என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது. 14-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து. ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது.

    இவ்விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மறுநாள் (சனிக்கிழமை) பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித்திருநாள் தொடங்குகிறது. அன்றைய தினம் நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    இதே போல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    வருகிற 14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள்.
    இன்று ஒரு நாள் மட்டும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது.
    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவிலில் குபேர கிரிவல நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த நாளில் குபேர லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக ஒரே நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள். பக்தர்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் கூடும்போது அரசால் தெரிவிக்கப்பட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறையை பின்பற்றுவது கடினமாகும்.

    எனவே கொரோனா தொற்று பரவலை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது.

    மேலும் இன்று ஆகம விதிப்படி அனைத்துப் பூஜைகளும் நடக்கிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய உதவிட வேண்டும்.

    மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
    கோட்டை மாரியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க, தங்கத்தேர் கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தது. இந்த தங்கத்தேரோட்டம், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது குறிப்பிடத்தக்கது.
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் முக்கிய விசேஷ நாட்கள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தங்கத்தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் தொற்று காரணமாக, தங்கத்தேரோட்டம் நடத்தப்படுவது ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் மீண்டும் தங்கத்தேரோட்டம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத் துறை தற்போது அனுமதி அளித்துள்ளது.

    இதையொட்டி நேற்று இரவு 7 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன்பிறகு தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோட்டை மாரியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க, தங்கத்தேர் கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த தங்கத்தேரோட்டம், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
    தற்போது தரிசனத்திற்காக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துள்ள பக்தர்கள் மலை பாதை சீரமைக்கும் வரை தரிசனத்திற்கு வரவேண்டாம் எனவும், எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்து கொள்ளலாம் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி, டிச. 2-

    சித்தூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக நேற்று காலை திருப்பதி மலைப்பாதையில் 14-வது கிலோ மீட்டர் மற்றும் 16-வது கிலோமீட்டரில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்து மலைப்பாதையில் விழுந்தன.

    மேலும் 16- வது கிலோ மீட்டரில் பெரிய அளவிலான பாறை உருண்டு விழுந்து சாலை முழுவதும் சேதம் அடைந்தது. இதனால் நேற்று மலைப் பாதை மூடப்பட்டு அலிபிரியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

    அலிபிரியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பக்தர்கள் தரிசனத்துக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் என்ஜினியர்கள் சேதமடைந்த பாதையை பார்வையிட்டு சீரமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    நீண்ட நேரத்திற்கு பிறகு திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் மலைப்பாதையில் அனைத்து வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. வாகனங்கள் எதிரெதிர் திசையில் செல்வதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    விபத்து ஏற்படாமல் தடுக்க தேவஸ்தான ஊழியர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வாகனங்கள் மெதுவாக செல்ல வழிவகுத்தனர். இதனால் வாகனங்கள் திருமலைக்கு செல்ல பல மணி நேரம் ஆனது.

    இந்த நிலையில் மலைப் பாதை சீரமைக்கும் பணி 10 முதல் 15 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

    தற்போது தரிசனத்திற்காக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துள்ள பக்தர்கள் மலை பாதை சீரமைக்கும் வரை தரிசனத்திற்கு வரவேண்டாம் எனவும், எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்து கொள்ளலாம் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    9-ம் நாள் திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
    கோட்டார் மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடைவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று 8-ம் நாள் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை 5.30 மணி, 6.30 மணி, 8.30 மணி, 9.30 மணி, 10.30 மணி, 11.30 மணி, 12.30 மணி ஆகிய நேரங்களில் திருப்பலிகள் நடந்தன. மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் சகாய ஆனந்த், கோட்டார் சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குத்தந்தை சிலுவை பிராங்கோ பிரான்சிஸ் மற்றும் அருட்பணியாளர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.

    இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடந்தது. முதலில் காவல் தூதர் சொரூபம் தாங்கிய சிறிய தேர் முன்செல்ல, அதைத்தொடர்ந்து புனித செபஸ்தியார் தேரும், அதற்குப் பின்னால் புனித சவேரியார் தேரும் பவனியாக கொண்டு செல்லப்பட்டன. மேளதாளங்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க இந்த தேர் பவனி நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு தேர் பவனி ஆலய வளாகத்துக்குள் நடந்தது. வழக்கமாக தேர் பவனியின் போது தேர்களின் பின்னால் பக்தர்கள் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அனுமதிக்கப்படவில்லை.

