என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும். பக்தர்களின் வசதிக்காக திருப்பதி, சந்திரகிரி பகுதிகளில் இருந்து சீனிவாசமங்காபுரத்துக்கு பஸ்கள் இயக்கப்படும்.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி பக்தர்களுக்கு விரிவான தரிசன ஏற்பாடுகள் செய்வது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் திருப்பதியில் தேவஸ்தான அலுவலக பவனில் தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    வைகுண்ட ஏகாதசி அன்று சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக, தரிசன வரிசைகள், செல்போன்கள் மற்றும் பொருட்கள் பாதுகாப்பறை ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஏழுமலையான் கோவில் லட்டுகள், காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றை பக்தர்களுக்கு விற்பனை செய்ய ஸ்டால்கள் வைக்கப்படும். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த அனைத்து வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்படும். பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும்.

    ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு சேவை செய்வார்கள். பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும். பக்தர்களின் வசதிக்காக திருப்பதி, சந்திரகிரி பகுதிகளில் இருந்து சீனிவாசமங்காபுரத்துக்கு பஸ்கள் இயக்கப்படும். பொறியியல் துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் பணியை 11-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது.
    கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கெடிலம் ஆற்றங்கரை யோரத்தில் அமைந்துள்ளது.
    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்ய பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில். இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும். கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.

    கோவிலில் பிரதானமாக பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார். பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயர் முதலிய பலரும் தவம் புரிந்து தேவநாதசாமியை தரிசித்து வரம் பெற்ற தலம் இதுவாகும்.

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதசாமிக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்த கோவிலில் 12 மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது.

    திருமணம்

    திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள்.

    இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.

    புனித தீர்த்தங்கள்

    இந்த கோவிலில் கருட பகவானால் கொண்டு வரப்பெற்ற கெடில நதியும், ஸ்ரீஆதிசேஷன் தன் வாலினால் அமைத்த சேஷக்கிணறும், பிரம்ம தீர்த்தம், பூ தீர்த்தம் மற்றும் லட்சுமி தீர்த்தம் என 5 வகை தீர்த்தங்கள் உள்ளன.

    தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி உற்சவம்

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகளிலும் வெகுவிமர்சையாக விழா நடந்து வருகிறது. அதிகாலையில் 2 மணிக்கு பெருமாள் விஷ்வரூப தரிசனம் நடக்கிறது. சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து மாலையில் சாமி வீதி உலா நடைபெறும்.

    தேசிகர் உற்சவம்

    மேலும் புரட்டாசி மாதத்தில் முக்கிய விழாவாக தேவநாதசாமியின் பக்தராக இருந்து தியானம் செய்து முக்தி அடைந்த தேசிகர் மகா உற்சவம் நடக்கிறது.
    இந்த விழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது பின்னர் இரவு ஹம்ச வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.

    தினமும் காலை மற்றும் மாலையில் பல்லக்கு, தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், பிள்ளைகிளை வாகனம், சந்திர பிரபை, மோகன அவதாரம், வெள்ளி சிம்ம வாகனம், வெண்ணைத்தாழி சேவை, யானை வாகனம், சூர்ணாஅபிஷேகம், தங்க விமானம், பேட்டை உற்சவம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது. பின்னர் வருகிற அக்டோபர் 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை தேசிகர் தேர் திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் நவராத்திரி 9-ம் நாள் உற்சவ விழாவும் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

    பிரம்ம உற்சவ விழாவின் முக்கிய விழாவாக வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவோணம் நட்சத்திரத்தன்று தேசிகர் ரத்னாங்கி சேவை அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சன்னதியில் கோலாகலமாக நடைபெறுகிறது. பின்னர் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், ராமன், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார் , பள்ளி கொண்டநாதர், ஆண்டாள், ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு சாமி சன்னதிகளில் சென்று வழிபடுகிறார்.

    பின்னர் மாலையில் சாமி வீதி உலா உற்சவம் தீர்த்தவாரி பெருமாள் தாயார் தேசிகருக்கு சாற்றுமுறை உற்சவம் நடக்கிறது. இதையடுத்து கண்ணாடி பல்லக்கில் தேசிகர் வீதி உலா நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து 9-ந்தேதி காலை, மாலை இருவேளையும் தேசிகர் பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. கடைசி நாள் உற்சவத்தில் தேசிகர் சாமி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

    நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள்

    புரட்டாசி மாதம் வரக்கூடிய நான்கு சனிக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேவநாதசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
    திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பொது மக்கள் மொட்டை யடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.

    இதில் முதல் சனிக் கிழமை, 2-வது சனிக் கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 3-வது சனிக்கிழமைகளில் குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.

