என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

1 லிட்டர் 150 ரூபாய்க்கு விற்பனை- சமையல் எண்ணெய் விலை 2 மாதங்களில் 40 ரூபாய் உயர்வு
- இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் அதிக அளவில் மலேசியா உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
- மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு மற்றும் சில நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரால் மலேசியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
சேலம்:
நமது அன்றாட சமையலில் சமையல் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வெறு வகையான எண்ணெய்களை நம்முடைய அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. சமையலுக்கு சரியான எண்ணெய் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் சமையல் எண்ணெய் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவுகளில் எண்ணெய் இல்லாத உணவுகளை எடுத்து கொண்டால் அதிக சோர்வு மற்றும் உடல் நிலை சரியில்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எண்ணெயில் இருந்து கிடைக்கும் கொழுப்பு உடலுக்கு மிகவும் முக்கியம், அவை மூளை நரம்பு மண்டலங்களை சிறப்பாக இயங்க உதவி புரியும். மார்க்கெட்டுகளில் பல்வேறு விதமான சமையல் எண்ணெய்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டாலும் தரமான எண்ணெய்களை நாம், தேடி தேர்வு செய்ய வேண்டும்.
இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் அதிக அளவில் மலேசியா உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய எண்ணெயின் விலை தற்போது அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்தியதால் தீபாவளி நேரத்தில் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்ந்தது.
பின்னர் தீபாவளி பண்டிகை முடிந்ததும் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக லிட்டருக்கு மேலும் 20 ரூபாய் உயர்ந்தது. இதனால் பல்வேறு சமையல் எண்ணெய்கள் ஒரு லிட்டர் தற்போது 150-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களில் மட்டும் சமையல் எண்ணெய் ஒரு லிட்டருக்கு 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விலை உயர்வுக்கு காரணம் குறித்து சேலம் மாவட்ட எண்ணெய் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில் , மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு மற்றும் சில நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரால் மலேசியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மலேசியாவில் இருந்து அதிக அளவில் சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் இந்தியா இறக்குமதி செய்வதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மேலும் சில மாதங்கள் நீடிக்கும். தற்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை இவ்வாறு அவர்கள் கூறினர் .






