என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி சக்தி ஸ்தலங்களில் ஒன்றான இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு கும்ப பூஜை, யாக பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது பால், பன்னீர், ஜவ்வாது, தேன், இளநீர், தயிர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
திருவிழாவை காண மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
கோவிலுக்கு வந்த பக்தர் கள் அம்மனை வேண்டி ஆயிரம் கண்பானை, தவழும் பிள்ளை, கரும்பு தொட்டில் குழந்தை, அக்கினிச்சட்டி, மாவிளக்கு பறக்கும்காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

இன்று மாலை இரண்டு மணிக்கு மேல் ஆடிப்பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான உற்சவர் அம்மன் ரிஷப வாகன பல்லக்கில் ஊர்வலமாக தெருக்களில் வீதியுலா வந்து ஆற்றில் இறங்கி கோவில் சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறும்.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிக்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் இரண்டு கூடுதல் சூப்பிரண்டுகள் மற்றும் 4 டி.எஸ்.பி.க்கள் உட்பட சுமார் 2,000-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழா ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
- மக்களுக்குப் பணியாற்றுவதில் தாங்கள் கொண்டுள்ள சோர்வறியா அர்ப்பணிப்பை வரும் ஆண்டு மேலும் வலுப்படுத்தட்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தங்களது கட்சி தங்களுடன் உறுதியாக நிற்பதைப் போலவே, மக்களும் அதே அளவு உறுதியுடன் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவாக நிற்பார்கள். மக்களுக்குப் பணியாற்றுவதில் தாங்கள் கொண்டுள்ள சோர்வறியா அர்ப்பணிப்பை வரும் ஆண்டு மேலும் வலுப்படுத்தட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் கட்சியின் முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
சென்னை:
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தொடங்கியது.
இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் முப்பெரும் விழா குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2026 சட்டசபை தேர்தலிலும் வெற்றி வாகை சூட திட்டம் தீட்டி வருகிறது. அந்த வகையில், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும், ஏனைய பகுதிகளில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்படும் பட்சத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயரும் என்றும் தெரிகிறது.
- மாவட்டங்கள் தோறும் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
- நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என தொண்டர்களுக்கு எழுதிய பெருமித கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நூற்றாண்டு நாயகராம் நம் உயிர்நிகர் தலைவர்-முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை என்றென்றும் நம் உள்ளத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம். 5 முறை முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று அரிய பல திட்டங்களால் நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த சிற்பிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்டங்கள் தோறும் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
இன்னும் கலையுலகினர், படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ, எவ்விடமெல்லாம் தமிழர்களும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் கலைஞரின் நூற்றாண்டை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

பல ஜனாதிபதியையும், பிரதமரையும் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றியநம் கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் ஆகஸ்டு 18 ஞாயிறு மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சீர்மிகு விழாவில், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தினை வெளியிட இருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் கண்ணீரில் தவிக்கவிட்டு மறைந்த பின், ஓராண்டு கடந்த நிலையில், அண்ணாவின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டபோது, அதனைப் பார்த்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம்.
அஞ்சல் தலைக்கேற்ற பொருத்தமான முறையில் பேரறிஞர் அண்ணாவின் படத்தைத் தேர்வு செய்து தந்திருந்தவர் தலைவர் கலைஞர்.
அத்துடன், அந்தப் படத்தின் கீழே 'அண்ணாதுரை' என்று அண்ணாவின் கையெழுத்தையும் இடம்பெறச் செய்துவிட்டார் அண்ணாவின் தம்பியான நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர்.

