என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • கைதான இருவருக்கும் ஜனவரி 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
    • இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அ.தி.மு.க. வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் வழக்கை சரியாக விசாரிக்காத மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.

    இதனிடையே, எழும்பூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதான இருவருக்கும் ஜனவரி 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. வட்ட செயலாளர் சுதாகர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 103-வது வட்ட செயலாளர் சுதாகர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிகளில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

    • குற்றம்சாட்டப்பட்ட நபரை புகாரிலிருந்து விடுவிக்க ராஜி முயற்சி செய்தது தெரியவந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • காவல் ஆய்வாளர் ராஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை அண்ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, சதீஷ் என்ற வாலிபர் மீது புகாரளிக்கப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது, காவல் ஆய்வாளர் தங்களை தாக்கியதாகவும், சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும், சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பான போக்சோ வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, தமிழகத்தில் உள்ள வெளிமாநில 7 ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

    அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜமன் ஜமால், சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்த வழக்கின் விசாரணையில் 16 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்ற வாலிபர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக அதிமுக நிர்வாகி சுதாகர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்ததன் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளனர்.

    மேலும், இந்த வழக்கை முதலில் விசாரித்த அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதாலும், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை புகாரிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ததும் தெரிய வந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட வட்ட செயலாளர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், விரைவில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று கைதான பெண் காவல் ஆய்வாளர் ராஜி ஆகியோருக்கு வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனிடையே, சதீஷுக்கு சாதகமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    • பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
    • இல.கோபாலனின் உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாகாலாந்து மாநில ஆளுநராகப் பணியாற்றி வருகிறார் இல.கணேசன்.

    இதற்கு முன்பு இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார்.

    பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இல கணேசன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் (83) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார்.

    இல.கோபாலனின் உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    • மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
    • இந்த மாதம் வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தொடர் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு மொத்தமுள்ள 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 ரேசன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு மட்டுமே வழங்கப்படும் என அறிவித்து விட்டது. இந்த தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் திடீர் அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதற்கிடையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 10-ந்தேதியே ரூ.1,000 வரவு வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    ஆனால் இந்த மாதம் வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தொடர் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11-ந்தேதி மாதத்தின் 2-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை. 13-ந்தேதி ஒரு நாள் மட்டுமே உள்ளது. அது பொங்கலுக்கு முந்தைய தினம்.

    எனவே தமிழக அரசு, மகளிர் உரிமைத்தொகையை 10-ந்தேதி வழங்கி விடலாம் என முடிவு எடுத்துள்ளது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு, இந்த மாதம் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,000 பணம் வரவு வைக்கப்படுகிறது.

    • அரசு பஸ் கோயம்பேடு செல்வதாக இருந்தால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் கூடுதலாக 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
    • பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் பஸ்சை இயக்காத டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஏ.சி. மற்றும் ஏ.சி. வசதி அல்லாத பஸ்கள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்கள் என சுமார் 1,200 பஸ்களை இயக்கி வருகிறது.

    அரசு விரைவு பஸ்களின் நேர விரயம் காரணமாக அரசு பஸ்களில் பயணிப்பதைவிட ஆம்னி பஸ்களில் பயணிக்கவே பொதுமக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

    உதாரணமாக நாகர்கோவிலில் இருந்து கோயம்பேட்டிற்கு ஆம்னி பஸ்கள் 11 மணி நேரத்தில் இயக்கப்படுகிறது என்றால், அரசு விரைவு பஸ்கள் நாகர்கோவிலில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு 12 மணி நேரத்தில் இயக்கப்படுகிறது. இந்த அரசு பஸ் கோயம்பேடு செல்வதாக இருந்தால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் கூடுதலாக 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

