என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இதில், தி.மு.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களது பெயர் பட்டியல் மற்றும் சின்னங்கள் கடந்த 20-ந் தேதி ஒதுக்கீடு செய்து இறுதி செய்யப்பட்டன.

    அதனைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட 'பேலட் ஷீட்'களை அச்சிடப்படும் பணிகளை தேர்தல் அலுவலர்கள் சென்னைக்கு நேரடியாக சென்று மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், அந்த பேலட் ஷீட்களை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி இன்று காலை 9.30 மணியளவில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தொடங்கியது.

    இதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்காக கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி நுழைவாயில் வேட்பாளர்கள், முகவர்கள், செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.


    இதுபோல் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள், பெயர் சின்ன பொருத்தும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும் உள்ளே செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் முகவர்கள், கடும் சோதனைக்கு பிறகே உள்ள அனுமதிக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்யப்பட்டது.

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் ஸ்ரீகாந்த் முன்னிலையில் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்களில் பேலட் ஷீட்களை பொருத்தும் பணியை அலுவலர்கள் மேற்கொண்டனர்.

    ஈரோடு கிழக்குத் தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் வாக்குப் பதிவுக்காக கூடுதலாக 20 சதவீதம் வாக்குப்பதிவு எந்திரங்களையும் சேர்த்து 284 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பா ளர்களின் பெயர்கள் மட்டுமே பொருத்த முடியும். கூடுதலாக கடைசியில் நோட்டாவுக்கான பட்டன் இருக்குமாறு வடிவைக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 47 பட்டன்கள் தேவை உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் 3 எந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளன.

    அதன்படி இந்த தேர்தலில் 237 வாக்குச்சாவடிகளிலும், 20 சதவீதம் கூடுதல் வாக்குப் பதிவு எந்திரங்களையும் சேர்த்து மொத்தம் 852 வாக்குப்பதிவு எந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 308 விவி பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

    இதில் 852 வாக்குப்பதிவு எந்திரங்களிலும் வேட்பாளரின் பெயர், சின்னம் அச்சிடப்பட்டுள்ள பேலட் ஷீட்கள் பொருத்தப்படுகிறது. இன்று தொடங்கிய இந்தப் பணி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக ஈரோடு மாநகராட்சி பாதுகாப்பு அறையில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு மாநகராட்சி கூட்டரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    • நிதிநலக் குறியீடுகளில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட பின்தங்கி 11 இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
    • கடனைப் பொறுத்தவரை தமிழகத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

    சென்னை:

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களின் நிதி நிலைமை குறித்த விவரங்களுடன் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023-ஆம்

    ஆண்டிற்கான நிதிநலக் குறியீடு என்ற ஆவணத்தின்படி, நிதி மேலாண்மையில் தமிழ்நாடு 11-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. செலவுகளின் தரம், கடன்களைத் தாக்குபிடிக்கும் திறன் ஆகியவற்றில் முறையே 14, 16-ஆம் இடங்களுக்கு தமிழகம் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டு நிதிநிலைமையின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கவலை எழுந்திருக்கிறது.

    இந்தியாவின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுத்துத் தருவதற்கான நிதி ஆயோக் அமைப்பு 2022-23ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களின் நிதிநிலைமை குறித்து நிதி நலக் குறியீடு (Fiscal Health Index) என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளது. 7 வடகிழக்கு மாநிலங்கள், அசாம், உத்தரகாண்ட், இமாலயப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் தவிர மீதமுள்ள 18 மாநிலங்களின் நிதிநிலைமை குறித்து நிதி ஆயோக் வெளியிட்ட ஆவணத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. நிதிநலக் குறியீடுகளில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட பின்தங்கி 11 இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.

