என் மலர்tooltip icon

    டெல்லி

    • வீட்டின் பூஜை அருகே இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார்.
    • சலில் கபூரின் மனைவி, குழந்தைகள் தனியாக வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    பிரபல அட்லஸ் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சலில் கபூர் டெல்லியை அடுத்த லுட்யென்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது வீட்டின் பூஜை அருகே இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார்.

    உரிமம் பெற்ற துப்பாக்கியால் கபூர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். நிதி நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக சலில் கபூர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மூன்றடுக்கு கொண்ட சலில் கபூர் வீட்டில் அவருடன் அவரது மேலாளர் மற்றும் அவரது குடும்பத்தார் வசித்து வந்துள்ளனர். சலில் கபூரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் தனியாக வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ரூ. 9 கோடி நரையிலா தொகையை ஏமாற்றியதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2015 ஆம் ஆண்டு சலில் கபூரை கைது செய்தது. இதே வீட்டில் கடந்த 2020 ஜனவரி மாத வாக்கில் சலில் கபூரின் உறவினர் நடாஷா கபூர் இதே இல்லத்தில் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • புதிதாக தளவாடங்கள் வாங்க 1.45 லட்சம் கோடி ரூபாய் நிதியை பாதுகாப்புத்துறை ஒதுக்கியது.
    • இதில் ராடார், பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    இந்திய கடற்படைக்கு மேலும் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் அரசு மற்றும் விமானம் தயாரிக்கும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்திற்கு ரபேல்-எம் ரக போர் விமானங்கள் தேவைப்படுகிறது. இதற்காக 26 போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கும் மத்திய அமைச்சகத்தின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் புதிதாக தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக 1.45 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ரூ.70 ஆயிரம் கோடி செலவில் 7 போர்க்கப்பல்கள் கட்டுவதற்காக ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது. இந்த கப்பல்கள் ஒவ்வொன்றும் 8 ஆயிரம் டன் எடை கொண்டவை ஆகும். மேலும் தாக்கும் திறனும் அதிகமாக இருக்கும்.

    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அமெரிக்கா சென்றிருந்தபோது பென்டகனில் ஜெனரல் அணுமின் உற்பத்தியாளர் அவருக்கு பிரிடேட்டர் ட்ரோன்களை பற்றி விளக்கக் காட்சியை வழங்கினார். இதன்பின் இந்த பிரிடேட்டர் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் கையெழுத்தாகிவிடும் என தெரிகிறது.

    அதேபோல் ரபேல்-எம் போர் விமானங்களைக் வாங்குவதால் வரும் மூன்று மாதங்களில் இந்திய ஆயுதப் படைகளின் திறன், குறிப்பாக இந்தியக் கடற்படைக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும். மேலும் 3 கூடுதல் கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதி அளிக்கப்படும்.

    இந்தக் கூட்டத்தின் இறுதியில் கடலோர காவல்படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜனதா அரசுக்கு எதிராக அலை வீசுவது காங்கிரசுக்கு சாதகமாக இருக்கிறது.
    • பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும், ஆம் ஆத்மியுடன் பல மாநிலங்களில் கூட்டணி அமைத்தன.

    புதுடெல்லி:

    90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

    ஆளும் பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் ஆர்வத்தில் உள்ளது. பா.ஜனதாவிடம் இருந்து இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் காங்கிரஸ் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து களம் இறங்கியுள்ளது.

    இதற்கிடையே ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைப்பதில் ராகுல்காந்தி தீவிரமாக இருக்கிறார். பா.ஜனதா வெற்றிக்கு சிறிய வாய்ப்பும் தரக்கூடாது என கருதி அவர் ஆம்ஆத்மியை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

    பா.ஜனதா அரசுக்கு எதிராக அலை வீசுவது காங்கிரசுக்கு சாதகமாக இருக்கிறது. ஆனாலும் பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் ஒன்றிணைக்க ஆம்ஆத்மி கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம்ஆத்மிடன் கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரியானா மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல்காந்தி கருத்து கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும், ஆம் ஆத்மியுடன் பல மாநிலங்களில் கூட்டணி அமைத்தன. கெஜ்ரிவாலும், குமாரி செல்ஜாவும் ஆம் ஆத்மி கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் ராகுல்காந்தி கூட்டணிக்கான ஆர்வத்தில் உள்ளார்.

    ஜம்மு காஷ்மீரிலும் இதே போல தேசிய மாநாட்டுக் கட்சி தனித்தே போட்டி என்று அறிவித்து வந்தது. ஆனால் ஸ்ரீநகருக்கு சென்ற ராகுல்காந்தி நேரடியாக தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைத்தார். இதே வியூகத்தைத்தான் அரியானாவிலும் ராகுல் காந்தி கையில் எடுத்து உள்ளார்.

