என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அரசு பஸ் கோயம்பேடு செல்வதாக இருந்தால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் கூடுதலாக 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
    • பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் பஸ்சை இயக்காத டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஏ.சி. மற்றும் ஏ.சி. வசதி அல்லாத பஸ்கள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்கள் என சுமார் 1,200 பஸ்களை இயக்கி வருகிறது.

    அரசு விரைவு பஸ்களின் நேர விரயம் காரணமாக அரசு பஸ்களில் பயணிப்பதைவிட ஆம்னி பஸ்களில் பயணிக்கவே பொதுமக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

    உதாரணமாக நாகர்கோவிலில் இருந்து கோயம்பேட்டிற்கு ஆம்னி பஸ்கள் 11 மணி நேரத்தில் இயக்கப்படுகிறது என்றால், அரசு விரைவு பஸ்கள் நாகர்கோவிலில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு 12 மணி நேரத்தில் இயக்கப்படுகிறது. இந்த அரசு பஸ் கோயம்பேடு செல்வதாக இருந்தால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் கூடுதலாக 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

    அரசு விரைவு பஸ்களை இயக்கும் டிரைவர்களே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, அந்த பஸ் டிரைவர்கள் தங்கள் கிளை மேலாளர்கள் டீசல் சிக்கனத்திற்காக பஸ்சை வேகமாக ஓட்டக்கூடாது என்று தெரிவித்து இருப்பதாக பயணிகளிடம் கூறி தங்கள் தவறுகளை சமாளிக்கின்றனர்.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    அரசு விரைவு பஸ்களை டீசல் மிச்சம் பிடிப்பதற்காக குறைவான வேகத்தில் ஓட்டுமாறு ஒருபோதும் அறிவுறுத்தவில்லை. அதே நேரத்தில் வேகமாக ஓட்டி விபத்துக்குள்ளாக்காமல் பாதுகாப்பான முறையில் இயக்கி உரிய காலத்தில் குறிப்பிட்ட இலக்கை வந்தடையும் வகையில் பஸ்களை இயக்க வேண்டும் என்றே டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதுதவிர, அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தங்கள் பயண அனுபவம் குறித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கான இணைப்பு (லிங்க்) ஒன்றும் அனுப்பப்படும். அதில், பஸ்சின் காலதாமதம், சுத்தமின்மை, டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் நடைமுறைகள் குறித்து இந்த லிங்க் மூலம் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் பஸ்சை இயக்காத டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 26 அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
    • வருமான வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு பூந்துறை ரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகர் பகுதியில் என்.ஆர். மற்றும் ஆர்.சி.சி.எல். கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமானது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அரசு கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு குடிநீர் கட்டுமான பணிகள், சாலை பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள், அரசு கட்டிடங்கள் என அனைத்து வகை பணிகளையும் செய்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் 2 கார்களில் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள என்.ஆர். கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு வந்தனர். கார்களை விட்டு இறங்கிய அதிகாரிகள் நேராக அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு பணியில் இருந்தவர்கள் வெளியில் எந்த தொடர்பும் ஏற்படுத்த முடியாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் செய்தனர். பின்னர் அங்குள்ள ஆவணங்கள், கணினி பதிவுகளை சோதனை செய்தனர்.

    இதுபோல் இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக சேலம், திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் 26 அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. வருமான வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து, இன்றும் 2-வதுநாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    என்.ஆர். கட்டுமான நிறுவனம் மற்றும் ஆர்.சி.சி.எல். நிறுவனத்தின் உரிமையாளர் என்.ராமலிங்கம் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. தன் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
    • தமிழ் மண்ணின் வளத்தை காக்க மட்டுமே நாம் தமிழர் கட்சி இருக்கும்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டப்பேரவையில் வெளியேறிய கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் ஒலிக்கப்படும் என்பதும், இறுதியாகத்தான் தேசியகீதம் ஒலிக்கப்படவேண்டும் என்பதும் தமிழ்நாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.

