என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜை விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் டிஜிட்டல் முறையில் காணிக்கை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது.

    தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜை விழா நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் வருகிறார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் பம்பை ஆறு உள்பட பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஒடியது. மேலும் எரிமேலி உள்ளிட்ட வனபகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதனால் வனபகுதி வழியாக சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கேரளாவில் பெய்து வரும் மழை அளவு குறைந்துள்ளது. இதனால் மீண்டும் வனப்பகுதி வழியாக சபரிமலைக்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதில் மீண்டும் பக்தர்களை எரிமேலி உள்ளிட்ட அடர்ந்த வனபகுதிகள் வழியாக அனுமதிக்க தீர்மானிக்க பட்டது.

    இது குறித்து தேவசம் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், ஐயப்ப பக்தர்களை மீண்டும் பாரம்பரியமான வனபகுதி வழியாக சபரிமலை செல்ல அனுமதிப்பது பற்றி விரிவாக ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்றனர்.

    இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் டிஜிட்டல் முறையில் காணிக்கை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சுவாமி : பூதலிங்கசாமி.
    அம்பாள் : சிவகாமி அம்பாள்.
    மூர்த்தி : நினைத்ததை முடிக்கும் விநாயகர், கன்னி விநாயகர், சுப்ரமணிய சுவாமி, மகிழமுடைய சாஸ்தா, சண்டீகேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி.
    தலவிருட்சம் : வில்வம் மரம்.

    தலச்சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். நினைத்ததை முடிக்கும் விநாயகர் பெருமானுக்கு தனிக்கோவில் உள்ளது. சுப்ரமணிய சுவாமிக்கும் சாஸ்தாவிற்க்கும் தனிச் சன்னதி உள்ளது. இது ஒரு குகைவரைக் கோவில். ஒரே கல்லினால் ஆன சங்கிலி உள்ளது. உயரமான கொடி மரம் உள்ள கோவில், எடை அதிகம் உடைய தேர் உள்ளது, கோவில் உள்ளே தேர் வலம் வரும். பூதபாண்டியில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஔவையாருக்கு தனிக்கோவில் உள்ளது.

    தல வரலாறு : பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சுமார் 500-600 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. தாடகை மலை (இராமாயணத்தில் ராமன் தாடகையை வதம் செய்த இடம்) முகப்பில் கோவில் உள்ளது. ஔரங்கசிப் காலத்தில் இங்குள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டது. தராசு மூலம் பரிகாரம் நிறைவேற்றப்படும்.

    நடைதிறப்பு: காலை 4.00 மணி முதல் 11.00 வரை மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.

    பூஜை விவரம் :

    பௌர்ணமி விசேச பூஜை,
    பிரதோஷ வழிபாடு,
    அமாவசை கிரிவலம் சிறப்பில் ஒன்று.

    கோவில் முகவரி :

    பூதலிங்கசாமி திருக்கோவில்,
    பூதபாண்டி,
    நாகர்கோவில்,
    கன்னியாகுமரி மாவட்டம்.
    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறை பரிகார மண்டபத்தில் பொதுமக்கள் பரிகார பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. காவிரி, பவானி அமுதநதி சங்கமிக்கும் இங்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து புனிதநீராடி செல்வார்கள்.

    மேலும் இறந்த முன்னோர் களுக்கு பரிகாரம் செய்ய, அமாவாசை நாட்களில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசைகளில் பவானி கூடுதுறை களை கட்டும். மேலும் ஆடிப்பெருக்கு அன்று புதுமண தம்பதிகள் புனிதநீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீர்நிலைகள் மற்றும் கோவில்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.  இதேபோல் கூடுதுறையிலும் பரிகாரம் செய்ய, புனித நீராட தடை விதிக்கப்பட்டது.

    தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பவானி கூடுதுறை கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பரிகாரம் செய்யவும், ஆற்றில் புனித நீராடவும் தொடர்நது தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். அவர்கள் கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறை பரிகார மண்டபத்தில் பொதுமக்கள் பரிகார பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பரிகாரம் செய்ய 3 பேருக்கும், ஈமக்கிரியை செய்ய 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர பக்தர்கள் மற்றும் புரோகிதர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    1 ஆண்டுகளுக்கு பின்பு பவானி கூடுதுறையில் இன்று முதல் பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த அளவிலான பக்தர்களே பரிகாரம் செய்ய வந்து இருந்தனர். அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா? என்று கோவில் நிர்வாகத்தினர் கண்காணித்தனர்.
    திருஉத்தரகோசமங்கையில் வருகிற 19-ந்தேதி ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட உள்ளது.
    ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை கோவில் உள்ளது. இங்கு மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். மேலும், இங்கு எழுந்தருளி உள்ள ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.

    வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இதன்படி வருகிற 10-ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வரும் 19-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக தொடர்ந்து பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று இரவு 11 மணிக்கு மேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி மறுநாள் அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜர் மீது சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல்பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி உரிய கட்டுப்பாடுகளுடன் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
    கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் 9-ம் நாள் திருவிழாவையொட்டி 4 தேர்களும் ஆலய வளாகத்தில் பவனி வந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற்று வருகிறது. மேலும் 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு தேர்ப்பவனி நடந்தது.

    இதை தொடர்ந்து 9-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை திருப்பலியும், மாலையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதனையடுத்து இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா ஆகிய 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக கொண்டு செல்லப்பட்டன.

    கொரோனா பரவல் காரணமாக தேர் பவனியானது ஆலய வளாகத்துக்கு உள்ளேயே நடந்தது. மேலும் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவது நடைபெறவில்லை. எனினும் தேர்ப்பவனியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர்களுக்கு முன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    விழாவின் 10-ம் நாள் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர் பவனி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. தேர் பவனியையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில், ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில் குத்தகை காசிநாதர் கோவில் உள்ளிட்ட சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    நாகை நந்திகேஸ்வரர் கோவில், அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாதர் கோவில், வீரபத்திரசாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில், சட்டையப்பர்கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கைநல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தன்வந்திரி பூஜை, நைவேத்தியம் செய்யப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தன்வந்திரி பூஜை பிரார்த்தனையுடன் முடிந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பூஜை நடப்பது வழக்கம். அதன்படி விஷ்ணு பூஜை நடந்தது. அதன் ஒரு பகுதியாக தன்வந்திரி ஜெயந்தியையொட்டி திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று காலை 9.30 மணியில் இருந்து பகல் 11 மணி வரை தன்வந்திரி பூஜை நடந்தது. இந்தப் பூஜை ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    முன்னதாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசமூர்த்தி முன்னிலையில் தன்வந்திரி பகவானை வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர். முதலில் அனைத்துத் தெய்வங்களையும் மணியோசையுடன் வரவழைத்து, கார்த்திகை விஷ்ணு பூஜை செய்து, உலக மக்கள் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. அதன்பிறகு தன்வந்திரி பூஜை, நைவேத்தியம் செய்யப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தன்வந்திரி பூஜை பிரார்த்தனையுடன் முடிந்தது.

    தன்வந்திரி பூஜையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் மற்றும் அலுவலர்கள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது.
    சிரவண மாத கிருஷ்ண பட்ச துவிதியை திதி கிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள் என புராணங்கள் கூறுகின்றது.  அதனை அசூன்ய சயன விரதமாக அனுஷ்டிக்க வேண்டும். அனைத்து வைணவத் தலங்களிலும் முக்கியமாக சயன  கோலத்தில் இருக்கும் தலங்களில் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  அசூன்யம் என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள். சயனம் என்றால் படுக்கையில் படுத்தல். நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது. இது ஒரு வித்தியாசமான விரதம்.

    இதன் மூலமாக நமக்கு நிம்மதியான தூக்கமும், நிறைவான வாழ்க்கையும் , தம்பதிகளிடையே அன்யோன்யமும் குடும்பத்தார் இடையே சினேகித உறவும், நட்பும் நல்ல முறையில் விளங்கும். அசூன்ய சயன விரத நாளில் விடியற்காலை எழுந்து வழக்கமாக பூஜைக்கு எப்படி தயாராவது போலவே தயாராக வேண்டும். அவசியம் அன்று திருமால் ஆலய தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக பள்ளிகொண்ட பெருமாள் சேவை தரும் ஆலய தரிசனம் சாலச் சிறந்தது.

