என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    அஷ்ட லட்சுமிகளில் தைரிய லட்சுமி முக்கியமானவள் என்பதை விளக்குவதற்கு ஒரு ஆன்மிக கதை உள்ளது. அந்த கதையை இப்போது அறிந்து கொள்ளலாம்.
    அஷ்ட லட்சுமிகளில் அடிப்படையானவள் தைரிய லட்சுமி தான். இதை விளக்குவதற்கு ஒரு கதை. போஜ மகாராஜாவிற்கு அஷ்டலட்சுமிகளின் பாக்கியம் இருந்து வந்தது. அவன் அவர்களை தினம் பூஜித்து வந்தான். ஒருநாள் பூஜையின் போது அவர்களின் முகம் வாடியிருப்பதை கண்டு காரணம் கேட்டான். அவர்கள் நாளையுடன் உன்னுடன் எங்களுக்கு தொடர்பு அறுபடுகிறது. நாளை நாங்கள் உன்னை விட்டுப் போகிறோம். நீ இத்தனை நாட்கள் எங்களை வழிபட்டு வந்ததற்காக நீ கேட்கும் வரத்தை தருகிறோம் என்றார்கள்.

    சரி நாளை நீங்கள் போகும் போது அவ்வரத்தை கேட்கிறேன் என்று போஜன் கூறிவிட்டான். மறுநாள் வந்தது, ஒவ்வொரு லட்சுமியாக அவனிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். அவன் யாரிடமும் எவ்வரமும் கேட்கவில்லை. ஏழு லட்சுமிகள் போன பின்பு கடைசியாக தைரிய லஷ்மி வந்தாள். அம்மா நான் கேட்கும் வரம் நீ மட்டும் என்னிடம் தங்க வேண்டும் என்பதே என்றான் போஜன்.

    பக்தன் கேட்ட வரத்தின்படி தைரியலட்சுமி மட்டும் அங்கேயே தங்கி விட்டாள். மறுநாள் போஜன் பூஜைக்கு புறப்படும் போது தினம் எட்டு லட்சுமிகளை பூஜிப்பேன், இன்று ஒரு லட்சுமியை மட்டுமே பூஜிக்க போகிறேன் என்று நினைத்துக் கொண்டு பூஜைக்கு போனான். அங்கு பூஜாக் கிரகத்தில் அஷ்ட லட்சுமிகளும் இருக்கக்கண்டு ஆச்சரியம் அடைந்தான். நீங்கள் ஏழு பேரும் நேற்று போய் விட்டீர்களே, இப்போது இங்கு இருக்கிறீர்களே என்று கேட்டான் போஜன்.

    எங்கள் தலையில் தைரிய லட்சுமி எங்கு இருக்கிறாளோ அங்கு நாங்கள் ஏழு பேரும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது. நீ தைரிய லட்சுமியை உன்னுடனேயே இருத்திக்கொண்டதால் நாங்கள் மீண்டும் இங்கேயே வந்து தங்க நேர்ந்தது என்றார்கள் அந்த ஏழு லட்சுமிகள்.

    மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். லட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்க 12 வழிகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    1. தன்னம்பிக்கை மற்றும் தெய்வநம்பிக்கை வேண்டும்.
    2. சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.
    3. காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.
    4. வரும் சந்தர்ப்பங் களை நழுவவிடக்கூடாது.
    5. உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.
    6. தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.
    7. செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.
    8. திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
    9. செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.
    10. லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது.
    11. சுயநலம் அறவே இருக்கக் கூடாது.
    12. எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது.

    மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும்.

