என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை பொது விடுமுறை.
    • சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை (7-ந்தேதி) பொது விடுமுறை என்பதால் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும்.

    அதன்படி சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்டிரல் - சூலூா்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் சீர் முடியாத நிலையில் உள்ளது.
    • மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், திருப்புவனம் அருகே உள்ள தட்டான் குளம் கிராமத்தில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் 10 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளனர்.

    பலத்த காற்று மழையால் ஆல மர கிளை விழுந்து மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் 2 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் செலவை யார் ஏற்பது? என மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் சீர் முடியாத நிலையில் உள்ளது.

    இதனால், 10 நாட்களாக மின்சாரம் இல்லாததால் குடிநீர் இன்றி, தூக்கம் தொலைத்து நிற்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    • சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது ஆலீம் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சென்னை:

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் 'சூடோபெட்ரைன்' என்ற போதைப்பொருளை கடத்திய வழக்கில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். விசாரணையில் அவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணத்தை ஈட்டியதும், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இறங்கினார்கள். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே ஜாபர் சாதிக் உள்பட இந்த வழக்கில் கைதான நபர்கள் மீது டெல்லி சிறப்பு கோர்ட்டில் மத்திய போதைப்பொருள் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது ஆலீம் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாரும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைக்கோர்த்து இந்த வழக்கில் தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான ரூ.55.30 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜாபர் சாதிக், சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் ஈட்டிய பணத்தை திரைப்பட தயாரிப்பு, ஓட்டல்கள், சரக்கு நிறுவனம் போன்ற தொழில்களில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே அவருடைய பெயரில் இருந்த அசையும், அசையா சொத்துகள், மனைவி அமீனா பானு மற்றும் பினாமிகள் மைதீன் கானி, முகமது முஸ்தபா, ஜாமல் முகமது ஆகியோரின் பெயரில் இருந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

    ஜே.எஸ்.எம். சொகுசு ஓட்டல் (புரசைவாக்கம்), ஆடம்பர பங்களா வீடு உள்பட 14 அசையா சொத்துகள், 7 சொகுசு கார்கள் உள்பட மொத்தம் ரூ.55.30 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக் கொண்டு உள்ளனர்.
    • 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் சொன்ன கருத்துக்களை தவறாக திரித்து வெளியிட்டு விட்டனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லால்குடி தெற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் இருந்தது போல அல்லாமல் சட்டசபை தேர்தலில் சுமூகமான கூட்டணி அமையும் நிலை இல்லை என்று கூறியிருந்தார்.

    அமைச்சர் கே.என்.நேருவின் இந்த பேச்சு தி.மு.க. கூட்டணியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி தி.மு.க. பொது உறுப்பினர் கூட்டத்தில் நான் பேசிய போது, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் சொன்ன கருத்துக்களை தவறாக திரித்து வெளியிட்டு விட்டனர். எங்கள் கூட்டணி சரியான கூட்டணி. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தனது கூட்டணியை எப்பொழுதும் விட்டுக் கொடுக்கமாட்டார். ஜெயலலிதா 38 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 2-வது முறையாக முதலமைச்சராக ஆனதை, சட்டமன்றத்தில் பெருமையாக பேசினார்கள். கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் ஆட்சியை தொடர்ச்சியாக அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அவ்வாறு கூறியதே தவிர கூட்டணியை யாரும் விட்டுக்கொடுத்து போக வேண்டியது அவசியம் இல்லை. எங்கள் கூட்டணி அருமையான கூட்டணி. கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக் கொண்டு உள்ளனர். வேண்டுமென்றே நான் பேசியதை மாற்றி போட்டு விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
    • யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து போர்க்கொடி தூக்குகிறார்கள் தி.மு.க.வினர். ஆனால் அவர்கள் ஆளும் தமிழகத்தில் பெண் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

    அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பள்ளி, கல்லூரி வாசல்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழக பாஜக குழுவில் என்னுடைய பெயர் இடம் பெறவில்லை என பலரும் கூறுகின்றனர். அது தொடர்பாக கட்சி தலைமை முடிவு செய்திருக்கிறது. ஒரு குழுவை அமைத்திருக்கிறது.

    தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும்? என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழு தலைவர் டெல்லி சென்றுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காததால் விஜய்யை கண்டு தி.மு.க பயப்படுகிறதா என்றால், யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

    அப்படி அனுமதி கொடுத்துவிட்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது. இப்போது அனுமதி கொடுக்க 21 கேள்விகள் கேட்பதன் மூலம் விஜயை கண்டு தி.மு.க அஞ்சுகிறது என்று தோன்றுகிறது.

    விஜயதாரணி தனக்கு பதவி வழங்கப்படவில்லை என கூறியிருக்கிறார். எம்.எல்.ஏ. பதவியை துறந்து விட்டு பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு பதவி கொடுத்திருக்க வேண்டும். அது தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வருத்தப்பட வேண்டாம். வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும்.

    அ.தி.மு.க.வில் நான் பெரும் பதவியில் இருந்து விட்டு பா.ஜனதாவில் வந்து இணைந்தேன். எனக்கும் கட்சி பதவி இல்லாமல் இருந்தது. தற்போது சட்டமன்றக்குழு தலைவராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக பாஜக கட்சிக்கு புதிதாக குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க.வுடன் இணக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்ட போது அ.தி.மு.க-பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    • பாிஸ் ஒலிம்பிக் 2024-ல் பங்கேற்ற ஆறு பேரில், 4 பேர் பதக்கங்களுடன் திரும்பியுள்ளனர்.
    • அனைவரையும் வாழ்த்துவதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

    பாரிஸ் பாராலிம்பிக்ஸ்-ல் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு வௌயிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2024ம் ஆண்டு பாரிஸில் நடந்த பாராலிம்பிக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பதக்கங்களைப் பெற்றுத் தமிழகம் திரும்பிய நமது சாம்பியன்களான துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோரை வாழ்த்தினோம்.