    அதை மாற்றியமைக்க கவர்னர் முயற்சி செய்வது தமிழ் இனத்தை அவமதிப்பதாக கருதப்படுகிறது. இதை தி.மு.க. தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தபோது, அனுமதியும், போராட இடமும் தரவில்லை. தடையை மீறியதால் எங்களை கைது செய்தனர். ஆனால், தி.மு.க. தன் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதுதான் தமிழ்நாட்டில் தி.மு.க. கடைப்பிடிக்கக்கூடிய ஜனநாயகம். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் அரசு பணத்தை வைத்து மூடிவிட்டது.

    டங்ஸ்டன் சுரங்கத்தை நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை எந்த கொம்பன் வந்தாலும் அந்த இடத்தில் ஒரு கல்லைக்கூட புரட்டிப்போட முடியாது. தமிழ் மண்ணின் வளத்தை காக்க மட்டுமே நாம் தமிழர் கட்சி இருக்கும். நிலத்தின் வளத்தை கெடுக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மண்ணில் வர விட மாட்டேன்.

    தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிட்டத்தட்ட 18 கி.மீ. தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்து, விவசாயிகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் பேரணியாக சென்றனர்.
    • அனுமதியின்றி பேரணியாக சென்றதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    குறிப்பாக அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல கிராமங்களில் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

    இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இயற்கை சூழல் கெடுவதோடு, வனவிலங்குகள் அழியும் என்றும், விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் எனக்கூறி, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக, மேலூர் நரசிங்கம்பட்டி பெருமாள் மலைக்கோவிலில் இருந்து மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் வரை நடைபயணமாக வந்து, தமுக்கம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

    இந்த நடைபயணத்திற்கு, டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும், மேலூர் பகுதியில் ஏராளமான கிராம மக்கள், இயற்கை ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், வணிகர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

    இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருந்த போதிலும் திட்டமிட்டபடி நடைபயணமாக வந்து மதுரையில் போராட்டம் நடைபெறும் என்றும், நான்கு வழிச்சாலையில் நடைபயணமாக அல்லாமல் வாகனங்களில் பேரணியாக மதுரைக்கு செல்வோம் என விவசாயிகள் அறிவித்தனர்.

    அதன்படி மேலூர், அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள், வணிகர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள், நேற்று காலை 9 மணி அளவில் நரசிங்கம்பட்டி பகுதியில் திரண்டனர். இதனையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.

    போராட்டம் தொடங்கி, நரசிங்கம்பட்டியில் இருந்து ஊர்வலமாக அனைவரும் புறப்பட்டு மதுரை நான்கு வழிச்சாலைக்கு வந்தனர். வெள்ளரிப்பட்டி பகுதிக்கு அவர்கள் வந்தபோது, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை தடுக்க தடுப்புகள் அமைத்திருந்தனர்.

    ஊர்வலம் அங்கு வந்தபோது, போலீசார், அவர்களை முன்நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். ஆனால், கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், போலீசாரின் பேச்சை அவர்கள் கேட்க மறுத்து தடுப்புகளை தாண்டி வந்தனர்.

    கிட்டத்தட்ட 18 கி.மீ. தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்து, விவசாயிகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள், மதுரை தமுக்கம் மைதானத்துக்கு வந்து போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி பேரணியாக சென்றதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    • நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
    • 7.45 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும்.

    சென்னை:

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் விழாக்காலங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக பெங்களூரு- தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி - மைசூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி பெங்களூரு - தூத்துக்குடி சிறப்பு ரெயில் (06569) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பெங்களூரூவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 3.23 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 3.33 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

    இதேபோல் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரெயில் (06570) வருகிற 11-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக இரவு 7.35 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஆவணங்களின் நகலை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்.
    • தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன்.

    தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. சோதனையைத் தொடர்ந்து பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், ஆவணங்களின் நகல் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், வருகிற 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளது. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை சுமார் 17 மணி நேரம் நடைபெற்றது.

    வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள கல்லூரியில் சோதனை நடைபெற்ற நிலையில், நள்ளிரவு 2.10 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை முடிந்து புறப்பட்டு சென்றனர். 

