என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்பவனி நடைபெற்றதையும், அதில் பங்கேற்ற திரளான பக்தர்களையும் படத்தில் காணலாம்.
    X
    தேர்பவனி நடைபெற்றதையும், அதில் பங்கேற்ற திரளான பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    கோட்டார் சவேரியார் பேராலயத்தில் 4 தேர்கள் பவனி: திரளானவர்கள் பங்கேற்பு

    கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் 9-ம் நாள் திருவிழாவையொட்டி 4 தேர்களும் ஆலய வளாகத்தில் பவனி வந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற்று வருகிறது. மேலும் 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு தேர்ப்பவனி நடந்தது.

    இதை தொடர்ந்து 9-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை திருப்பலியும், மாலையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதனையடுத்து இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா ஆகிய 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக கொண்டு செல்லப்பட்டன.

    கொரோனா பரவல் காரணமாக தேர் பவனியானது ஆலய வளாகத்துக்கு உள்ளேயே நடந்தது. மேலும் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவது நடைபெறவில்லை. எனினும் தேர்ப்பவனியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர்களுக்கு முன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    விழாவின் 10-ம் நாள் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர் பவனி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. தேர் பவனியையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×