என் மலர்
இந்தியா
- வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதன்படி மாட்டுக்குளம், ரத்தினபுரி, சீதக்காதி நகர், உச்சினிமாகாளியம்மன் கோவில் தெரு, பை-பாஸ் சாலை, காட்டு தைக்கா தெரு உள்ளிட்ட இடங்களில் சுமார் 500-க்கும் மேலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
சிவன் கோவில் வடக்கு அக்பர்ஷா நகர் பெரு வெள்ளத்தால் தத்தளிக்கிறது. அங்குள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், தீவு தெரு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது.
மழை வெள்ளத்தை வடிய வைப்பதற்காக நகராட்சி சார்பில் வாய்க்கால் வெட்டும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இருந்த போதிலும் இந்த நடவடிக்கை மழை வெள்ளம் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு தருமா? என்கிற கேள்வியே எழுந்துள்ளது.
- உழவர்களை ஏமாற்ற திமுக அரசு முயல்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
- மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயிர்களின் அளவு குறித்து அரசு முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவதால், உழவர்களை ஏமாற்ற திமுக அரசு முயல்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை என்று சொல்லி அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. மழை பாதிப்புகளை கணக்கிட 35 நாள்கள் என்பது மிக அதிக காலம் ஆகும்.
காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தனர். அந்த இழப்பீட்டைக் கூட தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. மழையில் நனைந்து சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்காததன் மூலம் உழவர்களை தி.மு.க. அரசே கடன் வலையில் வீழ்த்தி விடக் கூடாது. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானங்களில் பாதுகாப்பு காரணங்களால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
- இரண்டு விமானங்கள் சுமார் 3 மணி நேரங்கள் தாமதமாக வந்துவிட்டு தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
ஆலந்தூர்:
கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி என்ற எரிமலை வெடித்ததில் அதன் சாம்பல் புகை சுமார் 15 கி.மீட்டர் உயரத்திற்கு எழுந்தது. வான்வெளியில் பரவி வரும் இந்த சாம்பல் புகை இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா மாநில பகுதியிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து மும்பைக்கு இன்று காலை 7.15 மணிக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா பயணிகள் விமானம், காலை 11 மணிக்கு, தாமதமாக புறப்பட்டு சென்றது. காலை 9.35 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஹேலி குப்பி எரிமலை வெடிப்பு எதிரொலி காரணமாக, சில குறிப்பிட்ட இடங்களில் பறந்த விமானங்களில், முன்எச்சரிக்கை சோதனை செய்யப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானங்களில் பாதுகாப்பு காரணங்களால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
சென்னை-மும்பை விமானம் மட்டுமின்றி, டெல்லி-ஐதராபாத், மும்பை-ஐதராபாத், மும்பை-கொல்கத்தா விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதோடு சென்னை விமான நிலையத்தில் லண்டன்-சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், சென்னை லண்டன்-பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஆகிய இரண்டு விமானங்கள், சுமார் 3 மணி நேரங்கள் தாமதமாக வந்துவிட்டு தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இது தவிர இன்று மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கும், தாமதமாக இயக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கும் அதிகாரிகள் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.
- 10 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கும் அதிகாரிகள் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 10 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி மாண்டியா முனிசிபல் கவுன்சில் புட்டசாமி, கிருஷ்ணா மேட்டு நிலத்திட்ட தலைமை பொறியாளர் பிரேம் சிங், வருவாய் ஆய்வாளர் ராமசாமி, தார்வாட்டில் உள்ள கர்நாடக பல்கலைக்கழக இணை பேராசிரியர் சுபாஷ் சந்திரா, மூத்த கால்நடை பரிசோதகர் சதீஷ், ஹாவேரி திட்ட இயக்குனர் அலுவலக நிர்வாக பொறியாளர் சேகப்பா, பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி துணை அலுவலக மேலாளர் குமாரசாமி உள்பட 10 அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. சோதனை முடிவில் தான் என்ன கைப்பற்றப்பட்டது என்று தெரியவரும்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை 8.30 மணி அளவில் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில், நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரிலிருந்து, (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது. இது மெதுவாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.
நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று காலை 5.30 மணி அளவில் குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதற்கடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும்.
இன்று மற்றும் நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
27-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
28-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
29-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
30-ந்தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
01-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- சிறை நிரப்பும் போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
- 17-ந்தேதி நடைபெற உள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வருகிற 17-ந்தேதி (புதன்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு வசதியாகவும், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை இன்னும் வலிமையாகவும், பிரமாண்டமாகவும் வலியுறுத்துவதற்கு வசதியாகவும் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
17-ந்தேதி நடைபெற உள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விற்பனை செய்யப்படும் விதைகள் கியூ ஆர் கோடில் பதிவு செய்யப்பட வேண்டும்.
- விதைகளில் எது போலியானது, எது தரமற்றது என்பது எப்படி முடிவு செய்யப்படும் என்று தெரியவில்லை.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா-2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11-ந்தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகளின் விதைக்கு விலை வைக்கும் நடைமுறையே விவசாயத்தை அழித்து விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. கட்டாய கண்காணிப்பு, சான்றிதழ் மற்றும் தரக்கட்டுபாட்டு விதிமுறைகள் போன்றவற்றை அறிமுகம் செய்து விதை விற்பனையை தனியார்மயமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விதைகள் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவவோ அல்லது தன்னளவில் பொருளாதார பலன்களை அடையவோ இந்த புதிய விதை மசோதா தடை செய்கிறது. கார்ப்பரேட்டுகளின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து புதிய விதை வாங்கி, பயிர் செய்ய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
விதைகள் மசோதாவை பொறுத்தவரை ஒவ்வொரு விற்பனையாளரும் விதைகள் குறித்து பதிவு சான்றிதழை ஒன்றிய-மாநில அரசுகளிடம் பெற்ற பிறகு தான் விதைகளை விற்கவோ, ஏற்றுமதி, இறக்குமதி செய்யவோ, தனிப்பட்ட நபருக்கு வழங்கவோ முடியும் என்ற வகையில் இந்த மசோதா பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது. விற்பனை செய்யப்படும் விதைகள் கியூ ஆர் கோடில் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதன்மூலம் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கிற விதை மசோதா மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகள் இறக்குமதி செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
இந்த புதிய விதை மசோதாவை பொறுத்தவரை போலி மற்றும் தரமற்ற விதைகளை விநியோகம் செய்தால் சிறு குற்றங்களுக்கு முதலில் ரூபாய் 1 லட்சம், தவறுகள் தொடர்ந்தால் ரூபாய் 2 லட்சம், பெரிய குற்றங்களுக்கு ரூபாய் 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
அப்படி அபராதம் கட்டத் தவறினால் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டு உள்ளது. விதைகளில் எது போலியானது, எது தரமற்றது என்பது எப்படி முடிவு செய்யப்படும் என்று தெரியவில்லை.
விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது விவசாயிகளின் சாகுபடி செலவை அதிகரிக்கும். ஏற்கனவே, மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி, அந்த சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெற்றது. அதேபோல, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான, விவசாயிகளுக்கு விரோதமான பாரம்பரிய விதை இறையாண்மையை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் ஒன்றிய அரசின் விதை மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார்.
- நமது ராமர் பாகுபாடு காட்டுவதில்லை, நாமும் அதே மனப்பான்மையுடன் முன்னேறி வருகிறோம்.
- பொய்யை இறுதியில் உண்மை வெல்லும் என்பதற்கு இந்த புனிதக் கொடி சான்றாக நிற்கும்.
அயோத்தி ராமர் கோவில் முழுமையாக கட்டி முடித்த நிலையில், கோவில் கோபுர உச்சியில் 30 அடி உயர் கொடிமரத்தில் புனித காவிக்கொடியை பிரதமர் மோடி ஏற்று வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
* 2047-ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, நாம் ஒரு வளர்ந்த இந்தியாவை உறுதி செய்ய வேண்டும்
* நமது ராமர் பாகுபாடு காட்டுவதில்லை, நாமும் அதே மனப்பான்மையுடன் முன்னேறி வருகிறோம்
* இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் ராமர் கோயில் கட்டுமானத்தில் எந்த வகையிலும் உதவிய அனைத்து ராமர் பக்தர்களை நான் வாழ்த்துகிறேன்.
