என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 3 பேருக்கும் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே மறவன்மடம் மேற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 33). பாத்திர வியாபாரி.

    இவர் நேற்று முன்தினம் காலை புதுக்கோட்டை-கூட்டாம்புளி சாலையில் மனைவியுடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் முருகனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

    இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அதில், தூத்துக்குடி சிப்காட் ராஜகோபால் நகர் 2-வது தெருவை சேர்ந்த மாரிதங்கம்(23) என்பவரை முன்பகை காரணமாக பாத்திர வியாபாரி முருகன் மற்றும் சிலர் சேர்ந்து கடந்த ஆண்டு மடத்தூர் பகுதியில் வைத்து வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கு பழிக்கு பழியாக மாரிதங்கம் மற்றும் சிலர் சேர்ந்து தற்போது முருகனை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.

    போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த கொலை கும்பலை சேர்ந்த மாரிதங்கம் மற்றும் அவரது கூட்டாளிகளான புதுக்கோட்டை புதுத்தெருவை சேர்ந்த வினித்(22), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரீஸ்வரன் என்ற மாதேஷ் ஆகியோர் மறவன்மடம்-புதுக்கோட்டை இடையே உள்ள தட்டப்பாறை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு தப்பி செல்ல முயன்றனர்.

    தொடர்ந்து தனிப்படை போலீசார் தட்டப்பாறை சாலை பகுதிகளை முழுமையாக சுற்றி வளைத்தனர். இதனால் அந்த கும்பல் காட்டுக்குள் தப்பி ஓடினர். போலீசார் அந்த கும்பலை பின்தொடர்ந்து பிடிக்க சென்றபோது ஓடியபோது தடுமாறி கீழே விழுந்ததில் மாரிதங்கத்திற்கு கை முறிவும், மாதேஸ்வரனுக்கு கால் முறிவும் ஏற்பட்டது. வினித்துக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    தொடர்ந்து 3 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தடுப்பணையினை புனரமைப்பது தொடர்பாக, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் எங்கு தண்ணீர் தேவைகள் இருக்கிறதோ அதனை அறிந்து அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே பாலாற்றில் கடந்த 1857-ம் ஆண்டில் கட்டப்பட்ட பாலாறு அணைக்கட்டு உள்ளது. இந்த பாலாறு அணைக்கட்டு மூலமாக ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்குட்பட்ட விளைநிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

    இந்த அணைக்கட்டினை ரூ.200 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து அணையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

    அப்போது அளித்த பேட்டியில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

    தமிழகத்தில் எங்கு தண்ணீர் தேவைகள் இருக்கிறதோ அதனை அறிந்து அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    1858-ல் கட்டப்பட்ட வாலாஜா தடுப்பணையில் இருந்து தான் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் இந்த தடுப்பணை உள்ளது.

    தடுப்பணையினை புனரமைப்பது தொடர்பாக, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தர்மபுரி மாவட்டத்திற்கு காவிரி நீர் வழங்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை அரசு முடிவெடுத்தால் கண்டிப்பாக செய்வோம். அதை அடிக்கடி பாமக தலைவர் ஜி.கே.மணி சட்டமன்றத்தில் கேட்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறித்து கேள்வி எழுப்பினர்.

    இதனைக் கேட்டதும் ஆவேசமடைந்த துரைமுருகன் அந்த கேள்வி எல்லாம் எனக்கு தெரியாது எனக்கூறி எழுந்து சென்றார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • கோவில் முன்பும், கடற்கரையிலும் கூட்டம் அலை மோதியது.
    • 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இத்திருவிழாவில் பக்தர்கள் வேடம் அணியும் முன் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி பூசாரி கையினால் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

    இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலையிலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர். கோவில் முன்பும், கடற்கரையிலும் கூட்டம் அலை மோதியது.

    விரதம் தொடங்கும் பக்தர்கள் கோவிலில் கொடியேறியதும் கோவிலில் வழங்கும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்புவை வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை பிரித்து 10-ம் திருநாள் அன்று கோவிலில் சேர்ப்பார்கள்.

    மேலும் ஊர் பெயரில் தசரா குழு அமைத்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூல் செய்வது மேலும் சிறப்பாகும்.

    • ஆய்வின்போது கண்காணிப்பு அதிகாரிகள் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களிடம் சனிக்கிழமை நாட்களில் குறைகளை கேட்டறியலாம்.
    • பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., எஸ்.ஜி.சி., ஜெ.ஆர்.சி குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டும்.