    • கடந்த 2007-ம் ஆண்டு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.
    • சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டாலின் பாஸ்கரன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    சென்னை:

    கடந்த 2007-ம் ஆண்டு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதையடுத்து அந்த உத்தரவானது தற்போது வரையில் நடைமுறையிலும் உள்ளது.

    இந்த நிலையில் இந்த 5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் பாஸ்கரன் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    இதை விசாரித்த நீதிமன்றம், இதேப்போன்ற அரசாணை ஆந்திர மாநிலத்திலும் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு எதிராக மேல்முறையீட்டு மனுவானது சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த மனு மீது எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்திருந்தது.

    இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டாலின் பாஸ்கரன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    அதில், கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் இந்துக்கள் 88 சதவீதம் என்றும், கிறிஸ்தவர்கள் 7 சதவீதம் என்றும், முஸ்லிம்கள் 6 சதவீதம் என்றும் புள்ளி விவரங்கள் உள்ளன.

    இருப்பினும் சிறுபான்மையின கிறிஸ்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முஸ்லிம் ஆகியோர்களுக்கு 5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதால், பிறர் பாதிப்படைகின்றனர். எனவே அதுசார்ந்த அரசாணையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவானது சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு 2 நாட்கள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றார். நரேந்திர மோடிதான் புருனே செல்லும் முதலாவது இந்திய பிரதமர்.

    இந்தியா- புருனே இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைகிறது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இதேபோல சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.

    • பாஜக-வின் அரசியல் சாசனத்திற்கு எதிரான முகம் தற்போது நாட்டின் முன் அம்பலமாகியுள்ளது.
    • இந்த மிக முக்கியமான பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.

    புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் "கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலோ ஒருவருக்குச் சொந்தமாக வீட்டையோ கட்டடத்தையோ எப்படி இடிக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்தை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-

    மனித நேயத்தையும் நீதியையும் புல்டோசரின் கீழ் நசுக்கிய பாஜக-வின் அரசியல் சாசனத்திற்கு எதிரான முகம் தற்போது நாட்டின் முன் அம்பலமாகியுள்ளது.

    இந்த மிக முக்கியமான பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றும், பாஜக அரசாங்கங்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்கில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தால் நாடு இயங்கும், அதிகாரத்தின் சாட்டையால் அல்ல.

    சமீப காலமாக நாட்டில் தொடங்கியுள்ள புல்டோசர் கலாச்சாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் அவதானிப்பு வரவேற்கத்தக்கது. குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டின் மீது புல்டோசர் ஓட்டுவது நீதியல்ல. உடனடி நீதி போன்ற கோட்பாடுகள் ஒரு நாகரிக மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை ஆத்மாவுக்கு முற்றிலும் எதிரானவை.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    உத்தர பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் புல்டோசர் கொள்கை (நடவடிக்கை) என்று குற்றம் செய்பவர்களின் வீடுகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று புல்டோசர்களுடன் சென்று உள்ளூர் அதிகாரிகள் வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது.

    சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

    இந்நிலையில் இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அடிப்படை உரிமைகளை மீறுவது இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஹொசைன் என்பவரும், ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் என்பவரும் அளித்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார், கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள பட்சத்தில் கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளை இடிக்க முடியும் என்று வாதாடினார்.

    அப்போது நீதிபதி கவாய் "கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலோ ஒருவருக்குச் சொந்தமாக வீட்டையோ காட்டத்தையோ எப்படி இடிக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்த விவகாரத்தில் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசிய நீதிபதி சுவாமிநாதன், "ஏன் இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு நோட்டீஸ் வழங்காமலும், அவர்கள் பதிலளிக்க நேரம் வழங்காமலும், வீடு இடிக்கப்படும்பட்சத்தில் மற்ற ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்காமல் வீடுகள் இடிக்கப்பட்டன" என்று கேள்வி எழுப்பியுள்ளார். சட்டவிரோதமாக கட்டுமானங்களை இடிப்பதற்கு எதிராகத்தான் பேசவில்லை என்றும் இதுபோன்ற விஷயங்களில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்றே கூறுவதாகவும் சுவாமிநாதன் தெரிவித்தார்.