    9-ம் நாள் திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. பின்னர் இரவு 10.30 மணிக்கு 2-வது நாள் தேர் பவனி நடக்கிறது. இன்று மாதா தேருடன் சேர்த்து 4 தேர்களின் பவனி நடைபெறும். 10-ம் நாள் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. இந்த திருவிழாவையொட்டி நாளை குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் இலவசமாக முன் பதிவு செய்யும் பக்தர்கள், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி அப்பம், அரவணை உள்பட பிரசாதங்களுக்கும் சேர்த்து முன் பதிவு செய்ய வசதி உள்ளது.
    திருவனந்தபுரம் :

    திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கேரளாவில் பலத்த மழை காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வருகை குறைவாக இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பல்வேறு கட்டமாக தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவை இல்லை என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    வழக்கமாக ஆன்லைன் முன்பதிவிற்கு ஆதார் நகல், பாஸ்போர்ட் நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு பள்ளி, கல்லூரி அடையாள அட்டை நகலை வைத்து தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம். குழந்தைகள் உள்பட அனைவரும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவேண்டும்.

    10 முதல் 18 வயதிற்குட்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் நகல் தரிசனத்திற்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.

    ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல், எருமேலி உட்பட 10 இடங்களில் தரிசனத்திற்கான உடனடி முன் பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. நிலக்கல்லில் மட்டும் இதற்காக 4 மையங்களில் முன் பதிவு நடைபெற்று வருகிறது. தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு மூலம் தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்படும்.

    கடந்த மாதம் 30-ந்தேதி வரை 2,600 பக்தர்கள் உடனடி முன் பதிவு மூலம் தரிசனம் செய்து உள்ளனர். ஆன்லைன் முன் பதிவு மற்றும் உடனடி முன் பதிவு சேவைகள் கேரள காவல் துறை மூலம் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் பணம் செலுத்தி முன் பதிவு செய்ய தேவை இல்லை.

    சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் இலவசமாக முன் பதிவு செய்யும் பக்தர்கள், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி அப்பம், அரவணை உள்பட பிரசாதங்களுக்கும் சேர்த்து முன் பதிவு செய்ய வசதி உள்ளது. அதற்கான முன் பதிவின் போது தரப்படும் ஆன் லைன் ரசீது நகலை காண்பித்து தரிசனத்திற்கு வரும் போது, பக்தர்கள் சன்னிதானத்தில் உள்ள சிறப்பு கவுண்ட்டர்களில் கொடுத்து முன் பதிவு செய்த பிரசாதங்களை பெற்றுக்கொள்ளலாம். இதனால் சன்னிதானத்தில் பிரசாதத்திற்காக பணம் செலுத்த காத்து நிற்கவேண்டிய நிலை தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும்.
    சனியின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே சிறந்தது ஆகும். புதிய நீலத்துணியில் கருப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும்.

    பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும். பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும். வைத்தப்பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.

    அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும்;அந்த நீலப்பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும். இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும். இவ்வாறு 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும்.
    சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பலவும், மதுரையில்தான் நடைபெற்றிருக்கின்றன. அதில் ஈசன், எல்லாம் வல்ல சித்தராக வந்து, கல் யானைக்கு கரும்பு கொடுத்த அதிசயமும் ஒன்று.
    மதுரையை அபிஷேக பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது சோமசுந்தர கடவுள், சித்தரின் வடிவம் எடுத்து மதுரை மாநகர் முழுவதும் வலம் வந்தார். அந்த நேரத்தில் அவர் பல அதிசயங்களையும் நிகழ்த்தினார். கிழவனை குமரன் ஆக்கினார். ஆணை பெண்ணாக மாற்றினார். ஊமையை பேச வைத்தார். ஊசியை நிறுத்தி அதன் மேல் தன்னுடைய பெருவிரலை மட்டும் ஊன்றி நின்று நடனம் ஆடினார்.

    இப்படி பல சித்து வேலைகளைச் செய்து மக்களை ஈர்த்தார். இந்தச் செய்தி மன்னனின் காதுக்கும் சென்றது. மன்னன், “அந்த சித்து விளையாட்டுக்காரரை, அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டான்.

    ஆனால் சித்தரை சிறைபிடிக்கச் சென்றவர்கள், அவரது சித்து விளையாட்டில் லயத்து போய் அங்கேயே நின்று விட்டனர். இதை அறிந்ததும் மன்னனே தன்னுடைய பரிவாரங்களுடன் சித்தரைத் தேடி வந்தான். இதுபற்றி அறிந்ததும் சித்தர், மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வாயு மூலையில் அமர்ந்து யோக தியானத்தில் ஆழ்ந்தார். (இந்த இடம் சுந்தரேஸ்வரர் சன்னிதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னிதிக்கு அருகே உள்ளது).

