என் மலர்tooltip icon

    இந்தியா

    • தர்மேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள இல்லத்தில் காலமானார்.
    • பாலிவுட்டில் தர்மேந்திராவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.

    பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா (89) உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள இல்லத்தில் காலமானார்.

    இந்நிலையில், இந்திய சினிமாவின் சகாப்தம் முடிவுற்றது என்று தர்மேந்திராவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில்," நடிகர் தர்மேந்திராவின் மறைவு இந்திய சினிமாவின் சகாப்தம் முடிவுற்றுள்ளதை குறிக்கிறது. பாலிவுட்டில் தர்மேந்திராவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.

    தர்மேந்திராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்றார்.

    • விக்கிரவாண்டி ரெயில் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • தாம்பரத்தில் இருந்து காலை புறப்பட்டு விழுப்புரம் செல்ல வேண்டிய மெமு ரெயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும்.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் விக்கிரவாண்டி ரெயில் பணிமனையில் இன்று மற்றும் 26, 27-ந்தேதிகளில் பிற்பகல் 12.15 மணி முதல் 3.45 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இதன் காரணமாக இன்று மற்றும் 26, 27-ந்தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்ல வேண்டிய மெமு ரெயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் விழுப்புரத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்து சேர வேண்டிய மெமு ரெயில், திண்டிவனத்தில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அண்ணாவை வைத்து வியாபாரம் செய்யும் கட்சியாக தி.மு.க. உள்ளது.
    • தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சிதான் மலரும்.

    சென்னை:

    எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்தின் 150-வது நாள் விழா சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று ரசிகர்களுடன் அமர்ந்து இதயக்கனி படத்தை பார்த்தார். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் இன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்காமல் அவர்களின் அரசியல் கிடையாது. அண்ணாவை வைத்து வியாபாரம் செய்யும் கட்சியாக தி.மு.க. உள்ளது" என்றார்.

    கேள்வி:-அனைவருக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு மோட்டார்சைக்கிள் என்பது இலக்கு. வீட்டுக்கு ஒரு கார் என்பது லட்சியம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளாரே? அதை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும், மற்றதையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

    கேள்வி:- என்னை தொட்டவங்களை ஏண்டா தொட்டோம் என்று வருத்தப்படுவார்கள் என விஜய் பஞ்ச் டயலாக் பேசி இருக்கிறாரே?

    பதில்:- அது தொட்டவர்களுக்கு தானே வருத்தம். எங்களுக்கு எதுவும் இல்லையே? அவர் தி.மு.க.வை பற்றித்தான் பேசியுள்ளார். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சிதான் மலரும். அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வல்லுநர் குழுவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
    • மாணவர்கள் படிப்பதற்கு தேவையான பாடத்திட்டங்கள் குறித்து இன்று ஆலோசனை.

    மாநில கல்விக்கொள்கையின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்," 2026-27ம் கல்வி ஆண்டு முதல் படிப்படியாக பாடத்திட்டங்கள் மாற்றப்படும்" என்றார்.

    மேலும் அவர்," புரிதலுடன் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான பாடத்திட்டங்கள் குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.

    ஆசிரியர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்க போகிறோம் உள்ளட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது" என்றார்.

    • ஆற்றை கடந்து பக்தர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
    • மழை பெய்து வருவதால் பக்தர்களும் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். வனத்துறைக்கு சொந்தமான இந்த பகுதியில் அதிக மழை பெய்யும் பட்சத்தில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஓடைகளில் அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆற்றை கடந்து பக்தர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    அதேபோல் தொடர்ந்து மழை பெய்யலாம் என்பதால் இன்று பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள வனத்துறை கேட் மூடப்பட்ட நிலையில் உள்ளது.

    மழை பெய்து வருவதால் பக்தர்களும் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சுந்தர மகாலிங்கம் சாமி மற்றும் பல்வேறு சாமிகளுக்கு பக்தர்கள் இன்றி அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    • தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கும்.

    அந்த வகையில் கடந்த மாதம் சென்னையில் நல்ல மழை பெய்தது. ஆனால் இந்த மாதம் வடகிழக்கு பருவமழை சென்னையில் ஏமாற்றம் அளிக்கும் வகை யிலேயே இருந்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது, அடுத்தடுத்த நாட்களில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான புயலும் சென்னையில் பெரிய அளவில் மழை தாக்கத்தை ஏற்படுத்தாமல் ஆந்திரா நோக்கி சென்று வங்கக்கடலில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.

    இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. பின்னர் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    கொமோரின் மற்றும் அதை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கைப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி இன்று காலை 5.30 மணிக்கு அதே பகுதியில் நிலை கொண்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இலங்கை பகுதியில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

    தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நாளை வரையில் நீடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்தர் கூறும்போது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு கன முதல் மிக கனமழை பதிவாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.

    மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகள், கடலோரத்தின் ஓரிரு இடங்களிலும் அதிகனமழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல் தேனி மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம்.

    வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையையும் எதிர்ப்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக 4-ம் சுற்று வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளது' என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

    இதன் மூலம் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் கனமழை கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடியில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் கன மழை கொட்டியது. தூத்துக் குடி அரசு மருத்துவமனை, ரெயில் நிலையம், பழைய மாநகராட்சி உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரெயில் வழித்தடத்தில் மழைநீர் தேங்கியதால் 3 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி வ.உ.சி. சந்தை பகுதி வி.இ. ரோடு சாலையில் பெருமளவு தண்ணீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.