    • குன்னூர் வரை பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • பொங்கல் பண்டிகைக்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்காக இயக்க கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரியம் வாய்ந்த மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக 2-வது சீசனின் போது வடமாநில சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் ஆர்வமுடன் சென்றனர்.

    மலை ரெயில் பயணம் தேயிலை தோட்டங்கள், பல்வேறு குகைகள் என சிறந்த அனுபவத்தை தருகிறது. இதனால் மலை ரெயில், பாரம்பரிய யுனஸ்கோ அந்தஸ்து பெற்று உள்ளது. சாய்வு அதிகம் என்பதால் இந்தியாவிலேயே மிக குறைந்த வேகத்தில் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. முன்னதாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதற்காக 4 பர்னஸ் ஆயில் என்ஜின்கள் இருந்தன.

    குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பர்னஸ் ஆயில் மூலம் மலை ரெயிலை இயக்குவதால் அதிக அளவில் மாசு ஏற்படுவதாக கூறி, அதனை மாற்ற மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து பர்னஸ் ஆயில் என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜினாக மாற்றியமைக்கும் முயற்சியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன்படி பர்னஸ் ஆயில் என்ஜின், டீசல் என்ஜினாக மாற்றப்பட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்ட கடைசி பர்னஸ் ஆயில் என்ஜினான 37397 என்ற எண் கொண்ட எக்ஸ் கிளாஸ் என்ஜின் திருச்சி பொன்மலை பணிமனையில் டீசல் என்ஜினாக மாற்றி வடிவமைக்கப்பட்டு புதிதாக பொலிவுபடுத்தப்பட்டது.

    இதையடுத்து அந்த டீசல் என்ஜின் மலை ரெயிலில் 4 பெட்டிகளுடன் இணைக்கப்பட்டு இரும்பு பாரங்களை ஏற்றி குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்காக இயக்க கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு கிட்டம்மாள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார்.
    • பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    சேலம்:

    தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கோவையை சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு கிட்டம்மாள், வார இறுதி நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார்.

    இதன் விளைவாக டெல்லியில் 'நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்' (Natural strong powerlifting federation) சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    • குழந்தைகளுக்கு, புத்தகங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது நமது கடமை.
    • பல்வேறு புத்தகங்களை ஒரே இடத்தில் காணும்போது, குழந்தைகளுக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் தூண்டப்படும்.

    சென்னை:

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

    "இன்றைய தினம், சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் இனிய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு, புத்தகங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது நமது கடமை.


    வரும் ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன். பல துறைகள் சார்ந்த பல்வேறு புத்தகங்களை ஒரே இடத்தில் காணும்போது, குழந்தைகளுக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் தூண்டப்படும்.


    எனவே, அனைவரும், சென்னை புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்."

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


    • சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசியுள்ளார்.
    • ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கிறது?

    திருச்சி முன்னாள் எஸ்.பி.,யும் தற்போதைய டி.ஐ.ஜி.,யுமான வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பேசுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வருண்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அந்த மனுவில் "சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும் தனிப்பட்ட விதத்தில் மிரட்டுவதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி இள்ளோம். எனவே சீமான் தனக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் .அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக திருச்சி குற்றவியல் கோர்ட்டில் வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது விட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் கோர்ட்டில் அதை தெரிவிக்கட்டும். சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழ்நாடு சீமான் மீது தற்போது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன்; அடுத்தகட்டமாக சிவில் வழக்கு தொடர இருக்கிறேன்.

    சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன். என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் இல்லை" என்று வருண்குமார் கூறினார்.

    இதனையடுத்து சீமானிடம் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர், "நீதான் பெரிய அப்பா டக்கர்... இவராச்சே... துப்பாக்கி, பட்டாலியன் வைத்திருக்கியே... எனக்கு பாதுகாப்பு இல்லை எனச் சொல்வது கேவலமாக இல்ல... நீ சரியான ஆண் மகனாக இருந்தால் எனக்கு தண்டனை பெற்றுக்கொடு... குடுத்துடு பார்த்திடுவோம். குற்றவாளி நீ.. காக்கிச் சட்டையில் மறைந்து இருக்கிறாய்.

