என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார்.
    • மக்களவை தேர்தலுக்குப் பிறகு மாநிலங்களை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 20-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியில் வொர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே களம் இறக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, ஆதித்யா தாக்கரேவை எதிர்த்து எம்.பி.யான மிலிந்த் தியோராவை களம் இறக்கியுள்ளது. மிலிந்த் தியோரா மாநிலங்களவை எம்.பி. ஆவார்.

    மலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. ஆனார்.

    தற்போதைய எம்.எல்.ஏ.வான ஆதித்யா தாக்கரேவுக்கு எதிராக மிலிந்த் தியோரா நிறுத்தப்பட்டுள்ளதால் வொர்லி தொகுதி மிகவும் போட்டிவாய்ந்த வி.ஐ.பி. தொகுதியாக மாறியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா நேற்று 20 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

    பா.ஜ.க. கட்சியின் மாநிலங்களவை எம்.பி. நாராயன் ரானேயின் மகன் நிலேஷ் ரானே கூடல் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அவரது இளைய சகோதரரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான நிதேஷே் ரானே கன்கவாளி தொகுதியில் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார்.

    • ரெயிலின் பொது பெட்டியில் ஏற பயணிகள் முண்டியடித்தபோது படுகாயம்.
    • காயமடைந்தவர்கள் பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா ரெயில் நிலையத்தில், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நோக்கிச் சென்ற ரெயிலில் பயணிகள் ஏற முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்தனர்.

    இதில், 7 பேரின் நிலை சீராக உள்ளதாகவும், இருவர் எலும்பு முறிவுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பாந்த்ரா ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில், நடைமேடையில் பெரும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. பாந்த்ராவிலிருந்து கோரக்பூருக்குச் செல்லும் ரயில் எண் 22921 நிலையத்தின் பிளாட்பாரம் எண் 1-க்கு ரெயில் வந்தது. அப்போது, ரெயிலில் விரைவாக ஏறுவதற்கு ரெயிலின் பொது பெட்டியில் ஏற பயணிகள் முண்டியடித்தனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பயணிகள் 9 பேர் படுகாயமடைந்தனர்.

    இதில், ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் மற்றும் பிற பயணிகள் தரையில் ரத்தக் காயங்களுடன் இருந்தவர்களை மீட்டு ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மேலும், ரெயில் நிலையத்தின் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு பயணிக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டது மற்றும் சில பயணிகளுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கிடையில், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
    • அப்போது அவர், எல்லையைப் பாதுகாப்பதே நமது முதன்மையான நோக்கம் என்றார்.

    மும்பை:

    சமீபத்தில் ரஷியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற இந்தியா, சீன பிரதமர்கள் எல்லை விவகாரம் தொடர்பாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன் அடிப்படையில், இருநாட்டு ராணுவத்தினரும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்கி உள்ளனர். இதனால் எல்லையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் உள்ள புனே பிளேம் பல்கலைக்கழகத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    எல்லையைப் பாதுகாப்பதே நமது முதன்மையான நோக்கமாகும். இது எல்லாம் ஒரு இரவில் நடந்துவிடாது. விரிவான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு அவசியம்.

    சீனா எல்லையில் படைகளை நிலைநிறுத்துவதற்கு பட்ஜெட்டில் 5 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டது. இதனால் கடும் குளிரிலும் நமது வலிமையைக் காட்ட முடிந்தது.

    எல்லையில் இயல்வு நிலை திரும்புவதற்கு மத்திய அரசு, ராணுவம் உள்ளிட்டவற்றின் கூட்டு முயற்சியே காரணமாக இருந்தது என தெரிவித்தார்.

    • 100 மதிப்பெண்களுக்கு 35 என்பது குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்காளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

    100 மதிப்பெண்களுக்கு 35 என்பது குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்காளாக தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆக குறைக்க மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.

    அம்மாநிலத்தில் நிறைய மாணவர்கள் 35 மதிப்பெண்கள் கூட எடுக்க முடியாமல் திணறுவதால் தேர்ச்சிபெறுவோர் விகிதம் குறைந்தவண்ணம் உள்ளது. பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்கள் 10 ஆம் வகுப்புக்கு பிறகு கல்வியை கைவிடுகிறனர். எனவே மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது.

