என் மலர்
மகாராஷ்டிரா
- மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நேற்று முன்தினம் நீக்கியது.
- குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.433 வரை அதிகரித்து இருந்தது.
மும்பை:
மத்திய அரசு கடந்த ஆண்டு பாசுமதி அரிசி, வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. டன் வெங்காயம் 550 அமெரிக்க டாலருக்கு குறைவாக (ரூ.46 ஆயிரம்) ஏற்றுமதி செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது.
வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிராவில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன் தாக்கம் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எதிரொலித்தது. வெங்காய உற்பத்தி அதிகம் உள்ள நாசிக் உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் தோல்வியை சந்தித்தன. விரைவில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தநிலையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நேற்று முன்தினம் நீக்கியது.
இதன் எதிரொலியாக இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக் லசல்காவ் சந்தையில் வெங்காய விலை உயர்ந்தது. குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.433 வரை அதிகரித்து இருந்தது. நேற்று லசல்காவ் சந்தைக்கு 425 வாகனங்களில் 5 ஆயிரத்து 182 குவிண்டால் வெங்காயம் வந்தது. குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.3 ஆயிரத்து 700 முதல் ரூ.4 ஆயிரத்து 951 வரை ஏலம்போனது. சராசரியாக ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 700 ஆக இருந்தது.
நேற்று முன்தினம் வெங்காயத்தின் சராசரி விலை குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரத்து 267 ஆக இருந்தது.
வெங்காய விலை உயர்வு குறித்து லசல்காவ் சந்தை தலைவர் பாலாசாகேப் ஷிர்சாகர் கூறுகையில், "வெங்காய ஏற்றுமதிக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த குறைந்தபட்ச விலை கட்டுப்பாட்டை நீக்கியது நல்ல முடிவு. தற்போது சந்தை நிலவரம் அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் தற்போது விவசாயிகளிடம் வெங்காயம் இல்லை. இதேபோல ஏற்றுமதி கட்டணமும் 40 சதவீதத்தில் இருந்து 20 ஆக எப்போது குறையும் என்பதிலும் தெளிவான தகவல் இல்லை" என்றார்.
- பிரதமர் ஆவது என் வாழ்வின் குறிக்கோள் அல்ல என்றார்.
- நம்பிக்கைக்கும், எனது அமைப்புக்கும் விசுவாசமாக இருக்கிறேன் என தெரிவித்தார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் பதவிக்கான போட்டியில் ஒரு அரசியல் தலைவர் என்னை ஆதரிக்க முன்வந்தார். ஆனால் அவரது அந்த லட்சியத்திற்கு நான் செவி சாய்க்கவில்லை.
எனக்கு ஒரு சம்பவம் நினைவிருக்கிறது. நான் யாரையும் பெயரிட மாட்டேன். நீங்கள் பிரதமராகப் போகிறீர்கள் என்றால் நாங்கள் ஆதரவு அளிப்போம் என அந்த நபர் கூறினார்.
நீங்கள் ஏன் என்னை ஆதரிக்க வேண்டும், உங்கள் ஆதரவை நான் ஏன் எடுக்கவேண்டும் என்று கேட்டேன். பிரதமர் ஆவது என் வாழ்வின் குறிக்கோள் அல்ல. எனது நம்பிக்கைக்கும் எனது அமைப்புக்கும் நான் விசுவாசமாக இருக்கிறேன், அதற்காக நான் சமரசம் செய்யப் போவதில்லை என தெரிவித்தார்.
இந்த உரையாடல் எப்போது நடந்தது என்பதை நிதின் கட்கரி குறிப்பிடவில்லை.
- தினமும் காலை, மாலை இருவேளையிலும் விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்று வழிபாடு செய்கின்றனர்.
- 8 வினாடிகளே ஓடும் வீடியோவை பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 7-ந்தேதி முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். தினமும் காலை, மாலை இருவேளையிலும் விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்று வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில், விநாயகர் சிலையை வழிபடும் வி.ஐ.பி.களுக்கு சிறப்பான கவனிப்பும், பொது வரிசையில் நின்று வழிபட்டவர்களை கழுத்தை பிடித்து தள்ளும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பை லால்பாக் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வழிபடும் விஐபிகளுக்கு சிறப்பான கவனிப்பும், பொது வரிசையில் நின்று வழிபட்டவர்களை கழுத்தை பிடித்து தள்ளுகின்றன.
