என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • கடந்த 4-ம் தேதி ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைத்தது.
    • ராகுல் காந்திக்கு மத்திய அரசு பயப்படுகிறது என சஞ்சய் ராவத் கூறினார்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    இதற்கிடையே, கடந்த 4-ம் தேதி ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது.

    இதையடுத்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து எம்.பி. பதவியை உடனடியாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேகம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு அதை ரத்து செய்வதில் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வந்து 3 நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் சபாநாயகர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை ரத்து செய்யவில்லை. மத்திய அரசு ராகுல் காந்திக்கு பயப்படுகிறது. எனவே அவரின் தகுதி நீக்கத்தை ரத்துசெய்து எம்.பி. பதவியை வழங்காமல் உள்ளது என தெரிவித்தார்.

    • தனது ராஜினாமாவை இவ்வாறு ஒரு நீதிபதி அறிவிப்பது இது முதல் முறை
    • டிசம்பர் 2025ல் அவர் பணியிலிருந்து ஓய்வடைய இருந்தார்

    மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் பெஞ்சை சேர்ந்த உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, ரோஹித் தியோ, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இத்தகவலை அவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களும், வழக்காடுபவர்களும் கூடியிருந்த போது, அனைவரும் அறியும்படி அறிவித்தார்.

    ஒரு நீதிபதி இவ்வாறு தனது ராஜினாமாவை அறிவிப்பது இது முதல் முறை என தெரிகிறது.

    நேற்று தனது ராஜினாமா குறித்து அறிவித்த நீதிபதி ரோஹித், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    அவர் அப்போது அறிவித்ததாவது:

    நீதிமன்றத்தில் உள்ள உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களை கடிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான்; உங்களை காயப்படுத்த அல்ல. உங்கள் அனைவரையும் என் குடும்ப உறுப்பினர்கள் போல்தான் நான் கருதுகிறேன். என் சுயமரியாதைக்கு எதிராக என்னால் பணி செய்ய முடியாது. நான் என் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இதை உங்களிடம் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி ரோஹித் தெரிவித்தார்.

    அவர் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு அனுப்பி உள்ளார்.

    ஜூன் 2017ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ரோஹித் டிசம்பர் 2025ல் பணியிலிருந்து ஓய்வடைய இருந்தார்.

    உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின்படி உயர் நீதிமன்ற பதிவுத்துறை, நீதிபதி ரோஹித்தை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், இதற்கும் அவர் ராஜினாமாவிற்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரிகிறது.

    • மண்ணில் மாணவர்களை படுக்க வைத்த சீனியர் மாணவர் லத்தியால் என்.சி.சி. மாணவர்களின் பின் பகுதியில் சரமாரியாக கம்பால் தாக்கி உள்ளார்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள், என்.சி.சி. மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டனர்.

    தானே:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் பண்டோத்கர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள என்.சி.சி. மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அணிவகுப்பு பயிற்சியில் சில மாணவர்கள் சரியாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதை அந்த கல்லூரியின் என்.சி.சி. சீனியர் மாணவர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே அவர் பயிற்சியில் சரியாக செயல்படாத மாணவர்களை தனியாக அழைத்து சென்று தரையில் குப்புற படுக்க வைத்துள்ளார்.

    அப்போது அங்கு மழை பெய்துள்ளது. இருந்தபோதும் மண்ணில் அந்த மாணவர்களை படுக்க வைத்த சீனியர் மாணவர் லத்தியால் என்.சி.சி. மாணவர்களின் பின் பகுதியில் சரமாரியாக கம்பால் தாக்கி உள்ளார்.

    இதனால் அவர்கள் வலியால் துடித்து அலறினர். ஆனாலும் சீனியர் மாணவர் தொடர்ந்து அவர்களை கொடூரமாக தாக்கி உள்ளார். இதனை மற்ற வகுப்பு மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதைப்பார்த்த பயனர்கள், என்.சி.சி. மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டனர்.

    இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் சுசித்ரா நாயக் கூறியதாவது:-

    இதுபோன்ற நடத்தையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல சீனியர் மாணவர் நடந்து கொண்டுள்ளார். சக மாணவர்களை அவர் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் போலீசிலும் புகார் அளிக்கப்படும். அதே நேரம் என்.சி.சி. மூலம் இங்கு நிறைய நல்ல பணிகள் நடைபெற்றுள்ளது.

