என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அவரது தாய் முன்னிலையில் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • வெளியே வந்த அந்த இளம்பெண் திடீரென வாந்தி எடுத்தார்.

    புதுச்சேரி:

    கும்பகோணத்தைச் சேர்ந்த 24 வயது என்ஜினீயரிங் பட்டதாரி பெண். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தனியார் விடுதியில் தங்கி சுத்துக்கேணியில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி இரவு விடுதியில் இருந்து வெளியேறிய அவர் திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு விடுதி நிர்வாகம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் கோரிமேடு போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை தேடி வந்தனர். அந்த பெண் மதுரைக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் செல்போனில் பேசி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

    போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அவரது தாய் முன்னிலையில் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது இளம்பெண் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் இளம்பெண் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெண் போலீசார் கழிவறை கதவை தட்டி அந்த பெண்ணை வெளியே வர செய்தனர். அப்போது வெளியே வந்த அந்த இளம்பெண் திடீரென வாந்தி எடுத்தார்.

    விசாரணையில் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை இளம்பெண் குடித்தது தெரிய வந்தது. மாயமானது குறித்து தாய் முன்பு போலீசார் விசாரணை நடத்தியதால் அவமானத்தில் ஆசிட் குடித்ததாக அந்த இளம்பெண் கூறினார்.

    இதையடுத்து போலீஸ் வாகனம் மூலம் அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் விசாரணையின்போது, இளம்பெண் ஆசிட் குடித்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நேற்று இரவு இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தொடக்கத்தில் ஒரு சில நாட்கள் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை பெய்ய வில்லை.

    அதேநேரத்தில் தீபாவளியன்று கனமழை பெய்தது. இதன்பிறகு மீண்டும் பெரியளவில் மழை பெய்யவில்லை. வழக்கம் போல் வெயில் அடித்து வந்தது.

    இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரி வித்தது. இதனால் தமிழகம், புதுவை, ஆந்திரா கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என் தெரிவிக்கப் பட்டிருந்தது.

    இதையடுத்து நேற்றைய தினம் புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியது. காலை முதலே லேசான குளிர்ந்த காற்றுடன் வானம் மப்பும், மந்தார முமாக இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாலை 4 மணிக்கு லேசான மழை பெய்தது.

    இதன்பிறகு இரவு 10 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை விடிய விடிய தொடர்ந்தது. இதனால் நகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியது. ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், எழில் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கியுள்ளது.

    விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள லாஸ் பேட்டை, கருவடிக்குப்பம், கிருஷ்ணா நகர், கோரிமேடு ஆகிய பகுதிகளில் தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

    இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வானம் இருண்டு கருமேக கூட்டத்துடன் காணப்படுகிறது. வெளிச்சமே இல்லை. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன.

    இதேபோல காரைக் காலிலும் கனமழை பெய்தது. மழை காரணமாக காரைக்கால் மாவட்ட அரசு, தனியார் பள்ளி, கல்லூரி களுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    புதுவையில் தொடர் மழை பெய்தாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மழையில் நனைந்த படியே மிகுந்த அவதியுடன் சென்றனர்.

    • பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் அதிக விலைக்கு வாங்குவதாக விளம்பரம் வந்தது.
    • ரூ. 4 லட்சத்திற்கான முதலில் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனுாரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 55). இவரது பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதிக விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம் என விளம்பரம் வந்தது.

    இதனை பார்த்த ராஜேஷ் அதில் இருந்த தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் உங்களிடம் எந்த காலத்து நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு உள்ளது என கேட் டுள்ளார். அதற்கு ராஜேஷ் 50 வருடத்திற்கு முந்தைய 5 ரூபாய் நோட்டு இருப்பதாக தெரிவித்தார்.

    அதற்கு அந்த நபர் ரூபாய் நோட்டை போட்டோ எடுத்து அனுப்புமாறும் அது பழைய நோட்டுத்தானா என பார்த்து உறுதி செய்து கொள்வதாக தெரிவித்தார்.

    அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த நபர் இது பழங்கால நோட்டு தான் இதை நாங்கள் ரூ.4 லட்சத்திற்கு எடுத்து கொள்கிறோம் என கூறி, பின்னர் ரூ. 4 லட்சத்திற்கான முதலில் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதை நம்பிய ராஜேஷ் ரூ. 35 ஆயிரம் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அதன்பின் எதிர் முனையில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அதன் பிறகு தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
    • ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    புதுச்சேரி:

    தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பொதுமக்கள் புத்தாடை அணிந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது வழக்கமாகும்.

    இதேபோல் மது பிரியர் கள் பண்டிகை காலங்கள் என்றாலே விதவிதமான மதுபானங்களை வாங்கி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மதுகுடித்து கொண்டாடு வார்கள்.

    புதுச்சேரி என்றாலே மதுவுக்கு பெயர் பெற்றதாகும். பிரெஞ்சு கலாசாரம் இங்கு காணப்படுவதால் பலவிதமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் தொடர் விடுமுறை நாட்களில் புதுவைக்கு வந்து நண்பர்களோடு மது குடித்து கும்மாளம் போடுவது வழக்கம்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை புதுச்சேரி, காரைக்காலில் 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதாவது தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான கடந்த 30-ந் தேதி முதல் நேற்று 3-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

    அதுபோல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த விடுமுறையை கொண்டாட வெளி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் அதிகளவில் புதுவையில் குவிந்தனர். இதன்காரணமாக மது விற்பனையும் படுஜோராக நடந்தது.

    புதுவை, காரைக்காலில், வழக்கமான நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.4½ கோடிக்கு மது விற்பனை நடைபெறும். வார இறுதி நாட்களில் இது சற்று உயரும்.

    தற்போது தொடர் விடுமுறை என்பதால் கடந்த 5 நாட்களில் புதுவை மற்றும் காரைக்காலில் மது விற்பனை 3 மடங்குக்கு மேல் உயர்ந்தது. ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    • புதுவையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
    • முதலமைச்சர் ரங்கசாமியும், த.வெ.க. தலைவரும் கூட்டணி குறித்து அறிவிக்கட்டும், அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும்.

    புதுச்சேரி:

    த.வெ.க. தலைவர் விஜய்க்கும், புதுவை மாநில முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமிக்கும் இடையே வயதை தாண்டிய புரிதலும், நட்பும் உள்ளது.

    விஜய் கட்சி தொடங்கும் முன்பும், மாநாட்டுக்கு முன்பும் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியிடம் சில ஆலோசனைகளை பெற்றதாக கூறப்படுகிறது.

    இதனால் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுவையில் த.வெ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுவையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக புதுவை பா.ஜ.க. அமைச்சர் நமச்சிவாயத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கூட்டணி அமைப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அல்லது த.வெ.க. தலைவர் விஜய் ஏதாவது கூறியுள்ளார்களா? பொதுவாக தேர்தல் குறித்து மக்களிடம் பல்வேறு கருத்துக்கள், எதிர்பார்ப்புகள் நிலவுவது வழக்கம். அது பொய்யாகவும் இருக்கலாம், உண்மையாகவும் இருக்கலாம்.

    அந்த கருத்து யார் வாயால் கூறப்படுகிறது என்பதுதான் முக்கியம். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் கூறினால்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமியும், த.வெ.க. தலைவர் விஜயும் கூட்டணி குறித்து அறிவிக்கட்டும், அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும். வதந்திகளுக்கு பதில் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புனிதமான கோவிலில் மட்டன், சிக்கன் பிரியாணி வழங்கியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
    • கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி நகர பகுதியில் பிரசித்தி பெற்ற இந்து கோவில் உள்ளது. இக்கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் தீபாவளி பண்டிகையொட்டி நிர்வாகத்திடம், துணி மணிகள், பட்டாசுகள் கேட்டனர்.

    அவர்களை மகிழ்ச்சி படுத்த நினைத்த கோவில் நிர்வாகம், மட்டன், சிக்கன் பிரியாணி மற்றும் புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது.

