என் மலர்
மகாராஷ்டிரா
- மகா கும்பமேளாவில் பாசிமணி மாலை விற்றுக்கொண்டு இருந்தவர் மோனாலிசா.
- மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது.
மும்பை:
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் பாசிமணி மாலை விற்றுக்கொண்டு இருந்தவர் மோனாலிசா. தனது காந்த விழி கண்களால் சமூக வலைதளங்கள் வாயிலாக ஒரே நாளில் இந்திய அளவில் மோனாலிசா பிரபலம் அடைந்தார். அவருடன் செல்பி எடுப்பதற்கு ஏராளமானோர் திரண்டதால் வேறு வழியின்றி கும்பமேளாவை விட்டு சொந்த வீட்டிற்கு திரும்பினார்.
இந்நிலையில் மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. இந்தி திரை உலகில் பிரபல இயக்குநரான சனோஜ் மிஸ்ரா இயக்க இருக்கும் புதிய படமான 'தி டைரி ஆப் மணிப்பூர்' என்ற படத்தில் நடிப்பதற்கு மோனாலிசாவுக்கு வாய்ப்பு வழங்கினார்.
இதை அடுத்து மோனாலிசா மும்பைக்கு வரவழைக்கப்பட்டு அவரது தோற்றத்தை மாற்றியதுடன் சினிமா நடிப்புக்கென பயிற்சிகளும் வழங்கப்பட்டது. காந்த கண்ணழகி என வர்ணிக்கப்பட்ட மோனாலிசா சினிமா மட்டுமின்றி, நகைக்கடை திறப்பு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்றார்.
கேரளாவில் நடந்த பிரபல நகைக்கடை திறப்பு விழாவுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய மோனாலிசாவை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இந்நிலையில் மோனாலிசாவை நடிகையாக அறிமுகப்படுத்திய சனோஜ் மிஸ்ரா உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதனால் அந்த பெண் 3 முறை கருக்கலைப்பு செய்து உள்ளார். இந்நிலையில் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவுடன் சுற்றிக்கொண்டு இருந்ததால் அந்த பெண் சனோஜ் மிஸ்ரா மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் சனோஜ் மிஸ்ரா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதை அடுத்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ளார் மோனாலிசா. அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வருகின்றனர்.
கைதான சனோஜ் மிஸ்ரா வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் போலீசார் மோனாலிசாவிடம் சனோஜ் மிஸ்ரா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாரா? என விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
- வக்ஃபு மசோதா அரசியலமைப்பு எதிரானது. சட்டப்பிரிவு 14, 25 மற்றும் 26-ஐ முற்றிலுமாக மீறிவது ஆகும். இது அரசியலமைப்பு எதிரானது.
- மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் சந்திராபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தேவை.
பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசு வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் சந்திராபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தேவை.
இந்த நிலையில் அசாதுதீன் ஒவைசி கட்சியின் (AIMIM) தேசிய செய்தி தொடர்பாளர் வரிஸ் பதான் கூறியதாவது:-
இந்த மசோதா அரசியலமைப்பு எதிரானது. சட்டப்பிரிவு 14, 25 மற்றும் 26-ஐ முற்றிலுமாக மீறிவது ஆகும். இது அரசியலமைப்பு எதிரானது.
மக்களவையில் பாஜக-வுக்கு மெஜாரிட்டி இல்லை. அவர்கள் இந்த மசோதாவை நிறைவேற்ற விரும்பினால், அவர்களுக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் மற்றும் ஜெயந்த் சவுத்ரியிடம் இருந்து ஆதரவு தேவை. இவர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தால் இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் அவர்களை மன்னிக்கமாட்டார்கள்.
இவ்வாறு வரிஸ் பதான் தெரிவித்தார்.
- நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,390.41 புள்ளிகள் சரிந்தது
- இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 592.93 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வார வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டன.
ஆனால் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,390.41 புள்ளிகள் சரிந்து 76,024.51 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 353.654 புள்ளிகள் சரிந்து 23,165.70 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 592.93 புள்ளிகள் உயர்ந்து 76,671.44 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
நிஃப்டி 166.65 புள்ளிகள் உயர்ந்து 23,332.35 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
- தனியார் பயணிகள் பஸ் ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது மோதியது.
- விபத்தில் சிக்கிய 3 வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
புல்தானா:
மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில், காம்கான்-ஷேகான் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் முன்னால் சென்ற பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, பின்னால் இருந்து வந்த தனியார் பயணிகள் பஸ் ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது மோதியது.
3 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிய இந்த பயங்கர விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கிய 3 வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
மும்பை:
ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. வரும் 4-ம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் முடிவடைகிறது.