    மேலும் இதுதொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தாவே மற்றும் சி.யு. சிங் ஆகியோர், தங்களது கட்சிக்காரர்கள் 50-60 வருடங்களாக வசித்து வந்த பூர்வீக வீடுகள் எந்த முன்னறிவிப்புமின்றி இடிக்கப்பட்டுள்ளது. கட்சிக்காரரின் மகன் சரியில்லை என்பதற்காகவோ அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபர் மீது குற்றச்சாட்டு உள்ளதனாலோ அடாவடியாக எடுத்தவுடனே அவரின் வீட்டை பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

    • அரியானாவில் ஆம் ஆத்மி 90 இடங்களிலும் போட்டியிடும் என கெஜ்ரிவால் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
    • காங்கிரஸ் தலைவர்களும் தனித்து போட்டியிடும் வகையில் பணியாற்றி வருகின்றனர்.

    அரியானா மாநிலத்தில் 90 சட்டமன்ற இடங்களுக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒரே கட்டமாக அக்டோபர் 1-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் 5-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    ஏற்கனவே பாஜக அரியானாவில் ஆட்சி செய்தி வருகிறது. பாஜக ஆட்சிக்கு எதிராக மக்களுக்கு எதிர்ப்பு இருப்பதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இதனால் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க வேண்டும் என களத்தில் வேலை செய்து வருகின்றன.

    இதற்கிடையே காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதா? என்பது குறித்து அரியானா காங்கிரஸ் தலைவர்களிடம் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தி ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பாஜக-வை வெல்ல முடியும் என நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    அதேவேளையில் கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு என்ற கேள்வியை புறந்தள்ளினார். மாநிலத்தில் காங்கிரஸ்க்கு வலுவான வேட்பாளர்கள் உள்ளனர். நாங்கள் தனியாக தேர்தலை சந்திப்போம் என்றார்.

    இந்த வருட தொடக்கத்தில் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி 90 இடங்களிலும் போட்டியிடும் என்றார்.

    மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அரியானா, குஜராத், கோவா, டெல்லி, சண்டிகரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடோ, கார்கி சம்ப்லா-கிளோய் தொடரில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் மாநில தலைவர் உதய் பான் ஹோடல் தொகுதியில் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது.

    • உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.
    • வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுதலை செய்தது.

    ஐசி 814 - The Kandahar Hijack' வெப் தொடருக்கு எதிர்ப்புக்குரல் எழுந்த நிலையில் நெட்பிளிக்ஸ் உள்ளடக்க தலைவருக்கு (CONTENT HEAD) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

    உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த தொடரை அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார். விஜய் வர்மா, நஸ்ருதீன் ஷா, அரவிந்த் சாமி, தியா மிர்சா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

    1999 டிசம்பரில், ஐசி 814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில், 5 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது பயணிகளின் உயிரை காப்பாற்ற வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுதலை செய்தது.

    அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் இருவரும் இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தனர்.

    இப்படத்தில் பயங்கரவாதிகளுக்கு 'சங்கர்' மற்றும் 'போலா' என்ற இந்து பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி நெட்ப்ளிக்ஸை தடை செய்யுங்கள் என்ற ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    • சிறப்பு நீதிமன்றத்தில் அஜராகும் வகையில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க நீதிபதிகள் மறுப்பு.
    • செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும்- நீதிபதிகள்.

    தமிழக முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பண மோசடி வழக்கில் குற்ற வழக்கு பதிய கவர்னர் அனுமதி அளித்த நிலையில் வழக்கு பதியப்பட்டது.

    ஊழல் மோசடியால் பாதிக்கப்பட்ட பாலாஜி என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய உத்தரவிட வேண்டும். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் வகையில் அரசு தரப்பு சிறப்பு வழக்குறிஞரை நியமிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது "செந்தில் பாலாஜி ஊழல் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்ற பதிவாளர் வாயிலான எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சமர்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி அளிக்கும் நிலவர அறிக்கை செப்டம்பர் 30-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தது.

    மேலும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அஜராகும் வகையில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் வழக்கை 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

    • இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள் , இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
    • ஏன் இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு நோட்டீசும், அவர்கள் பதிலளிக்க நேரமும் வழங்கவில்லை

    உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று புல்டோசர்களுடன் சென்று உள்ளூர் அதிகாரிகள் வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

    இந்நிலையில் இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அடிப்படை உரிமைகளை மீறுவது இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஹொசைன் என்பவரும், ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் என்பவரும் அளித்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் BR கவாய் [Gavai], KV விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில், அரசு சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார், கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள பட்சத்தில் கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளை இடிக்க முடியும் என்று வாதாடினார்.

