என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தலைவர் ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • ராதகுல்காந்தியைப் பார்த்து பேசுவதற்கு பாஜகவினருக்கு எந்த தகுதியும் இல்லை.

    எச்.ராஜாவை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜகவின் தற்காலிக பொறுப்பாளர் எச்.ராஜா, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பை குறிப்பிட்டு மிகமிக இழிவாக தரம் தாழ்ந்து பேசியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இந்த சந்திப்பு குறித்து பேசும்போது, தலைவர் ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    யாரை பார்த்து யார் தேசத்துரோகி என்று கூறுவது ? விடுதலைப் போராட்ட காலத்தில் 10 ஆண்டுகாலம் இருந்த பண்டித நேரு பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தியைப் பற்றி இழிப்பு பேசுவதற்கு எச்.ராஜாவுக்கு என்ன உரிமை இருக்கிறது ? விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு கூட பங்கேற்காமல் பிரிட்டிஷ்ல் ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரன் வீசி ஏஜெண்டுகளாக இருந்த ஆர்.எஸ்.எஸ். வழி வந்த பாஜகவினர், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை.

    இந்திய ஒற்றுமைக்காகவும், ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காகவும் தமது இன்னுயிரை தியாகம் செய்த இந்தியா காந்தி, பார ரத்னா ராஜீவ் காந்தி ஆகியோரின் பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராதகுல்காந்தியைப் பார்த்து பேசுவதற்கு பாஜகவினருக்கு எந்த தகுதியும் இல்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

    அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை எச்.ராஜா கொச்சைப்படுத்தி பேசுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாக கருத்துகளை கூறுவது வகுப்புவாத விஷமந்தனான கருத்துகளை பரப்புவது, மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தமிழினத் துரோகி எச்.ராஜாவின் பேச்சை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்டத் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி கேட்டுக்கெள்கிறேன்.

    இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமும், ஒப்பற்ற தலைவருமான ராகுல்காந்தி அவர்களை எவரும் இழித்து பேசுவதை அனுமதிக்க முடியாது.

    இத்தகைய அநாகரீகமான வகையில் பேசியுள்ள எச்.ராஜாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில், தமிழகம் முழுவதும் நாளை (17.092024) கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதை தெரவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சரக்கு பெட்டக முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
    • இது இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம்.

    தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    விக்சித் பாரத யாத்திரையில் இது ஒரு முக்கியமான கட்டமாகும்.

    இந்த புதிய தூத்துக்குடி சர்வதேச கொள்கலன் முனையம் இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம். இந்த புதிய முனையத்தின் மூலம், வ.உ.சிரதம்பரனார் துறைமுகத்தின் திறன் விரிவடையும்.

    இது வ.உ.சி துறைமுகத்தில் தளவாடச் செலவுகளைக் குறைக்கும் மற்றும் இந்தியாவின் அன்னிய செலாவணியை காப்பாற்றும்.

    இவ்வாறு அவர் குறி்பபிட்டுள்ளார்.

    • இம்மண்ணில் சாதி, மதம் என்ற எந்த காழ்ப்புகளும் இருக்கக்கூடாது.
    • இந்த விழா அழைப்பிதழில் பலரின் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் உள்ளது.

    சென்னையில் இன்று நாடார் சங்க கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார்.

    இந்நிகழ்வில் பேசிய எம்.பி. கனிமொழி, "தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஐ.ஏ.அஸ் அதிகாரி படித்துக் கொண்டிருக்கும்போது அவரது வகுப்பு ஆசிரியர் ஒருவர் தமிழ்நாடு மட்டும் தனியாக தெரிகிறது. ஏன் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட மறுக்கிறீர்கள் என்று கூறினார். அப்போது வகுப்பின் பெயர் பட்டியலை எடுத்து உங்கள் பெயர்களை பாருங்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் பெயர்களை பாருங்கள். எங்கள் பெயருக்கு பின்னால் எங்கள் தந்தை பெயரோடு நிறுத்தி கொண்டோம். உங்கள் பெயருக்கு பின்னால் என்ன சாதி என்று வெளிப்படையாக உள்ளது.

    தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இம்மண்ணில் சாதி, மதம் என்ற எந்த காழ்ப்புகளும் இருக்கக்கூடாது. நாம் எல்லோரும் மனிதர்கள், சமமானவர்கள். இந்த விழா அழைப்பிதழில் பலரின் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் உள்ளது. நாம் எல்லோரும் உழைப்பை நம்பக் கூடியவர்கள். அதனால் இப்படி சாதி பெயரைப் போட வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்தார். 