    மாலை பூஜையறையில் விளக்கேற்றி கிருஷ்ணர் - ராதை அல்லது மஹாவிஷ்ணு மஹாலஷ்மி இணைந்த  விக்ரகம் அல்லது படத்தை ஒரு பலகையில் கோலமிட்டு வைத்து ஆவாகனம் செய்ய வேண்டும். அதனைப்  பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இப்பூஜையை தனியாகச் செய்வதைவிட, தம்பதிகளாக அமர்ந்து செய்வது உத்தமம்.  ரங்கநாத அஷ்டகம் கிருஷ்ணாஷ்டகம் மற்றும் பெருமாளுக்குரிய தோத்திரப் பாடல்களைப் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும்.  ஏலக்காய், குங்கும பூ போட்டு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை அல்லது பாய், தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் கிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் சயனிக்க வைக்க வேண்டும்.

    அப்போது தாலாட்டுப்பாட வேண்டும்.

    “மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
    ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்
    பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்
    மாணிக்குறளனே தாலேலோ!
    வையம் அளந்தானே தாலேலோ!”

    என்று பாடி, பள்ளி அறையைச் சாத்திவிட்டு இரவு பகவான் சிந்தனையோடு படுத்து உறங்க வேண்டும்.  மறுநாள் காலை எழுந்து, முறையாகப்  புனர் பூஜை செய்து, கிருஷ்ணர், மஹாலக்ஷ்மி விக்கிரஹம்படம், தக்ஷிணை, வெற்றிலை பாக்கு பழம் புஷ்பம் வைத்து தானம் செய்து விட வேண்டும். இந்த விரதத்தை எல்லோரும் கடைப் பிடிக்கலாம்.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி நடந்தது. அதில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் நேற்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி கொரோனா

    விதிமுறைகளை கடைப்பிடித்து தனிமையில் நடத்தப்பட்டது. அதில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன்,

    சந்தனம், இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதன் பிறகு வனபோஜன நிகழ்ச்சி, ஆஸ்தானம் நடந்தது. அப்போது

    நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓரிரு பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி சாந்தி, கண்காணிப்பாளர் ரமணய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருச்சானூர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளில் உற்சவர் பத்மாவதி தாயார், பெரிய சேஷ வாகன சேவை, இரவு ஹம்ச வாகன சேவையில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை வாகன மண்டபத்தில் ஏழு தலைகளை கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், ‘வைகுண்டநாதர்’ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மய்யா, கோவில் துணை அதிகாரி கஸ்தூரிபாய், உதவி அதிகாரி பிரபாகர் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார், வீைண ஏந்திய சரஸ்வதி அலங்காரத்தில் (வீணாவேணி) ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு வாகன மண்டபத்தில் அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை முத்துப்பந்தல் வாகன சேவை, இரவு சிம்ம வாகன சேவை நடக்கிறது.
    53 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மதுரை ஆதீனம் சார்பில் மீனாட்சி அம்மன் கோவிலில் சாயரட்சை கட்டளை பூஜை நடைபெற தொடங்கியது.
    உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    இந்த கோவில் ஆகம விதிப்படி தினசரி காலை 6 மணிக்கு உஷாக்கால பூஜை, 9 மணிக்கு காலசந்தி கால பூஜை, 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு சாயரட்சை கட்டளை பூஜை, இரவு 8 மணிக்கு 2-ம் கால பூஜை, 9 மணிக்கு அர்த்த ஜாம பூஜை ஆகியவை மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் மாலை 6 மணிக்கு நடக்கும் சாயரட்சை கட்டளை பூஜை 1968-ம் ஆண்டுக்கு முன்பு மதுரை ஆதீனம் சார்பில் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் ஆதீனம் சார்பில் இப்பூஜை நடைபெறவில்லை. எனவே கோவில் நிர்வாகமே மேற்கண்ட பூஜைகளையும் செய்து வந்தது.