இந்த சூழலில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
பா.ஜ.க. எம்பிக்கள் அனைவரும் நாள் முழுவதும் அவையில் இருக்க வேண்டுமென பா.ஜ.க. கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வக்பு திருத்த மசோதா நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இப்போது உத்தவ் பாளாசாகேப் தாக்கரேவின் சிவசேனா, இந்து சாம்ராட் பாளாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுமா அல்லது ராகுல் காந்தியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடருமா என பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.
- மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் அமைக்கப்பட்டது.
- பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டும் மொழி மற்றும் மதம் குறித்த அரசியல் ஏன் நடக்கிறது என்றார்.
மும்பை:
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி தலைவரான ஆதித்ய தாக்கரே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் பல விஷயங்களில் நம்மை தவறாக வழிநடத்தவும், முட்டாளாக்கவும் முயன்றதால் 'முட்டாள்' அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தின் போது, முதல் மந்திரி விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறினார். ஆனால் இப்போது துணை முதல் மந்திரி அஜித் பவார் இதுபோன்ற எதுவும் செய்யப்படாது என்று கூறுகிறார்.
பெண்கள் பயனாளிகளுக்கு வழங்க அரசாங்கத்திடம் நிதி இல்லாததால் அந்தத் திட்டமும் மூடப்பட உள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டும் மொழி மற்றும் மதம் குறித்த அரசியல் ஏன் நடக்கிறது?
ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி உள்ளது, அது மதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
- சாவா படம் மகாராஷ்டிராவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று நாக்பூரில் கலவரம் வெடித்தது.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி கதையை தழுவி எடுக்கப்பட்ட சாவா படம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, முகலாய பேரரசர் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து நாக்பூரில் கலவரம் வெடித்தது.
இந்நிலையில், அவுரங்கசீப்பின் கல்லறை தொடர்பான சர்ச்சை "தேவையற்றது" என்று ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய சுரேஷ் பையாஜி ஜோஷி, "அவுரங்கசீப் இங்கே மரணமடைந்தார், அதனால் அவரது கல்லறை இங்கு கட்டப்பட்டது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் அப்சல் கானின் கல்லறையை கட்டி நமக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். இது இந்தியாவின் பரந்துபட்ட மனப்பான்மையையும், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையையும் காட்டுகிறது. அவுரங்கசீப் கல்லறை அப்படியே இருக்கட்டும், அதைப் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்" என்று தெரிவித்தார்.
- உங்களை அரசியல் ரீதியாகப் பிரிக்கவும், மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்கவும் செய்யப்படுகிறது.
- வரலாற்றை வாட்ஸ்அப் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நீங்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேச மறுப்பவர்களை கன்னத்தில் அறைய வேண்டும் என நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நேற்று மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடந்த பேரணியில் உரையாற்றிய ராஜ் தாக்கரே, "எங்கள் மும்பையில், அவர்கள் மராத்தி பேச முடியாது என்று சொல்கிறார்கள்.
அவர்கள் முகத்தில் அறையப்படுவார்கள். நாட்டைப் பற்றியும் மற்ற அனைத்தையும் பற்றியும் என்னிடம் சொல்லாதீர்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி உண்டு, அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில், மராத்தி மதிக்கப்பட வேண்டும்.
மராத்தி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த இன்று முதல் ஒவ்வொரு வங்கி மற்றும் நிறுவனத்தையும் கண்காணிக்க கட்சித் தொண்டர்களை அறிவுறுத்துகிறேன்.
நீங்கள் அனைவரும் மராத்திக்காக உறுதியாக நிற்க வேண்டும். தமிழ்நாட்டைப் பாருங்கள். தமிழர்கள், இந்தி வேண்டாம் என்று தைரியமாக சொல்கிறார்கள், கேரளாவிலும் கூட" என்று தெரிவித்தார்.
மேலும் மகாராஷ்டிராவில் நிலவும் சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினையை குறித்து பேசிய அவர், "நீங்கள் மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்க சில அரசியல் தலைவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.
முதலில் வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதையும், சாதியக் கண்ணோட்டத்தில் படிப்பதையும் நிறுத்துமாறு மகாராஷ்டிர இளைஞர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இது உங்களை அரசியல் ரீதியாகப் பிரிக்கவும், மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்கவும் செய்யப்படுகிறது. இது எங்கள் கவனத்தைத் திசைதிருப்புகிறது, மேலும் அதானிக்கு நிலங்களை வழங்குவது போன்ற பணிகள் அமைதியாக செய்யப்படுகின்றன" என்று எச்சரித்தார்.
