என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விசைப்படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
- 2 படகுகளை கண்டுபிடித்து அதில் இருந்த வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மரத்தில் செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் அரசு அனுமதி அளித்த குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்-1983 விதிகளை பின்பற்றாமல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின்கள் பொருத்தப்பட்ட 4 மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடிப்பதை கண்டறிந்த ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி, சம்பந்தப்பட்ட படகின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி மீன் பிடி தொழிலில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
அதனை மீறி அந்த 4 விசைப்படகுகளில் 2 படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையில் அதிகாரிகள் கடலில் சோதனை நடத்தினர். அப்போது அந்த 2 படகுகளை கண்டுபிடித்து அதில் இருந்த வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் தொழில் முடக்கத்துடன் வழக்குப்பதிவு செய்து படகை பறிமுதல் செய்து ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தினர்.
ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ளதால் வழக்கு முடியும் வரை இந்த படகை அதன் உரிமையாளர் எடுக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரம் மீன்பிடி துறை
முகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின்கள் பயன்படுத்தும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி எச்சரித்து உள்ளார்.
- அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாகும்.
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் இல்ல திருமண விழா இன்று அரியலூரில் நடந்தது.
இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-
அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாகும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கூட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை அ.தி.மு.க. பெற்றது.
அதற்குக் காரணமான அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரனை மனதார பாராட்டுகிறேன். அவரது இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அரியலூர் மக்களுக்கு சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் மழையின் காரணமாக மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டது. அப்போது விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அ.தி.மு.க. அரசு ரூ.156 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கியது. அடுத்த ஆண்டு மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்ட போது தமிழகம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்து ரூ. 45 கோடியில் வாங்கப்பட்டு எங்கெல்லாம் பயிர்கள் பாதிக்கப்பட்டதோ அங்கெல்லாம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. அதில் அரியலூருக்கும் ஒரு கல்லூரி வழங்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கல்வித்துறையில் புரட்சி நடந்தது.
வேளாண்மை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் கால்நடை ஆராய்ச்சி மையம் போன்றவைகள் அமைக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் தொகுதியில் ஒரு அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது.
மேலும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பல்வேறு எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது.
ஆனால் தற்போது பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என பொய்யான பிரசாரம் செய்து வருகிறார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி அமைய நீங்கள் எலலாம் நல்ல ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொழிலாளர் நலவாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
- 2,106 கோடி ரூபாய் வரையிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
சென்னை:
தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகக் கடந்த மூன்றரை ஆண்டுகளில், 20 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர் வாரியங்களில் பதிவுப்பெற்றுள்ள 25,35,546 உறுப்பினர்களுக்கு 2,106 கோடி ரூபாய் வரையிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வாரிய உறுப்பினர்களின் ஓய்வூதியம் 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்காகச் சிரத்தையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசு அவர்களின் உரிமைகளைக் காப்பதிலும், அவர்களுக்கான நலத்திட்டங்களை வகுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கு தோழனாய் பாதுகாவலனாய் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜாமினில் வெளியே வந்தவர்களில் யாரேனும் பல்லடம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேமலைகவுண்டன் பாளையத்தில் தோட்ட வீட்டில் இருந்த தெய்வ சிகாமணி, அலமேலு, செந்தில்குமார் ஆகிய 3 பேரை நள்ளிரவில் மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்தது. கொலையாளிகளை கண்டுபிடிக்க 14-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதே சம்பவம் போல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அரச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக தோட்ட வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதிகளை கொலை செய்து தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் நடந்தது. இந்த கொலை, கொள்ளை தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு 14 பேரை ஈரோடு மாவட்ட போலீசார் சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்த சிலர் ஜாமின் பெற்று வெளியே வந்துள்ளனர். ஜாமினில் வெளியே வந்தவர்களில் யாரேனும் பல்லடம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பல்லடம் கொலை சம்பவமும், சென்னிமலை கொலை சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூரை ஒட்டிய ஈரோடு மாவட்டத்தில் தோட்ட வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்ப தியரை தாக்கி இதுபோல் கொலை நடக்க கூடும் என போலீசார் சந்தேகிப்பதால் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர் போன்ற பகுதிகளில் இதுபோன்று தனியாக ஏராளமான தோட்ட வீடுகள் இருக்கின்றன. இந்த வீடுகளில் வயதான தம்பதிகள் வசித்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தனியாகவும் சாலையை ஒட்டி பகுதியில் 570 தோட்ட வீடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் பெருந்துறை பகுதியில் மட்டும் 270 வீடு கள் உள்ளன. இந்த 570 வீடுகளுக்கு முன்னுரிமை அளித்து இரவு நேரங்களில் அந்தந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் நேரடியாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு முதல் காலை வரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதைப்போல் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சந்தேகப்படும்படி நபர்கள் யாராவது செல்கிறார்களா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சிங்காரப்பேட்டை பகுதியில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் பெருமாள் கோவில் மலை அமைந்துள்ளது.
- சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிங்காரப்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 50 செ.மீ. அளவில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி நிரம்பி தண்ணீர் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும், 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தொடர் கனமழை காரணமாக ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பின. மேலும், விவசாய நிலங்களில் உள்ள பயிர்களும் மூழ்கின.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் பெருமாள் கோவில் மலை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென்று மலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
இந்த மண் சரிவு அதிக மழை பெய்த காரணத்தினால் ஏற்பட்டதா? அல்லது மண்ணின் உறுதித் தன்மை குறைந்ததால் ஏற்பட்டதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிங்காரப்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கர்நாடகாவில் பெய்யும் மழை காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- நீர் திறப்பு அதிகரிப்பால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகிறது தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து வங்கக்கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி அணை கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீர், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் நந்தி மலை, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் போது கே.ஆர்.பி. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் கர்நாடகாவில் பெய்யும் மழை காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து வினாடிக்கு 1644 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாட்டுப்பாடும் போட்டியில் கலந்து கொண்டு தனது மெல்லிசை குரலால் அனைவரையும் கவர்ந்தார்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் தர்ஷினி மற்றும் பள்ளி மாணவர்களை இறக்கி விட்டார்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் அம்மணபாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர்-அங்காளம்மாள் தம்பதியரின் மகள் தர்ஷினி.
இவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாட்டுப்பாடும் போட்டியில் கலந்து கொண்டு தனது மெல்லிசை குரலால் அனைவரையும் கவர்ந்தார். நிகழ்ச்சியில் பேசிய மாணவி தர்ஷினி தான் படிக்கும் பள்ளிக்கு சென்று வர அம்மணபாக்கம்-அமந்தமங்கலம் வரை பஸ் போக்குவரத்து வசதி இல்லை என்றும், அரசு போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இது பற்றிய தகவலறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அம்மணபாக்கம்-அனந்தமங்கலம் பகுதியில் பஸ் போக்குவரத்து சேவையை வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் அம்மணபாக்கம்-அனந்தமங்கலம் இடையே இலவச பஸ் சேவையை 8-ம் வகுப்பு மாணவி தர்ஷினி முன்னிறுத்தி தொடங்கி வைத்தார்.
அந்த பஸ்சில் அமைச்சர் சிவசங்கர், மாணவி தர்ஷினியுடன் சென்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் தர்ஷினி மற்றும் பள்ளி மாணவர்களை இறக்கி விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
- தற்போது அணையில் 86.20 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
அதே நேரம் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்ததால் அணையில் இருந்து குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.32 அடியாக உயர்ந்து காணப்பட்டது. மேலும் அணைக்கு நேற்று வினாடிக்கு 25 ஆயிரத்து 98 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 14,404 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 86.20 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
- இன்று மாலை விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது.
- 7 டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்க ஏற்பாடு.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவில்.
இந்த கோவிலில் கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து வந்தன.
தற்போது திருப்பணிகள் நிறைவு பெற்று வர்ணங்கள் தீட்டப்பட்டு கோவில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. இதைத்தொடர்ந்து வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான விழா இன்று மாலை தொடங்குகிறது.
இன்று மாலை விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து விழா நாட்களில் யாக சாலை பூஜைகள், நவக்கிரக ஹோமம், திருமுறை பாராயணம், பூர்ணாகுதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 12-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் நடக்கிறது. அன்று 9.15 மணிக்கு மாசாணியம்மன் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 9.30 மணிக்கு மாசாணியம்மன் மூல ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மகாதீபாராதனை நடக்கிறது.

கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலில் யாக சாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றி மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
12-ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் முடிந்ததும் 7 டிரோன்கள் மூலம் பக்தர்கள் புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.
பக்தர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள், 3 ஆம்புலன்சுகள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
மேலும் பக்தர்கள் கோவிலுக்கு வர வசதியாக இன்று முதலே ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் கோவை, பொள்ளாச்சி, உடுமலை உளளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.
பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் அதிக அளவில் மலேசியா உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
- மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு மற்றும் சில நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரால் மலேசியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
சேலம்:
நமது அன்றாட சமையலில் சமையல் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வெறு வகையான எண்ணெய்களை நம்முடைய அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. சமையலுக்கு சரியான எண்ணெய் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் சமையல் எண்ணெய் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவுகளில் எண்ணெய் இல்லாத உணவுகளை எடுத்து கொண்டால் அதிக சோர்வு மற்றும் உடல் நிலை சரியில்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எண்ணெயில் இருந்து கிடைக்கும் கொழுப்பு உடலுக்கு மிகவும் முக்கியம், அவை மூளை நரம்பு மண்டலங்களை சிறப்பாக இயங்க உதவி புரியும். மார்க்கெட்டுகளில் பல்வேறு விதமான சமையல் எண்ணெய்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டாலும் தரமான எண்ணெய்களை நாம், தேடி தேர்வு செய்ய வேண்டும்.
இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் அதிக அளவில் மலேசியா உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய எண்ணெயின் விலை தற்போது அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்தியதால் தீபாவளி நேரத்தில் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்ந்தது.
பின்னர் தீபாவளி பண்டிகை முடிந்ததும் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக லிட்டருக்கு மேலும் 20 ரூபாய் உயர்ந்தது. இதனால் பல்வேறு சமையல் எண்ணெய்கள் ஒரு லிட்டர் தற்போது 150-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களில் மட்டும் சமையல் எண்ணெய் ஒரு லிட்டருக்கு 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விலை உயர்வுக்கு காரணம் குறித்து சேலம் மாவட்ட எண்ணெய் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில் , மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு மற்றும் சில நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரால் மலேசியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மலேசியாவில் இருந்து அதிக அளவில் சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் இந்தியா இறக்குமதி செய்வதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மேலும் சில மாதங்கள் நீடிக்கும். தற்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை இவ்வாறு அவர்கள் கூறினர் .
- பீரோவில் இருந்த கத்தி, துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை காணவில்லை.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூக ரெங்கபுரத்தை சேர்ந்தவர் நம்பி. இவரது மகன் அழகு(வயது 42). இவர் அமிர்தசரசில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் போட் என்ற பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
அழகு கடந்த 2010-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்குவதற்கான உரிமம் பெற்றுள்ளார்.
அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் பெருமாள்சாமி என்பவரிடம் 32-பிஸ்டல் வகையை சார்ந்த துப்பாக்கியையும், அதற்குரிய 30 தோட்டாக்களையும் அவர் வாங்கி உள்ளார். இதில் அவர் சோதனை செய்வதற்காக 5 தோட்டாக்களை பயன்படுத்தி உள்ளார். எஞ்சிய 25 தோட்டாக்களையும் அவர் தன் வசம் வைத்திருந்தார்.
அந்த துப்பாக்கியை அவர் பணியாற்றும் இடங்களில் வைத்திருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9-ந்தேதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு அழகு வந்தார். பின்னர் கடந்த மாதம் 9-ந்தேதி விடுமுறை முடிந்து பணிக்காக மீண்டும் அமிர்தசரஸ் புறப்பட்டுள்ளார்.
அப்போது சமூகரெங்கபுரத்தில் குடியிருந்து வரும் அவரது பெற்றோரிடம் இது முக்கியமான பொருள் என கூறி ஒரு பெட்டியில் தன்னுடைய துப்பாக்கி, 25 தோட்டாக்கள் மற்றும் ஒரு கத்தியை உறையில் வைத்து ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அழகுவின் பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அந்த வழியாக சென்றபோது அழகுவின் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அழகுவின் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது கதவுகளை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கத்தி, துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை காணவில்லை.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் அவற்றை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
இதுபற்றி அழகுக்கு அவரது பெற்றோர் தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக அமிர்தசரசில் இருந்து புறப்பட்டு இன்று காலை ராதாபுரம் வந்து சேர்ந்தார். அவர் ராதாபுரம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி, தோட்டாக்களை திருடிச்சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணிக்குள் நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நேற்று அதிகாலையில் அதே பகுதியில் 95 வயது மூதாட்டியிடம் கம்மலை பறித்துச்சென்ற அதே கும்பல் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள செ.கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்ராஜ் (வயது35) விவசாயி.
இவரது உறவினர் வி.பாஞ்சாலத்தை சேர்ந்த தீனதயாளன் (21) சென்னை வேளச்சேரியில் தனியார் பல்கலைக் கழகத்தில் முதுகலை படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார் .
நேற்று மாலை 5 மணிக்கு சுரேஷ் ராஜ் தனது வயலில் மாமரத்தில் கட்டியிருந்த பசுமாட்டை அவிழ்க்க முயன்ற போது எதிர்பாரதவிதமாக அருகிலிருந்த மின்கம்பத்தின் ஒயரை பிடித்த போது மின்சாரம் தாக்கி கீழே சாய்ந்தார்.
அப்போது உடனிருந்த தீனதயாளன் அவரை துாக்க முயன்ற போது அவரையும் மின்சாரம் தாக்கியது.
இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். அருகிலிருந்த பக்கத்து நிலத்துக்காரர் 2 பேரையும் சிகிச்சைக்காக காரில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் .
இறந்து போன சுரேஷ்ராஜூக்கு வேதவல்லி என்ற மனைவியும், கிருத்திகைராஜ் (8), தருண்ராஜ் (7) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.






