என் மலர்
இந்தியா

"மராத்தி மக்களின் மார்பில் குத்திய பட்னாவிஸ்" பள்ளிகளில் 3வது மொழியாக இந்தி கற்பிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு
- மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மராத்தி மக்களின் மார்பில் குத்தியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மகாராஷ்டிராவில் உள்ள மாநில அரசு, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் மராத்தி வழிப் பள்ளிகளில் இந்தியை மூன்றாம் மொழியாகக் கற்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தி கட்டாயமாக இருக்காது என்றும் பொதுவாக மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், "ஒரு பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் குறைந்தது 20 மாணவர்கள் இந்தி தவிர வேறு எந்த மொழியையும் கற்க விரும்பினால், அந்த குறிப்பிட்ட மொழிக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார் அல்லது அந்த மொழி ஆன்லைனில் கற்பிக்கப்படும்" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் மற்றும் மராத்தி மொழி ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மராத்தி மக்களின் மார்பில் குத்தியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மகாராஷ்டிரா அரசு ஒன்றாம் வகுப்பிலிருந்து இந்தியை அறிமுகப்படுத்துவதன் மூலம் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்த முயன்றபோது கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 22 அன்று, மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் தாதா பூசே, இந்தி கட்டாயமாக்கப்படாது என்று கூறியிருந்த நிலையில் தற்போதைய உத்தரவு வந்துள்ளது.