8 வினாடிகளே ஓடும் வீடியோவை பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
- மும்பை- கோலாப்பூர் இடையே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- நாக்பூர்-செகந்திரபாத், புனே-ஹுப்ளி இடையேயும் 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
மும்பை:
மும்பையில் இருந்து புனே, ஷீரடி, சோலாப்பூர், குஜராத் மாநிலம் காந்திநகர், அகமதாபாத் மற்றும் கோவா இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 6 வந்தே பாரத் ரெயில்கள் இயங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 7-வதாக மும்பை-கோலாப்பூர் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதுபற்றி மத்திய ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது மும்பை- கோலாப்பூர் இடையே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சுமார் 518 கி.மீ. தூரத்தை 10 மணி நேரத்தில் கடந்து செல்கிறது. இந்த வழித்தடத்தில் விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக பயண நேரம் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பான சரியான அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. புனே-மிராஜ் இடையே இரட்டை ரெயில் வழிப்பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்ற பின்னர் அந்த வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்படும்.
மேலும் நாக்பூர்-செகந்திரபாத், புனே-ஹுப்ளி இடையேயும் 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 19-ம் தேதி தொடங்குகிறது.
- சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் 58 ரன்கள் அடித்தால் விராட் கோலி புதிய உலக சாதனை படைப்பார்.
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 591 இன்னிங்ஸ்களில் விளையாடி 26,942 ரன்கள் குவித்துள்ளார். இந்தத் தொடரில் கோலி 58 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை படைப்பார்.
இதற்குமுன் சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள் அடித்ததே உலக சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்கு காசு கொடுக்க UPI QR code ஸ்கெனரை எடுத்து வரும்படி வெயிட்டரிடம் கூறியுள்ளனர்.
- கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் காருக்குளேயே அடைத்து வைத்துள்ளனர்
மகாராஷ்டிராவில் சாப்பிட்ட உணவுக்குக் காசு கேட்ட வெயிட்டரை காரில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு தரதரவென இழுத்து சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் பீட்[Beed] மாவட்டத்தில் மெஹ்கர் பந்த்ராபூர் பால்கி நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் காரில் வந்த மூவர் உணவருந்தியுள்ளனர். சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்கு காசு கொடுக்க UPI QR code ஸ்கெனரை எடுத்து வரும்படி வெயிட்டரிடம் கூறியுள்ளனர்.
அவர் வருவதற்குள் நைசாக அங்கிருந்து நழுவிய மூவரும் தங்களின் காரில் ஏறி தப்ப முயன்றனர். அவர்கள் காரில் ஏறும் சமயத்தில் அவர்களை பில்லுக்கு காசு கேட்டு அந்த வெயிட்டர் தடுக்க முயன்றுள்ளார். காரின் பக்கவாட்டு கதவு வழியே வெயிட்டரின் கையை பிடித்தபடி சுமார் 1 கிலோமீட்டர் அவரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 1 கிலோமீட்டருக்கு வெயிட்டரை இழுத்துசென்ற அவர்கள் காரை நிறுத்திவிட்டு அவரை அடித்துத் துன்புறுத்தி அவரின் பாக்கெட்டில் இருந்த 11,500 ரூபாயை திருடிக்கொண்டு கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் காருக்குளேயே அடைத்து வைத்து அதன்பின் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தப்பிச் சென்ற மூவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
- இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணிக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை.
- ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்காத காரணத்திற்காக ஹெச்.டி.எஃப்.சி. வங்கிற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்த ஆர்பிஐ, ஆக்சிஸ் வங்கிற்கு 1.92 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
டெபாசிட் பணத்திற்கான வட்டி விகிதம், கடன் வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஏஜென்ட், கஸ்டமர் சர்வீஸ் ஆகியவற்றில் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு ஹெச்.டி.எஃப்.சி. வங்கி இணங்காதது தெரியவந்தது. 2002 மார்ச் 31, வங்கியின் நிதி நிலை தொடர்பாக ஆர்பிஐ ஆய்வில் இந்த குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது.