    திருவந்திபுரம் தேவநாதசாமி திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று கருதப்படுகிறார். எனவே திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதுமட்டுமன்றி புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளிலும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இரவு கோவில் வளாகம் அருகே தங்கி விட்டு அதிகாலையில் பெருமாளை தரிசித்து செல்கின்றனர். புரட்டாசி மாதம் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    கோவில் நடை  திறக்கும் நேரம்

    இந்த கோவிலில் புரட்டாசி மாதம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும். மற்ற மாதங்களில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு சாற்றப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான மார்கழி பகல்பத்து திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் பகல்பத்து மண்டபத்தில் நடைபெறும்.
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் மார்கழி நீராட்ட உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படும். இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு மார்கழி பகல்பத்து திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் பகல்பத்து மண்டபத்தில் நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சியையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னார் நேற்று மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு ஆண்டாள் பிறந்த வீடான வேதபிரான் பட்டர் என அழைக்கப்படும் பெரியாழ்வாரின் வீட்டிற்கு வருகை தந்தார். அப்போது பச்சை காய்கறிகள் பரப்பி ஆண்டாளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து பெரியாழ்வார் குடும்பத்தின் சார்பில் சுதர்சனம் தலைமையில் வரவேற்றனர்.

    அங்கு ஆண்டாள், ரெங்கமன்னாரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்தை வந்தடைந்தனர். இதையடுத்து அரையர் வியாக்கியான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    தமிழ் புத்தாண்டாக இருந்தாலும், ஆங்கிலப் புத்தாண்டாக இருந்தாலும் முதல் நாள் வரும் கிழமைக்குரிய வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம், ஆண்டு முழுவதும் நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    தமிழ் புத்தாண்டாக இருந்தாலும், ஆங்கிலப் புத்தாண்டாக இருந்தாலும் முதல் நாள் வரும் கிழமைக்குரிய வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம், ஆண்டு முழுவதும் நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்தப் புத்தாண்டு சனிக்கிழமையன்று பிறப்பதால் விநாயகப்பெருமான், அனுமன், சனீஸ்வர பகவானை அன்றைய தினத்தில் வழிபடுவது நல்லது.

    வழிபாட்டுப் பாடல்

    இனிய பலன்கள் எவர்க்கும் கிடைக்கச்

    சனியெனும் கிழமையில் ஆண்டு பிறந்தது

    மணியென வாழ்க்கை மலர்ந்திட வேண்டி

    புனிதனாய் மாறப் போற்றுகின் றேன்நான்

    ஆனை முகனும் அனுமனும் சனியும்

    தேனாய் அருளத் தெரிசிக் கின்றேன்

    வாழ்வை இனிநீ வசந்தம் ஆக்கு

    வருங்கா லத்தின் நலனைக் கூட்டு

    சூழும் பகையைத் தூர விரட்டு

    சுற்றம் மகிழ வாழ்வைக் காட்டு

    மேற்கண்ட பாடலை இல்லத்து பூஜையறையில் படித்து வழிபட்டால் நல்ல பலன்களை ஆண்டு முழுவதும் பெற இயலும்.
    சபரிமலை வரலாற்றில் முதன் முறையாக கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகத்தை நாளை (புதன்கிழமை) நடத்த முன் பதிவு செய்து உள்ளார்.
    சபரிமலை ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்வது பக்தர்களின் மிக முக்கியமான வழிபாடு ஆகும். இதற்காக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நெய் நிறைக்கப்பட்ட ஒன்று அல்லது 2 தேங்காய்களை இரு முடிகட்டுடன் சுமந்து வருவார்கள். சன்னிதானத்தில் அந்த தேங்காயை உடைத்து அதில் உள்ள நெய்யை சேகரித்து, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

    ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர், தான் நினைத்த காரியம் ஐயப்பன் அருளால் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து 18 படிகள், 18 மலைகளை தியானித்து, நேர்ச்சையாக 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகம் செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி 18 ஆயிரம் தேங்காய் மற்றும் அதற்கு தேவையான நெய் ஆகியவற்றை அவர் லாரி மூலம் பம்பைக்கு அனுப்பிவைத்தார். மேலும், நெய்யபிஷேகத்திற்கான கட்டணமாக ரூ.18 லட்சத்திற்கான வரைவோலையையும் தேவஸ்தான செயல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பம்பை வந்து சேர்ந்த 18 ஆயிரம் தேங்காய் மற்றும் நெய்யினை தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் பெற்றுக்கொண்டார். பின்னர் தேவஸ்தான ஊழியர்களின் உதவியுடன் தேங்காயில் நெய்யை நிரப்பும் பணி நடைபெற்றது. இதை தொடர்ந்து நெய் நிரப்பப்பட்ட தேங்காய் டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டுவரப்பட்டு உள்ளது. நாளை (புதன் கிழமை) காலை அந்த குறிப்பிட்ட பக்தரின் சார்பில் 18 ஆயிரம் நெய் தேங்காய்களை உடைத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    சபரிமலை வரலாற்றில் ஒரே பக்தர் 18 ஆயிரம் நெய் தேங்காயை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வது இதுவே முதல் முறை என்று திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணகுமார வாரியர் தெரிவித்தார்.
    மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம். இந்த விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.
    மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம். திருவோண விரதத்தை தீவிர வைணவர்கள் ஒவ்வொரு மாதமும் பின்பற்றி வருகின்றனர். திருவோண விரதம் என்றால் என்ன எப்படி வந்தது என இங்கு காண்போம்.

    திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ்ந்தது இந்த திருவோண நட்சத்திரத்தில் தான். அதனால் தான் ஒவ்வொரு ஆவணி மாதத்தில் வரும் திருவோண நடத்திரத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

    பங்குனி மாத திருவோண நடசத்திரத்தில் மார்கண்டேய மகரிஷியின் மகளான பூமி தேவியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு சென்றார். ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் தான் தேவியை ஒப்பிலியப்பன் பெருமான் மணந்து கொண்டார். இதனால் ஒப்பலியப்பன் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு திருவோண நட்சத்திர தினமும் விழா கோலமாக இருக்கும்.

    திருவோண விரதம் எப்படி மேற்கொள்வது?

    திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வர வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும்.

    மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும். மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும். இந்த திருவோண விரதம் ஒருமுறை இருந்தால் கூட போதும் என பெரியோர் கூறுகின்றனர்.

    விரதம் இருக்க முடியாதவர்கள் மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். மாலை வேளையில் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

    திருப்பங்களை தரும் திருவோண நட்சத்திர விரதம் இருந்து பெருமாலின் அருளைப்பெறுங்கள்.
    சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சபரிமலையில் மகர விளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது.
    சபரிமலையில் மகர விளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகரவிளக்கையொட்டி நடை திறக்கப்பட்ட 3 நாட்களில் சுமார் 1.20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்களில் சபரிமலை வருமானம் ரூ.4.75 கோடியை எட்டி உள்ளது.

    இந்த நிலையில், மகரவிளக்கை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பத்தனம்திட்டா மாவட்ட துணை கலெக்டர் அர்ஜுன் பாண்டியன் தலைமையில் உயர் மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று சன்னிதானத்தில் நடைபெற்றது. அதன் பின், அர்ஜுன் பாண்டியன் கூறியதாவது:-

    மகர விளக்கு தினத்தில், பாதுகாப்பான முறையிலும் சிரமங்கள் இல்லாமலும் பக்தர்கள் மகர ஜோதியை காண அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இந்த ஆண்டு பம்பை ஹில் டாப் பகுதியில் இருந்து மகர ஜோதியை காண ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதற்கான சிறப்பு ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நம்மை மாற்றிக்கொள்ளவும், இறை ஆட்சி தகுதியான மனிதர்களாய் வாழவும், புதுவருடம் நமக்கு அழைப்பு விடுகிறது. அதை ஏற்று வாழ்வோம். கிறிஸ்து பிறப்பையும், புதுவருட பிறப்பையும் அர்த்தமுள்ளதாய் கொண்டாடுவோம்.
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேம் எனும் சிற்றூரில் தச்சர் யோசேப்புக்கும், மரியாளுக்கும் மகனாகப் பிறந்தவர் இயேசு. தூய ஆவியால் நிரப்பப்பட்டு கன்னி மரியாளின் மகனாய் இயேசு பிறந்தார். இவர் கடவுளின் குமாரனாய் இவ்வுலகில் வந்தார் என்பதே நம்பிக்கையின் செய்தி.

    ‘இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்தது, தந்தையின் அன்பு’ என யோவான் கூறியதும் (யோவான்3:16), ‘இயேசு என்ற பெயருக்குப் பாவத்திலிருந்து விடுதலை அளிப்பவர். அதாவது ரட்சகர்’ என மத்தேயு (1:21) கூறியதும் பாவங்களிலிருந்து இவ்வுலகை மீட்க இயேசு பிறந்தார் என்பதையும் அறிய முடிகிறது.

    இயேசு கிறிஸ்து உலக ரட்சகர் என்ற நிலையில் அவர் அரண்மனையில் அலங்காரமாக, ஆடம்பரமாகப் பிறக்காமல் மாட்டுத் தொழுவத்தில், ஏழ்மையின் கோலமாகத் தாழ்மையின் வடிவாகப் பிறந்தார். (பிலிப்பியர் 2:4-8).

