என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இருப்பு மற்றும் நுகர்வின் அடிப்படையில் 20-ந்தேதிக்குள் அனைத்துப் பொருள்களும் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.
    • ஆனாலும் 15.11.2025-க்குள் 100% கோதுமையும் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.

    உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இன்று ஒரு நாளிதழில் வந்த செய்தியை வைத்து எடப்பாடி பழனிசாமி 12,573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருக்கிறார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

    ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை கோதுமை ஒதுக்கீடு மாதம் 8,576 மெட்ரிக் டன் மட்டுமே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வந்தது.

    தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி தமிழ்நாட்டிற்கான கோதுமை ஒதுக்கீட்டினை உயர்த்திட ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 8,576 மெட்ரிக் டன்னிலிருந்து 17,100.38 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுப் பொது மக்களுக்குத் தங்குதடையின்றி நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    தற்போது மார்ச் 2025 முதல் கோதுமை ஒதுக்கீட்டைப் பழைய அளவிற்கே குறைத்துத் தற்போது மாதம், 8,576 மெட்ரிக் டன் கோதுமை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 2025 மாதத்திற்கு 8722 மெட்ரிக் டன் கோதுமை மாவட்டங்களுக்கு நுகர்வின் அடிப்டையில் உப ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கடந்த மூன்று மாதங்களில் கோதுமையின் நுகர்வு சதவீதம் சராசரியாக 92% எனப் பதிவாகி உள்ளது. நவம்பர் மாதத்தில் 08.11.2025 வரை 63% (5,386 மெட்ரிக் டன்) கோதுமை நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யபட்டுள்ளது.

    இருப்பு மற்றும் நுகர்வின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 20-ஆம் நாளுக்குள் அனைத்துப் பொருள்களும் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனாலும் 15.11.2025-க்குள் 100% கோதுமையும் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வழக்கம்போல் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்.

    நடப்புக் குறுவைப் பருவத்தில் 9/11/25 வரை 1923 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 13.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1.75 லட்சம் விவசாயிகளுக்கு ரூ3249.38 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் கடைசி ஆண்டில் இதே காலகட்டத்தில் 4.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. அவர் ஆட்சியில் பொது ரகத்திற்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூ.1918, சன்ன ரகத்திற்கு ரூ1958 மட்டுமே வழங்கப்பட்டது.

    ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 2500, சன்ன ரகத்திற்கு ரூ2545 வழங்கப்பட்டு வருகிறது.

    ஆதலால் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றிலும் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சக்கரபாணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • பழைய பஸ் நிலையம், பழைய நீதிமன்ற சாலை, கொண்டிராஜபாளையம்,

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக தஞ்சாவூர் நகரிய உதவி செயற்பொறியாளா் விஜய்ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா் நீதிமன்ற சாலையில் உள்ள நகர துணை மின் நிலையத்திலும், மின் பாதையிலும் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளை கேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு,

    தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோவில், சேவியா் நகா், சோழன் நகா், கல்லணை கால்வாய் சாலை, திவான்நகா், சின்னையாபாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்கம் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்கார தெரு, பழைய பஸ் நிலையம், பழைய நீதிமன்ற சாலை, கொண்டிராஜபாளையம், மகளிா் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.
    • நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்பு உள்ள கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது சீற்றத்துடனும், உள்வாங்கியும் காணப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது.

    கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடலுக்குள் இருந்த பச்சை நிற பாசிப்படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந்தன.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டது.
    • அதிகாலை முதலே குடும்பத்துடன் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது.

    இந்த சாரல் மழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதமான சூழல் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது.

    இதனால் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை முதலே குடும்பத்துடன் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்தனர்.

    குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டது,

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பங்களுடன் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்தனர்.

    • எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை தி.நகர் திலக் தெருவில் உள்ள பாமக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

    • இன்றும் குருசரண் உட்பட 3 பேர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகினர்.
    • ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் இதுவரை பொதுமக்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து, கடந்த 6 மற்றும் 7-ந் தேதிகளில் 17 தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 8 பேரிடம் விசாரணை நடந்தது. ஏற்கனவே ஆஜரான ஒரு சிலர் நேற்றைய விசாரணைக்கும் வந்து விளக்கம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 3-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்துக்கு நேரில் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், கரூரில் நடிகர் விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் த.வெ.க. சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை ஒப்படைக்குமாறு சம்மன் வழங்கியிருந்தனர்.

    இதையடுத்து, நேற்று த.வெ.க. அரசு வழக்கறிஞர், சென்னை பனையூர் அலுவலக உதவியாளர் குருசரண் உட்பட 3 பேர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தனர். அப்போது, அவர்கள் விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. வீடியோ காட்சிப் பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    அவற்றை பெற்றுக்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள், அவர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    இன்றும் குருசரண் உட்பட 3 பேர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றும் பல்வேறு ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்யததாக கூறப்படுகிறது. இதனிடையே இன்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    14 மற்றும் 15-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன.
    • நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன.

    இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது.

    திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும்.

    நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட Total Failure ஆக இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • S.I.R. சதி என்பதை உணர்ந்தே ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.
    • வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்காக கொடுக்கப்பட்ட படிவங்களிலேயே குழப்பம் உள்ளது.

    சென்னை:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், வாக்காளர் தீவிர திருத்த படிவத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி கூறியிருப்பதாவது:-

    * சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை.

    * அவசர அவசரமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதை தான் எதிர்க்கிறோம்.

    * S.I.R. சதி என்பதை உணர்ந்தே ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.

    * வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்காக கொடுக்கப்பட்ட படிவங்களிலேயே குழப்பம் உள்ளது.

    * உறவினர்கள் பெயரை தேர்தல் ஆணையம் கேட்கிறது, உறவினர் என்றால் யார்?

    * தற்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.

    * ஏதாவது பொய்யை சொல்லி ஏழை, எளிய மக்களின் வாக்குகளை பறிக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாக குற்றம் சாட்டினார். 



    • முதல் கட்டமாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த மின்சார மைக்ரோபஸ் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • பஸ்களை இயக்க உள்ள வழித்தடம், பஸ்கள் இயக்கும் நேரம், சார்ஜிங் இடம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய போக்குவரத்தாக மெட்ரோ ரெயில் சேவை மாறி உள்ளது. மெட்ரோ ரெயில் பயணிகள் வீட்டின் அருகில் இருந்தே எளிதில் மெட்ரோ நிலையங்களை சென்றடைய வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 220 புதிய மின்சார ஏ.சி.மைக்ரோ பஸ்களை அறிமுகப்படுத்த போவதாக கடந்தமாதம் தெரிவித்து இருந்தது.

    இந்த மைக்ரோ பஸ்கள் மினி பஸ்களை விட அளவில் சிறிதாக இருக்கும். சுமார் 5 முதல் 6 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏ.சி.மைக்ரோ பஸ்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 5 கி.மீட்டர் சுற்றளவில் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் முக்கிய குடியிருப்பு மற்றும் வணிக மையங்களை மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் செயல்படும்.

    இது தொடர்பாக கடந்த 3-ந்தேதி மெட்ரோ ரெயில், மாநகர போக்குவரத்து கழகம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பஸ்களை இயக்க உள்ள வழித்தடம், பஸ்கள் இயக்கும் நேரம், சார்ஜிங் இடம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த மின்சார மைக்ரோபஸ் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி திருமங்கலம், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், நங்கநல்லூர், பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை, விம்கோநகர், விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரெயில்நிலைய பகுதியில் இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே இந்த பகுதிகளில் 22 மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன.அவை 20 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படுகின்றன. புதிய மைக்ரோபஸ்கள் அறிமுகமானதும் 5 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும். இது மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு மட்டுமே இயக்கப்படும். பயணிகள் தங்களது பகுதியில் இருந்து எளிதாக மெட்ரோ நிலையத்தை அடையலாம். மெட்ரோ ரெயில் இயக்கப்படும் நேரத்திற்கு ஏற்ப இந்த பஸ் சேவை திட்டமிடப்படும், மேலும் பயணிகள் மைக்ரோ பஸ்கள் வரும் நேரத்தை கண்காணித்து "சென்னை ஒன்" செயலியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த மைக்ரோ பஸ் சேவைக்கு பயணிகளிடையே உள்ள வரவேற்பை பொறுத்து மற்ற வழித்தடங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

    • வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு வரும் புறநகர் பறக்கும் ரெயில் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-ம் தளத்துக்கு வரும்.
    • பயணிகள் ரெயில்களை வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    சென்னையை பொறுத்தவரை புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில் சேவைகள் பொதுமக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மின்சார ரெயில்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த ரெயில்களை நம்பி நீண்ட தூரத்தில் இருந்தும் பொதுமக்கள் சென்னைக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர். சென்னை மக்களின் ஒரு வரப்பிரசாதமாக புறநகர் ரெயில் சேவைகள் இருந்து வருகிறது.

    சென்னையில் தீராத தலைவலியாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பஸ், கார், இருசக்கர வாகனங்களில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியுமா...? என்பது கேள்விக்குறிதான். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் கேட்கவே வேண்டாம். சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் நத்தை போலதான் ஊர்ந்து செல்லும். இதில் இருந்து தப்பிக்க ரெயில் சேவைகள் பொதுமக்களுக்கு, பெரிதும் கை கொடுத்து வருகிறது.

    கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவை பயன்பாட்டில் இருந்த நிலையில் மற்றொரு புதிய வழித்தடமாக கடற்கரை, வேளச்சேரி வழியாக பரங்கிமலைக்கு பறக்கும் ரெயில் பாதை திட்டம் 1995-ல் உருவாக்கப்பட்டது.

    இந்த திட்டத்தில் முதற்கட்டமாக கடற்கரையில் இருந்து சிந்தாதிரிபேட்டை, கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், தரமணி, பெருங்குடி வழியாக வேளச்சேரி வரை ரெயில் இயக்கப்பட்டது.

    சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வேளச்சேரி- பரங்கிமலையை இணைக்கும் வகையில் ரூ.730 கோடி செலவில் கடந்த 2008-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு பாதை அமைப்பதில் நிலம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடந்த இந்த திட்டத்தை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட்டு நேரடியாக தலையிட்டதால் தீர்வு ஏற்பட்டது. இதனால் பணிகள் மீண்டும் வேகமெடுத்தன. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததால் மீண்டும் பணிகள் முடங்கியது.

    பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. 17 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வேளச்சேரி-பரங்கிமலை இணைப்பு பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ளகரம், ஆதம்பாக்கம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளது.

    தண்டவாளம் அமைக்கும் பணிகள் நூறு சதவீதம் நிறைவடைந்ததால் ரெயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) அல்லது ஜனவரிக்குள் இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இணைப்பின் மூலம் பரங்கிமலை ரெயில் நிலையம் பெரிய சந்திப்பாக மாறி இருக்கிறது.

    பறக்கும் ரெயில், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் ஆகிய 3 ரெயில் சேவைகளும் சந்திக்கும் மிகப்பெரிய ரெயில்வே முனையமாக பரங்கிமலை மாறி உள்ளது.

    வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு வரும் புறநகர் பறக்கும் ரெயில் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-ம் தளத்துக்கு வரும். இதில் ஆதம்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் பாதைக்கு மேலே மேம்பாலத்தின் மீது மெட்ரோ ரெயில் செல்லும். பரங்கிமலை வழியாக சோழிங்கநல்லூர் செல்லும் மெட்ரோ ரெயில்கள் இந்த வழித்தடத்தில் மடிப்பாக்கம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம் வழியாக செல்லும்.

    வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரெயில் வந்து செல்லும் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தின் 2-ம் தளத்தில் பயணச்சீட்டு வழங்குமிடம், அலுவலக அறைகள், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளன.

    மெட்ரோ ரெயில் நிலையத்தின் தரை தளத்தில் இருந்து பறக்கும் ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், பரங்கிமலை மின்சார ரெயில் நிலையம் ஆகியவற்றுக்கு பயணிகள் எளிதாக செல்லும் வகையில் படிக்கட்டுகள், நகரும் படிக்கட்டுகள், லிப்ட் வசதிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து ரெயில் சேவைகளும் பரங்கிமலையில் செயல்பட தொடங்கியதும் பரங்கிமலையின் முகமே மாறி இருக்கும்.

    வேளச்சேரி- பரங்கிமலை வழித்தடத்தில் ஒரு ரெயில் என்ஜீன் மற்றும் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு தண்டவாளம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதை அறிய சோதனை நடத்தப்பட்டது.

    வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை ஒவ்வொரு நிலையத்திலும் நிறுத்தி ரெயிலின் இயக்கம், பிரேக் சிஸ்டம், மின் இணைப்புகள், சிக்னல் இணைப்புகள், ஆகியவை பரிசோதிக்கப்பட்டது.

    இந்த சோதனை ஓட்டம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து பயணிகள் ரெயில்களை வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சோதனைக்கு பின்னர் ரெயில்களை இயக்க ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளிப்பார். அதன்பிறகு ரெயில்கள் வேளச்சேரி-பரங்கிமலை இடையே இயக்கப்பட இருக்கிறது.



    இதன் மூலம் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு பகுதி மக்களின் கனவு நிறைவேற இருக்கிறது. சென்னை புறநகர் பகுதியான பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் சென்னையின் பிறபகுதிகளுக்கு இனி விரைவாக பயணிக்க முடியும்.

    சென்னை ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர்., அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி போன்ற சென்னையின் மையப்பகுதிக்கு செல்வது புறநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பயணம் இனி எளிதாகி விடும்.

    குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த பறக்கும் ரெயில் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் போக்குவரதது நெரிசலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

    பரங்கிமலை ரெயில் நிலையம் சமீபத்தில் தான் நவீன மயமாக்கப்பட்டு புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. தற்போது பறக்கும் ரெயில் நிலையமும் செயல்பட இருப்பதால் பரங்கிமலையின் முகமே மாறிவிடும். தாம்பரம் போல மிகமிக, முக்கியமான ரெயில் நிலையமாக உருவெடுக்கும். இங்கிருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அது மட்டுமின்றி இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.

    பரங்கிமலையில் புறநகர் மின்சார ரெயில் சேவை, மெட்ரோ ரெயில் சேவை, பறக்கும் ரெயில் சேவை, மாநகர பஸ் சேவைகள் ஒரே இடத்தில் கிடைப்பதாலும் இங்கிருந்து வேளச்சேரி போன்ற பகுதிகளுக்கு மிகவும் எளிதாக செல்லலாம் என்பதாலும் எப்போது பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.  

    • விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரையில் பெறப்பட்டது.
    • தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    சென்னை:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

    இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகள் இதில் அடங்கும்.

    தமிழகம் முழுவதும் 45 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை வாலிபர்கள் பலர் ஆர்வமுடன் எழுதினார்கள். இதற்கான கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட்டதாரி இளைஞர்களும் என்ஜினியர்களும் தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர். தமிழை ஒரு மொழி பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னையில் 10 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. 9, 915 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் 9000 மேற்பட்டோர் இந்த தேர்வு எழுதினார்கள். இதையொட்டி தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரையில் பெறப்பட்டது.

    எழுத்து தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கே உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட அடுத்தடுத்த தேர்வுகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் 2 ஆயிரத்து 248 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை குற்றப்பிரிவு காவல் துறை தலைவர் செல்விகுமாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹரிக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கங்காதரன், தமிழரசு ஆகியோர் சென்று கண்காணித்தனர்.

    ×