    இந்த நிலையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இறந்த பிறகு 293-வது ஆதீனமாக ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றார்.

    அவரது ஆலோசனையின் பேரில் 53 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மதுரை ஆதீனம் சார்பில் மீனாட்சி அம்மன் கோவிலில் சாயரட்சை கட்டளை பூஜை நேற்று (புதன்கிழமை) முதல் நடைபெற தொடங்கியது.

    தினசரி நடக்கும் இப்பூஜையின்போது அம்மன் சுவாமி சன்னதிகளில் அபிஷேகம் செய்தல் மற்றும் நெய்வேத்திய கைங்கரியம் நடக்கும்.

    மேற்கண்ட தகவலை கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
    இந்த அகிலத்திரட்டு ஆகமம் கூறும் உபதேசங்களை எல்லாம் உலகுக்குச் சொல்லும் விதமாக, தற்போது அய்யா வைகுண்டர் வழிபாட்டு ஆலயங்கள் பல உள்ளன.
    உலகைப் படைத்த ஆதிமூலப் பரம்பொருள் உருவத்தாலும், செயல்களாலும் மாறுபாடு உடையதாக 84 லட்சம் வகையான உயிரினங்களைப் படைத்தார். எல்லா உயிர்களுக்கும் இப்படி இப்படித்தான் வாழ வேண்டும் என்ற இயல்பினைக் கொடுத்த ஆதிமூலப் பரம் பொருள், மனித இனத்திற்கு மட்டும் உலகத்தை செப்பனிடத்தக்க வல்லமை பொருந்திய பகுத்தறிவைக் கொடுத்தார். அதோடு தம்மையும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் அதிபதிகளாகிய சிவன், பிரம்மா, விஷ்ணு என்று மும்மூர்த்திகளாக்கிக் கொண்டார்.

    ஆனால் இந்த உலகமும், உயிரினங்களும் சில காலம் படைத்த நிலையில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதை உணர்ந்த மும்மூர்த்திகளும் “இப்போது நல்வினை மட்டுமே இருப்பதால்தான் உலகம் இயக்கமற்று இருக்கிறது. எனவே இந்த உலகத்தை இயங்கச் செய்ய வேண்டுமானால், தீவினையும் வேண்டும்” என்று முடிவுசெய்தனர்.

    சணப்பொழுதில் தீய சக்தியாக குறோணி என்ற அசுரன் தோன்றினான். அவன் பசி பொறுக்காமல் இந்த உலகத்தையே உணவாகக் கொள்ள முனைந்தான். அதைப் பார்த்த இறைவன், உலக இயக்கத்திற்கு பசியையே அடித்தளமாக அமைத்தான். இதன் காரணமாக அற்புதமான பகுத்தறிவைப் பெற்ற மனித இனம் வயிற்றுப்பசி, பணப் பசி, பதவிப் பசி, அதிகாரப் பசி, காமப் பசி போன்றவற்றின் மயக்கத்தால் பேராசை என்ற வலைக்குள் அகப்பட்டு, பகுத்தறிவைப் பயனுள்ளதாகப் பரிபாலனம் செய்யாதவர்களாயினர். அதனால் அசுர சக்திகள் மனிதர்களை ஆக்கிரமித்தது. தர்மம் தடம்புரண்டது. அதர்மம் ஆட்சி புரிந்தது. அந்த அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக யுகங்கள் தோறும் இறைவன் அவதரித்திருக்கிறார். அப்படி இந்த கலியுகத்தில் அவதரித்தவரே அய்யா வைகுண்டர்.

    கலியுகத்திற்கு முன்புள்ள ஆறு யுகங்களிலும் அராஜகம் புரிந்த அரக்கர்களுக்கு உடல் இருந்தது. ஆனால் இந்த கலியுகத்து அரக்கனுக்கோ உடல் இல்லை. கலி என்பது ஒரு விதமான மாயை. அதை பொய், புரட்டு, வஞ்சகம், சூழ்ச்சி, போலித்தனம், நுண்மையான சூது, வாது என்று வேத நூல்கள் விளம்புகின்றன. இத்தகைய கலியானது, உலகில் உள்ள அனைத்து மக்களின் சிந்தை பீடத்திலும் சிம்மாசனம் அமைத்து அமர்ந்துவிட்டது. ஆகவே நேர்த்தியான அன்பு, அறம், அமைதி, பண்பு, பாசம், பக்தி, பொறுமை, செம்மை, உண்மை, தியாகம், இணக்கம், இரக்கம் போன்ற நற்பண்புகள் எல்லாம் நலிந்துபோய் விட்டன.