அவுரங்கசீப் கல்லறை சர்ச்சை, அதைத்தொடர்ந்து நாக்பூர் கலவரம் ஆகியவை குறித்து பேசிய அவர், "மராட்டியர்களால் தோற்கடிக்கப்பட்டவர்களின் (அவுரங்கசீப்) கட்டமைப்புகளை நாம் அழிக்கக்கூடாது.
நாம் அவர்களை நல்லடக்கம் செய்தோம் என்பதை உலகம் அறிய வேண்டும். ஒரு படம் (சாவா) பார்த்துவிட்டு விழித்துக்கொள்ளும் இந்துவால் எந்தப் பயனும் இல்லை. வரலாற்றை வாட்ஸ்அப் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நீங்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும்" என்று இடித்துக் கூறினார்.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி கதையை தழுவி எடுக்கப்பட்ட சாவா படம் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து கான்பூரில் கலவரம் வெடித்தது. இதன் பின்னணியில் ராஜ் தாக்கரே இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு என தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்கான 2000 கோடி ரூபாய் வரையிலான கல்வி நிதியை கடந்த ஒரு மாத காலமாக மத்திய பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லாத மோடி, தற்போது சென்றது ஏன்?.
- பாஜக தலைமையை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புவதால் மோடி விலக உள்ளார்.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றார். அங்கு சென்ற அவர் ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்து பேசினார். பாஜக தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் இரண்டு முறை பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது மத்திய அமைச்சராகவும் உள்ளதால், விரைவில் பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் "பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லாத மோடி, தற்போது சென்றது ஏன்?. பாஜக தலைமையை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புவதால் மோடி விலக உள்ளார். ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சென்றிருந்தார். அடுத்த 2029ஆம் மக்களவை தேர்தலிலும் மோடிதான் பிரதமர் எனத் தெரிவித்திருந்தார்.
- ஜய் கவானே மற்றும் ஸ்ரீராம் சகடே என்ற அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
- இன்று காலை குடி பத்வா மற்றும் ரம்ஜான் ஈத் கூட்டுக் கொண்டாட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.
மகாராஷ்டிரத்தில் மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் அமைந்துள்ள அர்த்தமசாலா கிராமத்தில் உள்ள ஒரு மசூதியில் மர்ம நபர்களால் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் வெடித்துச் சிதறியது.
இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இருப்பினும் மசூதியின் ஒரு பகுதி சேதமடைந்தது. சம்பவம் குறித்து கிராமத் தலைவர் அளித்த புகாரை அடுத்து அங்கு போலீசார் விரைந்தனர்.
பின்னர் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு மற்றும் தடயவியல் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இருவர் ஜெலட்டின் குச்சிகளை உள்ளே வைத்துவிட்டு சென்றது தொடர்பான ஆதாரங்கள் சிக்கன. இதைதொடர்ந்து விஜய் கவானே மற்றும் ஸ்ரீராம் சகடே என்ற அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஊடகத்திடம் பேசிய ஒரு கிராமவாசி, இந்த கிராமத்தில் பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடும் பாரம்பரியம் உள்ளது
இந்துக்கள் பண்டிகையான குடி பத்வா பண்டிகையின் போது, மசூதிக்கு அருகிலுள்ள ஹஸ்ரத் சையத் பாட்ஷா தர்காவிற்கு இந்துக்கள் வருகை தருவர்.
இன்று காலை குடி பத்வா மற்றும் ரம்ஜான் ஈத் கூட்டுக் கொண்டாட்டம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி மசூதியை வெடிக்கச் செய்ய முயன்றதாக தெரிவித்தார். இருப்பினும் கிராமத்தினர் ஒன்றிணைந்து மசூதியின் சேதங்களை சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்.
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அங்கு இன்று குடிபத்வா விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதற்காக பிரதமர் மோடி இன்று காலை விமானம் மூலம் நாக்பூர் சென்றார். விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பிறகு மோடி விமான நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாக தலைமை அலுவலகமான ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஹெட் கேவர் ஸ்மிருதி மந்திருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஆா்.எஸ்.எஸ். நிறுவன தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு சென்று இருந்தார். அவர் இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார்.
அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீக்ஷா பூமிக்கு சென்றார். அங்கு அவர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார். 2017-ம் ஆண்டுக்கு பிறகு அவர் அங்கு சென்றார்.
