என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இடப் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் பொன்னம்மாள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 75).
இவரது 4 மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஒரு மகன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆபிரகாம் இறந்துவிட்டதால் பொன்னம்மாள் மட்டும் சொந்த ஊரில் தனியாக வசித்து வந்தார்.
சமீபத்தில் அவருக்கு துணையாக மருமகள் மற்றும் பேரன் சொந்த ஊருக்கு வந்து தங்கி உள்ளனர். கடந்த 11-ந்தேதி மாலையில் காருக்குறிச்சி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற பொன்னம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து சேரன்மகா தேவி போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னம்மாளை கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் 2 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 2 பேரையும் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் இடப் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் பொன்னம்மாள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த கொலையை அந்த 2 பேர் மட்டும்தான் செய்தார்களா? அல்லது கூட்டாளிகள் வேறு யாரும் உள்ளனரா? என்பது குறித்து 2 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தி.மு.க. தமிழ்நாட்டு மக்களையும் தமிழக விவசாயிகளையும் பற்றி கவலைப்படவில்லை.
- மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றும் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.
வேலூர்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடி வந்தார். ரெயில் மூலம் வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விக்கிரவாண்டி தேர்தலை பொருத்தவரை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பண பலம், அதிகார பலத்தால் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அவர்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. அதைப் பற்றி எல்லாம் பேசுவது கிடையாது.
தி.மு.க. தமிழ்நாட்டு மக்களையும் தமிழக விவசாயிகளையும் பற்றி கவலைப்படவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை தான் நாம் கேட்கிறோம்.
தி.மு.க.க்கு கூட்டணி தான் முக்கியம். ஆட்சி அதிகாரம் தான் முக்கியம். இந்தியா கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. தமிழக முதலமைச்சர் காவிரி தண்ணீருக்காக எந்தவித குரலையும் கொடுக்கவில்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடம் என்ற நபர் ஏற்கனவே சரண் அடைந்தவர். சரணடைந்தவரை அதிகாலையிலேயே வேக வேகமாக அழைத்துச்சென்றது ஊடகத்தின் மூலமாக பார்த்து தெரிந்து கொண்டேன்.
அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுப்பதற்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அப்படி அழைத்துச் சென்றவரை கை விலங்கு போட்டு தான் அழைத்துச் செல்ல வேண்டும்.
மேலும் பாதுகாப்பாக சென்று இருக்க வேண்டும். மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றும் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.
ஏன் அவர் அவசர அவசரமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இதில் சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்கள் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இப்போது செய்யப்பட்ட என்கவுண்டர் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உருளை வடிவிலான இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோள வடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப்பகுதியையும் கொண்டுள்ளது.
- கருப்பு நிறத்தில் பளபளப்பான மேற்பரப்புடன் காணப்படுகிறது.
திருப்புவனம்:
மதுரை அருகே உள்ள கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த அகழாய்வில் தந்தத்திலான ஆட்டக்காய் ஒன்று கிடைத்துள்ளது. உருளை வடிவிலான இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோள வடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப் பகுதியையும் கொண்டுள்ளது. 1.5 செ.மீ. விட்டம் கொண்ட தலைப்பகுதியையும், 1.3 செ.மீ. விட்டம் கொண்ட அடிப்பகுதியையும் கொண்டுள்ளது. கருப்பு நிறத்தில் பளபளப்பான மேற்பரப்புடன் காணப்படுகிறது.
தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதன் மூலம் கீழடியில் மேம்பட்ட நாகரிகம் பழங்காலத்திலேயே நடைமுறையில் இருந்ததற்கு சான்றாக இந்த ஆட்டக்காயை கருதலாம் என தொல்லியல் துறையினர் கூறுகிறார்கள்.
- டாஸ்மாக் கடைகளில் இந்த வகை மதுபானம் இருப்பு வைக்கப்பட்டிருந்தால் மதுபான கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்
- பிராந்தியை குடித்து பழகிய மதுபிரியர்களுக்கு ‘டாஸ்மாக்' நிர்வாகத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
சென்னை:
'டாஸ்மாக்' கடைகளில் பல்வேறு ரகங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விற்பனை வரும் முன்பு மதுபான வகைகளின் தரங்கள் பரிசோதிக்கப்படுகிறது.
