என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரவு தேர்ப்பவனி நடைபெற்றதையும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம்.
    X
    இரவு தேர்ப்பவனி நடைபெற்றதையும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம்.

    கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர்பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    9-ம் நாள் திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
    கோட்டார் மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடைவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று 8-ம் நாள் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை 5.30 மணி, 6.30 மணி, 8.30 மணி, 9.30 மணி, 10.30 மணி, 11.30 மணி, 12.30 மணி ஆகிய நேரங்களில் திருப்பலிகள் நடந்தன. மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் சகாய ஆனந்த், கோட்டார் சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குத்தந்தை சிலுவை பிராங்கோ பிரான்சிஸ் மற்றும் அருட்பணியாளர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.

    இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடந்தது. முதலில் காவல் தூதர் சொரூபம் தாங்கிய சிறிய தேர் முன்செல்ல, அதைத்தொடர்ந்து புனித செபஸ்தியார் தேரும், அதற்குப் பின்னால் புனித சவேரியார் தேரும் பவனியாக கொண்டு செல்லப்பட்டன. மேளதாளங்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க இந்த தேர் பவனி நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு தேர் பவனி ஆலய வளாகத்துக்குள் நடந்தது. வழக்கமாக தேர் பவனியின் போது தேர்களின் பின்னால் பக்தர்கள் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அனுமதிக்கப்படவில்லை.

    9-ம் நாள் திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. பின்னர் இரவு 10.30 மணிக்கு 2-வது நாள் தேர் பவனி நடக்கிறது. இன்று மாதா தேருடன் சேர்த்து 4 தேர்களின் பவனி நடைபெறும். 10-ம் நாள் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. இந்த திருவிழாவையொட்டி நாளை குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×