    சுமார் 40 ஆண்டுகளாக இங்கு என்.சி.சி. பயிற்சி நடக்கிறது. ஆசிரியர் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடியோவில் பட்டம் வாங்குவதற்காக மேடை ஏறிய கோத்தாரி என்ற மாணவர் நடனமாடியபடி செல்லும் காட்சிகள் உள்ளது.
    • வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    கல்லூரி மாணவருக்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் நாளை வாழ்நாளில் மறக்க முடியாது. அன்றைய தினத்தை சிறப்பானதாக கொண்டாடுவார்கள்.

    இந்நிலையில் மும்பையில் ஒரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், பட்டம் வாங்குவதற்காக மேடை ஏறிய கோத்தாரி என்ற மாணவர் நடனமாடியபடி செல்லும் காட்சிகள் உள்ளது. இதை பார்த்த பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஒரு பேராசிரியர் ஆவேசம் அடைந்து நாங்கள் உனக்கு பட்டம் வழங்க போவதில்லை என கூறுகிறார். அதை கேட்டதும் மாணவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு பேராசிரியர்கள் அந்த மாணவரை எச்சரிக்கை செய்து அறிவுரைகள் வழங்கி பட்டத்தையும் கொடுத்தனர்.

    இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், பேராசிரியர்கள் இவ்வளவு ஆவேசமாக நடந்து கொள்ள கூடாது. ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து அவர்கள் ஏன் விரக்தி அடைகிறார்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். அதே நேரம் சில பயனர்கள் மாணவரின் செயலை விமர்சித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • அரியானாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்
    • அரியானாவில் ஏற்பட்டுள்ள கலவரம் அருகில் உள்ள மாநிலங்களுக்கு பரவும் அபாயம்

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மணிப்பூர் கலவரத்திற்கு நாடு தழுவிய எதிர்ப்பு கிளம்பிய போதிலும், மத்திய அரசும் மாநில அரசும் இதுகுறித்து வெளிப்படையாக ஏதும் பேசாமல் இருந்து வருகிறது.

    தற்போது அரியானா மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ளது. கடந்த மாதம் 31-ந்தேதி விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல் வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த வன்முறை பக்கத்து மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள டெல்லி மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சிதான் நடந்து வருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும். நலத்திட்டங்கள் சரியான முறையில் மக்களை சென்றடையும். அதனால் இரட்டை என்ஜின் ஆட்சிதான் மக்களுக்கு தேவை என பாரதிய ஜனதா கூறி வரும் நிலையில், தற்போது அந்த இரட்டை என்ஜின் எங்கே? என உத்தவ் தாக்கரே பா.ஜனதா நோக்கி கேள்வி எழுப்பி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-

    முதலில் மணிப்பூர் தற்போது அரியானா. இது ராம்ராஜ்ஜியமா? இல்லையா?. அங்கே அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. மணிப்பூர் நிலை என்ன என்று நான் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். மணிப்பூர் மாநில கவர்னர் ஒரு பெண். அங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும்போது ஏதும் நடக்கவில்லை என அரசு தெரிவித்து வருகிறது.

    இரட்டை என்ஜின் எங்கே?

    பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. நித்திஷ் ராணா சட்டசபையில் பாகிஸ்தானுக்கு போவது குறித்து பேசுகிறார். பெண்களை பாதுகாக்க முடியாத அவர்களிடம் இதைவிட வேறு எதை எதிர்பார்க்க முடியும். தாங்கள் மணிப்பூரில் பெண்களின் நிலைகளை பற்றி கவலைப்படுகிறோம். அவர்கள் பெண்களை பாதுகாப்பதை விட இந்துத்வாவை பற்றி பேசுகிறார்கள்

    சீதைக்காக ராமாயணம் தொடங்கியது. திரவுபதிக்காக மகாபாரதம் தொடங்கியது. ஆனால் இந்த அரசு இதை மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே இது இந்து தேசம் அல்ல.

    எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதலில் நடக்கலாம்.

    • இரண்டு ரெயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று தானே எம்.பி ராஜன் விச்சாரே கோரிக்கை விடுத்திருந்தார்.
    • சோதனை அடிப்படையில் தானே மற்றும் கல்யாணில் நிறுத்தங்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிஎஸ்எம்டியில் இருந்து ஷீரடி மற்றும் சோலாப்பூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

    சிஎஸ்எம்டி- ஷீரடி சாய்நகர் வந்தே பாரத் ரெயில் தானே ஸ்டேஷனுக்கு காலை 6:49 மணிக்கு வந்து இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு புறப்படும். கல்யாண் ஸ்டேஷனுக்கு காலை 7:11 மணிக்கு நின்று, 7:13 மணிக்கு புறப்படும்.