    மன்னன் அங்கேயும் வந்துவிட்டான். மன்னனோடு வந்த பாதுகாவலர்கள், சித்தரின் யோகத்தை கலைக்க முற்பட்டு, கையை ஓங்கினர். ஓங்கிய நிலையிலேயே அவர்கள் கைகள் நிலைபெற்று விட்டன. இதனால் மன்னன் அதிர்ந்து போனான்.

    பின்னர் சித்தரிடம் பணிவாக பேசினான். “ஐயா, தாங்கள் இப்படி அமர்ந்து கொண்டால், உங்களின் தேவை என்ன என்பதை நான் எப்படி அறிவது? மேலும் நீங்கள் சித்தர்தான் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்றான்.

    கண் விழித்த சித்தர், “மன்னா.. நான்தான் ஆதியும் அந்தமும், நான் எங்கும் சஞ்சரிப்பவன், தற்போது இங்குள்ள மக்களுக்கு சித்து விளையாட்டு காட்டி, அவர்களுக்கு தேவையான வரத்தை அளித்து வருகிறேன். என்பெயர் ‘எல்லாம் வல்ல சித்தர்’ என்பதாகும்” என்று கூறினார்.

    அதன்பின்னும் சித்தர் மேல் நம்பிக்கையில்லாத மன்னன், “சித்தரே, தாங்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றால், இந்தக் கரும்பை இங்குள்ள கல் யானையை தின்னச் செய்யுங்கள்” என்று கூறி கரும்பை நீட்டினான்.

    சித்தரும் அமைதியாக அருகில் இருந்த கல் யானையைப் பார்க்க, அது உயிர்ப்பெற்று, மன்னனின் கையில் இருந்த கரும்பை வாங்கித் தின்றது. உண்மையை உணர்ந்த மன்னன், அவரை அங்கேயே தங்கியிருக்கும்படி வேண்டினான். மேலும் தனக்கு குழந்தை பாக்கியம் தந்தருள வேண்டும் என்றும் கேட்டான். எல்லாம் வல்ல சித்தரின் அருளால், மன்னனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
    சாமிதோப்பு தலைமைப்பதியில் விழா நடைபெறும் நாட்களில் காலை-மாலை பணி விடையும் பகலில் உச்சி படிப்பும் மாலையில் திருஏடு வாசிப்பும் இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியும் ஒன்றாகும். இங்கு வருடந்தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்ட சுவாமி தன்னுடைய சீடர்களுக்கு சொன்ன அறிவுரைகள் மற்றும் அருள்வாக்குகளை ஏடாக வாசிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருட திரு ஏடுவாசிப்புத் திருவிழா வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை துவங்குகிறது.

    திருஏடு வாசிப்பு விழாவின் முதல் நாளை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து பணிவிடையும் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் தொடர்ந்து திருஏடு வாசிப்பு துவங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சியினை பால. ஜனாதிபதி துவக்கி வைக்கிறார். பால. லோகாதிபதி, வக்கீல் யுகேந்த், டாக்டர் வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இரவு 8 மணிக்கு வாகன பவனியும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. திரு ஏடு வாசிப்பு திருவிழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவின் பதினைந்தாம் நாள் வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. அன்று அய்யா வைகுண்ட சுவாமி அம்மையாரை திருமணம் செய்யும் நிகழ்ச்சி திருஏடாக வாசிக்கப்படுகிறது. அன்று பெண்கள் திருமண சீர்வரிசையாக இனிப்புகள், பலகாரங்கள், பழங்கள் அடங்கிய பொருட்களை சுருள்களாக படைத்து அய்யாவை வழிபடுவது வழக்கம். பின்னர் பக்தர்களுக்கு கல்யாண சீர்வரிசை, இனிமமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    விழாவின் நிறைவு நாளான வருகிற 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சாமிக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு அன்னதானமும் நடைபெறுகிறது.

    விழா நடைபெறும் நாட்களில் காலை-மாலை பணி விடையும் பகலில் உச்சி படிப்பும் மாலையில் திருஏடு வாசிப்பும் இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் கொரோனா தொற்றுக் காரணமாக கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 9 நாட்கள் நடைபெறும் விழாவில் பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் வீதி வருகிறார்.
    கொரோனா தொற்றுக் காரணமாக பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு சின்ன சேஷ வாகனத்திலும், இன்று காலை பெரிய சேஷ வாகனத்திலும் பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார். இன்று இரவு அம்ச வாகனத்தில் அருள்பாலிக்கிறார்.
    திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பதுபோல, இந்த காளையார் கோவில் தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
    தமிழ்நாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 200-வது ஆலயம் ஆகும். மேலும் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் இது, 10-வது தலமாகும்.