    புதன் கிழமைகளில் புதன் பகவானை வணங்கி அவருக்குரிய காயத்ரி மந்திரம் 1008 அல்லது 108 முறை ஜெபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார்.
    நவகிரகங்களில் புத்திக்கும் வித்தைக்கும் அதிபதியாக திகழ்பவர் புதன் பகவான். ஒருவரது ஜாதகத்தில் புதன் சிறப்பாக இருந்தால் அவர்கள் தன் புத்தி கூர்மையால் தான் செய்யும் தொழிலில் படிப்படியாக வளர்ந்து உச்சத்தை அடைவார். அதே சமயம் புதன் பகவான் ஒருவரது ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் தொழிலில் வெற்றிகாண்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கும். புதன் பகவானை வணங்கி அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜெபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார்

    புதன் காயத்ரி மந்திரம்

    ஓம் கஜத்வஜாய வித்மஹே
    சுகஹஸ்தாய தீமஹி
    தந்நோ புத ப்ரசோதயாத்.
    தோரணமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ்மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜைகளும், விவசாயிகள் வாழ்வு முன்னேற சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.
    தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது, தோரணமலை. இங்கு மலை உச்சியில் கிழக்கு நோக்கிய குகையில் முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலம் காலமாக வழிபாடு நடந்து வருகிறது. மலையே தோரணம்போல் அமைந்து உள்ளதால் தோரணமலை என்று பெயர் காரணத்துடன் விளங்குகிறது.

    மலையேறி முருப்பெருமானை தரிசனம் செய்வதற்கு பக்தர்களால் 1,100-க்கும் மேற்பட்ட படிகள் அமைக்கப்பட்டுள்ளது. மலையைச்சுற்றி 64 சுனைகள் இருக்கிறது. இந்த சுனை நீரால் முருகப்பெருமானுக்கு தினமும் அபிஷேகம் நடக்கிறது. ஒவ்வொரு தமிழ்மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜைகளும், விவசாயிகள் வாழ்வு முன்னேற சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் நடைபெறும்.

    அந்தவகையில், தோரணமலையில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும்.

    தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் ஊட்டி படுகையின மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெறும். பகல் 11.45 மணிக்கு விடுதலைப்போராட்ட தியாகிகளின் குடும்பத்தார் மற்றும் உயிர் தியாகம் செய்த ராணுவத்தினரின் குடும்பத்தினர், முன்கள பணியாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

    12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், பகல் 1 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்க இருக்கிறது. மாலை 6 மணிக்கு 501 சரவண ஜோதி விளக்கு பூஜை நடைபெறும். இரவு 7 மணிக்கு வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.
    நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி நடந்தது. இதில் பக்த சபையினர், பாடகர் குழுவினர், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய திருவிழா 10 நாட்கள் நடந்தது. இதில் 9 மற்றும் 10-ம் நாள் திருவிழா நாட்களில் தேர்ப்பவனி நடந்தது. 9-ம் நாள் திருவிழாவில் இரவு 10 மணிக்கு ஆலய வளாகத்தில் இருந்து தேர்ப்பவனி தொடங்கியது. நிகழ்ச்சியை பங்குதந்தை சகாய பிரபு ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். தேர் கார்மல் நகர் பங்கின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அதிகாலை 4 மணியளவில் ஆலய வளாகம் வந்தடைந்தது.

    10-ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. தேர்ப்பவனிக்கு ஊரின் முக்கிய வீதிகள், சந்திப்புகளில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பக்த சபையினர், பாடகர் குழுவினர், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    ராமன்புதூர் சந்திப்பில் பங்கு நிர்வாகிகள் தலைவர் ஜோசப் ஆன்டனி, செயலாளர் டூறிங் ஆன்றனி தனிஷ், பொருளாளர் லியோன் ஜேசு ரெத்தினம் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தேர்ப்பவனி மேளதாளத்துடன் இரவு 8 மணியளவில் ஆலய வளாகம் வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பங்குமக்கள் இணைந்து செய்திருந்தனர்.
    கொடியேற்றம் நடந்தபோது பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர். சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் முடிவடைந்ததும் பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதில் உத்ராயண புண்ணிய கால உற்சவம் முக்கியமான நிகழ்வாகும். இந்த ஆண்டுக்கான உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.

    இதையொட்டி விநாயகர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் உற்சவ மூர்த்திகள் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி அருள்பாலித்தனர். பின்னர் வேதமந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது மங்கல இசை முழங்கப்பட்டது.

    தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதன் பின்னர் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மட்டும் கலந்து கொண்டனர்.

    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கொடியேற்றம் நடந்தபோது பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர். சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் முடிவடைந்ததும் பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அய்யப்ப பக்தர்கள், செவ்வாடை பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்தனர். பக்தர்கள் 20 ரூபாய் தரிசன கட்டணத்தில் அனுமதிக்கப்படவில்லை, ரூ.50 கட்டணத்தில் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் பொது தரிசனம் வழியாகவும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டனர்.
    நாகூர் தர்காவில் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி(வியாழக்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.
    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை முன்னிட்டு நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து வழக்கமாக 10-க்கும் மேற்பட்ட கப்பல்களில் கொடி ஊர்வலம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஒமைக்ரான் பரவல் காரணமாக மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்னரதம், உள்ளிட்ட 8 கப்பல்களில் மட்டுமே கொடி ஊர்வலம் நடந்தது.

    மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள் நாகை நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நாகூர் அலங்கார வாசல் வந்ததைடந்தது. தொடர்ந்து கொடிகள் நாகூர் தர்காவின் 5 மினராக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதினார்.

    மின்னொளியில் ஜொலித்த தர்காவின் 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது வாணவேடிக்கை நடந்தது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்காணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 13-ந் தேதி(வியாழக்கிழமை) நடைக்கிறது. பெரிய ஆண்டவர் சமாதிக்கு.சந்தனம் பூசும் நிகழ்ச்சி 14-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடக்கிறது.

    கொடியேற்ற விழாவையொட்டி தஞ்சை சரக டி.ஐ.ஜி பிரேவேஷ் குமார், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ஆந்திராவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் ஒற்றைக்காலால் நெல்லூரில் இருந்து இருமுடி கட்டுடன், கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி சபரிமலை புனித பயணத்தை தொடங்கினார்.
    திருவனந்தபுரம் :

    ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். அகில பாரத ஐயப்பா சேவா சங்க உறுப்பினராக இருந்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர், அங்குள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் சுரேஷ் ஒற்றைக்காலால் நெல்லூரில் இருந்து இருமுடி கட்டுடன், கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி சபரிமலை புனித பயணத்தை தொடங்கினார். 105 நாட்கள் 750 கி.மீ. தூரத்தை கடந்து நேற்று முன்தினம் சுரேஷ் சபரிமலைக்கு வந்து சேர்ந்தார். அதைத்தொடர்ந்து அவர் 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்தார்.

    சபரிமலை புனித பயணம் குறித்து சுரேஷ் கூறுகையில், 2-வது முறையாக இப்போது நான் நடைபயணமாக சபரிமலை வந்து உள்ளேன். ஐயப்பனின் அருளால், நடந்து வரும் வழியில் எந்த தீங்கும் ஏற்பட வில்லை. உலக நன்மைக்காக வேண்டியும், கொரோனா கோரப்பிடியில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் இந்த நடைபயணத்தை மேற்கொண்டேன். சபரிமலையில் மன நிறைவான தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தந்த போலீசாருக்கும், தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வெக்காளியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்து காவல் தெய்வமாகவும், கருணை மிகுந்தவளாகவும் அவர்களது மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறாள்.
    திருச்சி நகரின் மேற்கு பகுதியில் மத்திய பஸ் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது உறையூர். இங்குள்ள வெக்காளியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்து காவல் தெய்வமாகவும், கருணை மிகுந்தவளாகவும் அவர்களது மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறாள்.