    புனிதமான கோவிலில் மட்டன், சிக்கன் பிரியாணி வழங்கியது தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு ஆதாரத்துடன் புகார் சென்றது.

    இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன் விசாரிக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதேபோல் அக்கோவிலில் இருந்த சில பொருட்களும் களவாடப்பட்டு யாருக்கும் தெரியாமல் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாகவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
    • குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நகர பகுதி மற்றும் கிராம பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை சேகரிக்க 2 தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    அதன்படி நாள் ஒன்றுக்கு 2 நிறுவனங்களும் சராசரியாக 500 முதல் 550 டன் வரை குப்பைகளை சேகரித்து குருமாம்பேட் குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர். விழாக்காலங்களில் அதிகளவில் குப்பைகள் வருவது வழக்கம்.

    அதன்படி நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இந்த நிலையில் தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் பேப்பர்கள், அட்டை பெட்டிகள் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் சாலைகளிலும், வீதிகளிலும் சிதறி கிடந்தது.

    ஆகையால் அந்த குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி நேற்று ஒரு நாள் மட்டும் நகர பகுதியில் 450 டன் குப்பையும், கிராமப்பகுதியில் 200 டன் குப்பையும் என மொத்தம் 650 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குருமாம்பேட் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது.

    தீபாவளி பண்டிகையையொட்டி ஒரே நாளில் 100 டன் குப்பைகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயண கட்டணம் முன்பதிவு உள்பட ரூ.700 ஆகும்.
    • திருச்செந்தூரில் இருந்து காரைக்காலுக்கு மறுநாள் 7-ந் தேதி இரவு 9.30 மணிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் இருந்து புதுச்சேரி அரசின் பி.ஆர். டி.சி., சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவையொட்டி புதுச்சேரியில் இருந்து திருச்செந்துாருக்கு 6-ந் தேதி இரவு 7 மணிக்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. பயண கட்டணம் முன்பதிவு உள்பட ரூ.700 ஆகும்.

    இதேபோல் மறுநாள் 7-ந் தேதி திருச்செந்தூரில் இருந்து புதுச்சேரிக்கு பி.ஆர்.டி.சி., பஸ் இரவு 9:30 மணிக்கு புறப்படுகிறது. பயண கட்டணம், முன்பதிவுடன் ரூ.700 ஆகும். இந்த பஸ் விழுப்புரம், திருச்சி மதுரை, தூத்துக்குடி வழித்தடத்தில் செல்லும். காரைக்காலில் இருந்தும் திருச்செந்தூருக்கு 6-ந் தேதி இரவு 9 மணிக்கு பி.ஆர்.டி.சி., பஸ் இயக்கப்படுகிறது.

    பயண கட்டணம், முன்பதிவு ரூ.500 ஆகும். இதே போல் திருச்செந்தூரில் இருந்து காரைக்காலுக்கு மறுநாள் 7-ந் தேதி இரவு 9.30 மணிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ் பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக இயக்கப்படும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பஸ் நிலையத்தில் உள்ள பி.ஆர்.டி.சி., பயண சீட்டு முன் பதிவு மையம் மற்றும் பஸ் இந்தியா செயலி வழியாக பக்தர்கள் திருச்செந்தூர் மட்டும் செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம் என பி.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • திருநங்கை பூமிகா, தங்களுக்கு இந்த வாய்ப்பை அளித்த காரைக்கால் மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காரைக்காலில் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு குடிமைப் பொருள் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என 20க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் காமராஜர் அரசு வளாக கட்டிடத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

     

    வழக்கமாக அதிகாரிகள் தேசியக் கொடி ஏற்றும் நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அவர்களது உத்தரவின் பேரில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பூமிகா என்ற திருநங்கை, தேசியக் கொடி ஏற்றி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் கலந்துகொண்டு திருநங்கை பூமிகாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் திருநங்கை பூமிகா, தங்களுக்கு இந்த வாய்ப்பை அளித்த காரைக்கால் மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.

    • கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியை புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டது.
    • அரசு சார்பில் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரி:

    இந்தியாவில் வணிகம் செய்ய இடங்களை தேடிய பிரெஞ்சு நாட்டினர் 1673-ம் ஆண்டு புதுச்சேரியில் காலூன்றினர். அந்த ஆண்டு, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தனது வணிகத்தையும் தொடங்கியது.

    அதன்பின் 1721-ல் மாகியையும் கையகப்படுத்திய இவர்கள் அடுத்தடுத்து ஏனாமையும், காரைக்காலையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.

    இந்தியா முழுவதும் விடுதலைப் போராட்டங்கள் அதிகளவில் வெடித்ததால் 1947-ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு விடுதலை அளித்தனர். ஆனால், புதுச்சேரி மட்டும் தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. வெளியேறவும் இல்லை.

    இதனால் சுதந்திர கனல் புதுச்சேரியில் கொழுந்து விட்டு எறிந்தது. பிரெஞ்சுக்காரர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று புதுச்சேரி பிரெஞ்சு இந்திய போராட்ட வீரர்களும் பொதுமக்களும் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒருவழியாக பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி சுதந்திரம் பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையடுத்து புதுச்சேரி கவர்னர் மாளிகையில் 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி பிரெஞ்சு கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

    இருப்பினும் இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்ததற்கான ஒப்பந்தத்திற்கு 8 ஆண்டுகளுக்கு பின் 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதியன்று பிரெஞ்சு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதுவரை நவம்பர் 1-ந் தேதியன்று புதுச்சேரி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வந்தது. முழுமையாக அதிகாரம் பெற்றதால், 1962-ம் ஆண்டுக்கு பின் புதுச்சேரியின் சுதந்திர தினம் நவம்பர் 1-ந் தேதிக்கு பதிலாக ஆகஸ்டு 16-ந் தேதியாக மாற்றப்பட்டது.

    ஆனால், அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்களும் புதுச்சேரி பிரெஞ்சிந்திய மக்களும் நவம்பர் 1-ந் தேதியே புதுச்சேரியின் விடுதலை தினமாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    60 ஆண்டு காலம் அவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களினால், கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியை புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி அரசு சார்பில் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றினார். இதனை தொடர்ந்து நடந்த போலீசார் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ரங்கசாமி ஏற்றுக்கொண்டு புதுச்சேரி விடுதலை நாள் உரையாற்றினார்.

    • புதுவை ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் உதவும்படி கவர்னர் கைலாஷ்நாதன் செயல்பாடு அமைந்துள்ளது.
    • அமைதியான முறையில் கவர்னரின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.

    புதுச்சேரி:

    சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாக புதுச்சேரி இருந்தாலும், புதுச்சேரி அரசு என்றால் அது கவர்னரைத்தான் குறிக்கும்.

    கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் அவையாகத்தான் சட்டமன்றம் விளங்குகிறது. இதனால் சட்டமன்றத்தில் முடிவு எடுத்தாலும், கவர்னரின் அனுமதி பெற்றுத்தான் திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்ற முடியும். இதனால்தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

    இத்தனை அதிகாரங்கள் இருந்தாலும், புதுச்சேரிக்கு வரும் பெரும்பாலான கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளில் தலையிடுவதில்லை. அரசின் திட்டங்களுக்கு அனுமதி அளித்து வந்தனர். இருப்பினும் ஒரு சில கவர்னர்கள் தங்களின் அதிகாரத்தை வெளிப்படுத்தினர்.

    அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் உருவாகும். இதுபோலத்தான் 2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசுக்கும், அப்போதைய கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    அரசின் பல திட்டங்களுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் அரசு நிர்வாகமே அதிகாரிகள் இரண்டாக பிரிந்ததால் ஸ்தம்பித்தது. கவர்னர் மாளிகை முன்பு கருப்பு சட்டை அணிந்து முதலமைச்சராக இருந்த நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    இதன் பின் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி பதவியேற்றது. அப்போது புதுச்சேரி பொறுப்பு கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தார்.

