என் மலர்
இந்தியா
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
- பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 14-ந்தேதி வரை கிடுகிடுவென உயர்ந்து, பின்னர் குறைந்து இருந்தது. அதன் பின்னர், மீண்டும் 18-ந் தேதியில் இருந்து விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் விலை உயர்வால், இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தங்கம் விலை எட்டியது. இந்த நிலையில் நேற்று குறைந்திருந்தது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 270-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்து 160-க்கும், விற்பனை ஆனது.
இந்நிலையில் வார இறுதிநாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,230-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,160
20-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,480
19-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,320
18-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,000
17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-03-2025- ஒரு கிராம் ரூ.112
20-03-2025- ஒரு கிராம் ரூ.114
19-03-2025- ஒரு கிராம் ரூ.114
18-03-2025- ஒரு கிராம் ரூ.113
17-03-2025- ஒரு கிராம் ரூ.113
- முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று நேற்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
- பனையூரில் உள்ள தனது இல்லத்தின் வெளியே பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை:
தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, நாளை (இன்று) தமிழக பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும். தமிழக பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும் நாளை (இன்று) காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று நேற்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
அதன்படி, இன்று சென்னை அடுத்த பனையூரில் உள்ள தனது இல்லத்தின் வெளியே பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு எனும் மெகா நாடகம் என்ற பதாகையை கையில் ஏந்தி அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மாநிலங்கள் கூட்டாட்சியை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்துள்ளன.
- தொகுதி மறுவரையறைக்கு எதிரான உறுதிப்பாட்டில் ஒன்றிணைந்துள்ள அனைத்து முதல்வர்கள், தலைவர்களை வரவேற்கிறேன்.
முதலமைச்சருர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க தலைவர்கள் ஒன்றிணையும் இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்.
தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து சென்னை கிண்டி தனியார் ஓட்டலில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மாநிலங்கள் கூட்டாட்சியை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்துள்ளன.
தொகுதி மறுவரையறைக்கு எதிரான உறுதிப்பாட்டில் ஒன்றிணைந்துள்ள அனைத்து முதல்வர்கள், தலைவர்களை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காளிதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
- விசாரணை முடிவில் கொலையாளி யார் என்பது தெரியவரும்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி எம்.ஜி.ஆர் நகரை கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 36). கூலி தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
காளிதாசுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்து வந்தது. இதனால் அவர் எப்போதும் குடிபோதையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் தலையில் பலத்த காயத்துடன் காளிதாஸ் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பார்வையிட்டனர்.
அதில் தலையில் ரத்த காயம் இருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காளிதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் கொலையாளி யார் என்பது தெரியவரும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே காளிதாசின் சகோதரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மீண்டும் மாலை 4.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.
- 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடக்க உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது.
தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 12-ந் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, சட்டசபையில் தினமும் கேள்வி நேரம், பூஜ்ய நேரம், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வந்தது.
எம்.எல்.ஏ.க்களின் கேள்விக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பதிலளித்தனர். பூஜ்ய நேரத்திலும் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் அனல் பறந்தது. நேற்று 9-ம் நாள் கூட்டம் காலை 9.30 மணி தொடங்கியபோது, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பேச வேண்டும் என்பதால் மாலையிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.
இதன்படி நேற்று காலையில் தொடங்கிய கூட்டம் மதியம் 2.20 மணி வரை நடந்தது. தொடர்ந்து மீண்டும் மாலை 4.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டம் நேற்று நள்ளிரவு 10.40 மணி வரை நீடித்தது. அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மானிய கோரிக்கையின் மீது பேசும் வகையில் சட்டசபை இரவு 10.40 மணி வரை நடத்தப்பட்டது.
முதலமைச்சர் ரங்கசாமி இரவு 9 மணிக்கு சட்டசபையிலிருந்து புறப்பட்டு சென்றார். ஒரே நாளில் மதிய உணவு இடைவேளை 2 மணி நேரம் தவிர்த்து 11 மணி நேரம் புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடந்தது.
இன்று (சனிக்கிழமை) நாளை ஞாயிற்றுக்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் இல்லை.
இதைத்தொடர்ந்து 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடக்க உள்ளது.
இதில் 27-ந் தேதியை தவிர்த்து மற்ற 3 நாட்களில் முதலமைச்சர், அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கின்றனர்.
- மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
- அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த 6-ந் தேதியன்று விசைப்படகு ஒன்றில் 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். இந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
இந்த 14 பேரும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 14 மீனவர்களுக்கும் இலங்கை பணம் தலா ரூ.4½ லட்சம் (இந்திய மதிப்பு ரூ.1.30 லட்சம்) அபராதம் விதித்தும் அதை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பறிமுதல் செய்த விசைப்படகை இலங்கை அரசுடைமை ஆக்கியும் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து 14 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை பணம் தலா ரூ.2½ லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இலங்கை பணம் ரூ.2 லட்சம் என ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மனைவி முஸ்கான் சாஹில் என்பவருடன் தகாத உறவில் இருப்பதை கணவன் சவுரப் தட்டிக்கேட்டுள்ளார்.
- முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹிலை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் காதலனுடன் சேர்ந்து மனைவி தனது கணவனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் போட்டு சிமெண்டால் அடைத்த கோர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேசம் மீரட் மாவட்டம் பிரம்மபுரியை சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத் (32 வயது). லண்டனை தளமாகக் கொண்ட வணிக கடற்படை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்கான் ரஸ்தோகி என்ற பெண்ணை காதலித்து திருணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது 5 வயதில் ஒரு மகள் உள்ளாள். மனைவி, மகள் பிரம்மபுரியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
லண்டனில் பணியாற்றும் சவுரப் ராஜ்புத், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி மனைவி முஸ்கானின் பிறந்தநாள், பிப்ரவரி 28 ஆம் தேதி மகளின் பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு கடந்த மாதம் சவுரப் ஊருக்கு திரும்பி வந்தார்.