    ஒடிசா மாநிலம் 67.8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு அதில் பாதிக்கும் குறைவாக 29.2 புள்ளிகளை மட்டுமே பெற்று முதல் 10 இடங்களில் வர முடியாமல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. செலவுகளின் தரம் குறித்த வகைப்பாட்டில் 32 புள்ளிகளுடன் 14-ஆம் இடத்தையும், நிதி விவேகம், கடன் குறியீடு ஆகியவற்றில் முறையே 13-ஆம் இடத்தையும் தமிழ்நாடு பிடித்துள்ளது. கடன்களைத் தாக்குப் பிடிக்கும் தன்மையில் 64 புள்ளிகளுடன் ஒடிசா முதலிடம் பிடித்துள்ள நிலையில் தமிழ்நாடு 11.1 புள்ளி மட்டுமே பெற்று 16-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வகைப்பாட்டில் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே தமிழகத்தை விட பின்தங்கியுள்ளன என்பது கவலையளிக்கும் உண்மையாகும்.

    செலவுகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் வருவாய் செலவினங்களில் 52% ஊதியம், ஓய்வூதியம், கடன் வட்டி போன்ற உறுதிப்படுத்தப்பட்ட செலவுகளுக்கே சென்று விடுவதாகவும், மீதமுள்ள 48% நிதியில் பெரும் பகுதி மானியங்களுக்கே சென்று விடுவதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. 2022-23ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.52,781 கோடியாக இருந்த நிலையில், நலத்திட்ட உதவிகளைக் கூட தமிழக அரசு கடன் வாங்கித் தான் செய்திருக்கிறது என்பதும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிதி இல்லாத நிலையில் தான் தமிழ்நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதும் இந்த ஆவணம் மூலம் உறுதியாகியுள்ளது. அதற்கு முன் தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2021-22ஆம் ஆண்டில் நிதி நலக் குறியீட்டில் 15-ஆம் இடத்தையும், 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் சராசரியாக 12-ஆம் இடத்தையும் தான் தமிழகம் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க தகவல்களாகும்.

    கடனைப் பொறுத்தவரை தமிழகத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடனைத் தாக்குபிடிக்கும் திறனில் தமிழகம் வெறும் 11.1 புள்ளிகளுடன் 16-ஆம் இடத்தைப் பிடித்திருப்பதன் மூலம் கடுமையான நிதி அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறது. அடுத்த நில ஆண்டுகளில் பொது நிதியை மேலாண்மை செய்வதில் கடுமையான சவால்களை தமிழகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் இவை உணர்த்துகின்றன.

    தமிழகத்தின் நிதிநிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும், அதை எதிர்கொள்ள வரி அல்லாத வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆளும் கட்சிகள் அதை பொருட்படுத்தவில்லை என்பதையும், தமிழக பொருளாதாரத்தை தலைநிமிர்த்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., தமிழகத்தின் நிதி நிலை, கடன் சுமை ஆகியவற்றை இன்னும் மோசமாக்கி இருப்பதையுமே புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

    2021-22ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த தி.மு.க., 2022-23ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.36,376 கோடியாக குறையும் என்று கூறியிருந்தது; ஆனால், அதற்கு மாறாக ரூ.52,781 கோடியாக அதிகரித்தது. 2023-24ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.26,313 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது நிதிநிலை அறிக்கை கணிப்புகளில் ரூ.37,540 கோடியாகவும், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.44,906 கோடியாகவும் அதிகரித்தது. 2024-25ஆம் ஆண்டில் ரூ.18,583 கோடி மட்டுமே வருவாய்ப் பற்றாக்குறையாக இருக்கும் என கணிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், நிதி நிலை அறிக்கையில் அது ரூ.49,278 கோடியாக அதிகரித்திருக்கிறது.

    2025-26ஆம் ஆண்டில் தமிழகத்தில் வருவாய்ப் பற்றாக்குறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, ரூ.1218 கோடி வருவாய் உபரி இருக்கும் என்று 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், இப்போது வருவாய் உபரிக்கு வாய்ப்பில்லை என்றும், ரூ.18,098 கோடி வருவாய்ப் பற்றாக்குறை தான் ஏற்படும் என்றும் தி.மு.க. அரசு கூறியிருக்கிறது. உண்மை நிலை என்னவென்பது மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது தான் தெரியவரும். நிதிநிலையை மேம்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வால், ஒருமுறை கூற வருவாய்ப் பற்றாக்குறை இலக்குகளை எட்ட முடியவில்லை.