* பொய்யை இறுதியில் உண்மை வெல்லும் என்பதற்கு இந்த புனிதக் கொடி சான்றாக நிற்கும்
* அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்த நிகழ்வைக் காண்கிறது. முழு நாடும், உலகமும் ராமரில் மூழ்கியுள்ளது.
* 100 ஆண்டுகளின் காயங்களும் வலிகளும் இன்று குணமடைகின்றன. 500 ஆண்டுகால உறுதிமொழி நிறைவேறி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- இந்திய மகளிருக்கு விளையாட்டில் ஆர்வத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது.
- இந்திய மகளிர் கபடி அணியினர் தொடர்ந்து விளையாட்டு சாதனைகளைப் படைத்து முன்னேற வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வங்கதேசத்தில் நடைபெற்ற மகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்திய மகளிர் கபடி அணி இந்தத் தொடர் முழுவதுமே தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டியிலும் தங்கள் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள்.
இறுதிப்போட்டியில் 35- 28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணியினர் வென்று உலக அரங்கில் இந்திய மகளிரின் விளையாட்டு வீரத்தை நிரூபித்திருக்கிறார்கள். மொத்தம் 11 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பைத் தொடரில், சாம்பியன் பட்டம் வென்றதால் ஒட்டு மொத்ததேசமும் பெருமை அடைந்துள்ளது.
மேலும் இந்திய மகளிருக்கு விளையாட்டில் ஆர்வத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. இந்திய மகளிர் கபடி அணியின் வீராங்கனைகளுக்கு துணை நின்ற பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். இந்திய மகளிர் கபடி அணியினர் தொடர்ந்து விளையாட்டு சாதனைகளைப் படைத்து முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும்.
- பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்புதுரை தெரு, T.T.K. சாலை, கதீட்ரல் சாலை.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.11.2025) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
தேனாம்பேட்டை: போஸ் கார்டன், T.V. சாலை, ஜெயம்மால் சாலை, இளங்கோ சாலை, போஸ் சாலை பகுதிகள், ராஜாகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீத்தம்மாள் காலனி பகுதிகள், K.B. தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்புதுரை தெரு, T.T.K. சாலை, கதீட்ரல் சாலை, J.J.சாலை, பார்த்தசாரதி பேட்டை, பார்த்தசாரதி கார்டன், K.R. சாலை பகுதிகள், ஜார்ஜ் அவென்யூ, S.S.I. சாலை, H.D. ராஜா தெரு, A.R.K. காலனி, அண்ணா சாலை (பகுதி), வீனஸ் காலனி மற்றும் முர்ரேஸ் கேட் சாலை பகுதிகள்.
மீஞ்சூர் : மீஞ்சூர் நகரம், TH சாலை, சிறுவாக்கம், சூர்யா நகர், BDO அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமவரம், R-R பாளையம் அரியன்வயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டா மந்திரம், வல்லூர், அத்திப்பட்டு, S.R. பாளையம், G.R. பாளையம், கொண்டக்கரை, பள்ளிபுரம்.
- தென் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.
- அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. நேற்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை-தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெறக்கூடும் என்பதால் தமிழகத்தில் கன மழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுவித்துள்ளது. இந்த புயலுக்கு 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தென் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
- தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது.
- விவசாயிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளமாக தண்ணீர் விழுகிறது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. சாலைகளில் எதிரில் வந்த வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு வெளிச்சம் குறைவாக இருந்தது. பெரும்பாலான வாகனங்கள் பகல் வேளையிலேயே முகப்பு விளக்கை எரிய விட்டவாறு இயக்கப்பட்டன. தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் விழுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். தற்போது இந்த தடை 5-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது. குற்றாலம் மெயின் அருவியில் விழுந்த வெள்ளம் குற்றாலம் குற்றா லநாத சுவாமி கோவில் வளாகம் மற்றும் சன்னதி பஜார் பகுதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட போலீசார் தடை விதித்தனர்.
தென்காசி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மேலும் தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடைய நல்லூர், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய பாசன குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளது. எனவே விவசாயிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.