குருஜி கோல்வல்கா் நினைவாக ஆா்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு பன்னோக்கு கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. அது தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளிநோயாளி பிரிவுகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:-
குடிபத்வா பண்டிகையையொட்டி மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் கிராமங்களில் லட்சக்கணக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் நாட்டின் சிறந்த டாக்டர்களின் ஆலோசனை, முதன்மை சிகிச்சை மற்றும் கூடுதல் உதவிகளை பெற முடியும். நோய் கண்டறிதலுக்காக அவர்கள் இனி நூற்றுக்கணக்காக கிலோ மீட்டர் பயணம் செய்யவேண்டிய தேவையில்லை.
நாங்கள் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 2 மடங்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும் 3 மடங்கு உயர்த்தியுள்ளோம்.
கொரோனா தொற்று காலத்தின் போது உலகத்துக்காக இந்திய உதவியாக இருந்தது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்திய மீட்பு குழு அனுப்பப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு துறைகளிலும் பகுதிகளிலும் ஆர்.எஸ். தொண்டர்கள் தன்னலமின்றி பணியாற்றுகிறார்கள். மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் உதவினார்கள்.
அடிமை மனநிலையையும் அடிமைத்தனத்தின் சின்னங்களையும் நிராகரிப்பதன் மூலம் இந்தியா இன்று முன்னேறி வருகிறது. அடிமை மனநிலையுடன் உருவாக்கப்பட்ட தண்டனைச் சட்டத்தை நாங்கள் நிராகரித்துள்ளோம்.
உலகின் அனைத்து மூலைகளையும் சென்றடையும் உலகம் ஒரு குடும்பம் என்பதே எங்கள் மந்திரமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பிரதமர் மோடி 'சோலாா் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்ட 1,250 மீட்டா் நீளம் மற்றும் 25 மீட்டா் அகலம் கொண்ட விமான ஓடுபாதை மற்றும் போா்முனை சோதனை வசதிகளையும் அவா் திறந்து வைத்தார்.
- கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் பா.ஜ.க. தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- நாக்பூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அங்கு இன்று குடி பத்வா விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதற்காக பிரதமர் மோடி இன்று காலை விமானம் மூலம் நாக்பூர் புறப்பட்டு சென்றார். நாக்பூர் விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பிறகு பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஸ்மிருதி மந்திருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஆா்.எஸ்.எஸ். நிறுவன தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
அந்த புத்தகத்தில், 'டாக்டர் ஹெட்கேவர், குருஜி ஆகியோருக்கு மனமார்ந்த வணக்கங்கள். உங்களின் நினைவுகளை போற்றி, இங்கு வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கலாச்சாரம், தேசியவாதம் மற்றும் அமைப்பின் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த இடம், தேச சேவையில் முன்னேற நம்மை ஊக்குவிக்கிறது. இந்த இடம், நாட்டுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் இருக்கும் லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு ஒரு சக்தி மிகுந்த இடமாகும். நமது முயற்சிகள் மூலம் மகிமை எப்போதும் அதிகரிக்கட்டும்' என்று பிரதமர் மோடி எழுதி கையெழுத்திட்டார்.
குருஜி கோல்வல்கா் நினைவாக ஆா்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு பன்னோக்கு கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. அது தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளி நோயாளி பிரிவுகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீக்ஷா பூமிக்கு சென்றார். அங்கு அவர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு பிரதமர் மோடி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு சென்றுள்ளார். நரேந்திர மோடி இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். மேலும் ஆா்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு செல்லும் முதல் இந்திய பிரதமரும் அவா் என்பதால் இந்த பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அங்கு அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் பா.ஜ.க. தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை தீர்க்கும் வகையில் பிரதமர் மோடி இன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு அவரது தேசிய தலைவர் பதவியும் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் பா.ஜ.க.வுக்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்வாக்கும் இருப்பதால் புதிய தேசிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றியும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அங்கு ஆலோசனையை முடித்துவிட்டு புறப்பட்ட பிரதமர் மோடி 'சோலாா் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்ட 1,250 மீட்டா் நீளம் மற்றும் 25 மீட்டா் அகலம் கொண்ட விமான ஓடுபாதை மற்றும் போா்முனை சோதனை வசதிகளையும் அவா் திறந்து வைத்தார்.
நாக்பூரில் சமீபத்தில் இரு பிரிவினரிடையே மோதல்-வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நாக்பூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார். 2024 பாராளுமன்ற தோ்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக அவர் அங்கு அவா் செல்கிறாா்.
இதையொட்டி பிலாஸ்பூரில் சுமாா் 2 லட்சம் பொதுமக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமா் மோடி, சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ரூ.33,700 கோடிக்கும் மேல் மதிப்பிலான அரசு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறாா். தொடா்ந்து அவா் மக்களிடையே உரையாற்றுகிறார்.