    தமிழ் மக்களுக்காக போராடும் என்னை பிரிவினைவாதி எனக் கூறுகிறார். இது போலீஸ்காரன் வேலையா... அரசியல் கட்சி தலைவர் மாதிரி எப்படி பேட்டி கொடுக்கிறாய். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட என்னைப் பற்றி பேச மாட்டார்கள். பேசாம மாவட்ட செயலாளர் பதவியை வாங்கி கட்சியில் சேர்ந்துவிட வேண்டியதுதானே...

    நீங்கள் பேசுங்க... அவரை ஏன் முன்னாடி நிறுத்துகிறீர்கள். நான் போய் மன்னிப்பு கேட்க அவ்வளவு பெரிய அப்பா டக்கரா? அவர் ஏதோ காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு... மன்னிப்பு கேட்பது பரம்பரையிலேயே கிடையாது. நான் மன்னிப்பு கேட்க முதலில் நீ யாரு,.. தவறு செய்தது நீ... தொழிலதிபர் யார்? அவரை கூட்டிக்கொண்டு வா...பத்திரிகையாளர்களை விட்டு, உயர் காவல் அதிகாரிகளை விட்டு நீ கெஞ்சின..." என்று சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

    இந்நிலையில் சீமான் மீது வருண்குமார் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது டிஐஜி வருண்குமார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வருண் குமாரின் வழக்கறிஞர், முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது பேசிய அவர், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசியுள்ளார். ஐ.பி.எஸ். என்பது மிக உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் சீமான் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கிறது?

    மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல சீமான் பேசுகிறார். அடிப்படை டேஷ் அறிவு இல்லாமல் பேசும் சீமானுக்கு எவ்வளவு பதில் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை" தெரிவித்தார்.

    • திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் இந்த நான்கு ஆண்டாக எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
    • 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டு, பின்னர் சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ₹12,500 ரூபாய் வழங்கப்படுகிறது.

    பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் இந்த நான்கு ஆண்டாக எதிர்பார்த்து காத்துள்ளார்கள். கடந்த 2012-ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை பாடங்களில் மாணவர்கள் நலன் கருதி நியமிக்கப்பட்டார்கள்.

    5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டு, பின்னர் சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ₹12,500 ரூபாய் வழங்கப்படுகிறது.

    13 ஆண்டுகளாக பணிபுரியும்போதும், இதுவரை மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி உள்பட அரசின் சலுகைகள் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கின்றார்கள்.

    ஆகவே, பணிநிரந்தரம் செய்தால் மட்டுமே இனி எஞ்சி உள்ள காலத்தை நல்லபடியாக வாழ முடியும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    எனவே, மனிதாபிமானம் கொண்டு காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் தமிழக முதல்வர் அவர்கள் செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை அனைத்து கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பாமக அறிக்கை வெளியாகி உள்ளது.

    தவாக, கொமதேக மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய சட்டமன்றத்தில் வலியுறுத்தி உள்ளார்கள் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு செந்தில்குமார் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

    • மாடுகளை பிடிக்க 5347 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
    • 12,632 மாடுகள் பங்கேற்க விண்ணப்பம்.

    தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் மதுரையில் நடைபெறும் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டுகள் பிரசித்தி பெற்றவை. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாடு அடக்கும் வீரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதேபோல் பங்கேற்க விரும்பும் காளைகள் தொடர்பாக அதன் உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டம் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட விவரங்களை மாவட்டம் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    அலங்காநல்லூரில் மாடுகளை பிடிக்க 1,698 வீரர்கள், அவனியாபுரத்தில் 1,735, பாலமேட்டில் 1,914 வீரர்கள் என மொத்தம் 5,347 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    அலங்காநல்லூரில் 5,786 மாடுகள், அவனியாபுரத்தில் 2,026 மாடுகள், பாலமேட்டில் 4,820 மாடுகள் என மொத்தம் 12,632 பங்கேற்க உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யாத வீரர்கள் மற்றும் மாடுகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க இயலாது.

    ×