    தமிழிசை அரசுக்கு சாதகமாக செயல்பட்டாலும், அவர் நேரடியாக மக்களை சந்திப்பது, குறைகேட்பது, நிர்வாகத்தில் தலையிடுவது என்பது ஆட்சியாளர்களுக்கு அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியது.

    புதிய சட்டசபை, இலவச அரிசி உட்பட திட்டங்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுப்பியதால் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது.

    இதையடுத்து தேர்தலில் போட்டியிட கவர்னர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார். இதன்பின் பொறுப்பு கவர்னராக குறுகிய காலம் சி.பி.ராதாகிருஷ்ணன் இருந்தார்.

    தொடர்ந்து பிரதமர் மோடியுடன் நேரடியாக தொடர்பில் உள்ள கைலாஷ்நாதன் புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் மத்திய அரசில் செல்வாக்கு மிக்கவர் என்பதால், ஆட்சியாளர்களிடம் அச்ச உணர்வு இருந்தது. ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக, தனது செல்வாக்கை புதுவை ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் உதவும்படி கவர்னர் கைலாஷ்நாதன் செயல்பாடு அமைந்துள்ளது.

    மீண்டும் வழங்கவே முடியாது என்ற நிலையில் இருந்த இலவச அரிசி திட்டத்துக்கு மத்திய அரசிடம் பேசி, கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் பெற்று தந்துள்ளார். அதேபோல தீபாவளி பண்டிகைக்கு 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை, பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரமாக சம்பளம் உயர்வு, அரசின் காலி பணியிடங்களை நிரப்ப ஆக்ஷன் பிளான், புதிய சட்டசபை வளாகம் என அமைதியான முறையில் கவர்னரின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.

    இது புதுவை ஆட்சியாளர்களிடையும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வரவேற்பை வெளிப்படுத்தும்விதமாக கவர்னர் கைலாஷ்நாதனை வாழ்த்தியும், பாராட்டியும் புதுச்சேரி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    தங்கள் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்திய புதுச்சேரி கவர்னர்கள் சேத்திலால், சந்திராவதி, மல்கானி ஆகியோர் புதுச்சேரி மக்களின் அன்பை பெற்றவர்கள்.

    அவர்கள் வரிசையில் கவர்னர் கைலாஷ்நாதனும் இடம்பெறும் வாய்ப்பு உருவாகி வருகிறது. 

    • விஜய் புதிய அரசியல்பாதை அமைப்பார் என எதிர்பார்த்தோம்.
    • பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பார்களையும் அகற்றுவோம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    த.வெ.க. முதல் மாநாடு நடத்திய விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். மாநாட்டில் அவர் எந்த புதிய கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் கூறிவரும் மதவாதம் ஒழிப்பு, நீட் ஒழிப்பு, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றைத்தான் கூறியுள்ளார்.

    ஏற்கனவே 2 ஆண்டுகளாக ராகுல்காந்தி பல்வேறு கூட்டங்களில் பேசிய கருத்துக்கள்தான். விஜய் புதிய அரசியல்பாதை அமைப்பார் என எதிர்பார்த்தோம், ஆனால் அது இல்லை. இருப்பினும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இறுதி முடிவு எடுக்க வேண்டியது மக்கள்தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

    புதுச்சேரியில் விடிய விடிய இயங்கிய ரெஸ்டோபாரை அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் சேர்ந்து அவர்களை விரட்டி மூடியுள்ளனர். பள்ளி, கல்லூரி குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரெஸ்டோபார்களை அகற்ற வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறோம்.

    பார்களை குறைக்க வேண்டும் என்றும் கூறி வருகிறோம். கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தும் ரெஸ்டோ பார்களுக்கு தொடர்ந்து புதுவை அரசு அனுமதி அளித்து வருகிறது. 2026 இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றால் அனைத்து ரெஸ்டோபார்களும் மூடப்படும். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பார்களையும் அகற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×