என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கலை பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடி மகிழும் வண்ணம் சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது.
    • இல்லத்தின் முன்பு இன்பம் பொங்கும் தமிழ்நாடு என்று வண்ணக்கோலமிட்டு தை மகளை வரவேற்போம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    * தை மகளை வரவேற்போம்; தாய் தமிழைப் போற்றிடுவோம்.

    * உழைப்புக்கு மரியாதை செலுத்தி, உழவுக்கு துணை நின்ற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழாதான் பொங்கல்.

    * பொங்கலை பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடி மகிழும் வண்ணம் சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது.

    * சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை ஜன.13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சீரும் சிறப்புமாக அவரவர் ஊர்களில் நடத்த வேண்டும்.

    * கலை, இலக்கியம், விளையாட்டுப்போட்டி நடத்தி பரிசுகளை அளித்து மக்களை மகிழ்வித்து மகிழ்ந்திட வேண்டும்.

    * இல்லத்தின் முன்பு இன்பம் பொங்கும் தமிழ்நாடு என்று வண்ணக்கோலமிட்டு தை மகளை வரவேற்போம்.

    * அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2056 நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க. இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
    • த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கட்சி அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் அந்த தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    கடந்த 10-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகிற 17-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

    தி.மு.க. கூட்டணியில் தனது கைவசம் இருந்த இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பாததால் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தே.மு.தி.க.வில் இருந்தபோது இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்ததை போல் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது.

    கடந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளை சுட்டிக்காட்டி இந்த தேர்தலும் நேர்மையாக நடக்காது என்பதால் புறக்கணிக்கும் முடிவை எடுத்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது.

    எனவே தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    பா.ஜ.க.வும் இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. கடந்த 2021 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. போட்டியிட்டது. அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட யுவராஜ் காங்கிரஸ் வேட்பாளரை விட 8 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான திருமகன் ஈ.வெ.ரா. பெற்ற வாக்குகள் 67,300, த.மா.கா. வேட்பாளர் பெற்ற வாக்குகள் 58,396.

    கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.வுக்கு கணிசமான செல்வாக்கு உண்டு. எனவே அ.தி.மு.க. போட்டியிடாவிட்டாலும் முன்புபோல் அ.தி.மு.க. ஆதரவுடன் த.மா.கா.வை போட்டியிட செய்து அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கலாம் என்ற யோசனையை பா.ஜ.க. முன் வைத்தது. இது தொடர்பாக ரகசிய பேச்சுக்களும் நடந்தன. ஆனால் எந்த கட்சியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இதற்கிடையில் சென்னையில் முகாமிட்டுள்ள பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய மந்திரி எல்.முருகன், பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரும் பங்கேற்றார்கள்.

    ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆலோசனையில் ஒருமித்த கருத்து ஏதும் ஏற்படவில்லை. இன்று புதிய மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். அத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றியும் ஆலோசித்தார்கள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் கட்சி அலுவலகத்தில் இன்று ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாநில துணைத் தலைவர் விடியல் சேகர், யுவராஜா, ஈரோடு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், புறநகர் மாவட்ட தலைவர் சண்முகம், செயற்குழு உறுப்பினர் ஈசுவரமூர்த்தி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    த.மா.கா., பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் இன்று தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. களம் இறங்குமா? அல்லது த.மா.கா. போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி கட்சிகளுடன் பேசி தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்போவதாக அறிவித்து உள்ளார்.

    • கலை நிகழ்ச்சி களை பார்வையிட்டு சமத்துவப் பொங்கலிடுகிறார்.
    • 1000 ஏழை எளியவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில், ஆலந்தூர் தொகுதியில் அடங்கிய, ஆலந்தூர் வடக்கு பகுதி, நந்தம்பாக்கம் பர்மா காலனியில் சமத்துவ பொங்கல் விழா நாளை 13-ந் தேதி மாலை 5 மணியளவில் மாவட்டச் செயலாளர்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெறுகிறது.

    அவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி, எம்.எல்.ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் விஸ்வநான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பகுதி செயலாளர் குணாளன் வரவேற்றுப் பேசுகிறார்.

    விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுடன் இணைந்து கலை நிகழ்ச்சி களை பார்வையிட்டு சமத்துவப் பொங்கலிடுகிறார்.

    இவ்விழாவில் 1000 ஏழை எளியவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இதில் தி.மு.க. பொருளா ளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ.வைதியலிங்கம், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணா நிதி, வரலட்சுமி மதுசூதனன், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்கள் வீ.தமிழ்மணி, இதயவர்மன், மாவட்ட ஊராட்சி தலைவர், குன்றத் தூர் ஒன்றிய செயலாளர், படப்பைமனோகரன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ்.

    பகுதி செயலாளர்கள்-என்.சந்திரன், பம்மல் வே.கருணாநிதி, இ.ஜோசப் அண்ணா துரை, த.ஜெயக் குமார், மூவரசம்பட்டு சதீஷ், மு.ரஞ்சன், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது.
    • கிராமிய மற்றும் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகளின் மூலம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    'பொங்கலோ பொங்கல்' என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது. உள்ள மெல்லாம் பூரிப்பு பிறக்கிறது. நம் ஊனோடு, உயிரோடு, உணர்வோடு கலந்த விழாவாகத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழர்களின் பெருமித அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படுகிறது. ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு எனப் பல்வேறு பெயர்களில் இது குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய 3 இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது. அதி லும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும்.

    மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில், 77 ஆயிரத்து 683 சதுரஅடி பரப்பளவில் 62.78 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்துடன் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.1.2024 அன்று திறந்து வைத்தார். இந்த அரங்கம் தமிழ்நாட்டின் பண்பாட்டை வெளிப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டுகளை பிரபலப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்ட நவீன அரங்காக அமைந்துள்ளது.

    பொங்கல் திருநாளையொட்டி, தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடலில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

    மேலும், சென்னையில் 18 இடங்களில் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளன.

    இவ்விழாவில் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைச்சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், கேரளத்தின் தெய்யம் நடனம், மகாரா ஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்தரகாண்டின் சபேலி நடனம் ஆகிய பிற மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

    விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது.

    சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய 8 நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    தமிழர் திருநாளாம் பொங்கலைப் பொதுமக்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடிடும் வகையில், கிராமிய மற்றும் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகளின் மூலம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • டெல்டா உள்பட மத்திய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும்.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    பொங்கல் அன்றும் அதற்கு மறுநாளும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இன்றும் நாளையும் சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    டெல்டா உள்பட மத்திய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். வருகிற 13, 14, 15 ஆகிய 3 நாட்களுக்கு அறுவடை பணிகள் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
    • தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வரும் 17-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

    • திரையரங்கம் முன்பு ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
    • பொதுமக்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்:

    இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நடத்திய கடைசி கட்ட போரை மையமாக கொண்டு ராஜபாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவர் "போர்க் களத்தில் ஒரு பூ" என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்தார்.

    கடந்த 2012-ம் ஆண்டு உருவான இந்த படத்திற்கு மத்திய சினிமா தணிக்கை குழு தடை விதித்து உத்தர விட்டது.

    இந்த சினிமாவில் பாலியல் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்ப தாகவும், அதன் காரணமாக திரைப்படம் வெளியாக தடை விதிக்கப்பட்டு உள்ள தாகவும் விளக்கம் அளித்தி ருந்தது. இருந்தபோதிலும் இந்த படத்தை திரையிடுவ தற்கான முயற்சிகளை தயாரிப்பாளர் கணேசன் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

    பல்வேறு தடைகளை தாண்டி போர்க்களத்தில் ஒரு பூ படத்தை 2025-ல் வெளியிடலாம் என்று கூறி மத்திய அரசு அனுமதி அளித்தது.