    இதற்கொரு விடிவுகாலம் வேண்டும் என்று ஆன்றோர்களும், சான்றோர்களும் இறைவனை வேண்டி முறையிட்டனர். இதனால் இரக்கமுற்ற விண்ணவர்களும், கலியின் கொடுமையை இறைவனிடம் விண்ணப்பித்தனர். அதற்கு இசைந்த மும்மூர்த்திகளும் கலிக்கு, அவதார காலத்தை கவனத்தில் கொண்டு ஆலோசிக்கலாயினர்.

    அந்த ஆலோசனையில், கலி என்பது சிறிய எலியின் அளவு உடல் கூட இல்லாத ஓர் அளப்பரிய நினைவு மாய்மாலம். உண்மையைத்தான் பேச வேண்டும் என்று உறுதியாக இருப்போரையும் பொய் பேசவைத்து, அந்த பொய்க்குள்ளே ஐக்கியமாக்கிவிடும் அரக்கத்தனம் கொண்ட அந்த அருவற்ற கலியை, வாள், அம்பு, தடி போன்ற எவ்வகை ஆயுதங்களாலும் அழித்துவிட முடியாது. இதற்கு முன்பு நிகழ்ந்த ஆறு யுகங்களிலும் இருந்த அரக்கர்களை, இந்தக் கலியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் அனைவரும் கலிக்கு முன்பு தூசுக்கு சமமானவர்களே.

    ஆகையால் எல்லா யுகங்களிலும் மகாவிஷ்ணு மட்டுமே அவதரித்து அரக்கர்களை அழித்ததுபோல, இந்தக் கலியாகிய மாயையை அழிக்க முடியாது. மும்மூர்த்திகளும் தனித்தனியாக சென்றும், கலியரக்கனின் கண் முன்பு நின்று வென்றுவிட முடியாது. எனவே நாம் மூன்று மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி, பரப்பிரம்ம நிலையோடு மண்ணகத்து மனிதனைப் போல் சென்று, அன்பு, பொறுமை, தர்மம் ஆகியவற்றின் வலிமையை மக்களின் மனதில் விதைத்து, அவரவர் மனதில் மாசாகப்படிந்திருக்கும் மாயக்கலியை தானாகவே கரைந்துபோகச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

    அதன்படி கலியுகம் பிறந்த 4934-ம் ஆண்டு, கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ந் தேதி, மும்மூர்த்தியும் ஒரு மூர்த்தியாகி திருச்செந்தூர் திருப்பாற்கடலின் உள்ளிருந்து அரூபமாய் வெளிப்பட்டு, வைகுண்டர் என்ற திருநாமத்தோடு, திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ்திசையாகிய கன்னியாகுமரிக்கு மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ள தாமரைகுளம் என்ற இடத்தில் வந்து அமர்ந்தார்.

    வைகுண்டரின் அருள் பிரவாகத்தால் அந்தப் பகுதி மக்களெல்லாம் அவரை அதிசயமாய் பார்த்தனர். அருள்வேண்டி நின்றனர். மக்களின் நோய், மன சஞ்சலம் போன்ற அனைத்தையும் தம் பார்வையாலேயே பறந்தோடச் செய்தார். அதனால் அவரைக் காணவரும் அன்பர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. அப்போது மண்ணையும், தண்ணீரையும் மருந்தெனக் கொடுத்து, ஊமை, கூன், குருடு, செவிடு, முடம் போன்ற அனைத்து ஊனங்களையும் நலமடையச் செய்தார். மக்கள் அவர் மீது அபரிமிதமான பக்தி செலுத்தினர். நாளடைவில் அந்த இடத்தை ‘சாமிதோப்பு’ என்றும், வைகுண்டரை ‘அய்யா’ என்றும் அழைத்தனா்.