    கஜபுஷ்கரணி (யானை மடு), சிவகங்கை காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் இங்கு உள்ளன.

    இந்த ஆலயத்தின் முன்பாக இரண்டு கோபுரங்கள் உள்ளன. ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் அமைந்துள்ளது. பெரிய கோபுரத்தை முதலாம் சுந்தரபாண்டியனும், சிறிய கோபுரத்தை மருதுபாண்டியர்களும் கட்டியுள்ளனர்.

    இங்கு சோமேசர், சொர்ணகாளீஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று மூன்று சிவன் சன்னிதிகளும், சவுந்தரநாயகி, சொர்ணவல்லி, மீனாட்சி என மூன்று அம்மன் சன்னிதிகளும் தனித்தனியாக அமைந்துள்ளன.

    இந்திரன், தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்க, பல ஆயிரம் சிவாலயங்களை வழிபாடு செய்ய வேண்டியதிருந்தது. அதன் ஒருபகுதியாக இங்கும் வந்து வழிபட்டான். இத்தலத்தில் வழிபட்டதும் ஆயிரம் சிவாலயங்களை வழிபட்ட பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு 1000 லிங்கங்களால் உருவான ’சகஸ்ரலிங்கம்’ பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    தைப்பூசம் அன்று சொர்ணகாளீஸ்வரருக்கும், வைகாசி விசாகம் அன்று சோமேஸ்வரருக்கும், ஆடிப்பூரம் அன்று சொர்ணவல்லி அம்மனுக்கும் தேர்த் திருவிழா நடைபெறும்.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பதுபோல, இந்த காளையார் கோவில் தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் பூர்வ ஜென்ம பாவத்தை விலக்கும் சக்தி இத்தல இறைவனுக்கு உள்ளது.

    சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    யானை மடு

    இந்திரனின் வாகனமான வெள்ளை யானைக்கு ‘ஐராவதம்’ என்று பெயர். இந்த யானை, தான் பெற்ற சாபத்தால் இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. மனிதனின் பார்வையில் படக்கூடாது என்பது இந்த யானைக்கான விதி. ஆனாலும் ஒரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால் அந்த யானை தன்னுடைய தலையால் பூமியை முட்டி பாதாளத்திற்குள் நுழைந்தது. யானை முட்டியதில் ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீர் பெருகி ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு ‘யானை மடு’ என்று பெயர்.

    பெயர்க்காரணம்

    ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள், விருதுநகரில் உள்ள திருமேனிநாதரை வழிபட்டு இந்த வழியாக வந்தார். அப்போது சொர்ணகாளீஸ்வரரை வணங்க நினைத்தார். ஆனால் வழி எங்கும் சிவலிங்கமாக தென்பட்டதால் அவரால் உள்ளே சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. இதனால் இறைவனை நினைத்து வேண்டினார். தன் நண்பன் மீது இரக்கம் கொண்ட ஈசன், காளையை அனுப்பினார். அது ஆலயத்தில் இருந்து ஓடி வந்து, சுந்தரமூர்த்தி நின்றிருந்த இடம் வரை வந்து விட்டு, மீண்டும் ஆலயம் சென்றது. காளை வந்த வழித்தடத்தில் சிவலிங்கம் இல்லை என்பதை உணர்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், அதன்வழியே சென்று இறைவனை தரிசித்தார். காளை வழிகாட்டியதால், இதற்கு ‘காளையார்கோவில்’ என்று பெயர் வந்தது.

    சிவகங்கையில் இருந்து கிழக்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும், தேவகோட்டையில் இருந்து மேற்கே 35 கிலோமீட்டரிலும், மதுரையில் இருந்து தென்கிழக்கே 66 கிலோமீட்டரிலும் காளையார்கோவில் உள்ளது.
    7-ந்தேதி மாலை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் கங்கை அம்மன்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் பட்டு புடவைகள் வழங்கப்படும்.
    ஸ்ரீ காளஹஸ்தியில் வருகிற 8-ந் தேதி ஏழு கங்கை அம்மன் திருவிழா நடக்க உள்ளது. அப்போது நகரில் ஏழு பகுதிகளில் கங்கையம்மன்களை நிறுத்தி நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். முன்னதாக 7-ந் தேதி மாலை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் கங்கை அம்மன்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் பட்டு புடவைகள் வழங்கப்படும். அன்று இரவு 12 மணிக்கு ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள முத்தியாம்மன் கோவில் தெருவில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும்.

    8-ந் தேதி காலை ஏழு பகுதிகளில் கங்கையம்மன்களை நிறுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் ஊர்வலமாக சென்று 12 மணிக்கு அம்மன்களை கோவில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் நிமஞ்சனம் செய்வார்கள்.
    ×