    இந்த கோவிலின் தெற்கு வாசல் வழியாக நுழைந்தால் இடது பகுதியில் வல்லப கணபதி சன்னிதி அமைந்துள்ளது. அவரை வணங்கி சென்றால், விசாலாட்சியம்மன் உடனுறை விசுவநாதர் சன்னிதி உள்ளது. இதைத்தொடர்ந்து காத்தவராயன், பெரியண்ணன், மதுரைவீரன் சுவாமி சன்னிதிகள் அமைந்துள்ளன. தொடர்ந்து நாகப்பிரதிஷ்டையுடன் விநாயகர் சன்னிதி அமைய பெற்றுள்ளது. அடுத்து உற்சவ அம்மன் சன்னிதி உள்ளது. கோவில் திருவிழாக்காலங்களில் புறப்பாடாகி செல்லும் உற்சவ அம்மன் திருமேனி இங்குதான் அமர்த்தப்பட்டுள்ளது. இந்த சன்னிதியின் வடக்கு சுவரில் துர்க்கை அம்மன் சன்னிதியும் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். இந்த கோவில் தினமும் காலை 5.15 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு சாத்தப்படும்.

    வெக்காளியம்மன் மேற்கரங்களில் வலதுபுறம் உடுக்கையுடனும், இடதுபுறம் பாசம், கீழ்ப்புறம் வலது கரத்தில் சூலம், இடது கரத்தில் கபாலத்துடனும், வலது காலை மடித்துவைத்து இடதுகாலை தொங்கவிட்டு, அரக்கனை மிதித்துக் கொண்டிருக்கும்படி கம்பீரமாக காட்சியளிக்கிறாள். பொதுவாக அம்மன் வலதுகாலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்திருப்பதுதான் வழக்கம். ஆனால், இந்தக் கோவிலில் வெக்காளியம்மன் தனது இடதுகாலை தொங்கவிட்டு, வலதுகாலை மடித்து வைத்து பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

    சாரமா முனிவர் நந்தவனம்

    பொதுவாக கோவில்களில் கருவறையிலுள்ள சுவாமிக்கோ, அம்மனுக்கோ, கருவறைக்கு மேலே விமானங்கள் அமைக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், உறையூர் வெக்காளியம்மன் கோவில் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு அமைந்திருக்கிறது. வானமே கூரையாய் கொண்டு, வெட்ட வெளியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். இவ்வாறு வெக்காளியம்மன் அமர்ந்திருப்பதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அதுபற்றி பார்ப்போம்:-

    முற்கால சோழர்களின் தலைநகரமாக உறையூர் விளங்கியது. இந்த நகரை வன்பராந்தகன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். இந்தநிலையில் சாரமாமுனிவர், நந்தவனம் அமைத்து, பல்வேறு மலர் செடிகளை பயிரிட்டு அதில் மலரும் பூக்களை கட்டி, நாள்தோறும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமிக்கு அணிவித்து வந்தார். அப்போது பிராந்தகன் என்ற பூ வணிகன், மன்னரிடம் நல்ல பெயரை பெற வேண்டும் என்று எண்ணி முனிவருக்கு சொந்தமான நந்தவனத்திலிருந்து மலர்களை பறித்து மன்னருக்கு அளிக்கத் தொடங்கினான். இந்த மலர்களை கண்டு மனம் மகிழ்ந்த மன்னர் வன்பராந்தகன், நாள் தோறும் மலர்களை பறித்து வர பிராந்தகனுக்கு உத்தரவிட்டார்.

    மண் மழை பொழிந்தது

    நந்தவனத்தில் மலர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சாரமா முனிவர், ஒருநாள் நந்தவனத்தில் மறைந்து இருந்து கண்காணித்தார். அப்போது, தாயுமானவருக்குரிய மலர்கள் மன்னருக்கு செல்வதைக் கண்டு வன்பராந்தகனிடம் முறையிட்டார். ஆனால் முனிவரை மன்னர் அலட்சியப்படுத்த, சாரமாமுனிவர் தாயுமானவரிடம் முறையிட்டார். தனது பக்தனின் துயர் கண்டு கோபமடைந்த இறைவன் மேற்கு நோக்கித்திரும்பி உறையூரையும் அங்கிருந்த மன்னன் அரண்மனையும் மண் மழை பொழிய வைத்து அழித்தார். இதனால் வீடு இழந்த மக்கள், சோழர்களின் காவல் தெய்வமான வெக்காளியம்மனிடம் சரணடைந்தனர். அன்னை இறைவனை வேண்டினாள். மண்மாரி நின்றது. ஆனாலும் மக்கள் வீடு இழந்தனர். வெட்டவெளியே தங்குமிடமானது. மக்களின் துயரை கண்டு மனமிரங்கிய வெக்காளியம்மன், உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை நானும் உங்களை போல் வெட்டவெளியிலேயே இருக்கிறேன் என்று அருளியதாக கோவில் புராணம் கூறுகிறது.