இந்திய அஞ்சல் தலை ஒன்றில் தமிழ் எழுத்துகள் இடம்பெற்ற முதல் அஞ்சல்தலை என்பது அண்ணா நினைவு அஞ்சல் தலைதான்.
அண்ணாவின் நூற்றாண்டு நிறைவின்போதும் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 5-வது முறை பொறுப்பு வகித்தவர் கலைஞர்.
2009-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணாவின் பிறந்தநாளன்று சென்னையில் நம் உயிர்நிகர் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்போயை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சராக இருந்தவரும், பின்னாளில் கலைஞரின் ஆதரவுடன் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றவருமான பிரணாப் முகர்ஜி 'அண்ணாவின் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.
வரலாற்று சிறப்பு மிகுந்த அந்த விழாவில், அப்போதைய துணை முதல்-அமைச்சராக இருந்த உங்களில் ஒருவனான நான், அண்ணா நூற்றாண்டு இணையதளத்தைத் தொடங்கி வைத்து, அண்ணாவின் பொன்மொழிகள் நூலினை வெளியிட்டு உரையாற்றுகின்ற நல்வாய்ப்பினைப் பெற்றிருந்தேன்.
அண்ணாவின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலை போலவே, அவரது நினைவாக வெளியிடப்பட்ட நாணயத்திலும் 'அண்ணாதுரை' என்ற அண்ணாவின் கையெழுத்தை இடம்பெறச் செய்தவர், அவரது தம்பியான தலைவர் கலைஞர்தான். இந்திய அரசின் நாணயத்தில் தமிழ் எழுத்துகள் முதன்முதலில் இடம்பெற்றதும் அப்போதுதான்.
தமிழாகவே வாழ்ந்த தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் நினைவாக வெளியிடப்படும் 100 ரூபாய் நாணயத்தில் முத்தமிழறிஞரின் உருவத்துடன் அவர் கையெழுத்திலான, 'தமிழ் வெல்லும்' என்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டின் அரசியலை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் இயக்கிய ஆற்றல் மிக்கவராகவும், இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவம் மிக்க ஆளுமையாவும் திகழ்ந்தவர் கலைஞர்.
எதிர்கால தலைமுறையினரின் கலங்கரை விளக்கமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகவும், தி.மு.க.வின் தலைவராகவும், கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ஒருவனாக உரித்தாக்குகிறேன்.
இனிமை மிகுந்த தமிழைத் தன் நா நயத்தால், கேட்போர் செவிகளுக்கெல்லாம் விருந்தளித்த தலைவர் கலைஞர், நாணயத்திலும் 'தமிழ் வெல்லும்' என்பதை நிறுவியிருக்கிறார்.
இமயம் போல உயர்ந்து நிற்கும் கலைஞரின் புகழுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்படும் நாணய வெளியீட்டு விழாவில் உடன்பிறப்புகளைக் காண ஆவலாக இருக்கிறேன்.
இனிய விழா எனினும் எளிய விழா என்பதால் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சார்ந்த உடன்பிறப்புகள் நேரில் காணவும், தமிழ்நாட்டிலும், தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் நேரலையில் காணவும் அன்புடன் அழைத்து அகம் மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த கடித்தில் கூறியுள்ளார்.
- மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஓட்டன்சத்திரம் 4 வழிச்சாலை பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் வந்து குளித்து செல்கிறார்கள். இந்த நிலையில் ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் குண்டடம் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 6 மாணவர்கள் சுதந்திர தினவிழா விடுமுறையை கொண்டாட அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர்.
அவர்கள் ஒன்றாக ஆற்றில் இறங்கி குளித்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்களில் 5 பேர் மட்டும் கரைக்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால் தங்களுடன் வந்த தாராபுரம் ராம்நகரை சேர்ந்த ராஜகோபாலின் மகன் ஜெரோமியா (வயது 16) என்பவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நண்பர்கள் சேர்ந்து ஆற்றில் இறங்கி தேடிபார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.
உடனடியாக இதுபற்றி தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு துறை வீரர்கள் நீரில் மூழ்கிய மாணவனை சுமார் 2 மணிநேரம் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆனதால் மாணவனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு மீண்டும் மீட்பு பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர். அப்போது மாணவன் ஜெரோமியா தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடல் மிதந்தது. இதையடுத்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடியது.
- பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செயற்குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடியது.
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செயற்குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே, கடந்த 9-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, செயற்குழு கூட்டம் அவசரமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், இன்றைய கூட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்று தெரிகிறது.
- மூத்த தமிழறிஞர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
- தாரகை கத்பர்ட், வட்டார தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரிலான விருது கடந்த 2021- ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மூத்த தமிழறிஞர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இத்துடன் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த வருடத்திற்கான தகைசால் விருது பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் அவர்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பைக் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தேன். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட், வட்டார தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் சுசீந்திரம் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்தோம்.
- முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜெகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர்.
- சம்பவ இடத்துக்கு கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
சோழவரம்:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சோழவரம் கிராமத்தில் கோட்டைமேடு காலனி கென்னடி தெருவில் வசித்து வருபவர் ஜெகன் (வயது 38). இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி அபிஷாபிரியாவர்ஷினி (33) சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
நேற்று மாலை முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜெகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியது. வீட்டில் இருந்த ஜெகன் வெளியே வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே தப்பி சென்ற அதே மர்ம கும்பல் சோழவரம் நெடுஞ்சாலையில் உள்ள லாரி நிறுத்தும் இடத்திற்கு சென்று அங்கு வேலை செய்து வரும் சோழவரம் கோட்டைமேடு காலனியை சேர்ந்த லாரி டிரைவர் சிவா (30) என்பவரிடம் சென்று மாமூல் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அவர் கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் கையில் வெட்டி விட்டு லாரி நிறுத்தும் இடத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர்.
தொடர்ந்து ஆங்காடு ஊராட்சியில் உள்ள சிறுணியம் காலனி கெங்கையம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வியாபாரி சரண்ராஜ் (38) என்பவர் கார் கண்ணாடிகளை உடைத்து கலாட்டா செய்தனர். சம்பவ இடத்துக்கு கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இச்சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட 3 பேரும் சோழவரம் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி அரசியல் பிரமுகர், வியாபாரிகளை அச்சுறுத்தி மாமூல் பெறும் நோக்கத்தில் இச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சோழவரம், சிறுணியம் ஆகிய பகுதிகளில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்தி உள்ளது.
- நாளை சனி பிரதோஷம் என்பதால் பக்தர்களின் வருகை என்பது அதிக அளவில் இருக்கும்.
- பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.
வத்திராயிருப்பு:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இந்த மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளனர். இந்தநிலையில் இந்த பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாளை சனி பிரதோஷம் என்பதால் பக்தர்களின் வருகை என்பது அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மேலும் மலையேற அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்தால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மலையேற சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் வனத்துறையினர் விதித்துள்ளனர்.
- விஜய் வசந்த் சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
- வீடுகளை இழந்த மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நாகர்கோவிலில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினருடன் விஜய் வசந்த் எம்.பி., தேசிய கொடியேற்றினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் அலுவலகத்தில், மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டதாக விஜய் வசந்த் எம்.பி., தெரிவித்தார்.