    இதை சரிசெய்யும் வகையில் 10 ஆம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண்களை 35-ல் இருந்து 20ஆகக் குறைக்க மகாராஷ்டிர பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. ஆனாலும் இதன்படி அந்த மாணவர்களால் தொடர்ந்து கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளைப் படிக்க முடியாது.

    கலை, மானுடவியல் சார்ந்த படிப்புகளையே உயர்கல்வியில் அவர்கள் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும்போது இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீகாந்த் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து காட்டு யானையுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.
    • காட்டு யானை வருவதை அறிந்து தூரத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றனர்.

    செல்பி எடுக்க வேண்டும் என்ற மோகத்தில் பலரும் அபாயத்தை உணராமல் செல்பி எடுக்க முயன்ற தங்களது இன்னுயிரை இழக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற தான் செய்கிறது. அதுபோல தான் மகாராஷ்டிராவில் செல்பி எடுக்க முயன்றவரை காட்டு யானை தூக்கி போட்டு மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கட்சிரோலியில் உள்ள அபாபூர் வனப்பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து காட்டு யானையுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர்கள் காட்டு யானை வருவதை அறிந்து தூரத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றனர். ஆனால் காட்டு யானையோ அவர்களை விரட்டியது. இதில் 23 வயதான ஸ்ரீகாந்தை தூக்கி போட்டு மிதித்து கொன்றது. மற்ற இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    ஸ்ரீகாந்த் மற்றும் நண்பர்கள் ஆகிய மூவரும் கட்சிரோலி மாவட்டத்தில் கேபிள் பதிக்கும் பணிக்காக நவேகானில் இருந்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு கட்சிரோலி வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியே வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்தே இவர்களுக்கு காட்டு யானையுடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பாராமதி தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவார் போட்டி.
    • அஜித் பவாரின் இளைய சகோதரர் மகனை களம் இறக்கியுள்ளார் சரத் பவார்.

    மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள்.

    பா.ஜ.க. கூட்டணியில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளது. கடிகாரம் சின்னத்தை அஜித் பவார் பயன்படுத்திக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் பாரமதி தொதிகு பவார் குடும்பத்தின் குடும்ப தொகுதியா கருதப்படுகிறது. இந்த தொகுதியில் அஜித் பவார் போட்டியிடுகிறார். இவர் துணை முதல்வராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் அஜித் பவாருக்கு எதிராக பேரனை களம் இறக்கியுள்ளார் சரத் பவார். அஜித் பவாரின் இளைய சகோதரர் ஸ்ரீனிவாஸ். இவரது மகன் யுகேந்திர பவார். தற்போது பெரியப்பாவை எதிர்த்து யுகேந்திர பவார் பேட்டியிடுகிறார்.

    அஜித் பவார் தனது பெரியப்பாவான சரத் பவாரிடம் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றினார். தற்போது சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) என்ற பெயரில் புதுக்கட்சியை தொடங்கியுள்ளார்.

    • வீடியோவில் சிறுமி ஒருவர் பள்ளி சீருடையில் மொபட்டை வேகமாக ஓட்டி செல்கிறார்.
    • இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ இதுவரை 4 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி உள்ளது.

    சுமார் 10 வயதுள்ள சிறுமி, மொபட் ஓட்டி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சத்ரபதி சாம்பாஜிநகர் சாலையில் இந்த வீடியோ படம் பிடிக்கப்பட்டதாக தெரிகிறது.

    அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் பள்ளி சீருடையில் மொபட்டை வேகமாக ஓட்டி செல்கிறார். வண்டியின் பின்பக்க இருக்கையில் தந்தை அமர்ந்திருக்கிறார். சிறுமி ஹெல்மெட் எதுவும் அணியாமல் 'சிட்'டாக பறந்து செல்கிறார்.

    இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ இதுவரை 4 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி உள்ளது. கலவையான கருத்துக்களையும் பெற்றுள்ளது. சட்டப்படி இது சரியல்ல, குறைந்த வயதில் வாகனம் ஓட்டுவதும் மற்றும் பொறுப்பற்ற முறையில் குழந்தையின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்று பலர் குறிப்பிட்டனர். சிறுமி திறமையாக வாகனம் ஓட்டுவதாக சிலர் பாராட்டி பதிவிட்டனர்.



    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    மும்பை:

    இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் நியூசிலாந்தை திணறடித்தனர். அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கான்வே 76 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்னும் அடித்தனர்.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர்.