    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலின் மூலஸ்தானம் மற்றும் அர்த்தமண்டபம் 1993-ம் ஆண்டு செங்கல் மூலம் கட்டப்பட்டன. தற்போது ரூ.15 கோடியே 20 லட்சம் செலவில் கருங்கற்களால் அர்த்தமண்டபம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    பவுர்ணமியில் சிறப்பு அபிஷேகம்

    வேண்டிய வரங்களை அருளும் வெக்காளியம்மனுக்கு ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் அபிஷேக வழிபாடு நடைபெறும். ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு பொருட்கள் என்பது இங்கு சிறப்பு. சித்திரையில் மரிக்கொழுந்து, வைகாசியில் சந்தனம், குங்குமம், பச்சைக்கற்பூரம், பன்னீர், ஆனியில் முக்கனி, ஆடியில் பால், ஆவணியில் எள்ளுடன் நாட்டுச் சர்க்கரை, புரட்டாசியில் அப்பம், ஐப்பசியில் அன்னம், கார்த்திகையில் தீபம், மார்கழியில் பசுநெய், தையில் தேன், மாசியில் க்ரத கம்பளம் (போர்வை), பங்குனியில் பசுந்தயிர் என பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

    பொங்கு சனீஸ்வரர் சன்னிதி

    நவக்கிரகங்களில் மிக மிக முக்கியமானவராக வணங்கப்படுபவர் சனீஸ்வரன். வேறு எந்த தெய்வத்துக்கும் ஈஸ்வர பட்டம் இல்லை. ஆனால் சனிக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம் கிடைத்தது. ஏழரை சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி எனும் காலங்கள் உண்டு. இதைக்கொண்டு, சனீஸ்வரரை தக்கபடி வழிபட்டு வந்தால், எல்லா நலத்தையும், வளத்தையும் கொடுப்பார். அதற்காகவே, உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பொங்கு சனீஸ்வரராக இருந்து அருள்பாலிக்கிறார். அதுமட்டுமின்றி, ஆயுள்காரனும் சனி பகவானே. எனவே, ஆயுள் பலமும், ஆரோக்கிய பலமும் தந்து அருள் வழங்குகிறார். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் பொங்கு சனீஸ்வரரையும் தரிசனம் செய்துவிட்டு செல்வர். கோவிலின் ஈசானிய மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது.
    ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யபிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களையும் இந்த திருவிழா நாட்களில் அரையர்கள், பெருமாள் முன் அபிநயத்தோடு பாடுவது இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு உற்சவங்கள், திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மார்கழி, தை மாதங்களில் பகல்பத்து, ராப்பத்து என்று 20 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தாண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.

    ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யபிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களையும் இந்த திருவிழா நாட்களில் அரையர்கள், பெருமாள் முன் அபிநயத்தோடு பாடுவது இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். எனவே இது திருவத்யயன உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த 20 நாள் உற்சவம் முழுவதும் பொருமாள் முன்னிலையிலேயே நடக்கிறது.