ஆனால் தனது மனைவி முஸ்கான் சாஹில் என்பவருடன் தகாத உறவில் இருப்பதை கணவன் சவுரப் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையில் வாக்குவாதம் எழுந்தது. இந்நிலையில் கணவன் சவுரப்பை கொலை செய்ய முஸ்கான் தனது காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கடந்த மார்ச் 7 ஆம் தேதி சவுரபுக்கு மயக்க மருந்து கொடுத்தார். அதன்பின் அவரது இதய பகுதியில் கத்தியால் பலமுறை ககுத்தி இருவரும் கொலை செய்தனர்.
மேலும் திட்டமிட்டபடி சவுரபின் உடலை 15 துண்டுகளாக வெட்டி அதை டிரம் ஒன்றில் போட்டு அதன் மீது சிமெண்டை ஊற்றி உலரவைத்துள்ளனர். இதனை தொடர்ந்து முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹிலை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், தனது கணவரைக் கொன்று 11 நாட்களுக்கு பிறகு முஸ்கான் அவரது காதலன் சாஹில் சுக்லாவுடன் இணைந்து மணாலியில் ஹோலி கொண்டாடிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணியளவில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது.
- தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணியளவில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளா மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் தலைவர் பிரான்சிஸ் ஜார்ஜ், கேரள காங்கிரஸ் (மணி) கட்சி தலைவர் ஜோஸ் கே.மணி, ஆர்.எஸ்.பி. கட்சி தலைவர் பிரேமச்சந்திரன் ஆகிய தலைவர்கள் கேரளாவில் இருந்தும், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் முன்னாள் எம்.பி. உதய் சீனிவாஸ், தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மகேஷ் கவுத், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி முன்னாள் எம்.பி. இம்தியாஸ் ஜலீல், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர் தல்ஜித் சிங் சீமா, பொதுச்செயலாளர் பல்விந்தர் சிங் பூந்தர், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங்கும், ஓடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜூ ஜனதாதளம் கட்சி சார்பில் அமர் பட்நாயக், முன்னாள் மந்திரி சஞ்சய் குமார் தாஸ் பர்மா, ஓடிசா மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் ஆகிய தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று உள்ளது. மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களின் பெயர் பலகைகள் ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு வருகை தந்துள்ள விருந்தினர்களுக்கு பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.
- ugcampc@gmail.com என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
- அங்கீகாரம் இன்றி உயர் கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று யு.ஜி.சி. எச்சரித்துள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பட்டப்படிப்புகளை கற்பிக்க பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அங்கீகாரம் பெற வேண்டும். இருப்பினும், யு.ஜி.சி.யின் சட்ட விதிகளுக்கு முரணாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்புகளை கற்பிப்பதாக பல்கலைக்கழக மானியக்குழுவின் கவனத்திற்கு சென்றது. யு.ஜி.சி.யின் அங்கீகாரம் இன்றி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கற்பிக்கும் பட்டப்படிப்புகள், உயர்கல்வி எனும் அங்கீகாரமற்றது. மேலும், அது, வேலை வாய்ப்பிற்கும் தகுதியாகாது என்று யு.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது.
எனவே, உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள், யு.ஜி.சி.யின் www.ugc.gov.in என்ற இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், போலி கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
யு.ஜி.சி. சட்ட விதிகளுக்கு முரணாக உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. அங்கீகாரம் இன்றி உயர் கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யு.ஜி.சி. எச்சரித்துள்ளது.
- குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தேனி, தென்காசியில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- இ-சேவை மையம் அல்லது www.tn.e.sevai என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து பயன் பெற்று வருகின்றனர்.
- 3 மாதங்களுக்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டைகளை பெறும் வசதி, முதல்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 7.9.2023 அன்று முதல் அமல்படுத்தப்பட்டது.
பயனாளிகள், இத்திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமுமின்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது www.tn.e.sevai என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து பயன் பெற்று வருகின்றனர்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 2025-26-ம் நிதி ஆண்டில் இணையதளம் வாயிலாக புதுப்பிக்க ஏதுவாகவும், மேலும் இவ்வசதியினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள பயனாளிகளும் பயன்பெறும் வழியில், இதர 6 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் (விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி) விரிவுபடுத்த ஏதுவாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 31.3.2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, 30.6.2025 வரை, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பணியின்போதும் குளிர்பானங்கள், பழங்கள், இருமல் மருந்து, இளநீர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதா என்று கேட்டனர்.
- வெயில் நேரத்தில் என்ஜின் பெட்டி சூடாக இருக்கும் நிலையில், குளிர்பானங்கள் குடிக்க தடை விதிப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்று அவர்கள் கூறினர்.
புதுடெல்லி:
மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது, ம.தி.மு.க. எம்.பி. வைகோ, தி.மு.க. எம்.பி. சண்முகம் ஆகியோர், ரெயில் என்ஜின் டிரைவர்கள் பணிக்கு வரும்போதும், பணியின்போதும் குளிர்பானங்கள், பழங்கள், இருமல் மருந்து, இளநீர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதா என்று கேட்டனர்.
வெயில் நேரத்தில் என்ஜின் பெட்டி சூடாக இருக்கும் நிலையில், குளிர்பானங்கள் குடிக்க தடை விதிப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்று அவர்கள் கூறினர்.
அதற்கு பதில் அளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ''ரெயில் டிரைவர்கள், ஆல்கஹால் அல்லாத பானங்களை அருந்த எந்த கட்டுப்பாடும் இல்லை. சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏற்கனவே திருத்தப்பட்டு விட்டன'' என்றார்.