இதில் கடந்த 2021-ம் ஆண்டுக்குரிய 'கோல்டன் வாட்ஸ் நம்பர் 1 பிராந்தி' விற்பனைக்கு உகந்தது அல்ல என்பது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து 'டாஸ்மாக்' கடைகளில் இந்த வகை மதுபானம் இருப்பு வைக்கப்பட்டிருந்தால் அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட மதுபான கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று 'டாஸ்மாக்' கடை ஊழியர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளனர். இந்த பிராந்தியை குடித்து பழகிய மதுபிரியர்களுக்கு 'டாஸ்மாக்' நிர்வாகத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்த பிராந்தியை தயாரிக்கும் நிறுவனம் மன்னார்குடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாகர்கோவிலில் இருந்து இன்று மாலை புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
- தாம்பரத்தில் இருந்து நாளைகாலை புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவிலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012) ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 7.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06011) ரத்துசெய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகிற்கே முன்னோடியான திட்டமாக திகழ்கிறது.
- இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 15-9-2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.
இதன் மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.
இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பையும், மாணவ-மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 25-8-2023 அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும், சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப்பாடங்களில் கவனம் செலுத்தி படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின், 15-7-2024 அன்று (நாளை) பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கிவைக்கிறார்.
இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.
முதலமைச்சரால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகிற்கே முன்னோடியான திட்டமாக திகழ்கிறது.
இந்த விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார்.
- பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் உருவச் சிலைக்கு அமைச்சர்கள், மேயர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை செய்து சிறப்பிப்பார்கள்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் 15-7-2024 அன்று (நாளை) காலை 8.15 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார்.
அதேநாளில், சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் உருவச் சிலைக்கு காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள், மேயர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செய்து சிறப்பிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
- இந்த சம்பவத்தில் 11 பேரை செம்பியம் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை:
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடிகள் 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்களில் ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சென்னை புழல் பகுதியில் இன்று அதிகாலையில் நடந்த பரபரப்பான என்கவுண்டர் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை மாநகரில் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பிரபல ரவுடியும் கூலிப்படை தலைவனுமான ஆற்காடு சுரேஷ் சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்து வதற்காகவே 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் குன்றத்தூரை சேர்ந்த பிரபல ரவுடியான திருவேங்கடம் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட் டிருந்தார்.
கடந்த 11-ந் தேதி முதல் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடிகள் 11 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இவர்களில் ரவுடி திருவேங்கடத்திடம் போலீசார் பரங்கிலை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் பல தகவல்களை திரட்டுவதற்காக இன்று காலையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக் டர் சரவணன் மற்றும் போலீசார் திருவேங்கடத்தை வேனில் அழைத்துச் சென்றனர். மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே சென்று கொண்டிருந் தற்போது ரவுடி திருவேங்கடம் திடீரென போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.
உடனடியாக போலீசார் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய திருவேங்கடத்தை விரட்டிச் சென்றனர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து ரவுடி திருவேங்கடத்தை பிடிக்க தண்டையார் பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புழல் வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் திருவேங்கடம் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். புழல் வெஜிடேரியன் வில்லேஜ் பகுதி காலி இடங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். அங்கு தகர சீட்டால் அமைக்கப்பட்டிருந்த கொட்டகை யில் திருவேங்கடம் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கொட்டகையை சுற்றி வளைத்த போலீசார் திருவேங்கடத்திடம் சரணடையுமாறு கூறினார்கள்.
ஆனால் திருவேங்கடமோ, கொட்டகையில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீசார் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் இருந்து தப்பிய இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார்.