    அரசு விரைவு பஸ்களை இயக்கும் டிரைவர்களே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, அந்த பஸ் டிரைவர்கள் தங்கள் கிளை மேலாளர்கள் டீசல் சிக்கனத்திற்காக பஸ்சை வேகமாக ஓட்டக்கூடாது என்று தெரிவித்து இருப்பதாக பயணிகளிடம் கூறி தங்கள் தவறுகளை சமாளிக்கின்றனர்.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    அரசு விரைவு பஸ்களை டீசல் மிச்சம் பிடிப்பதற்காக குறைவான வேகத்தில் ஓட்டுமாறு ஒருபோதும் அறிவுறுத்தவில்லை. அதே நேரத்தில் வேகமாக ஓட்டி விபத்துக்குள்ளாக்காமல் பாதுகாப்பான முறையில் இயக்கி உரிய காலத்தில் குறிப்பிட்ட இலக்கை வந்தடையும் வகையில் பஸ்களை இயக்க வேண்டும் என்றே டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதுதவிர, அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தங்கள் பயண அனுபவம் குறித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கான இணைப்பு (லிங்க்) ஒன்றும் அனுப்பப்படும். அதில், பஸ்சின் காலதாமதம், சுத்தமின்மை, டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் நடைமுறைகள் குறித்து இந்த லிங்க் மூலம் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் பஸ்சை இயக்காத டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 26 அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
    • வருமான வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு பூந்துறை ரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகர் பகுதியில் என்.ஆர். மற்றும் ஆர்.சி.சி.எல். கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமானது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அரசு கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு குடிநீர் கட்டுமான பணிகள், சாலை பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள், அரசு கட்டிடங்கள் என அனைத்து வகை பணிகளையும் செய்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் 2 கார்களில் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள என்.ஆர். கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு வந்தனர். கார்களை விட்டு இறங்கிய அதிகாரிகள் நேராக அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு பணியில் இருந்தவர்கள் வெளியில் எந்த தொடர்பும் ஏற்படுத்த முடியாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் செய்தனர். பின்னர் அங்குள்ள ஆவணங்கள், கணினி பதிவுகளை சோதனை செய்தனர்.

    இதுபோல் இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக சேலம், திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் 26 அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. வருமான வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து, இன்றும் 2-வதுநாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    என்.ஆர். கட்டுமான நிறுவனம் மற்றும் ஆர்.சி.சி.எல். நிறுவனத்தின் உரிமையாளர் என்.ராமலிங்கம் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. தன் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
    • தமிழ் மண்ணின் வளத்தை காக்க மட்டுமே நாம் தமிழர் கட்சி இருக்கும்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டப்பேரவையில் வெளியேறிய கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் ஒலிக்கப்படும் என்பதும், இறுதியாகத்தான் தேசியகீதம் ஒலிக்கப்படவேண்டும் என்பதும் தமிழ்நாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.

    அதை மாற்றியமைக்க கவர்னர் முயற்சி செய்வது தமிழ் இனத்தை அவமதிப்பதாக கருதப்படுகிறது. இதை தி.மு.க. தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தபோது, அனுமதியும், போராட இடமும் தரவில்லை. தடையை மீறியதால் எங்களை கைது செய்தனர். ஆனால், தி.மு.க. தன் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதுதான் தமிழ்நாட்டில் தி.மு.க. கடைப்பிடிக்கக்கூடிய ஜனநாயகம். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் அரசு பணத்தை வைத்து மூடிவிட்டது.

    டங்ஸ்டன் சுரங்கத்தை நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை எந்த கொம்பன் வந்தாலும் அந்த இடத்தில் ஒரு கல்லைக்கூட புரட்டிப்போட முடியாது. தமிழ் மண்ணின் வளத்தை காக்க மட்டுமே நாம் தமிழர் கட்சி இருக்கும். நிலத்தின் வளத்தை கெடுக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மண்ணில் வர விட மாட்டேன்.

    தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிட்டத்தட்ட 18 கி.மீ. தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்து, விவசாயிகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் பேரணியாக சென்றனர்.
    • அனுமதியின்றி பேரணியாக சென்றதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    குறிப்பாக அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல கிராமங்களில் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

    இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இயற்கை சூழல் கெடுவதோடு, வனவிலங்குகள் அழியும் என்றும், விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் எனக்கூறி, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக, மேலூர் நரசிங்கம்பட்டி பெருமாள் மலைக்கோவிலில் இருந்து மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் வரை நடைபயணமாக வந்து, தமுக்கம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

    இந்த நடைபயணத்திற்கு, டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும், மேலூர் பகுதியில் ஏராளமான கிராம மக்கள், இயற்கை ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், வணிகர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

    இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருந்த போதிலும் திட்டமிட்டபடி நடைபயணமாக வந்து மதுரையில் போராட்டம் நடைபெறும் என்றும், நான்கு வழிச்சாலையில் நடைபயணமாக அல்லாமல் வாகனங்களில் பேரணியாக மதுரைக்கு செல்வோம் என விவசாயிகள் அறிவித்தனர்.