    ஷீரடி சாய்நகர்- சிஎஸ்எம்டி ரெயில் தானே இரவு 10:06க்கு வந்து 10:08க்கு புறப்படும். கல்யாண் நிலையத்தில் இந்த ரெயிலின் வருகை மற்றும் புறப்படும் நேரம் முறையே 9:45 மற்றும் 9:47 ஆகும்.

    சிஎஸ்எம்டி- சோலாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தானே ரெயில் நிலையத்திற்கு மாலை 4:33க்கு வந்து 4:35 க்கு புறப்படும். கல்யாண் மாலை 4:53க்கு சென்றடையும், 4:55க்கு புறப்படும் என்று மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சோலாப்பூர்- சிஎஸ்எம்டி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தானே நிலையத்திற்கு காலை 11:50 மணிக்கு வந்து 11:52 மணிக்கு புறப்படும்.

    தானே மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த அரை-அதிவேக ரெயில்களில் ஏற தாதர் அல்லது சிஎஸ்எம்டிக்கு செல்ல வேண்டியிருப்பதால், இரண்டு ரெயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று தானே எம்.பி ராஜன் விச்சாரே கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், சோதனை அடிப்படையில் தானே மற்றும் கல்யாணில் நிறுத்தங்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    • பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது
    • உலகளவில் மோடி போன்று யாரும் புகழ் பெறவில்லை

    பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவாரும் கலந்து கொண்டார்.

    அப்போது பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில் ''ராஜீவ் காந்தி மிஸ்டர் க்ளீன் எனறு அழைக்கப்பட்டார். பிரதமர் மோடியும் அதே நற்பெயரை பெற்றுள்ளார்.

    பிரதமர் மோடியுடன் அணிவகுத்து சென்ற வாகனத்தில் நானும், தேவேந்திர பட்னாவிஸும் ஒரே காரில் சென்றோம். அப்போது கருப்புக்கொடி ஏந்தி யாரும் போராட்டம் நடத்தியதை பார்க்கவில்லை. சாலைகளின் இரு புறங்களிலும் பொதுமக்கள் நினறு பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    சட்டம்-ஒழுங்கு பார்வையில் இருந்து எந்தவொரு பிரதம மந்திரியாக இருந்தாலும் சிறந்த சூழ்நிலை நிலவ வேண்டும் என நினைப்பார்கள். மணிப்பூரில் நிகழ்ந்ததற்கு யாரும் ஆதரவு அளிக்கமாட்டார்கள். இந்த விவகாரத்தை பிரதமர் மோடி கவனத்தில் எடுத்துள்ளார். உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியும் கவனத்தில் எடுத்துள்ளார். அங்கு நடந்ததை அனைவரும் கண்டித்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகையின்போது, மக்கள் வீட்டில் கொண்டாட்டத்தில் இருக்கும்போது, அவர் நாட்டின் எல்லையில் வீரர்களுடன் கொண்டாடினார்.

    கடந்த 9 வருடங்களாக நான் அவரது பணியை பார்த்துக்கொண்டு வருகிறேன். சர்வதேச அளவில் அவரைப் போன்ற எந்த தலைவரும் புகழ்பெற்றது கிடையாது. இது உண்மையிலும் உண்மை. நான் வளர்ச்சியை விரும்புகிறேன். எதிர்க்கட்சிகள் போராட்டம், பேரணிகளை நடத்தலாம். ஆனால் முடிவு அதிகாரத்தில் உள்ளது'' என்றார்.

    • குழந்தையை ரூபாலி மோண்டல் ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் செய்தார்.
    • ரூபாலியை கைது செய்த போலீசார் மிட்னாபூர் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் நோனா டங்கா பகுதியில் உள்ள ரெயில்வே காலனியை சேர்ந்தவர் இளம் பெண் ரூபாலி மோண்டல்.