    தூத்துக்குடி சிப்காட், சண்முகபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இந்த பகுதியில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளான ஜீவா நகர், ராஜ் கண்ணா நகர், குமாரபுரம், வீரபாண்டிய பட்டனம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

    மழை நீரை வெளியேற்ற முடியாத நிலையில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதே போன்று நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

    • சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தேர்தல் ஆணையத்தின், பா.ஜ.க. அரசின் கூட்டு சதியை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு மேலானது.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளன.

    இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    எஸ்.ஐ.ஆர். வேண்டாம் எனவும் இது குடியுரிமையை பறிக்கும் செயலாகும் என்றும் கண்டனம் முழக்கங்களை திருமாவளவன் வாசித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

    எல்லோரும் தேர்தல் காலத்தில் தீவிரமாக பம்பரம் போல் சுற்றி சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். தேர்தல் ஆணையத்தின், பா.ஜ.க. அரசின் கூட்டு சதியை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு மேலானது.

    இந்த ஆட்சியாளர்கள் உள்நோக்கத்தோடுதான் இதை கையாளுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்த ஆர்ப்பாட்டத்தால் எஸ்.ஐ.ஆர். என்ற இந்த நடவடிக்கையை உடனே நிறுத்தி விட முடியுமா? என்றால் முடியாது. எஸ்.ஐ. ஆர். என்பது எவ்வளவு தீவிரமான உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்துவதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்.

    எஸ்.ஐ.ஆர்.-ஐ நிறுத்த வேண்டும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரி நமது கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். தேர்தல் வரப்போகிறது வாக்காளர் பட்டியலில் நமது பெயர்கள் இடம் பெற்றால்தான் வாக்களிக்க முடியும். நம்முடைய வாக்குகளை பறிகொடுத்துவிட்டு நடுத்தெருவில் நிற்க முடியாது.

    எனவே நாமும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் இறங்கித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு நெருக்கடியை பா.ஜ.க. அரசு அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

    தேர்தல் நேரத்தில் இதை அறிவித்தால் இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பெரிதாக எதுவும் செய்து விட முடியாது. கட்டாயம் அவர்கள் விமர்சனங்களை செய்து கொண்டே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுத்தான் ஆக வேண்டம். நான் கூட என் பெயரை பதிவு செய்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. தேர்தலில் நான் ஓட்டு போட்டே ஆக வேண்டும்.

    இதுவரை நாடாண்டவர்களுக்கும், இப்போது நாடாண்டு கொண்டு இருக்கும் பா.ஜ.க.வினருக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இவர்கள் வழக்கமான சராசரியான அரசியல்வாதிகள் இல்லை. மோடி, அமித்ஷா, அவர்களை வழி நடத்தக்கூடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வெறுமனே தனி நபர்களுக்கான அதிகார வெறியர்களாக இருக்கிறார்கள் என்று கணக்கு போட்டு விடக்கூடாது.

    அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய தேசத்தையே அடியோடு புரட்ட பார்க்கிறார்கள். அதிகாரத்தை தக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவது, காங்கிரசே இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவது, இடது சாரிகளே இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவது, திராவிட அரசியல் பேசக் கூடிய கட்சிகளே இல்லை என்கிற நிலையை எதிர்காலத்தில் உருவாக்குவது என்பதெல்லாம் பா.ஜ.க.வின் அரசியல் செயல் திட்டங்களில் ஒன்றாகும்.

    இந்தியாவில் ஒரே மதம்தான் இருக்க வேண்டும், இந்தியாவில் ஒரே மொழிதான் ஆள வேண்டும், இந்தியாவில் மனுதர்மம் தான் ஆட்சியியல் கோட்பாடாக இருக்க வேண்டும் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த அவர்கள் விரும்பும் இந்தியாவை படைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அம்பேத்கர் கனவை சிதைப்பதே பா.ஜ.க.வின் திட்டம் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் 50% வரை திரும்பப் பெறப்பட்டுள்ளன.
    • சென்னையில் 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் நடைபெறும் SIR பணிகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் 50% வரை திரும்பப் பெறப்பட்டுள்ளன.

    எந்த விசாரணையும் இன்றி வாக்காளர் பட்டியலில் இருந்து யாரையும் நீக்க முடியாது.

    68,647 BLO-க்கள் உள்ளிட்ட 2.45 லட்சம் நபர்கள் SIR பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான BLO-க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    SIR பணிகளில் தேர்தல் ஆணையம் சார்பில் 83 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையில் 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

    இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாகப் பெறப்பட்டுள்ளன.

    SIR படிவங்களை பூர்த்தி செய்து அளிப்பதற்கான காலக்கெடு டிச.4 அதனை நீட்டிக்க வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாயினர்.
    • காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.

    பஸ்கள் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் பேருந்து மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய கேஎஸ்ஆர் என்ற தனியார் பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை.
    • சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

    மதுரை:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் கவின் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை அது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.

    சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை. இந்த வழக்கில் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சம்பவம் நிகழ்ந்த அன்று பணியில் தான் இருந்தார். மனுதாரர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

    அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில், மனுதாரர் சம்பவ இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. கவினின் தாயார் தரப்பில், கூடுதல் வாதங்களை முன் வைக்க கூடுதல் கால அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வழக்கை நவம்பர் 27-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    • சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 29-ந் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, கடலூக்கும் 29-ந் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 29-ந் தேதி மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 29-ந் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு 30-ந் தேதியும் ஆரஞ்சு விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, கடலூக்கும் 29-ந் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 30-ந் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதை தவிர 26,27-ந் தேதிகளில் திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.
    • இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.

    உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான சாத்தூர் ராமச்சந்திரனை தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

    இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×