இதில் ரவுடி திருவேங்கடம் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. வலது பக்க வயிறு, இடது பக்க மார்பு ஆகிய இரண்டு இடங்களில் பாய்ந்த குண்டுகள் திருவேங்கடத்தின் உடலை துளைத்தன. இதில் சுருண்டு விழுந்த திருவேங்கடத்தை போலீசார் காப்பாற்ற முயன்றனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு திருவேங்கடத்தை அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் திருவேங்கடம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து திருவேங்கடத்தின் உடல் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த என்கவுண்டர் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான 11 பேரில் ஒரு ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டு விட்ட நிலையில் மற்ற 10 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர்களின் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைகிறது. பின்னர் 10 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள். என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடசென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர், இணை கமிஷனர் விஜயகுமார், கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டிய ராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
என்கவுண்டர் நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவேங்கடம் போலீசாரை துப்பாக்கியால் சுடுவதற்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
மற்ற கொலையாளிகளும் இது போன்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை எங்கேயாவது பதுக்கி வைத்துள்ளார்களா? என்பது பற்றிய விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னையில் நடந்துள்ள இந்த என்கவுண்டர் சம்பவம் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் புதிய மதுவிலக்கு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- கடந்த சில நாட்களுக்கு முன் புதிய மதுவிலக்கு திருத்தத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
சென்னை:
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி சேஷ சமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த 19-ம் தேதி விஷ சாராயம் குடித்த 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது வரை 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
விஷ சாராய சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் விஷ சாராய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும் இதுதொடர்பாக விரிவான விளக்கமும் அளித்தார்.
இதையடுத்து, தமிழக அரசு விஷ சாராயத்தை அறவே ஒழிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்தது. அந்த சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 29-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்த மசோதா உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின் சட்டசபையில் நிறைவேறியது. இந்த சட்டம் 2024-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தம்) சட்டம் என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா உடனடியாக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படடது. இதையடுத்து, மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், மதுவிலக்கு திருத்த மசோதா-2024 சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது
என தெரிவித்தார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுவிலக்கு திருத்த மசோதா-2024 சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர் மீது ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச்சாராயம் விற்பதற்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். ஜாமினில் வெளியே வரமுடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய மதுரை 156 ரன்கள் எடுத்தது.
- அடுத்து விளையாடிய திருப்பூர் 157 ரன்களை எடுத்து வென்றது.
கோவை:
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்துது. சசிதேவ் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கவுஷிக் 28 ரன்னும், ஸ்ரீ அபிஷேக் 21 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
திருப்பூர் சார்பில் அஜித் ராம் 3 விக்கெட்டும், ராமலிங்கம் ரோகித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பாலசந்தர் அனிருத் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், திருப்பூர் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முகமது அலி 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நடப்பு தொடரில் திருப்பூர் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
மதுரை சார்பில் முருகன் அஷ்வின் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- ராஜ் அய்யப்பா நடிக்கும் லவ் இங்க் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
- முழு படமும் சென்னை மற்றும் தஞ்சை பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது.
சென்னை:
எம்.ஆர்.பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஏ.மகேந்திரன் ஆதிகேசவன் 'லவ் இங்க்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக பயணத்தைத் தொடங்குகிறார்.
தற்போதைய தலைமுறை மத்தியில் 'லவ் இங்க்' என்ற சொல் மிக பிரபலம். தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களையோ, காதல் சின்னத்தையோ ஜோடிகள் டாட்டூ போட்டுக் கொள்வதுதான் 'லவ் இங்க்'. இதனால் ஜோடிகளுக்கு இடையே காதல் கூடுகிறது என நம்பப்படுகிறது.
இந்நிலையில், 'லவ் இங்க்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முழு படமும் சென்னை மற்றும் தஞ்சை பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது.
இந்தப் படத்தில் கதாநாயகனாக ராஜ் அய்யப்பா நடிக்கிறார். நடிகர் அஜித்குமாரின் 'வலிமை', அதர்வா முரளியின் '100' மற்றும் பல படங்களில் ராஜ் அய்யப்பா தனது இயல்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றவர். நடிகை டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடிக்கிறார். டெல்னா இதற்கு முன் டிவி சீரியல்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்கள் இதயத்தை வென்றுள்ளார்.
இந்தப் படத்தை இயக்குநர் மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியுள்ளார். இதற்கு முன் சில படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
மேலும் இதில் யோகி பாபு, திலீபன், விடிவி கணேஷ், முனிஷ்காந்த், அர்ஷத், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, மாறன், சுபாஷினி கண்ணன், கே.பி.ஒய்.வினோத், மௌரிஷ் தாஸ், ப்ரீதா, வினோத் முன்னா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தை கூழாங்கல் திரைப்பட தயாரிப்பாளர் தயாரித்துள்ளார்.
- இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சில இடங்களில் தெருக்கூத்து கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில், ஜமா திரைப்படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