    • கடந்த வாரம் 11 பேர் மேற்கு வங்காளத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்தனர்.
    • விவசாய வேலைக்காக வந்த அவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை.

    சென்னை:

    வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு கூலி வேலைகளில் ஈடுபட்டு வரும் வட மாநிலத்தவர்கள் சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் 11 பேர் மேற்கு வங்காளத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்தனர்.

    பொன்னேரி பகுதியில் விவசாய வேலைக்காக வந்த அவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் சொந்த ஊர் செல்ல முடிவு செய்தனர். 2 நாட்களாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தங்கி இருந்தனர்.

    உணவு சாப்பிடாமல் இருந்த அவர்கள் மயக்க நிலையில் இருந்துள்ளனர். மேற்கு வங்காளத்திற்கு திரும்பி செல்ல காத்திருந்த 10 பேர்களில் 4 பேர் மயக்கம் அடைந்தனர்.

    பசியின் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு மயங்கி இருந்த நிலையில் அவர்களை சென்ட்ரல் நிலையத்தில் உள்ள அவசர உதவி மையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். அதனை தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சென்ட்ரல் ரெயில்வே போலீசார் வடமா நிலத்தவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • சென்னை பாந்தியன் சாலையில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
    • முப்பெரும் விழாவில் புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு விஜய் வசந்த் அடிக்கல் நாட்டினார்

    சென்னை:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பில் சென்னை பாந்தியன் சாலையில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு, அத்துடன் பெருந்தலைவர் சிலையும் திறந்துவைக்கப்பட்டது.

     இந்த முப்பெரும் விழாவில் புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.

    • யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள டாக்டர் காந்தராஜ் நடிகைகள் பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
    • சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

    மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து தமிழ் திரை உலகில் பாலியல் புகார்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 6-ந்தேதி அன்று டாக்டர் காந்தராஜ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார். அதில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள டாக்டர் காந்தராஜ் நடிகைகள் பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    பழைய நடிகைகள் முதல் தற்போதுள்ள நடிகைகள் வரையில் அனைவருமே பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்று கருத்து தெரிவித்துள்ள டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப் ரிவு சைபர்கிரைம் போலீசார் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    296 (பொது வெளியில் ஆபாசமாக பேசுதல்), 75 (பாலியல் தொந்தரவு), 79 (பெண்களின் மாண்பை அவமதித்தல்), 352 (அவதூறாக பேசுதல்), 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதையடுத்து டாக்டர் காந்தராஜ் மீது கைது நடவடிக்கை பாய்கிறது. காந்தராஜ் பேசிய வீடியோ பேச்சின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார் அவரை கைது செய்வது பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள்.

    • நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டனர்.
    • என்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    கல்யாணம் முடிந்து விட்டால் புது மாப்பிள்ளைக்கு கால் கட்டு போட்டாச்சு என்பார்கள். அது நூற்றுக் நூறு சதவீதம் உண்மையான வார்த்தைதான். திருமணத்துக்கு முன்பு வரையில் எந்தவித கட்டுப்பாடுமின்றி சுற்றித் திரிந்த பலர் திருமணமான பிறகு வேலை... வீடு... குடும்பம் என நான்கு சுவற்றுக்குள் முடங்கிப் போய் விடுகிறார்கள்.

    திருமணத்துக்கு முன்பு ஊர் சுற்றியது போல நண்பர்களுடன் வெளியில் எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் மனைவிமார்களிடம் அனுமதி பெறுவதற்குள் பலருக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல கணவர்மார்கள். 'என்ன... வெளியூர் டூர் வேண்டி கிடக்கு? பேசாம வீட்ல இருங்க.." என்று மனைவிமார்கள் போடும் சத்தத்தில் சப்தநாடி அடங்கி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் கணவன்மார்கள் பலர் ஒரு நாளைக்காவது நண்பர்களோடு தனியாக வெளியில் செல்ல முடியுமா?" என்கிற ஏக்கத்துடனேயே காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இது போன்ற சிக்கல் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு தடை போடக் கூடாது என மணப்பெண்ணிடம் அவரது நண்பர்கள் பத்திரத்தில் எழுதி வாங்கி இருக்கும் ருசிகர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்த பவித்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, தென்பாதி கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற நண்பர்கள் முத்துக்குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது. இனி நாம் அனைவரும் முன்பு போல் சுதந்திரமாக வெளியில் சுற்ற முடியாதே, என நினைத்து அதற்காக அவர்கள் புதுவித யுக்தியை கையாண்டனர்.

    அதன்படி, நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டனர்.

