என் மலர்
இந்தியா

VIDEO: மனைவிக்கு தாலி வாங்க வந்த 93 வயது முதியவர்.. 'காதலுக்கு மரியாதை' செய்த நகைக்கடைக்காரர்!
- முதலில் கடை ஊழியர்கள் அவர்களை காசு கேட்டு வந்திருப்பார்கள் என்று எண்ணினர்.
- தனது கையில் இருந்த ரூ.1,120 கொடுத்து தாலி நகையை அவர் கேட்டார்.
காதலுக்கு வயதில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மகாராஷ்டிராவில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த 93 வயதான நிவ்ருதி ஷிண்டே தனது மனைவி சாந்தாபாய்க்கு தாலி நகை (மங்களசூத்திரம்) வாங்க ஒரு நகைக் கடைக்குச் சென்றார்.
சத்ரபதி ஷம்பாஜி நகரில் உள்ள கோபிகா நகைக் கடைக்குள், பாரம்பரிய உடையணிந்த நிவ்ருதி ஷிண்டே தனது மனைவியுடன் நுழைந்தபோது, முதலில் கடை ஊழியர்கள் அவர்களை, காசு கேட்டு வந்திருப்பார்கள் என்று எண்ணினர்.
ஆனால், தனது மனைவிக்கு நகை வாங்க வந்திருப்பதாக அவர் கூறியபோது அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தனது கையில் இருந்த ரூ.1,120 கொடுத்து தாலி நகையை அவர் கேட்டார்.
முதியவரின் ஆழ்ந்த அன்பையும், அவர்களின் திருமண பந்தத்தையும் கண்டு நெகிழ்ந்த கடை உரிமையாளர், அவர்களிடமிருந்து வெறும் ரூ.20 மட்டுமே பெற்று நகையை பரிசளித்தார்.
இந்த மனதைத் தொடும் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமான பார்வைகளுடன் நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.