மேலும், விஜய் வசந்த் சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர காற்றை பெற்று தர தியாகங்கள் பல மேற்கொண்ட சுதந்திர போராட்ட வீரர்களை இன்று நினைவு கூர்வோம். நாம் பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க வேண்டியது நமது கடமை. அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்றார்.
இதைதொடர்ந்து, கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பருத்திவிளையில் மழை வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்த மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

பாதுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்க ஆவன செய்யப்படும் என்றும், சம்பத்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொண்டதாகவும் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று நன்றி தெரிவித்து கொண்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதலீடுகளை ஈர்க்க வரும் 27ம் தேதி அன்று அமெரிக்கா செல்கிறார்.
- உலக முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக, வரும் 27ம் தேதி அன்று அமெரிக்கா செல்கிறார்.
முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முக்கிய குறிக்கோள் உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடுகள் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான் பிரான்சிஸ் கோ, சிக்காகோ உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உலக முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.
- அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
- பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, வி.பி.துரைசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
78வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, வி.பி.துரைசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தேமுதிக சார்பில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் பங்கேற்றுள்ளனர்.
தேநீர் விருந்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றார்.
நீதிபதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இருப்பினும், ஆளுநரின் தேநீர் விருந்தை திமுகவின் தோழமை கட்சிகள் புறக்கணித்துள்ளன.
கடந்தாண்டு நடைபெற்ற தேநீர் விருந்தை முதலமைசச்சர் புறக்கணித்த நிலையில், இந்தாண்டு திமுக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