    மதுவணிகத்தின் மூலமான வருவாயை நம்பியும், பத்திரப் பதிவுக் கட்டணங்களை உயர்த்துவதை நம்பியும் நடத்தப்படும் தி.மு.க. ஆட்சியில் நிதிநிலை மேம்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. நடப்பாண்டில் அடைக்கப்பட வேண்டிய ரூ.49,638 கோடி கடனை அடைப்பதற்கு தேவையான நிதி தமிழக அரசிடம் இல்லாத நிலையில், அதற்கும் சேர்த்து நடப்பாண்டில் ரூ.1,55,584 கோடி கடன் வாங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் கடன் வாங்குவதற்கு கூட இயலாத நிலை உருவாகிவிடும்.

    எனவே, மக்களைப் பாதிக்காத வகையில் வரி அல்லாத வருவாயைப் பெருக்குதல், பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயக்குதல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் நிதிநிலையை மேம்படுத்தவும், கடன் சுமையைக் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.
    • இரவிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நாளை காலையில் முடிக்க திட்டம்.

    சென்னை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை தொடங்கியது. சேப்பாக்கம் சமூக நல ஆணையரகம் அருகில் போடப்பட்ட சாமினா பந்தலில் உண்ணாவிரதம் இருந்தனர்.

    சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யவும், 95 அரசாணையை ரத்து செய்தல், ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

    83 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெஸி வரவேற்றார்.

    மாநில துணை தலைவர்கள் பெரியசாமி, அண்ணாதுரை, தமிழரசன், மஞ்சுளா, வாசுகி, மாநில செயலாளர்கள் கற்பகம், சுமதி, மகேஸ்வரி, பாண்டிச் செல்வி, லதா, நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இரவிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நாளை காலையில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    • நாளை ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படும்.
    • அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வழங்க வேண்டும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் 11-ந் தேதி நடைபெறுகிறது.

    திருவிழா நடைபெறுவதற்கு முன்பாகவே பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தடையின்றி செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் சார்பில் ஆங்காங்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். இதற்கு பல்வேறு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதன்படி அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதன் பின்னரே வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

    அதன்படி கோவில் நிர்வாகத்தில் பலர் அன்னதான அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி 110 பேருக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளித்துள்ளனர்.

    இந்த உரிமத்தை அவர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனிக்கம்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    100 ஆண்டு பாரம்பரியமிக்க இந்த வழக்கத்தை அவர்கள் இந்த ஆண்டும் கடைபிடித்தனர். 20-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகளில் பழனி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


    இதுகுறித்து அவர்கள் கூறும் போது, கடந்த ஆண்டு மாட்டு வண்டிகளை கிரி வீதியில் நிறுத்த அனுமதி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இதன் காரணமாக தனியார் வாகனம் நிறுத்தும் இடத்தில் ரூ.400 கட்டணத்துக்கு மாட்டு வண்டிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாகன வசதி இல்லாத காலத்தில் இருந்து எங்கள் முன்னோர்கள் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அதேபோல் நாங்களும் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

    மேலும் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாகவும், சிரமம் இன்றியும் மலைக்கோவிலுக்கு செல்லவும், பின்னர் அங்கிருந்து அடிவாரம் வந்தடையவும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு 1 மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.

    தற்போது தைப்பூச திருவிழா நெருங்க உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாளை (30-ந் தேதி) ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் மின் இழுவை ரெயில், படிப்பாதை, யானைப்பாதை வழிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • சி.பி.சி.ஐ.டி. குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து முதலில் வேங்கை வயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ளனர்.

    இதில் வேங்கை வயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த மனு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்.1-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
    • நான் வெடிகுண்டை வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்த தேர்தலை அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.

    தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமார் உதயசூரியன் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி மைக் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக, நாதக வேட்பாளர்கள் மட்டுமல்லாது சுயேட்சை வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

    ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவு திரட்டி பேசினார்.

    சீமான் பேசுகையில், உன் பெரியாரிடம் வெங்காயம் தான் உள்ளது. என் தலைவனிடம் வெடிகுண்டு உள்ளது. நீ வெங்காயத்தை என் மீது வீசு, நான் வெடிகுண்டை உன் மீது வீசுவேன்.