    அதில் "திருமணத்திற்கு பிறகு எப்போதும் போல் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்வதற்கும், வெளியூர் சுற்றுலா செல்வதற்கும் தடை விதிக்காமல் நண்பர்களுடன் சந்தோஷமாக வெளியில் சுற்றுவதற்கு தடையாக இருக்க மாட்டேன்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை படித்து பார்த்த மணப்பெண் பவித்ராவும் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் புன்சிரிப்புடன் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

    மேலும், இதுகுறித்து நண்பர்கள் கூறுகையில்:-

    பிரபல தமிழ் சினிமாவில் (மைனா) வரும் காட்சிகளை போல் வெளியில் செல்லும் கணவனிடம் எப்ப வருவீங்க... எப்ப வருவீங்க... என கேள்வி எழுப்பக்கூடாது என்பதற்காக தான் மணப் பெண்ணிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம் என்றனர்.

    திருமணம் முடிந்த கையோடு பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கியதால், இனி நம் நட்பிற்குள் எந்த பிரிவும் ஏற்படாது என நண்பர்கள் உற்சாகம் அடைய, திருமணத்திற்கு வந்திருந்த பழைய கணவன்மார்கள் சிலர் தங்கள் திருமணத்தின் போதும் தனது நண்பர்கள் இது போல் பத்திரத்தில் கையெழுத்து வாங்காமல் விட்டு விட்டார்களே.. என ஏக்கம் அடைந்தனர்.

    • எண்ணெய் இறக்குமதிக்கான வரி 25 சதவீதம் உயர்வு.
    • லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது.

    சென்னை:

    எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளியை போல எண்ணெய் விலையும் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.

    அனைத்து சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், தீப எண்ணெய் வகைகள் திடீரென உயர்ந்துள்ளன. எண்ணெய் மார்க்கெட்டில் தினசரி நிர்ணயிக்கப்படும் விலை கடந்த 3 நாட்களாக அதிகரித்துள்ளது.


    பாமாயில் ஒரு லிட்டருக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாமாயில் மளிகை கடைகளில் தற்போது ரூ.110 வரை விற்கப்படுகிறது.

    சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை போன்றவை லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது. சில்லரை வியபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் எண்ணெய் ஆர்டர் கொடுக் கும் போது விலையேற்றத்தை கூறியதோடு மட்டுமின்றி இன்னும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தெரி வித்தனர்.

    மளிகைக் கடைகளில் உயர்த்தப்பட்ட திடீர் எண்ணெய் விலையை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மளிகை கடை வியாபாரிகள் கூறும்போது, எல்லா எண்ணெய் வகைகளும் 3 நாட்களில் உயர்ந்து விட்டன. மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வின் காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படு கிறார்கள்.

    தற்போது பண்டிகை காலம் என்பதால் எண்ணெய் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஓட்டல்களில், இனிப்பு, காரம் தயாரிப்பு களுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் விலை உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தீபாவளி பண்டு பிரித்து இருப்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய், இனிப்பு வழங்கு வார்கள். இந்த விலை உயர்வு அவர்களையும் பாதித்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சென்னையில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனம் தரப்பில் கூறும்போது, இறக்குமதி வரியின் காரணமாக எல்லா எண்ணெய் வகைகளும் உயந்துள்ளன. பாமாயில் விலை 10 பாக்கெட்டுகள் கொண்ட பெட்டிக்கு ரூ.100 உயர்ந்தது. தீப எண்ணெய் பெட்டி ரூ.1035-ல் இருந்து ரூ.1230 ஆக உயர்ந்தது என்றார்.


    கடலை பருப்பு

    இதே போல கடலை பருப்பு விலை கிலோவிற்கு 15 ரூபாய் கூடியுள்ளது. ரூ.90-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.105 ஆக கூடியுள்ளது. பச்சை பட்டாணி, வெள்ளை மூக்கடலை போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

    • சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்,
    • ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பா.ஜ.க.வின் தற்காலிக பொறுப்பாளர் எச். ராஜா மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பை குறிப்பிட்டு மிகமிக இழிவாக தரம் தாழ்ந்து பேசியதை தமிழ் நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இந்த சந்திப்பு குறித்து பேசும் போது, தலைவர் ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன். யாரை பார்த்து யார் தேசத்துரோகி என்று கூறுவது ?

    அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை எச். ராஜா கொச்சைப்படுத்தி பேசுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாக கருத்துகளை கூறுவது வகுப்புவாத விஷமத்தனமான கருத்துகளை பரப்புவது, மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் எச். ராஜாவின் பேச்சை கண்டித்து அனைத்து மாவட்ட தலை நகரங்களில் மாவட்டத் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமும், ஒப்பற்ற தலைவருமான ராகுல் காந்தியை இழித்து பேசுவதை எவரும் அனுமதிக்க முடியாது. இத்தகைய அநாகரீகமான வகையில் பேசியிருக்கிற எச். ராஜாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் தமிழகம் முழுவதும் நாளை (17.09.2024) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் தேசிய மதுவிலக்கு கொள்கையை மட்டும் ஏற்பீர்களா?
    • அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நடத்தும் ‘மது ஒழிப்பு மாநாடு’ என்ற நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மதுவிலக்கு மாநாட்டை அறிவித்து அ.தி.மு.க.வுக்கும் அழைப்பு விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று அறிவித்தார் . இந்த சூழ்நிலையில் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். அதன் பிறகு அவர் கூறும்போது எங்கள் கூட்டணியில் விரிசல் இல்லை. மதுவிலக்கு மாநாட்டில் தி.மு.க. பங்கேற்கும் என்றார்.

    மாறி மாறி பேசும் இந்த முரண்பட்ட கருத்துக்கள் பற்றி பா.ஜனதா நிர்வாகிகள் கூறியதாவது:-

    டாக்டர் தமிழிசை (பா.ஜனதா)

    தமிழகத்தில் மதுவிலக்கு மாநாடு நடத்தப்போகிறேன். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கவலை இல்லை என்று தீரமுடன் புறப்பட்ட திருமாவளவன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததும் தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் தேசிய மதுவிலக்கு கொள்கையை மட்டும் ஏற்பீர்களா? அரசே வருமானம் என்ற பெயரில் மதுக்கடைகளை நடத்துகிறது. ஆளும் கட்சியினரே 40 சதவீத மது ஆலைகளையும் நடத்துகிறார்கள். தேசிய அளவில் மதுவிலக்கு வந்தால் எப்படி ஏற்பீர்கள்.

    மத்திய அரசில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்தும் பாராளுமன்றத்தில் தேசிய மதுவிலக்கு பற்றி தி.மு.க. என்றாவது பேசியதுண்டா? இப்போது விடுதலை சிறுத்தைகளுக்கு 2 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தேசிய மதுவிலக்கு பற்றி பாராளுமன்றத்தில் இதுவரை பேசவில்லையே ஏன்?

    அப்பட்டமான உங்கள் அரசியல் நாடகம் அம்பலமாகி விட்டது. தி.மு.க. கூட்டணியில் அஸ்திவாரத்தில் குழி பறித்து அசைத்து பார்க்க நினைத்தீர்கள். அது பலிக்கவில்லை என்றதும் எல்லாவற்றையும் மடை மாற்றி மத்திய அரசு பக்கம் திருப்பி விடுகிறீர்கள். இதையே தான் நீட் விவகாரத்தில் செய்தீர்கள். புதிய கல்வி கொள்கையிலும் செய்து வருகிறீர்கள். இப்போது மது விலக்கையும் உங்களாலோ உங்கள் கூட்டணியாலோ கொண்டு வரமுடியாது என்றதும் மடை மாற்றுகிறீர்கள்.

    முதலில் தி.மு.க.வினர் மது ஆலைகளை மூடிவிட்டு மதுவுக்கு எதிராக போராட வேண்டும். மக்களை ஏமாற்றாதீர்கள். திருமாவின் தேர்தல் பேரத்தை எத்தனை நாள்தான் மக்கள் நம்புவார்கள்? அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நடத்தும் 'மது ஒழிப்பு மாநாடு' என்ற நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருமாவளவன் அவர்களே, இரண்டு திராவிட கட்சிகளுமே கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு இல்லை என்று மறுத்து விட்டது.

    இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி இந்திய மக்களின் மகிழ்ச்சிக்காக இந்தியாவின் வளர்ச்சிக்காக வறுமையை ஒழிப்போம். ஊழலை ஒழிப்போம்.

    உலகின் வளமான வலிமையான வல்லரசாக இந்தியாவை உருவாக்குவோம் என்ற அடிப்படை யில் பா.ஜனதா கட்சி ஜனநாயக முறைப்படி ஒருமித்த கொள்கையுடன் அமைத்த கூட்டணி 3-வது முறை வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்திருக்கிறது.

    மத்திய அமைச்சரவில் அனைத்து கூட்டணி கட்சிகளின் பங்கு இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளுக்கும் அவரவர் வலிமைக்கேற்ப சமமான முறையில் அமைச்சரவையிலே இடமளித்து முக்கிய இலாகாக்களை ஒதுக்கி பா.ஜ.க. ஒரு சிறந்த ஜனநாயக கட்சி என்பதை நிரூபித்திருக்கிறார்.