    சென்னை:

    திருவள்ளூர் பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், மாணவர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இப்படி, மற்ற பள்ளிகளில் நடந்த ஆய்வுகள் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

    இந்த நிலையில், பள்ளிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் 30 பேர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள், பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் சங்கர் புதுக்கோட்டை மாவட்டத்திலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி செங்கல்பட்டு மாவட்டத்திலும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மதுரை மாவட்டத்திலும், தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் உள்பட 30 அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். மாதத்தில் ஒருமுறையாவது பள்ளிகளில் ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை மாதத் தொடக்கத்தில் 5-ந் தேதிக்குள் தவறாமல் அரசுக்கு சமர்பிக்க வேண்டும்.

    ஆய்வின்போது கண்காணிப்பு அதிகாரிகள் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களிடம் சனிக்கிழமை நாட்களில் குறைகளை கேட்டறியலாம். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம், அனைத்து மாணவர்களின் நலவாழ்வு திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

    மாணவர்களின் வருகை பதிவேடு விவரங்கள் முறையாக கண்காணிக்கப்படுகிறா? என்பது குறித்தும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் காலிப்பணியிட விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களின் விளையாட்டு திறன்கள் குறித்தும், கல்வி உதவித்தொகைகள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

    பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., எஸ்.ஜி.சி., ஜெ.ஆர்.சி குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டும். மாணவர்களுக்கான 14417, 1098 ஆகிய உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் ஆய்வுகள் நடத்த வேண்டும். அங்கு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்த விவரங்களை சோதனை செய்ய வேண்டும். தணிக்கை விவரங்களையும் ஆராயவேண்டும். வட்டார கல்வி அலுவலகங்களில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை விவரங்களை பரிசோதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரோஸ் நிறத்தில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் காட்சி அளிக்கின்றது.
    • ரோஸ் நிறமாக மலைப்பகுதி காணப்படுகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலை பலவிதமான இயற்கை நிலைகள் அழகுபடுத்தி மெருகூட்டி பார்க்கின்றன. இதில் முக்கிய பங்களிப்பை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள் முதன்மை இடத்தினை பிடிக்கின்றன, பொதுவாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிகமான அளவில் இந்த மரங்கள் காணப்படுகிறது.

    ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்த மரத்தில் உள்ள இலைகள் உதிர தொடங்கி செப்டம்பர் மாத இறுதி மற்றும் அக்டோபர் மாதத்தில் ரோஸ் நிறத்தில் பூக்கும் கானக செர்ரி மலர்கள் தற்போது கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூத்து குலுங்குகின்றது.

    இதன் சிறப்பு அம்சம் 2 மாதங்களில் பசுமை நிறத்தில் காணப்படும். இந்த மரத்திலுள்ள இலைகள் முழுவதும் உதிர்ந்து செர்ரிப் பூக்கள் மட்டுமே ரோஸ் நிறத்தில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் காட்சி அளிக்கின்றது.

    மேலும் சுற்றுலாத்தலங்கள் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பூத்துக் குலுங்கும் இந்த மரங்களில் உள்ள மலர்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

    பசுமை போர்த்திய மலைப்பகுதிகளில் ரோஸ் நிற மலர்கள் சூடிய மலைகளின் இளவரசியாக கூடுதல் அழகாக கொடைக்கானல் காட்சியளிக்கின்றது.

    இந்த செர்ரி மரங்களில் உள்ள மலர்கள் அக்டோபர் மாத இறுதியில் உதிர தொடங்கி இலைகள் துளிர்த்து பழைய நிலைக்கு திரும்பி விடும். கொடைக்கானலில் நிலவும் குளுமையான வானிலையை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் இந்த பூக்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் கழுகு பார்வை காட்சிகளால் பார்க்கும் போது ரோஸ் நிறமாக மலைப்பகுதி காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

