search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் 100 ரூபாய் நாணயம்"

    • மாவட்டங்கள் தோறும் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
    • நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என தொண்டர்களுக்கு எழுதிய பெருமித கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நூற்றாண்டு நாயகராம் நம் உயிர்நிகர் தலைவர்-முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை என்றென்றும் நம் உள்ளத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம். 5 முறை முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று அரிய பல திட்டங்களால் நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த சிற்பிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்டங்கள் தோறும் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

    இன்னும் கலையுலகினர், படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ, எவ்விடமெல்லாம் தமிழர்களும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் கலைஞரின் நூற்றாண்டை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

     பல ஜனாதிபதியையும், பிரதமரையும் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றியநம் கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் ஆகஸ்டு 18 ஞாயிறு மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சீர்மிகு விழாவில், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தினை வெளியிட இருக்கிறார்.

    பேரறிஞர் அண்ணா ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் கண்ணீரில் தவிக்கவிட்டு மறைந்த பின், ஓராண்டு கடந்த நிலையில், அண்ணாவின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டபோது, அதனைப் பார்த்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம்.

    அஞ்சல் தலைக்கேற்ற பொருத்தமான முறையில் பேரறிஞர் அண்ணாவின் படத்தைத் தேர்வு செய்து தந்திருந்தவர் தலைவர் கலைஞர்.

    அத்துடன், அந்தப் படத்தின் கீழே 'அண்ணாதுரை' என்று அண்ணாவின் கையெழுத்தையும் இடம்பெறச் செய்துவிட்டார் அண்ணாவின் தம்பியான நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர்.

    இந்திய அஞ்சல் தலை ஒன்றில் தமிழ் எழுத்துகள் இடம்பெற்ற முதல் அஞ்சல்தலை என்பது அண்ணா நினைவு அஞ்சல் தலைதான்.

    அண்ணாவின் நூற்றாண்டு நிறைவின்போதும் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 5-வது முறை பொறுப்பு வகித்தவர் கலைஞர்.

    2009-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணாவின் பிறந்தநாளன்று சென்னையில் நம் உயிர்நிகர் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்போயை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சராக இருந்தவரும், பின்னாளில் கலைஞரின் ஆதரவுடன் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றவருமான பிரணாப் முகர்ஜி 'அண்ணாவின் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

    வரலாற்று சிறப்பு மிகுந்த அந்த விழாவில், அப்போதைய துணை முதல்-அமைச்சராக இருந்த உங்களில் ஒருவனான நான், அண்ணா நூற்றாண்டு இணையதளத்தைத் தொடங்கி வைத்து, அண்ணாவின் பொன்மொழிகள் நூலினை வெளியிட்டு உரையாற்றுகின்ற நல்வாய்ப்பினைப் பெற்றிருந்தேன்.

    அண்ணாவின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலை போலவே, அவரது நினைவாக வெளியிடப்பட்ட நாணயத்திலும் 'அண்ணாதுரை' என்ற அண்ணாவின் கையெழுத்தை இடம்பெறச் செய்தவர், அவரது தம்பியான தலைவர் கலைஞர்தான். இந்திய அரசின் நாணயத்தில் தமிழ் எழுத்துகள் முதன்முதலில் இடம்பெற்றதும் அப்போதுதான்.

    தமிழாகவே வாழ்ந்த தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் நினைவாக வெளியிடப்படும் 100 ரூபாய் நாணயத்தில் முத்தமிழறிஞரின் உருவத்துடன் அவர் கையெழுத்திலான, 'தமிழ் வெல்லும்' என்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன.

    தமிழ்நாட்டின் அரசியலை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் இயக்கிய ஆற்றல் மிக்கவராகவும், இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவம் மிக்க ஆளுமையாவும் திகழ்ந்தவர் கலைஞர்.

    எதிர்கால தலைமுறையினரின் கலங்கரை விளக்கமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகவும், தி.மு.க.வின் தலைவராகவும், கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ஒருவனாக உரித்தாக்குகிறேன்.

    இனிமை மிகுந்த தமிழைத் தன் நா நயத்தால், கேட்போர் செவிகளுக்கெல்லாம் விருந்தளித்த தலைவர் கலைஞர், நாணயத்திலும் 'தமிழ் வெல்லும்' என்பதை நிறுவியிருக்கிறார்.

    இமயம் போல உயர்ந்து நிற்கும் கலைஞரின் புகழுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்படும் நாணய வெளியீட்டு விழாவில் உடன்பிறப்புகளைக் காண ஆவலாக இருக்கிறேன்.

    இனிய விழா எனினும் எளிய விழா என்பதால் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சார்ந்த உடன்பிறப்புகள் நேரில் காணவும், தமிழ்நாட்டிலும், தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் நேரலையில் காணவும் அன்புடன் அழைத்து அகம் மகிழ்கிறேன்.

    இவ்வாறு அவர் அந்த கடித்தில் கூறியுள்ளார்.

    ×