    வெடிகுண்டை வைத்திருக்கிறேன், இன்னும் வீசவில்லை. நான் வெடிகுண்டை வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது என்று பேசி உள்ளார்.

    இதனையடுத்து, தேர்தல் பரப்புரையில் சீமான் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
    • ஆற்றின் கரையில் பொதுமக்கள் புனித நீராடினர்.

    ஒகேனக்கல்:

    தை அமாவாசையை யொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களை நினைத்து செய்யும் பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்ற வற்றை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம்.

    மகாளய அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வந்து காவிரி ஆற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இதைத்தொடர்ந்து தை மகாளய அமாவாசையான இன்று ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் பொதுமக்கள் புனித நீராடினர்.

    பின்னர் அவர்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய் பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்

    திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் இன்று ஏரளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    இதன் காரணமாக ஒகேனக்கல்லில் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோன்று இன்று தை அமாவாசையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு தென்பாணை ஆற்றங்கரையில் காசி ராமேஸ்வரத்திற்கு அடுத்து புகழ்பெற்ற புண்ணியஸ்தலமாக ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் முன்பு ஒட்டியவாறு செல்லும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பொதுமக்கள் இறந்த தங்களின் முன்னோர்களுக்கு வாழை இலையில் பச்சரிசி காய்கறி அகத்திக்கீரை, வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் வைத்து திதி கொடுத்து தர்ப்பணம் செய்து, முன்னோர்களை வழிபட்டனர். 

    • அரசு பணியிடங்களை நிரப்புவதை மனிதவளத்தை பயன்படுத்துவதாக மட்டும் பார்க்க முடியாது.
    • அரசுப் பணியிடங்களை நிரப்பாததன் மூலம் சமூகநீதிக்கும் பெரும் துரோகத்தை திமுக அரசு இழைத்திருக்கிறது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதற்கு இதை விட பெரிய சான்று எதுவும் தேவையில்லை. அரசுப் பணியிடங்களை நிரப்ப திமுக அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.

    2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுத் துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மேலும் 2 லட்சம் பணியிடங்களை புதிதாக உருவாக்கி அவற்றையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்பதுடன், கடந்த நான்காண்டுகளில் கூடுதலாக ஏற்பட்ட மூன்று லட்சம் காலியிடங்களையும் தி.மு.க. அரசு நிரப்பவில்லை என்பதைத் தான் அரசு ஊழியர் அமைப்புகள் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக கடந்த நான்காண்டுகளில் 34,384 பேருக்கு மட்டும் தான் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் 1.30 கோடி பேர் அரசு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நிலையில் ஆண்டுக்கு பத்தாயிரம் பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது இளைய தலைமுறையினருக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.

    அரசு பணியிடங்களை நிரப்புவதை மனிதவளத்தை பயன்படுத்துவதாக மட்டும் பார்க்க முடியாது. படித்த ஓர் இளைஞருக்கு அரசு வேலை வழங்குவதன் மூலம் ஓர் குடும்பம் வறுமையிலிருந்து மீட்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் ஆறரை லட்சம் அரசு பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதன் மூலம் ஆறரை லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்கும் கடமையைச் செய்ய தமிழக அரசு தவறி விட்டது.

    அரசுப் பணியிடங்களை நிரப்பாததன் மூலம் சமூகநீதிக்கும் பெரும் துரோகத்தை திமுக அரசு இழைத்திருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை என்பது மட்டுமின்றி, எல்லா பணியிடங்களிலும் ஒப்பந்த முறையிலும், குத்தகை அடிப்படையிலும் தான் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை. அதனால், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது என்று பெருமிதம் கொள்வதில்லை எந்த அர்த்தமும் இல்லை.