ஹெச்.டி.எஃப்.சி. இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணிக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதை உறுதி செய்வதில் வங்கி தோல்வியடைந்து விட்டதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி தகுதியற்ற நிறுவனங்களுக்கு கணக்கு தொடங்கியது. தனிப்பட்ட வாடிக்கையாளர் அடையாளக் குறியீட்டிற்குப் பதிலாக பல வாடிக்கையாளர் அடையாளக் குறியீடுகளை வழங்கியது. 1.60 லட்சம் வரையிலான விவசாய கடன்களுக்கு பிணையம் (ஓரிரு வழக்கில்) ஏற்றுக் கொண்டது உள்ளிட்ட காரணத்திற்காக அபராதம் விதித்துள்ளது. மேலும், ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. இது வங்கி நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படாத வணிகமாகும்.
இந்த நடவடிக்கையானது சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விகாஸ் சேத்திக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
- தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் சேத்தி மரணமடைந்தார்.
செப்டம்பர் 7 ஆம் தேதி நடிகர் விகாஸ் சேத்தி மாரடைப்பால் உயிரிழந்தார். 48 வயதான அவர் பாலிவுட்டில் துணை காதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.
நாசிக் மாவட்டத்திற்கு குடும்ப நிகழ்விற்காக விகாஸ் சேத்தியும் அவரது மனைவி ஜான்வி சேத்தியும் சென்றுள்ளனர். அப்போது அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஆனால் விகாஸ் சேத்தி மருத்துவமனைக்கு செல்லவில்லை. பின்னர் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் சேத்தி மரணமடைந்தார்.
விகாஸ் சேத்தியின் கடைசி தருணங்கள் குறித்து அவரது மனைவி ஜான்வி சேத்தி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், விகாஸ் சேத்தியின் இறுதி சடங்குகள் இன்று மும்பையில் நடைபெறும் என்று அவரது மனைவி தெரிவித்தார்.
- திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கர்ப்பமானார்.
- நிறைமாத கர்ப்பத்தில் இருந்த தீபிகா படுகோனே அண்மையில் போட்டோஷூட் எடுத்தார்.
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பத்தில் இருந்த தீபிகா படுகோனே அண்மையில் போட்டோஷூட் எடுத்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
நேற்று மாலை 5 மணியளவில் மும்பையின் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் தீபிகா அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அஜித் பவார் அணியைச் சேர்ந்த அமைச்சர் பாபா ஆத்ராம் என்பவரது மகள் பாக்கியஸ்ரீ சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு தாவ உள்ளார்
- எனது மகளையும் மருமகனையும் ஆற்றில் தூக்கி வீசுங்கள் என்று பாபா ஆத்ரம் கடுமையாக பேசியிருந்தார்.
மகாராட்டிர தேர்தல் நெருங்குவதை ஒட்டி துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத - பாஜக - ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம்பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. சித்தப்பா சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் தங்கள் பக்கம் வந்த அவரது அண்ணன் மகன் அஜித் பவாரின் நடவடிக்கைகளை பாஜக மேலிடம் சந்தேகக் கண்களோடு கவனித்து வருகிறது.
குறிப்பாக மக்களவைத் தேர்தலில் சரத் பவார் அணி சார்பில் இந்திய கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வென்ற சகோதரி சுப்ரியா சூலேவை எதிர்த்து தனது மனைவியை நிறுத்தியிருக்கக்கூடாது என்று அஜித் பவார் கூறியது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருவதை வெளிப்படையாக காட்டியது.
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர பாஜக கூட்டணி பின் தங்கியதற்கு அஜித் பவார் அணி தான் காரணம் என்ற சலசலப்பும் கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்து வருகிறது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்த அஜித் பவார் மகனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் குடும்பத்தை உடைத்தது பெரிய தவறு என்று அஜித் பவார் பொதுவெளியில் மீண்டும் வருத்தப்பட்டு உள்ளார்.