    ஆனால் கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலோ ஒருவருக்குச் சொந்தமாக வீட்டையோ காட்டத்தையோ எப்படி இடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கவாய், இந்த விவகாரத்தில் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசிய நீதிபதி சுவாமிநாதன், ஏன் இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு நோட்டீஸ் வழங்காமலும், அவர்கள் பதிலளிக்க நேரம் வழங்காமலும், வீடு இடிக்கப்படும்பட்சத்தில் மற்ற ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்காமல் வீடுகள் இடிக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பியுள்ளார். சட்டவிரோதமாக கட்டுமானங்களை இடிப்பதற்கு எதிராகத் தான் பேசவில்லை என்றும் இதுபோன்ற விஷயங்களில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்றே கூறுவதாகவும் சுவாமிநாதன் தெரிவித்தார்.

    மேலும் இதுதொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தாவே மற்றும் CU சிங் ஆகியோர், தங்களது கட்சிக்காரர்கள் 50- 60 வருடங்களாக வசித்து வந்த பூர்வீக வீடுகள் எந்த முன்னறிவிப்புமின்றி இடிக்கப்பட்டுள்ளது. கட்சிக்காரரின் மகன் சரியில்லை என்பதற்காகவோ அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபர் மீது குற்றச்சாட்டு உள்ளதனாலோ அடாவடியாக எடுத்தவுடனே அவரின் வீட்டை பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை செப்டெம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்துவைத்தனர்.

    • நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்.
    • அமலாக்கதுறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர்.

    புதுடெல்லி:

    புதுடெல்லியின் ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆம் ஆத்மி கட்சி அமானதுல்லாகான் உள்ளார். இவர் டெல்லி வக்பு வாரியத்தின் தலைவ ராக இருந்த போது சட்ட விரோதமாக ஆள் சேர்ப்பு செய்ததாகவும், ரூ.100 கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்ட தாகவும் புகார் எழுந்தது.

    இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக ஓக்லாவில் உள்ள அமானதுல்லாகான் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். இதையொட்டி அவரது வீட்டு முன்பு டெல்லி போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவரது வீட்டிற்கு செல்லும் சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    அமலாக்கத்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்திய போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றிய தாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அமானதுல்லாகான் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பா.ஜ.க. அரசு தன்னையும், மற்ற ஆம் ஆத்மி தலைவர்களையும் குறி வைப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று காலை சர்வாதிகாரியின் உத்தரவின் பேரில், அவரது கைப்பாவை யான அமலாகத்துறையினர் என் வீட்டிற்கு வந்துள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக போலி வழக்குகளை பதிவு செய்து அமலாகத்துறை துன்புறுத்துகிறது. அமலாக்கத்துறை எனக்கு மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சிக்கும் சில பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. இப்போது தேடல் வாரண்ட் என்ற பெயரில் என்னை கைது செய்ய அமலாகத்துறை எனது வீட்டிற்கு வந்துள்ளது.

    மக்களுக்கு நேர்மையான சேவை செய்வது குற்றமா? இந்த சர்வாதிகாரம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

    என் மாமியார் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 4 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்கள் என்னை கைது செய்து எங்கள் வேலையை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். எங்களை சிறைக்கு அனுப்புவார்கள். நீதிமன்றத்தில் இந்த முறையும் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என கூறினார்.

    இதற்கிடையே அமானதுல்லாகானின் வீட்டு முன்பு ஆம் ஆத்மி தலைவர்கள் திரண்டனர். அவர்கள் கூறுகையில், அமானதுல்லாகானை கைது செய்ய முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பா.ஜ.கட்சியின் அரசியல் பழிவாங்கல் காரணமாக அமான துல்லாகான் குறி வைக்கப்படுகிறார் என கூறியுள்ளார்.

    இந்நிலையில் அமலாக்கத்துறையினர் அமானதுல்லாகான் வீட்டில் சோதனை நடத்திய அதே நேரத்தில் அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தினர். சுமார் 6 மணி நேரம் வரை விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    • ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளது.
    • இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட 10 சதவீதம் அதிகம் என தெரிவித்தது.

    புதுடெல்லி:

    ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஆகஸ்ட் மாதம் வசூலான ஜி எஸ் டி வரி வசூல் 1.75 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ.30,900 கோடி ஆகும். எஸ்ஜிஎஸ்டி ரூ.38,400 கோடி ஆகும்.

    ஐஜிஎஸ்டி ரூ.93,600 கோடி ஆகும். செஸ் வரி ரூ.12,100 கோடி வசூல் ஆகி உள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1.59 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆன நிலையில், இந்த ஆண்டு 10 சதவீதம் கூடுதலாக வசூல் ஆகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×