    மத்திய மோடி அரசு கூட்டணி ஆட்சிக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் துணிந்து கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியுடன் தான், இனி உறவு இனி தேர்தல் கூட்டணி என்று துணிந்து அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க.வும், பா.ம.க.வும் நீண்ட காலமாக தன் முனைப்புடன் மிகப்பெரிய விழிப்புணர்வு பிரசாரங்களையும் போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளது.

    இன்று பா.ஜ.க. மற்றும் பா.ம.க. கட்சிகள் இல்லாமல் மதுவிலக்கு ஆதரவு மாநாடு நடத்துவேன் என்று கூறியதில் இருந்து உங்களின் சுயநல அரசியலும் உள்நோக்கமும் அனைவருக்கும் புரிந்து விட்டது.

    மதுவிலக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று நீங்கள் பூசி வந்த அரிதாரம் இன்று ஒரே நாளில் கலைந்து விட்டதே இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் அதே கருத்தை கொண்டவைதான்.
    • ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது பற்றி கேட்கிறீர்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்தது பற்றி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை பொறுத்தவரையில் அவர் மதசார்பின்மை, சாதி ஒழிப்பு, தமிழ் மொழியை காப்பது என்பது போன்ற அடிப்படை கொள்கைகளில் 100 சதவீதம் உறுதியாக இருப்பவர் ஆவார். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் அதே கருத்தை கொண்டவைதான்.

    எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை பிரிக்க முடியாது. குறிப்பாக மோடி எதிர்ப்பு விஷயத்திலும் திருமாவளவன் உறுதியாக இருப்பதால் அவர் நிச்சயம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் நீடிப்பார்.

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது பற்றி கேட்கிறீர்கள். அது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயமாகும். இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும். இப்போது அதுபற்றியெல்லாம் பேச வேண்டியது இல்லை.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:

    தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த சிலர் விரும்புகிறார்கள். இந்த கூட்டணி உடையாதா? என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களது விருப்பம் நிறைவேறாது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • “உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்” என எளியவர்களுக்காகப் பேசினார்.
    • நமது திராவிட மாடல் அரசும் இசுலாமிய மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அன்புடன் செவிமடுத்து நிறைவேற்றி வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள மிலாதுநபி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் இசுலாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய மீலாதுன் நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மனிதர்களிடையேயான வேற்றுமைகளைக் களைந்தெறியவும், அடிமை வணிகம் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவும் அன்றே குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம் ஆவார். அவரது போதனைகள் அமைதியான, சமத்துவ உலகுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகும்.

    "உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்" என எளியவர்களுக்காகப் பேசினார். "உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்" எனப் பணிவுடைமையை வலியுறுத்தினார். "கற்றவண்ணம் நடப்பவரே உண்மையில் கற்றவர்" என வாழ்க்கைக்கான நெறிமுறையை வகுத்துக் காட்டினார். அதன்படியே வாழ்ந்தும் காட்டினார் நபிகள் நாயகம் அவர்கள்.

    அவர் காட்டிய வழியில் வறியவர்க்கு உதவுவது, இயற்கைச் சீற்றம், பெருந்தொற்று உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் தன்னலமற்று மக்களுக்காகச் சேவையாற்றுவது, பசித்தோருக்கு உணவளிப்பது என இசுலாமிய மக்கள் வாழ்ந்து சமூக நல்லிணக்கத்தைப் பேணி வருகின்றனர்.

    அன்பையும், ஈகையையும் சிறந்த குணங்களாக முன்னிறுத்திய அன்னாரது பிறந்தநாளை இசுலாமிய மக்கள் ஏற்றத்துடன் கொண்டாடி மகிழ்ந்திட 1969-ஆம் ஆண்டே அரசு விடுமுறை அளித்தது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான கழக அரசு. 2001-இல் அன்றைய அ.தி.மு.க ஆட்சி இதனை ரத்து செய்த நிலையில், 2006-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு மீலாதுன் நபியை மீண்டும் அரசு விடுமுறையாக அறிவித்தது.

    அவரது வழிநடக்கும், நமது திராவிட மாடல் அரசும் இசுலாமிய மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அன்புடன் செவிமடுத்து நிறைவேற்றி வருகிறது. வக்ப் சட்டத்திருத்த மசோதா போன்றவற்றால் அவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் உரக்கக் குரல் கொடுத்து உறுதியாக உடன் நிற்கிறது.

    இசுலாமிய மக்களின் பாதுகாவலனாக, அவர்களது சகோதரனாக என்றும் நிற்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழக அரசின் சார்பில் மீண்டும் எனது மீலாதுன் நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×