அஜித் பவார் அணியைச் சேர்ந்த அமைச்சர் பாபா ஆத்ராம் என்பவரது மகள் பாக்கியஸ்ரீ சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எனது மகளையும் மருமகனையும் ஆற்றில் தூக்கி வீசுங்கள் என்று பாபா ஆத்ரம் கடுமையாக பேசியிருந்தார். இந்நிலையில் கட்சிரோலி நகரில் நடந்த ஜனசம்மான் பேரணியில் கலந்துகொண்ட அஜித் பவார், ஒரு மகளை அவரது தந்தையை விட யாரும் அதிகமாக நேசிக்க மாட்டார்கள், உங்களை [பாக்கியஸ்ரீ] ஜில்லா பிரெசிடெண்டாக ஆக்கினார் உங்கள் தந்தை.
ஆனால் நீங்கள் இப்போது அவருடன் சண்டை போடுவது சரிதானா? உங்கள் தந்தைக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அவரை விட்டு செல்வது குடும்பத்தை உடைப்பது போன்றது, தனது சொந்த குடும்பத்தையே உடைக்கும் ஒருவரை இந்த சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. நானும் அதை அனுபவித்திருக்கிறேன், எனது தவறை நான் ஏற்றுகொண்டடேன் என்று தெரிவித்துள்ளார்.
சரத் பவாரை விட்டு வெளியேறியதைத் தவறு என்று அஜித் பாவர் கூறியுள்ளது பாஜக மேலிடத்தில் கொந்தளிப்பை எப்ராடுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
- பூஜாவின் யுபிஎஸ்சி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.
- இதை எதிர்த்து டெல்லி உய்ரநீதிமன்றத்தில் பூஜா பதில் மனு தாக்கல் செய்திருந்தார்
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஐஏஎஸ் பறிச்சி பெண் கலெக்டராக இருந்த பூஜா கெத்கர் காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் கலெக்டர் அறையை பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வில் தான் மாற்றுத்திறனாளி என போலியான சான்றிதழை சமர்ப்பித்தும் சாதிவாரி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்காக குடும்ப வருமானத்தை குறைத்தும் காட்டி முறைகேடுகளில் ஈடுபட்டு ஐஏஎஸ் ஆகியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவரை வேறு இடத்துக்கு மாநில அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டியை அமைத்தது.
இதற்கிடையே பூஜா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த புகாரில் தன்னை கைது செய்யாமல் இருக்கக்கோரி நீதிமன்றத்தில் பூஜா முன்ஜாமீன் கேட்டும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் யுபிஎஸ்சி முன் ஆஜராக மறுத்தத்ததாலும் அவர் மீது 30 புகார்கள் வரை இருப்பதாலும் பூஜாவின் யுபிஎஸ்சி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து டெல்லி உய்ரநீதிமன்றத்தில் பூஜா பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் யுபிஎஸ்சியால் உத்ராவிடப்பட்ட தகுதிநீக்கம் ஒரு மாதம் கழித்து தற்போது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன்படி பூஜா கெத்கரை ஐஏஎஸ் சேவையில் இருந்து நீக்கம் செய்து விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- ஷிண்டே சேனா தலைவர் மற்றும் பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- கோவிலுக்குள் செல்ல முயன்றவர்களை இருப்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
கோவில் வளாகத்திற்குள் சிலர் அனுமதிக்க மறுத்து, அவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தானேவில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தில் ஷிண்டே சேனா தலைவர் மற்றும் பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சாதி பாகுபாடு காரணமாக 25 வயது மாணவர் மற்றும் அவரது சமூகத்தை சேர்ந்த சிலருக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த கேட்ட போது ஷிண்டே சேனா தலைவர் மற்றும் பலர் ஒன்றுகூடி மாணவர் மற்றும் அவருடன் கோவிலுக்குள் செல்ல முயன்றவர்களை இருப்பு கம்பியால் தாக்கியதோடு, அவர்கள் மீது காலணியை வீசியுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் விகாஸ் ரெபேல் மற்றும் பலர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், கலவரம் தூண்டுதல் மற்றும் பல சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சிக்கியுள்ள நபர் ஒருவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று வேகிள் எஸ்டேட் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