    இவருக்கு கடந்த 21 நாட்குளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்நிலையில் அந்த குழந்தையை ரூபாலி மோண்டல் ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அனந்தபுர் போலீசார் ரூபாலியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையை ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    மிட்னாபூரை சேர்ந்த கல்யாணி குஹா பெண்ணுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில் அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு குழந்தையை விற்றதாக ரூபாலி கூறினார். இதைத்தொடர்ந்து ரூபாலியை கைது செய்த போலீசார் மிட்னாபூர் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் ரூபாலிக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் மற்றும் கல்யாணி குஹா உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராட்சத கிரேன் சரிந்த விபத்தில் 2 தமிழக என்ஜினீயர்களும் உயிரிழந்தனர்.
    • விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, மாநில முதல் மந்திரி இழப்பீடு அறிவித்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. இங்கு இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக பயன்படுத்தப்படும் கிர்டர் என்கிற ராட்சத இயந்திரம் நேற்று திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    தகவலறிந்து போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளை அகற்றி பலரை பிணமாக மீட்டனர். இதில் என்ஜினீயர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் என 20 பேர் உயிரிழந்தாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த என்ஜினீயர்கள் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதில் ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளி ஊராட்சி வி.ஐ.பி. நகரை சேர்ந்த சந்தோஷ்(36). மற்றொரு என்ஜினீயர் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த கண்ணன்(23) என்பது தெரிய வந்தது. விபத்து குறித்த தகவலறிந்த அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

    விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் 2 ஒப்பந்ததாரர்கள் மீது சகாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுதந்திர போராட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர். அவர் திலக் மகராஜ், லோக மான்ய திலகர் என்றும் போற்றப்பட்டார்.

    லோகமான்ய திலகரின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு திலக் ஸ்மார்க் மந்திர் அறக்கட்டளையால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி திலக் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது.

    விருது வழங்கிய பிறகு மேடையில் பேசிய பிரதமர் மோடி, "சுதந்திரப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு பத்திரிகை மற்றும் செய்தித்தாள்களின் முக்கியத்துவத்தை பாலகங்காதர திலகர் புரிந்து கொண்டார்" என தெரிவித்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-

    சுதந்திரப் போராட்டத்தை உரக்கச் செய்வதற்கு பத்திரிகை மற்றும் செய்தித்தாள்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட திலகர், ஆங்கிலத்தில் 'மஹரத்தா' என்ற வார இதழைத் தொடங்கினார். மற்றொரு சுதந்திரப் போராட்ட வீரர் கோபால் கணேஷ் அகர்கர் மற்றும் விஷ்ணு சாஸ்திரி சிப்லுங்கர் ஆகியோரின் உதவியுடன் 'கேசரி' என்கிற மராத்தி நாளிதழைத் தொடங்கினார்.

    கேசரி 140 ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளது. இது திலகர் நிறுவனத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய என்சிபி தலைவர் சரத் பவார் கூறுகையில், " திலகர் ஆங்கிலேயரின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காக சாதாரண மனிதனை ஊக்குவிக்க பத்திரிகையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார்.

    தனது 25 வயதில் கேசரி மற்றும் வார இதழ் மஹரத்தாவை ஆரம்பித்தார். இந்த செய்தித்தாள்களின் உதவியால் ஆங்கிலேயர்களை தாக்கினார். இதழியல் அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறி வந்தார். இதுதான் அவரது நிலைப்பாடு. அதை நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள்" என்றார்.

    • காயமடைந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000ம் வழங்கப்படும்.
    • விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவிப்பு.

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது.

    இங்கு, இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக பயன்படுத்தப்படும் கிர்டர் என்கிற ராட்சத இயந்திரம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்தர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மகாராஷ்டிராவிற்கு விரைந்துள்ளனர்.

    இந்நிலையில், ராட்சத இயந்திரம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே ஆகியோர் இழப்பீடு அறிவித்துள்ளனர்.

    அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    தொடர்ந்து, அம்மாநில முதல்வர் ஷிண்டே இறந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    • புனேயில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு பிறகு மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    புனே:

    சுதந்திர போராட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர். அவர் திலக் மகராஜ், லோக மான்ய திலகர் என்றும் போற்றப்பட்டார்.

    லோகமான்ய திலகரின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு திலக் ஸ்மார்க் மந்திர் அறக்கட்டளையால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ந்தேதி திலக் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கரஸ் தலைவருமான சரத்பவார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மோடியுடன் அவர் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தார்.

    இந்த விழாவில் சரத் பவார் கலந்து கொள்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. மகாராஷ்டிராவில் இந்த 3 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சியின் எதிர்ப்பையும் மீறி சரத்பவார் இந்த விழாவில் கலந்து கொண்டார். இதனால் அவர் மீது காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அதிருப்தி அடைந்தன.

    இதற்கிடையே பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

    லோகமான்ய திலகர் தேசிய விருதை பெறுவதற்கு முன்பு பிரதமர் மோடி புனேயில் உள்ள கணேசர் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

    விருது நிகழ்ச்சிக்கு பிறகு மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    ×