமக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது.
- நல்ல கூட்டணி அமையுமா? அமையாதா? என்று யாரும் கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த 10-ந்தேதி முதல் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தினமும் 3 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி தொடர்பாக கருத்துக்களை கேட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணி அமையாததே தோல்விக்கு காரணம் என்று கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இதற்கு பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வலுவான கூட்டணியை அமைப்போம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் 4-வது நாளான இன்று சிதம்பரம் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய சிதம்பரம் தொகுதி நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மேல் மட்ட நிர்வாகிகள் சரியாக உழைக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை/ அதனால் யாரும் சோர்ந்து போய் விடாதீர்கள். நமக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது. வரும் காலங்களில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள், கீழ்மட்ட தொண்டர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். நல்ல கூட்டணி அமையுமா? அமையாதா? என்று யாரும் கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.