    • வழக்கு சட்டரீதியாக எதிர்கொள்ளப்படும் என்பதை தி.மு.க.விற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
    • 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று முதலமைச்சர் கனவு காண்கிறார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, வாகன வரி உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, முத்திரைத் தாள் கட்டண உயர்வு என எந்தெந்த வழிகளில் எல்லாம் மக்கள்மீது கூடுதல் சுமையைத் திணிக்க முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் சுமத்தி தமிழ்நாட்டு மக்களின் கடும் அதிருப்தியை தி.மு.க. சந்தித்துக் கொண்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டு அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல். நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தன்னுடைய சாதனைகளால் தி.மு.க. வெற்றி பெறவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால்தான் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், "ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற முயற்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஈடுபட்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் 2025-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணையும் என்று சில தினங்களுக்கு முன் பேட்டியளித்திருந்தார்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைந்து விடுமோ என்கிற அச்சத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மீது தி.மு.க. அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது நேற்று தி.மு.க. அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு சீரழிந்து வருவதையும், தி.மு.க.வின் மேல் உள்ள கடும் அதிருப்தியையும் மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், இந்த வழக்கு சட்டரீதியாக எதிர்கொள்ளப்படும் என்பதை தி.மு.க.விற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒன்றிணையவிடாமல் தடுத்து அதன்மூலம் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று முதலமைச்சர் கனவு காண்கிறார். அவருடைய கனவு நிச்சயம் பலிக்காது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுபடும், வீறுகொண்டு எழும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியை மீண்டும் அமைக்கும் என்பதை அழுத்தந்திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். இருள் நீங்கி ஒளி தோன்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • அண்மையில் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பியிருக்கிறார்.
    • 2026-ல் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும்.

    சென்னை:

    அண்ணாவின் 116-வது பிறந்த நாளையொட்டி, திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

    முன்னதாக, கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர், மேடையில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கிய எடப்பாடி பழனிசாமி, பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    அ.தி.மு.க. மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. எங்கள் ஆட்சியில் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், தி.மு.க., இன்றைக்கு குடும்பத்துக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்த திராவிட மாடல் ஆட்சியில் கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 68 பேர் இறந்து போனார்கள். நகரம் முதல் கிராமம் வரை கஞ்சா விற்பனை தாராளமாக நடக்கிறது. ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அதை விற்றுக் கொண்டிருக்கின்றனர்.

    இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா போதையினால் பாலியல் வன்கொடுமை நடக்கிறது. கடந்த 20 நாட்களில் 6 பாலியல் கொடுமை நடந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டதற்கு இதுவே சான்று. தினமும் படுகொலை நடக்கிறது. கட்சி தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை.

    காவல் துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை. காவலரை பார்த்து குற்றவாளிகள் பயப்படுவதில்லை. கஞ்சா போதையில் தாக்குகிறார்கள். அண்மையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடந்தினார்கள். நாணயம் வெளியிட்டனர். அதை வெளியிட மத்திய மந்திரியை அழைத்தனர். அவர்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை அழைக்கவில்லை. பாரதிய ஜனதா தலைவர்களை அழைத்து வெளியிட்டனர். இதில் இருந்து, தி.மு.க.வின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

    தாங்கள் செய்த ஊழலை மறைக்க மத்திய அரசை அழைத்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்தி இருக்கிறார்கள். சுயநலத்தின் மொத்த உருவம் தி.மு.க.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் சென்றார். அப்போது, தமிழகத்திற்கு எவ்வளவு தொழில் முதலீடு வந்தது?, எவ்வளவு ஒப்பந்தம் போடப்பட்டது?, எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது?. அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். உண்மை வெளிவந்துவிடும் என்பதால், வெளியிட மறுத்துவிட்டனர்.

    அண்மையில் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பியிருக்கிறார். அங்குபோய், சைக்கிள் ஓட்டினார். மக்கள் வரி பணம் ஊதாரித்தனமாக செலவு செய்யப்பட்டது. அவரது மகன் உதயநிதி இங்கே கார் பந்தயம் நடத்துகிறார். இது மக்களுக்கு தேவையா?. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களின் சாதனை இதுதான்.

    அ.தி.மு.க. இணையப்போவதாக கூறப்படுகிறது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கட்சியில் இருந்து 4 பேர் நீக்கப்பட்டதுதான். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள். அ.தி.மு.க., பொதுக்குழு எடுத்த முடிவுதான் இறுதியானது.

    2026-ல் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும். தி.மு.க. கூட்டணியில் இப்போது புகைய ஆரம்பித்து இருக்கிறது. அடுத்து நெருப்பு பற்றும். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும். அ.தி.மு.க. ஆட்சியை அமைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பா.பென்ஜமின், கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் எஸ்.அப்துல்ரஹீம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், இலக்கிய அணியின் மாநில துணை செயலாளர் இ.சி.சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
    • பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு சீசன் காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். இயற்கை எழில் நிறைந்த மலைகள், நட்சத்திர ஏரி, குணா குகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை அவர்கள் பார்வையிட்டு ரசிக்கின்றனர்.