    இந்நிலையில், அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயனை (129 போட்டியில் 530 விக்கெட்) முந்தி 7வது இடம் பிடித்தார்.

    அஸ்வின் இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 531 விக்கெட் சாய்த்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் இலங்கையின் முரளிதரன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் வார்னே 2வது இடத்திலும், இங்கிலாந்தின்

    ஆண்டர்சன் 3வது இடத்திலும், இந்தியாவின் கும்ளே 4வது இடத்திலும் உள்ளனர்.

    • மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
    • மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 255 இடங்களுக்கு கூட்டணியில் உடன்பாடு எட்டியது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 255 இடங்களுக்கு கூட்டணியில் உடன்பாடு எட்டியது.

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி ஆகியவை தலா 85 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

    இதற்கிடையே, உத்தவ் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்டமாக 65 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு ஒர்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் முதல் கட்ட 48 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

    மாநில தலைவர் நானா படோலே சகோலி தொகுதியிலும், எதிர்க்கட்சி தலைவரான விஜய் வடேடிவார் பிரம்மபுரி தொகுதியிலும், முன்னாள் முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவான் கரோட் தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    • எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் என்சிபி கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித் பவாருக்கு ஒதுக்கியது
    • கடிக்காத சின்னத்தை முடக்க வேண்டும் என்று சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்

    அஜித் பவருக்கு ஒர்க் அவுட் ஆன டைம்.. கடிகார சின்னத்தை பயன்படுத்த தடை இல்லை - உச்சநீதிமன்றம்

    மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நவமபர் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆளும் மாகாயுதி [ பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.

    சரத் பவார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாத காங்கிரசை [என்சிபி] அவரது அண்ணன் மகன் அஜித் பவார் இரண்டாக உடைத்தார். 40 எம்.எல்.ஏ.க்கள் அஜித்பவாருக்கு ஆதரவு கொடுத்தனர். அஜித்பவாரின் ஆதரவாளர்கள் 9 பேருக்கு பா.ஜ.க., கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

     

    எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் என்சிபி கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித் பவாருக்கு ஒதுக்கி அவரது தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் சரத் பாவருக்கு வேறு சின்னம் ஒதுக்கி அவரது தலைமையிலான அணி தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) என்று அழைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.

     

    கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித்பவார் அணிக்குக் கொடுத்ததை எதிர்த்து சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். அம்மனு நிலுவையில் இருக்கும் நிலையில் அதன் மீதான தீர்ப்பு வரும்வரை அஜித் பவாரின் கடிக்காத சின்னத்தை முடக்க வேண்டும் என்று சரத்பவார் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், தீபான்கர் தத்தா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு,வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை அஜித் பாவர் கடிகார சின்னத்தை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.

     மேலும் சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கவே வழங்கப்பட்ட அறிவுறுதல்களின்படி கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் வாக்காளர்களைக் குழப்பி திசை திருப்பும் விதமான செயல்களில் ஈடுபட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

    எனவே நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் அஜித் பவார் கடிகார சின்னத்தைப் பயன்படுத்த உள்ளதால் இந்த தீர்ப்பு சரத் பவாருக்கு பின்னடைவாக அமைத்துள்ளது. முன்னதாக அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 38 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்டப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சித் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார். அறிவிக்கப்பட்ட 38 பேரில் 26 பேர் தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர்.

    • மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 255 இடங்களுக்கு கூட்டணியில் உடன்பாடு எட்டியது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 255 இடங்களுக்கு கூட்டணியில் உடன்பாடு எட்டியது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி ஆகியவை தலா 85 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், உத்தவ் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்டமாக 66 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு ஒர்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே போட்டியிடும் கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் உத்தவ் கட்சி சார்பில் ஆனந்த் திகேவின் தம்பி மகன் கேதார் திகே களமிறக்கப்படுகிறார்.

    முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் குரு ஆனந்த் திகே என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார்.
    • இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

    பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

    டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான வழக்கு கடந்த மே மாதம் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.

    இந்த தண்டனையை எதிர்த்து சோட்டா ராஜன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சோட்டா ராஜன் தனது மனுவில் கோரியிருந்தார்.

    இந்நிலையில், இந்த மனு இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு, சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனையை இடைநீக்கம் செய்து, அவருக்கு ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    ×