    இதையடுத்து ராஜபாளையம் பாலாஜி திரையரங்கில் இன்று அந்த படம் வெளியாக இருந்தது. இதையொட்டி படத்தின் முதல் காட்சியை காண்பதற்காக ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ம.தி.மு.க., திராவிடர் கழகம், கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பினருக்கு டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை திரையரங்கம் முன்பு ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் மீண்டும் அந்த படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்த தகவல் தமிழக அரசுக்கு இன்று காலை தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் படம் வெளியாக இருந்த ராஜபாளையம் பகுதியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, இன்ஸ்பெக்டர்கள் செல்வி, அசோக்பாபு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் படம் வெளியாக இருந்த திரையரங்கம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    தியேட்டர் நிர்வாகத்தினர் உடனடியாக படம் திரையிடுவதை தவிர்த்தனர். இருந்த போதிலும் திரையரங்கம் முன்பு திரண்டிருந்தவர்கள் படத்தை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மத்திய அரசின் தடை உத்தரவு குறித்து எடுத்துக்கூறி அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.

    இந்த சம்பவத்தால் ராஜபாளையத்தில் இன்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • பெண்ணுரிமையை பாதுகாத்த ஒரே தலைவர் பிரபாகரன் தான்.
    • பெரியாரை பற்றி பேசி தேர்தலில் ஓட்டு கேட்க எந்த கட்சியாவது தயாரா?

    சென்னை:

    சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * உழவுக்கும் தனக்கும் உறவாக நின்ற மாடுகளுக்கு பண்டிகை வைத்து கொண்டாடிய மரபு தமிழர் மரபு.

    * ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக நிற்கும்.

    * பொங்கலன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

    * பொங்கலன்று யுஜிசி தேர்வை நடத்தும் மத்திய அரசு வட இந்திய பண்டிகைகளின்போது தேர்வு நடத்துமா?. தமிழ்நாட்டில் கேட்க ஆளில்லாததால் மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது.

    * தி.மு.க.வுக்கு வாக்கு செலுத்தி இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள்.

    * பார்ப்பனர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டு அவர்களுடன் கூட்டு வைத்தது யார்?

    * வள்ளலார், வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்?

    * பெரியார் தான் சமூகநீதியை நிலைநாட்டினார் என்றால் 10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. ஏன் போராடுகிறது?

    * ஆதாரத்தை வைத்து பூட்டி வைத்துக்கொண்டு ஆதாரத்தை தா என்றால் எங்கே போவது?

    * பெரியாரை பற்றி பேசி தேர்தலில் ஓட்டு கேட்க எந்த கட்சியாவது தயாரா?

    * பெண்ணுரிமையை பாதுகாத்த ஒரே தலைவர் பிரபாகரன் தான்.

    * தடை செய்யப்பட்ட புலிகளையும், பிரபாகரனையும் பேசி 32 லட்சம் ஓட்டு வாங்கி உள்ளேன் என்று கூறினார்.

    • பெற்றோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
    • வருகிற 14-ந்தேதி இஸ்ரோ தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.

    நாகர்கோவில்:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் மற்றும் விண்வெளித் துறை செயலா ளராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஞ்ஞானி டாக்டர் நாராயணன் குமரிமாவட்டம் நாகர்கோவில் அருகே மேல காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

    அவர் வருகிற 14-ந்தேதி இஸ்ரோ தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார். இவரது பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். இஸ்ரோ தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி நாராயணன் இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    சாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் அவர் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து சொந்த ஊரான மேலக்காட்டு விளைக்கு வந்தார். இன்று மாலை அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன் அவரது பெற்றோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

    மாலை 6.30 மணிக்கு அவரது சொந்த ஊரில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    • அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம்.
    • பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    ஆண்டுதோறும் தைப்பொங்கலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்தும், சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.


    அந்த வகையில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சாலையில் சாரை, சாரையாக காவடி எடுத்தும், சுமார் 10 அடி, 12 அடி நீள அலகு குத்தி வந்தவாறு உள்ளனர்.

    தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    பக்தர்கள் வருகை அதிகரிப்பால் திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு புறம் சாரை சாரையாக பக்தர்கள், மறுபுறம் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்ததால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.


    இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    • அமெரிக்காவில் அயலகத் தமிழர்கள் எனக்கு அளித்த வரவேற்பை நான் என்றைக்கும் மறக்க முடியாது.
    • அயலகங்களில் தமிழை வளர்க்கும் பல்வேறு திட்டங்களை திராவி மாடல் அரசு செயல்படுத்துகிறது.

    சென்னை நத்தம்பாக்கத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழா 2025 - தாய்த் தமிழ்நாட்டில் தமிழர் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். 

    அயலகத் தமிழர் தினவிழாவில் கணியன் பூங்குன்றனார் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். இதைத்தொடர்ந்து தமிழர்களின் பெருமையை விளக்கும் வகையில் வீடியோ உடன் பாடல் ஒளிபரப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    * உலகின் எந்த பகுதிக்கு போனாலும் தாய்த் தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வை அயலகத் தமிழர்கள் ஏற்படுத்தினர்.

    * அமெரிக்காவில் அயலகத் தமிழர்கள் எனக்கு அளித்த வரவேற்பை நான் என்றைக்கும் மறக்க முடியாது.

    * ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் என எங்கு போனாலும் தாய் மண்ணில் உள்ள உணர்வை அயலகத் தமிழர்கள் ஏற்படுத்தினர்.

    * தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி. தாய் மண் தமிழ்நாட்டின் பொங்கல் விழாவில் உங்களை காணும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

    * பல்வேறு நாடுகளிலும் உழைப்பால் பாலைகளை சோலைகளாக மாற்றியவர்கள் தமிழர்கள்.

    * வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் நீங்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை. தமிழ்நாடும் உங்களை மறக்காது.

    * 6 அயலக தமிழ் ஆளுமைகளுக்கு விருதுகளை இன்று வழங்கி சிறப்பித்துள்ளோம்.

    * அயலகங்களில் தமிழை வளர்க்கும் பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்துகிறது.

    * உலகம் முழுவதும் இன்னலுக்கு ஆளாகும் அயலக தமிழர்களை காத்து வருகிறது அயலக தமிழர் நலத்துறை.

    * வேர்களை தேடி என்ற திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் மைல் கல்.

    * அல்லல்படுவோரின் கண்ணீரை துடைத்து, இன்னலுக்கு ஆளாவோரின் புன்னகையை மீட்டுள்ளோம் என்று பேசிய முதலமைச்சர் அயலக தமிழர்களுக்காக புதிய திட்டத்தை அறிவித்தார்.

    • 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலை சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று காலையில் கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் தட்டு வாகனத்தில் சுவாமியும், அம்பாளும், அறம் வளர்த்தநாயகியும், விநாயகரும் எடுத்து வரப்பட்டனர்.

    பின்னர் பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும், அம்பாளும் அம்மன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளினார்கள். இதைத்தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டது. பின்னர் 3 தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. விழாவில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசியா, சுவாமி பத்மேந்திரா, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது. 'ஓம் காளி ஜெய் காளி' என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    தேரோட்ட விழாவில் புதுமண தம்பதியினர் பலரும் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்பத்தோடு வந்து தேரோட்ட விழாவில் பலரும் கலந்து கொண்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோரும் தேரோட்ட விழாவில் பங்கேற்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருந்தனர். 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. இதையடுத்து கோவில் 4 ரத வீதிகளிலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. சாலை ஓரங்களில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தேரேட்டத்தை காண வந்திருந்தனர். சுசீந்திரம் புறவழிச்சாலையிலும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் விடைபெறும் சப்த வர்ண நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (13-ந்தேதி) காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலாவும், இரவில் ஆராட்டும் நடக்கிறது.

    ×