    இந்தநிலையில் கொடைக்கானலின் பசுமை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் இல்லாத கொடைக்கானலை உருவாக்க வேண்டும். அதற்கு 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை கொடைக்கானலில் தடை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

    இந்த கண்காணிப்பு குழுவினர் கொடைக்கானலில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதோடு பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.20 அபராதம் விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கொடைக்கானல் நகராட்சி, பண்ணைக்காடு பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துபவர்கள், விற்பவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பசுமைவரி என்ற பெயரில் ஒரு பாட்டிலுக்கு ரூ.20 அபராதமாக விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு தகவல்கள் முன்கூட்டி கணிக்கப்பட்ட வானிலையில் கிடைத்துள்ளது.
    • தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பையொட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.

    அந்த வகையில் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிலும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற மேற்கு மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?, இந்த காலகட்டத்தில் மழைப்பொழிவு எந்த அளவு இருக்கும்? வானிலை சார்ந்த வலுவான நிகழ்வுகள் (தாழ்வு மண்டலம், புயல்கள்) எப்படி இருக்கும்? என்பது உள்ளிட்ட தகவல்கள் முன்கூட்டி கணிக்கப்பட்ட வானிலையில் கிடைத்துள்ளது.

    அவ்வாறு முன்கூட்டி கணிக்கப்பட்ட தகவல்களை, தனியார் வானிலை ஆய்வாளர் (டெல்டா வெதர்மேன்) ஹேமச்சந்தர், அரசுக்கும் சமர்ப்பித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதாவிடம் இதுபற்றி விளக்கமாக அவர் தெரிவித்திருக்கிறார். அவரும் இந்த மாதம் இறுதிக்குள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றி பேசுவோம் என கூறியுள்ளார்.

    தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் சமர்ப்பித்துள்ள முன்கூட்டி கணிக்கப்பட்ட வானிலையில், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ந்தேதி முதல் 27-ந்தேதிக்குள், அதாவது 25-ந்தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டுகளை போல கிழக்கு காற்று போன்றவற்றினால் கிடைத்த மழைப்பொழிவு போல இந்த ஆண்டு இல்லாமல், தாழ்வு மண்டலங்கள், புயல்கள் ஆகியவற்றால் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    வட கடலோர மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா பகுதிகளில் குறுகிய காலத்தில் அதிக மழை இருக்கக் கூடும், இந்த இடங்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும். வடகிழக்கு பருவமழை காலத்தில் 2 புயல்கள் உருவாகக்கூடும். இந்த புயல்கள் நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 15-ந்தேதி வரையிலான ஒரு மாத கால இடைவெளிக்குள் ஏற்படும்.

    வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் இயல்பைவிட குறைவாகவும், வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் மழை இருக்கும். மொத்தத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பையொட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவல் தனியார் வானிலை ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த மாதம் இறுதிக்குள் முன்கூட்டி கணிக்கப்பட்ட தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
    • வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் கில் சதமடித்தார்.

    சென்னை:

    இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் அஷ்வின் 113 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. ரிஷப் பண்ட், சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடினர். இருவரும் சதமடித்து அசத்தினர். ரிஷப் பண்ட் 109 ரன் அடித்து அவுட்டானார்.

    இந்தியா 64 ஓவரில் 4 விக்கெட்டுக்கு து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சுப்மன் கில் 119 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் பேட்டிங் செய்து வருகிறது..

    இந்நிலையில், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கில், 2-வது இன்னிங்சில் சதமடித்து அசத்தினார்.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேச அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன பிறகு, 2-வது இன்னிங்சில் சதமடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

    • பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
    • பயணிகள் வசதிக்காக கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் பொது போக்குவரத்தில் மின்சார ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஏராளமான மக்கள் இந்த மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோர் என இந்த ரெயில் சேவையை நம்பியுள்ளனர்.

    இதற்கிடையே, பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவை அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் முழுவதுமாக அல்லது பகுதியாக ரத்து செய்யப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவையில் இன்று (செப்டம்பர் 22ம் தேதி) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை தாம்பரம்-கடற்கரை வரையிலான மின்சார ரெயில் சேவை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம்.
    • மநீம தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்குரிய அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுவது உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளன.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் கமல்ஹாசன்

    அவர்கள் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் - அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்!

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×