என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தற்போது தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
    • தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையை சேர்ந்த 'யூ டியூபர்' இர்பான்-ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை இர்பான் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

    இது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என டாக்டர்கள் கண்டனம் தெரிவித்தனர். கடந்த ஆண்டு, தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை துபாயில் பரிசோதித்து அது தொடர்பான வீடியோவை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தற்போது தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    இதுகுறித்து மருத்துவ ஊரகப் பணிகள் நலத்துறை இயக்குனர் டாக்டர் ராஜ மூர்த்தி கூறியதாவது:-

    குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டும் வீடியோவை, இர்பான் வெளியிட்டு உள்ள நிலையில் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். பிரசவத்தின் போது வீடியோ எடுக்கவும், தொப்புள் கொடியை வெட்டவும், பணியில் இருந்த டாக்டர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்படும்.

    பிரசவத்தை டாக்டர் நிவேதிதா பார்த்ததாக தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்படும். அதே போல் பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வது குறித்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதிகாரிகள் அந்த மருத்துவமனையில் ஆய்வு நடத்தி உள்ளனர். சர்ச்சைக்கு காரணமான அந்த வீடியோவை இர்பானே நீக்கிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே, தனியார் மருத்துவமனை டாக்டரிடம் விரைவில் விசாரணை நடந்த சுகாதாரத் துறை முடிவு செய்து உள்ளது.

    இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அமைச்சர் மேலும் கூறியதாவது:- தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில் இர்பான் மருத்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார். சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

    • காவல் துறையினர் இரவு பகல் பாராமல் 24 மணிநேரம் பணியாற்றுகிறார்கள்.
    • காவலர்களை அவமதிக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    திருவள்ளூரில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

    வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரை ஆபாசமாக திட்டி சண்டை போட்ட ஜோடி பிடிபட்டுள்ளனர். தற்போது போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

    காவல் துறையில் ஆளும் கட்சி அதிகம் தலையிடுவது இல்லை. ஆனால் தற்போது காவல் துறையில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகமாக உள்ளது.

    இதுபோன்ற நிலையில் சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மத்தியில், காவல் துறையை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.

    சம்பவம் நடந்த உடனே வீடியோ வெளி வந்துவிட்டது. காவல் துறையின் செயல்பாடுகளை மோசமான வார்த்தைகளால் பேசி உள்ளார். காவல் துறையினர் இரவு பகல் பாராமல் 24 மணிநேரம் பணியாற்றுகிறார்கள். தகாத வார்த்தைகளால் காவலரை பேசி உள்ளார்.

    இத்தகைய சூழ்நிலையில் அவரை ஏன் உடனே கைது செய்யவில்லை. உதயநிதி பெயரை பயன்படுத்தியதால் நடவடிக்கை எடுக்கவில்லை.

    போலீசாரிடம் தான் தகராறு செய்துள்ளார். அவரை உடனே கைது செய்து இருக்க வேண்டும். அவரை ஓட விட்டுவிட்டு பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து பிடித்துள்ளார்கள்.

    இப்போது எல்லாரும் எனக்கு எம்எல்ஏ தெரியும், எம்பி தெரியும், உதயநிதி தெரியும், கனிமொழி தெரியும் என்று சொல்கிறார்கள்.

    ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் உடனடியாக களத்தில் இறங்கி காவலர்களை அவமதிக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    ஒரு நாள் கழித்து இவருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து அதன்பிறகு பொறுமையாக சட்டத்தின் முன் நிறுத்துவதும், பல பேர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதும் காவல்துறைக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் பிரச்சனையே உருவாக்கும் என்று கூறினார்.

    • நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, 14 மாதங்களாக ஊதியத்தை வழங்காமல் இருப்பது இயற்கை நியதிக்கு முரணான செயல்.
    • நிலுவையில் உள்ள வழக்கினை விரைந்து முடித்து நீதிமன்ற உத்தரவிற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் மன உளைச்சலைப் போக்கும் பணியில் ஈடுபடும் யோகா ஆசிரியர்களுக்கே மன உளைச்சலை ஏற்படுத்தும் அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிதியைப் பெற்று, அதனை கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, 14 மாதங்களாக ஊதியத்தை வழங்காமல் இருப்பது இயற்கை நியதிக்கு முரணான செயல். தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, யோகா ஆசிரியர்களுக்கான 14 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்கினை விரைந்து முடித்து நீதிமன்ற உத்தரவிற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ காட்சியை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
    • மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சமூக வலைத்தளங்களில் நேற்று வீடியோ காட்சி ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மெரினா இணைப்பு சாலையில் அந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்தது. அந்த வீடியோவில், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவரிடம் காரில் வந்த ஆண்-பெண் ஜோடி தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டி சண்டை போடும் காட்சி இடம் பெற்றிருந்தது.

    இந்த வீடியோ காட்சியை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். விசாரணையில் போலீஸ்காரரின் பெயர் சிலம்பரசன் என்றும், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வேலைபார்ப்பவர் என்றும், அவர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது குறிப்பிட்ட காரில் வந்த அந்த ஜோடியை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரித்து உள்ளார்.