    அதன்படி மேலூர், அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள், வணிகர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள், நேற்று காலை 9 மணி அளவில் நரசிங்கம்பட்டி பகுதியில் திரண்டனர். இதனையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.

    போராட்டம் தொடங்கி, நரசிங்கம்பட்டியில் இருந்து ஊர்வலமாக அனைவரும் புறப்பட்டு மதுரை நான்கு வழிச்சாலைக்கு வந்தனர். வெள்ளரிப்பட்டி பகுதிக்கு அவர்கள் வந்தபோது, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை தடுக்க தடுப்புகள் அமைத்திருந்தனர்.

    ஊர்வலம் அங்கு வந்தபோது, போலீசார், அவர்களை முன்நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். ஆனால், கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், போலீசாரின் பேச்சை அவர்கள் கேட்க மறுத்து தடுப்புகளை தாண்டி வந்தனர்.

    கிட்டத்தட்ட 18 கி.மீ. தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்து, விவசாயிகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள், மதுரை தமுக்கம் மைதானத்துக்கு வந்து போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி பேரணியாக சென்றதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    • நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
    • 7.45 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும்.

    சென்னை:

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் விழாக்காலங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக பெங்களூரு- தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி - மைசூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி பெங்களூரு - தூத்துக்குடி சிறப்பு ரெயில் (06569) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பெங்களூரூவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 3.23 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 3.33 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

    இதேபோல் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரெயில் (06570) வருகிற 11-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக இரவு 7.35 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஆவணங்களின் நகலை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்.
    • தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன்.

    தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. சோதனையைத் தொடர்ந்து பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், ஆவணங்களின் நகல் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், வருகிற 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளது. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை சுமார் 17 மணி நேரம் நடைபெற்றது.

    வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள கல்லூரியில் சோதனை நடைபெற்ற நிலையில், நள்ளிரவு 2.10 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை முடிந்து புறப்பட்டு சென்றனர். 

    • குன்னூர் வரை பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • பொங்கல் பண்டிகைக்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்காக இயக்க கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரியம் வாய்ந்த மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக 2-வது சீசனின் போது வடமாநில சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் ஆர்வமுடன் சென்றனர்.

    மலை ரெயில் பயணம் தேயிலை தோட்டங்கள், பல்வேறு குகைகள் என சிறந்த அனுபவத்தை தருகிறது. இதனால் மலை ரெயில், பாரம்பரிய யுனஸ்கோ அந்தஸ்து பெற்று உள்ளது. சாய்வு அதிகம் என்பதால் இந்தியாவிலேயே மிக குறைந்த வேகத்தில் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. முன்னதாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதற்காக 4 பர்னஸ் ஆயில் என்ஜின்கள் இருந்தன.

    குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பர்னஸ் ஆயில் மூலம் மலை ரெயிலை இயக்குவதால் அதிக அளவில் மாசு ஏற்படுவதாக கூறி, அதனை மாற்ற மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து பர்னஸ் ஆயில் என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜினாக மாற்றியமைக்கும் முயற்சியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன்படி பர்னஸ் ஆயில் என்ஜின், டீசல் என்ஜினாக மாற்றப்பட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்ட கடைசி பர்னஸ் ஆயில் என்ஜினான 37397 என்ற எண் கொண்ட எக்ஸ் கிளாஸ் என்ஜின் திருச்சி பொன்மலை பணிமனையில் டீசல் என்ஜினாக மாற்றி வடிவமைக்கப்பட்டு புதிதாக பொலிவுபடுத்தப்பட்டது.

    இதையடுத்து அந்த டீசல் என்ஜின் மலை ரெயிலில் 4 பெட்டிகளுடன் இணைக்கப்பட்டு இரும்பு பாரங்களை ஏற்றி குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்காக இயக்க கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    ×