    தாயாருக்கு இந்த உற்சவத்தில் எவ்வித பங்கேற்பும் இல்லை.ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கநாயகி தாயார் படித்தாண்டா பத்தினி என்பதால் வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொண்டு ஆழ்வார்களின் தீந்தமிழ் பாசுரங்களை கேட்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்காமல் போனதற்கு அவர் அடியார்களின் கனவில் தோன்றி வருந்தினாராம். இதனையடுத்து பெருமாளுக்கு நடத்தியதை போல் தாயாருக்கு என்று தனியாக 10 நாள் திருவத்யயன உற்சவம் நடத்தும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் ரெங்கநாயகி தாயார் திருவத்யயன உற்சவத்தின் திருமொழித் திருநாள் (பகல் பத்து உற்சவம்) கடந்த 25-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. விழாவின் அடுத்த பகுதியான திருவாய்மொழித் திருநாள் (ராப்பத்து உற்சவம்) 30-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 5 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்தடைந்தார். அங்கு அலங்கார கோஷ்டி வகையறா கண்டருளினார். இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை சாற்றுமறை நடைபெற்றது. பின்னர் இரவு 10.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபத்திலிருந்து புறப்பட்டு படிப்பு கண் டருளி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
    திருப்பதி கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் ஆகியோர் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாராயணம் செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஆத்யாயன உற்சவம் தொடங்கியது. கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் ஆகியோர் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாராயணம் செய்தனர்.

    முதல் 11 நாட்கள் ‘பகல் பத்து’ என்றும், மீதமுள்ள 10 நாட்கள் ‘இரவு பத்து’ என்றும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து 22-வது நாள் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரம் பாடப்படுகிறது. 23-வது நாள் ராமானுஜ நூற்றந்தாதி, 24-வது நாள் வராகசாமி சாத்து முறை, 25-வது நாள் ஆத்யாயன உற்சவம் நிறைவடைகிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    உங்களது குழந்தைகள் படிப்பில் ஏறுமுகத்தில் செல்வதற்கு, அந்த ஆறுமுகனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒரு வழிபாடு. அடுத்ததாக எந்த ஒரு தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாக சொல்லப்படுவது தானம் தான்.
    ஒரு குழந்தைக்கு நல்ல எதிர்காலம் என்பது நல்ல படிப்பில் தான் அமைய முடியும். அந்த படிப்பை கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. ஜாதகத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதற்கான பரிகாரத்தை நாம்தான் செய்ய வேண்டும். ஒரு சில பரிகாரங்களை செய்வதன் மூலம் அவர்களையும் சுலபமாக படிக்க வைத்துவிடலாம்.

    உங்களது குழந்தைகள் படிப்பில் ஏறுமுகத்தில் செல்வதற்கு, அந்த ஆறுமுகனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒரு வழிபாடு. முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று, உங்கள் குழந்தையின் ஏதாவது ஒரு தமிழ் புத்தகத்தை எடுத்து, பூஜை அறையில் வைத்து, தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயில் இறகு அல்லது மயிலின் உருவப்படம் ஏதாவது ஒன்று இருந்தால் கூட போதும், அதை தமிழ் புத்தகத்தின் மேல் வைத்து, பூஜை அறையில் ஒரு நெய்தீபம் ஏற்றி, நம் குழந்தைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டி முன்னேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்வதன் மூலம் படிப்பில் இருக்கும் ஜாதக தோஷங்கள் கூட நிவர்த்தியாகி விடும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    அடுத்ததாக எந்த ஒரு தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாக சொல்லப்படுவது தானம் தான். படிப்பில் பின்தங்கிய மாணவர்களாக இருந்தாலும், ஞாபக சக்தி குறைவாக இருக்கும் மாணவர்களாக இருந்தாலும் வாரம்தோறும் வரும் வியாழக்கிழமை அன்று சூரியன் மறைவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு அதாவது வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் வாழை இலையில் ஐந்து வகை இனிப்பையும், இரண்டு ஏலக்காயையும் வைத்து அரச மர அடியில் இருக்கும் ஈ, எரும்பு, வண்டுகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

    அடுத்ததாக சில இனிப்பு வகைகளும், ஏலக்காய் சேர்த்து காய்ச்சிய பாலையும் ஏழை குழந்தைகளுக்கு தானமாக கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும். எத்தனையோ குழந்தைகளை வளர்க்கும் ஆசிரமங்கள் உள்ளன. அந்த குழந்தைகளுக்கு உதவியாக இருக்க உங்களால் முடிந்த படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதும் சிறந்த பலனை அளிக்கும். நீங்கள் செய்யும் இந்த தானங்களை உங்களது குழந்தையின் கைகளால் செய்வது சிறப்பான ஒன்று.
    ×