    தன்னிடம் வந்த மக்களுக்கு அய்யா வைகுண்டர் பல உபதேசங்களையும் வழங்கினார். கலி என்பது எலியளவு உருவம் கூட இல்லாதது. அதை அழிக்க மோதிரம் அளவிலான ஆயுதம் கூட அவசியமில்லை. நீங்கள் பவ்வியமாக வாழ்ந்தீர்கள் என்றால், அதற்குள் கலியானது அகப்பட்டுக் கொள்ளும். மானத்தோடு வாழ்ந்தால் கலியானது தன்னாலேயே மாண்டுவிடும். எனவே சொத்து, சுகமென்று எண்ணாதீர்கள். அடிப்பார் அடிக்க வந்தால் அதைச் சகித்து விட்டு விடுங்கள். சத்ருவோடும் சாந்தமுடனே இருங்கள். அற்பமான இந்த வாழ்வில் அநியாயங்களைச் செய்யாதீர்கள். நினைத்ததெல்லாம் உங்களுக்கு நிச்சயமாய் நிறைவேறும் என்பது போன்ற பல உபதேசங்கள் செய்தார்.

    அதன் காரணமாக ஜாதி, மத பேதங்களைக் கடந்து சகலரும் ஒரு தலத்தில் குவிந்தனர். ஒரே கிணற்று நீரைக் குடித்தனர்; குளித்தனர். ஒரே சமையலை உண்டு மகிழ்ந்தனர். இதைக் கண்டு சில ஆதிக்கவர்க்கத்தினரின் மனம் சஞ்சலப்பட்டது. அவர்கள் திருவாங்கூர் மன்னனிடம் இதுபற்றி கூறி அவனது கோபத்தை தூண்டும் வகையில் கோள் மூட்டினர். மன்னன் படைகளை அனுப்பி, அய்யா வைகுண்டரை கைது செய்ததோடு, அவருக்கு ஆலகால விஷம் கொடுத்து அருந்தச் செய்தான். சுண்ணாம்பு காளவாயில் வைத்து நீற்றினான். பெரிய நெருப்பு குண்டத்தில் நடந்துவரச் செய்தான். புலியுடன் கூண்டில் அடைத்தான். இப்படி பல சோதனைகள் செய்தாலும், அதில் இருந்து மீண்டும் 112-ம் நாள் சாமிதோப்புக்கு வந்து சேர்ந்தார்.

    ஏழை, எளிய மக்களும் பிரபஞ்ச வரலாற்றைத் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, எழுதப்படிக்கத் தெரியாத அரிகோபால கீசரை வைத்து, அகிலத்திரட்டு என்னும் ஆகமத்தை அருளினார். கலியுகத்தில் 18 ஆண்டுகள் மட்டுமே தெய்வமாய், மனிதனாய் மக்கள் மனம் போற்ற வாழ்ந்தார் அய்யா வைகுண்டர். அவர் தனது அன்புக்கொடி மக்களிடம், “நீங்கள் அனைவரும் நான் அருளியுள்ள ஆகமத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாழுங்கள். அப்படி வாழ்ந்தீர்கள் என்றால், தர்மயுக வாழ்வினைப் பெறுவீர்கள்” என்று திருவாய் மலர்ந்துவிட்டு விண்வெளியில் மறைந்தார்.

    இந்த அகிலத்திரட்டு ஆகமம் கூறும் உபதேசங்களை எல்லாம் உலகுக்குச் சொல்லும் விதமாக, தற்போது அய்யா வைகுண்டர் வழிபாட்டு ஆலயங்கள் பல உள்ளன. சென்னையிலும், சென்னை புறநகர்களிலும் ஏறத்தாழ 26 ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ராஜகோபுரமும், பற்பல மண்டபங்களும், கொடிமரமும், தேரும் அமையப்பெற்ற ஆலயம் சென்னை மணலிப்புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள தர்மபதி ஆகும். அய்யா வழிபாட்டு ஆலயங்களில் சாமிதோப்பு பதியைப்போல, நித்திய வாகன பவனியும், நித்திய அன்னதானமும் இங்கே நடைபெறுகிறது.

    -ஆ.மணிபாரதி

    ×