    அப்போதுதான், அந்த மோதல் காட்சி நடந்துள்ளது. அதை வீடியோ எடுத்த சக போலீசார் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸ்காரர் சிலம்பரசன் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    போலீஸ் விசாரணையில், சிலம்பரசனிடம் சண்டைபோட்டுவிட்டு தப்பி ஓடிய ஆண்-பெண் ஜோடி யார் என்பது கண்டறியப்பட்டது. அவர்கள் பெயர் சந்திரமோகன் - தனலட்சுமி என்று தெரியவந்தது. சந்திரமோகன் வேளச்சேரியை சேர்ந்தவர். கார் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தனலட்சுமி மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர். போலீஸ் விசாரணையில், சந்திரமோகனின் தோழியாக தனலட்சுமி பழகி வந்துள்ளார். இருவரும் காரில் ஜோடியாக வலம் வந்திருக்கிறார்கள்.

    போலீஸ்காரர் விசாரித்ததால் கோபப்பட்டு, ஆபாசமாக திட்டி சண்டை போட்டு உள்ளனர். அவர்கள் இருவரும் துரைப்பாக்கம் பகுதியில் லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்தனர்.

    அப்போது, போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து அழைத்து வந்தனர். மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 5 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையில் சந்திரமோகன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.

    இந்நிலையில் சந்திரமோகன் குடித்துவிட்டு மெரினா சாலையில் இதற்கு முன்பும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 அடி நீள பிளாஸ்டிக் குழாயை பிடுங்கி, அந்த குழாய் 2 துண்டாக உடையும் வரை அவரை தாக்கி சட்டை கிழித்தார்.
    • சம்பவத்தை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் நோ பார்க்கிங் வழியாக கார் ஒன்று செல்ல முயன்றது. அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஏழுமலை (வயது 45) என்பவர் காரை ஐந்துரத வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கூறினார். அதை மீறி காரில் வந்தவர்கள் காரை நோ பார்க்கிங்கில் நிறுத்த முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் ஏழுமலை அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது.

    உடனே காரில் இருந்து இறங்கிய டிப்டாப் உடை அணிந்திருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் "ஏய் யாரை பார்த்து திட்டுகிறாய்" என ஆவேசமடைந்து, நடுரோட்டிலேயே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களுடன் வந்த ஆண்களும் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கினர். பதிலுக்கு ஏழுமலை தாக்க முயற்சிக்கவே, 4 பேரும் அவரை கீழே தள்ளி அவரை நைய புடைத்தனர். அதில் ஒரு பெண் காவலாளி ஏழுமலை வைத்திருந்த 2 அடி நீள பிளாஸ்டிக் குழாயை பிடுங்கி, அந்த குழாய் 2 துண்டாக உடையும் வரை அவரை தாக்கி சட்டை கிழித்தார்.

    இந்த கைகலப்பு சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பானது. பிறகு அவ்வழியாக சென்றவர்கள் 4 பேரையும் சமாதானம் செய்து காவலாளி ஏழுமலையை அவர்களின் பிடியில் இருந்து காப்பாற்றி வெளியேற்றினர். பின்னர் 2 பெண்கள் உள்ளிட்ட 4 சுற்றுலா பயணிகளும் காரில் சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் முகத்தில் காயமடைந்த ஏழுமலை ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இச்சம்பவத்தை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. காவலாளி ஏழுமலைக்கு அங்குள்ள வியாபாரிகள் நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊதியம் என்ற தினக்கூலி அடிப்படையில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அவரை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐந்துரதம் வணிக வளாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

    இந்த நிலையில், காவலாளியை தாக்கியது தொடர்பாக முடிச்சூரை சேர்ந்த பிரபு இன்பதாஸ், சண்முகப்பிரியா, கீர்த்தனா உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.


    • தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
    • ஒகேனக்கல்லுக்கு வரும் விடுமுறை நாட்களில் கூட சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலாப் பணிகளுக்கு தொடர்ந்து 10-வது நாளாக குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் தடை தொடர்கிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 18000 கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகள் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 10-வது நாளாக நீடித்து வருகிறது.

    தொடர்ந்து காவிரி ஆற்றிலும், அருவிகளில் குளிக்க மாவட்ட தடை விதித்து இருப்பதால், ஒகேனக்கல்லுக்கு வரும் விடுமுறை நாட்களில் கூட சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    மேலும், சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் மீன் விற்பனை, கடைவீதியில் பொருட்கள் விற்பனை, சமையல் தொழிலாளர்கள், மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் என அனைவரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுச்சேரி மாநில நிர்வாகி என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர்.
    • புதுச்சேரி சரவணன் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

    தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தவெக நிர்வாகி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கட்சி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி சரவணன் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

    அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயலை எதிர்கொள்ள ஒடிசா அரசு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் புயல் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    இது புயலாக மாறுவதால் இதற்கு 'டானா' புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டானா புயல் வடக்கு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று ஒடிசா மாநிலம் பூரி-மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு இடையே நாளை நள்ளிரவு தீவிர புயலாகி மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது 25 செ.மீ.க்கு மேல் மழை பெய்வதுடன் பலத்த புயல் காற்றும் வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்த புயலை எதிர்கொள்ள ஒடிசா அரசு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பாலசோர், பத்ரத், கோஜ்பூர், சேந்திரபாத், ஜகத்சிங்பூர், பூரி, கட்டாக், கோர்தா கஞ்சம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு 24-ந் தேதி சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் புயல் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

    டானா புயல் வியாழன் அன்று தீவிர புயலாக மாறுவதால் மக்கள் பீதி அடையாமல் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்குவதற்கு தேவையான முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக ஒடிசா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.

    மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    • வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695-க்கும், ஒரு சவரன் ரூ.53 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. அதே மாதம் 24-ந் தேதி ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

    ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையின் புதிய உச்சமாக கடந்த 19-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்து 240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,300-க்கும் சவரனுக்கு ரூ.16 குறைந்து ஒரு சவரன் ரூ.58,400-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 110-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    21-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400

    20-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240

    19-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240

    18-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,920

    17-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    21-10-2024- ஒரு கிராம் ரூ. 109

    20-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    19-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    18-10-2024- ஒரு கிராம் ரூ. 105

    17-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    • அறுவை சிகிச்சையின்போது குழந்தையின் தொப்புள் கொடியை டாக்டர்கள் அல்லது பயிற்சி பெற்ற நர்சுகள்தான் வெட்ட வேண்டும்.
    • போலி மருத்துவத்தை ஊக்குவிப்பதாக கூறி மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவர் நிவேதிதா மீது புகார் அளித்துள்ளனர்.

    பிரபல யூடியூபர் இர்பான் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் கருவில் உள்ள பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் தனது யூடியூப் சேனலில் இருந்த பாலினம் குறித்த வீடியோவை நீக்கினார். பாலினம் குறித்த வீடியோ வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டு கடிதம் வழங்கினார். இதையடுத்து அவர் மீதான நடவடிக்கையை மருத்துவத்துறை நிர்வாகம் நிறுத்தி வைத்தது.

    சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை அறுவை சிகிச்சையின்போது கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார்.

    இந்த வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. ஆபரேசன் தியேட்டருக்குள் கேமராக்களுடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு ஆகும். இதில், எந்தவித மருத்துவ பயிற்சியும் இல்லாமல் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியது என டாக்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் விஸ்வரூபமான நிலையில், யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், பிரசவம் நடந்த தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இர்பான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மருத்துவம் மற்றும் கிராமப்புற சேவை இயக்குனர் டாக்டர் ராஜமூர்த்தி கூறுகையில்,

    அறுவை சிகிச்சையின்போது குழந்தையின் தொப்புள் கொடியை டாக்டர்கள் அல்லது பயிற்சி பெற்ற நர்சுகள்தான் வெட்ட வேண்டும். யூடியூபர் இர்பான் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியது தவறு. வெட்டும்போது அவர் போதுமான பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றவில்லை. இதனால் குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடமும், யூடியூபர் இர்பானிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். விளக்கம் சரியாக இல்லை என்றால் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என்று கூறி இருந்தார்.

    இதற்கிடையே, யூடியூபர் இர்பான் தனது யூடியூப் சேனலில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கி உள்ளார்.

    இந்நிலையில் யூடியூபர் இர்பான் மீது சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை மீதும், இர்பான் மீதும் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது ஏற்கனவே மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    யூடியூபர் இர்பான் சர்ச்சை வீடியோ விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவத்தை ஊக்குவிப்பதாக கூறி மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவர் நிவேதிதா மீது புகார் அளித்துள்ளனர்.

    இதையடுத்து மருத்துவரை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

    வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சை அரங்கில் பணியில் இருந்தவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றது யார்? யார்? எத்தனை சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்பட்டது போன்ற விபரங்களை கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • பெங்களூருவில் இருந்து வரும் 30-ந்தேதி, நவம்பர் 3-ந்தேதி காலை புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் மதியம் எழும்பூர் வந்தடையும்.
    • சென்னை எழும்பூரில் இருந்து வரும் 30-ந்தேதி, நவம்பர் 3-ந்தேதி மாலை புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் இரவு பெங்களூரு சென்றடையும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூருவில் இருந்து வரும் 30-ந்தேதி மற்றும் நவம்பர் 3-ந்தேதி காலை 8.05 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06209), அதேநாள் மதியம் 2.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 30-ந்தேதி மற்றும் நவம்பர் 3-ந்தேதி மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06210), அதேநாள் இரவு 10.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புயல் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு பெரிய மழை ஆபத்து இல்லை.
    • தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தற்போது, உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, 23-ந்தேதி, 'டானா' புயலாக உருவெடுக்கும். அதன்பிறகு, இந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 24-ந்தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதியை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு பெரிய மழை ஆபத்து இல்லை.

    இந்த சூழலில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஈரோட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் ஈரோட்டில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஈரோட்டில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ராஜகோபால் கன்கரா அறிவித்துள்ளார்.

    நாமக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×