    பாிஸ் ஒலிம்பிக் 2024-ல் பங்கேற்ற ஆறு பேரில், 4 பேர் பதக்கங்களுடன் திரும்பியுள்ளதால், இது உண்மையிலேயே தமிழகத்திற்கு பெருமையான தருணம்.

    நம் துணை விளையாட்டு வீரர்கள் தங்கள் பயணத்தில் நம் அரசாங்கத்தின் அசைக்க முடியாத ஆதரவை ஒப்புக்கொண்டனர். முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் பயனாளிகளில் பெரும்பாலானோர் பாரா-தடகள வீரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரையும் வாழ்த்துவதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்கக்கோரி கடிதம்.
    • தமிழ்நாட்டு மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (05.09.2024) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்படகுகளையும் விடுவித்திடவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஆழமாக பாதிக்கும் கவலைக்குரிய விஷயத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை, மிகவும் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களை சிறைபிடித்துள்ளதாகவும் தனது நடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்தப் பாரப்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பல தலைமுறைகளாக வாழ்வாதாரமாக திகழ்வதாகவும், மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டு மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 21-07-2024 அன்று IND- IN-12-MM-5900 1 என்ற பதிவெண் கொண்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 12 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 13-09-2024 அன்று 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்ததாகவும், இது ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதுடன் அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, இயங்கை வசம் உள்ள மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும் தாயகத்திற்குத் திரும்பி அழைத்து வரவும் மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்க் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் அரசுப்பள்ளியில் நிகழ்ச்சி நடந்துள்ளது.
    • மூடநம்பிக்கையை விதைக்கும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை எப்படி அனுமதி அளித்தது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறது.

    இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அந்நிகழ்ச்சியில் பேசுபவர், "போன ஜென்மத்தில் நீங்கள் செய்த பாவத்தின் அடிப்படையில் இந்த ஜென்மத்தில் பிறவி எடுத்துள்ளீர்கள். அதனால் தான் ஒருவர் கோடீஸ்வரனாகவும் ஒருவர் ஏழையாகவும் பிறக்கிறார். நம் நாட்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குருகுலங்கள் இருந்தன. அவை அனைத்தும் அழிக்கப்பட்டன.

    ஒரு மந்திரத்தை படித்தால் நெருப்பு மழை பொழியும். ஒரு மந்திரத்தை படித்தால் நோய்கள் குணமாகும். ஒரு மந்திரத்தை படித்தால் பறந்து போகலாம். அத்தனை மந்திரங்களும் பனையோலையில் எழுதப்பட்டிருந்தது. பிரிட்டிஷார் இதை அனைத்தையும் அழித்து விட்டனர்" என்று தெரிவித்தார்.

    இத்தகைய மூட நம்பிக்கை பேச்சிற்கு அங்குள்ள ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க "பாவம் புண்ணியங்களை போதிக்காமல் ஒருவருக்கு எப்படி வாழ்வியலை போதிக்க முடியும்" என்று அவர் பதில் அளிக்கிறார்.

    பள்ளிகளில் அறிவியலையும், பகுத்தறிவையும் போதிப்பதற்கு மாறாக, மூடநம்பிக்கையை விதைக்கும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை எப்படி அனுமதி அளித்தது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீரர், வீராங்கனைகளுடன் உரையாடினார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஆறு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இவர்களில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று நாடு திரும்பியுள்ளனர். பதக்கத்தோடு நாடு திரும்பியவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

     


    மேலும், பதக்கம் வென்று திரும்பியவர்களுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீரர், வீராங்கனைகளுடன் உரையாடினார்.

    • இந்தியாவில் பசுமை புரட்சி, வெண்மைப் புரட்சி போலவே தற்போது டிஜிட்டல் புரட்சி நடந்துள்ளது.
    • என்னை பொறுத்தவரை ஊறுகாய் போடுவது இழிவானது இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று "மகளிர் எழுச்சி" என்னும் தலைப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், பசுமை புரட்சி, வெண்மைப் புரட்சி போலவே தற்போது டிஜிட்டல் புரட்சி நடந்துள்ளது. இதனால் ஜி.எஸ்.டி. வரிகள் உட்பட அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டது. இந்தியாவில் நடந்துள்ள டிஜிட்டல் புரட்சியை கண்டு உலக நாடுகளே ஆச்சரியமடைந்துள்ளது.

    ஊறுகாய் போட்டுக் கொண்டு இருந்தவரை நிதியமைச்சராக ஆக்கியுள்ளார் என்று என்னை விமர்சிப்பார்கள். என்னை பொறுத்தவரை ஊறுகாய் போடுவதும் இழிவானது இல்லை, மக்களுக்காக சேவை செய்வதும் இழிவானதும் இல்லை" என்று தெரிவித்தார். 

    • ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங்க கொலைக்கான காரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து காவல் ஆணையர் கூறியதாவது:-

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். 90% விசாரணை முடிவடைந்துவிட்டது. கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம்.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம், முக்கிய நபர்கள் குறித்து காவல்துறை விரைவில் தெரிவிக்கும்.

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தி கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் காரில் TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளது.
    • கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க புஸ்ஸி ஆனந்த் வந்தார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் காரில் TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. 2026 இல் விஜய் தமிழக முதலமைச்சர் ஆவார் என்பதை குறிக்கும் விதமாக இந்த நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் இன்று கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வருகை தந்தார்.

    அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய புஸ்ஸி ஆனந்திடம் 'தி கோட்' படத்தில் TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அதைநோக்கி தானே எங்களது கட்சி பயணம் உள்ளது" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×