    மூச்சுக்கு முன்னூறு முறை சமூக நீதி என்று பெருமை பேசிக் கொள்ளும் மு.க.ஸ்டாலினுக்கு உண்மையாகவே சமூகநீதியிலும், இளைஞர் நலனிலும் அக்கறை இருந்தால், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6.50 லட்சம் காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • ஒரே தூணில் 4 ரெயில்கள் வந்து செல்லும் வகையில் ஒரு லூப் லைன் அமைக்கப்பட உள்ளது.
    • 5 தண்டவாளங்கள் இரட்டை அடுக்குகளாக அமைக்கப்படுகின்றன

    சென்னை:

    உலகிலேயே முதல்முறையாக, சென்னையில் ஒரே தூணில் 5 ரெயில் தண்டவாளங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தில் ஒரே தூணில் 5 ரெயில் தண்டவாளங்களுடன் மெட்ரோ திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் திட்ட இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

    குறுகிய பாதையான வடபழனி முதல் போரூர் வரை உள்ள 4 கி.மீ. தொலைவுக்கு ஒரே தூணில் 4 ரெயில்கள் வந்து செல்லவும், ரெயில்கள் இடமாற்றிக் கொள்ள ஒரு லூப் லைனும் சேர்ந்து 5 தண்டவாளங்கள் இரட்டை அடுக்குகளாக அமைக்கப்படுவதாக அவர் கூறினார்.

    • ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும்.
    • 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக அதிகாலையில் உற்சவர் சன்னதியில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.

    அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தெப்ப திருவிழாவிற்கான கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.

    இதையொட்டி கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மா இலை, சந்தனம், குங்குமம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    வருகிற பிப்ரவரி 6-ந்தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத்தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந்தேதி காலையில் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருக்கும் மிதவை தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுவார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து அருள்பாலிப்பார்.

    • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
    • சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விடைபெற்றுள்ள நிலையில், நில நடுக்கோட்டையொட்டிய வங்கக் கடல் பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக நாளை (வியாழக்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே நாளில் வட தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை மறுநாள் (31-ந்தேதி) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    பிப்ரவரி 1 மற்றும் 2-ந்தேதிகளிலும் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை நகரைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் பனிமூட்டம் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
    • இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் தினமும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் பவானி, காவிரி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி பரிகாரத் தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    மேலும் இங்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி வருகிறார்கள். அமாவாசை, பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    குறிப்பாக ஐப்பசி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை உள்பட ஒவ்வொரு மாத த்தில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் பலர் வந்து தங்கள் குடும்ப த்தில் இறந்த முன்னோ ர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடு தல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் இங்கு செய்யப்படுகிறது.

    இதனால் பவானி கூடுதுறைக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், உள்ளூர், வெளியூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து பல்வேறு பரிகாரங்கள் செய்து வருகிறார்கள். அதே போல் கர்நாடகா, ஆந்திரா உள்பட வெளி மாநில பக்தர்கள் ஏராளமான வர்கள் வந்து புனித நீராடி பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) தை மாத அமாவாசை தினத்தை யொட்டி பவானி சங்கமே ஸ்வரர் கோவில் கூடுதுறை பின்பகுதியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் கூடுதுறைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சேலம்,நாமக்கல், கரூர், கோவை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காலை முதலே பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பல்வேறு பரிகார பூஜைகள் செய்து விட்டு சென்றனர். இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

    இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தனி த்தனியாக குளித்து விட்டு பரிகார பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சங்கமேஸ்வரரை வழிபாடு செய்து விட்டு சென்றனர்.

    தை அமாவாசை தின த்தை முன்னிட்டு அங்கு தற்காலிக இரும்பு தகர செட் அமைக்கப்பட்ட இடங்களில் இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்தனர்.

    பவானி போலீசார் சிசி டிவி கேமராக்கள் பொரு த்தப்பட்டு குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பாது காப்பு பணியில் பவானி மற்றும் சித்தோடு, அம்மா பேட்டை, அந்தியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வரு கிறார்கள்.


    இதேபோல் அம்மாபேட்டை காவிரி படித்துறையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.

    மேலும் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கும் திதி கொடுத்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் திருமணம் ஆகாத இளம் பெண்கள், வாலிபர்கள் அதிகளவில் வந்து ஆற்றில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்தனர். மேலும் பலர் பல்வேறு பரிகாரங்களையும் செய்து விட்டு சென்றனர்.

    இதையடுத்து கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு சென்றனர். இதனால் அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் நகரின் பல பகுதிகளைில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் முன்னோ ர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பரிகார பூஜைகள் செய்து விட்டு சென்றனர்.

    ×