    ‘இயேசு பிறந்தார்’ என்ற செய்தி இவ்வுலகில் முதன் முதலாக ஆடுகளை வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு இறைத் தூதரால் அறிவிக்கப்பட்டது. இயேசுவின் தாழ்மை இன்று நம் அனைவரையும் ஆதிக்க, ஆடம்பர வாழ்விலிருந்து மாற்றம் பெற்று, ஏழை, எளிய மக்களோடு ஒன்றித்து வாழ அழைப்பு விடுக்கிறது. அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழவும், ஒன்றாக, நிறைவாக, அனைத்தையும் பகிர்ந்து வாழவும் வேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் பண்டிகை நமக்கு வலியுறுத்தும் கருத்து.

    அதேபோல பெத்லகேமில் குழந்தையாகப் பிறந்த இயேசு பெத்லகேமிலேயே குழந்தையாகவே இருந்து விடவில்லை. இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார்.

    ‘பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது’ என்று இயேசுவின் ஆவிக்குரிய வல்லமையை விவிலியம் பேசுகிறது.

    ‘அவர் நகரங்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்’ என இயேசு அநேகருடைய குறை வாழ்வை நிறை வாழ்வாக்கியதை விவிலியம் பேசுகிறது.

    அதன் உச்சகட்டமாக, மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் அறையப்பட்ட இயேசு கல்லறையிலேயே இருந்து விடவில்லை. உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த உலக ரட்சகர் மண்ணுலகிலேயே இருந்துவிடவில்லை. நமக்காய் பரிந்து பேச, விண்ணுலகம் சென்றார். அவர் அங்கேயும் நிலையாய் இருந்துவிடப் போவதில்லை.

    அவர் மறுபடியும் மண்ணுலகம் வந்து நம்மை அவரோடு இருக்கும்படி நம்மைப் பரம வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.

    ‘தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்த பின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்’ (யோவான் 14:3) என அதை விவிலியமும் உறுதிப்படுத்துகிறது.

    இப்படி ஆண்டவர் இயேசுவின் பிறப்பு முதல் அவரது இரண்டாம் வருகை வரை மனித வாழ்வின் மாற்றத்தை மையப்படுத்தியே அமைகிறது. அப்படி கிறிஸ்து பிறப்பு உணர்த்தும் மாற்றத்தை நமக்குள் கொண்டு வந்திருக்கிறோமா...? என்பதை புதுவருட பிறப்பில் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். நம்மை மாற்றிக்கொள்ளவும், இறை ஆட்சி தகுதியான மனிதர்களாய் வாழவும், புதுவருடம் நமக்கு அழைப்பு விடுகிறது. அதை ஏற்று வாழ்வோம். கிறிஸ்து பிறப்பையும், புதுவருட பிறப்பையும் அர்த்தமுள்ளதாய் கொண்டாடுவோம்.

    -ஆர்.ஆண்டனி ராஜ், சென்னை.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தைத்திருவிழா வருகிற 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் 18-ந் தேதி நடக்கிறது.
    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, மார்கழி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு தை தெப்பத்திருவிழா வருகிற 7-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் காலை 10.05 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் கும்ப லக்கனத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடக்கிறது. அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார்கள்.

    அப்போது கொடிமரத்திற்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காண்பிக்கப்படும். விழா நடைபெறும் 12 நாட்களும் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். விழாவில் வருகிற 12-ந் தேதி சைவ சமய வரலாற்று லீலையும், 14-ந் தேதி வலை வீசி அருளிய லீலையும் நடைபெறுகிறது.

    தெப்பத்திருவிழாவுக்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி நடக்கிறது. அதை தொடர்ந்து 17-ந் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறுகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா காமராஜர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.

    அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியும் அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலை 10.40 மணி முதல் 11.04 மணிக்குள் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சுவாமி-அம்மன் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அதன்பின்னர் இரவு 7 மணிக்கு மேல் சுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலும் எழுந்தருளி மீண்டும் கோவிலுக்கு புறப்படுவார்கள்.

    அன்றைய தினம் சுவாமி தெப்பத்திற்கு சென்று மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை அன்று மீனாட்சி அம்மன் கோவிலில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்துவருகிறார்கள்.
    தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லாக்கு, சாம்பிராணி பல்லாக்கு ஆகிய 5 பல்லாக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
    நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஊர்வலம் அதிக அளவில் நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாகை ஜமாத்தில் இருந்து தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லாக்கு, சாம்பிராணி பல்லாக்கு ஆகிய 5 பல்லாக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    இதையடுத்து மாலை 4 மணி அளவில் நாகையில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நாகூரை சென்றடையும். நாகூரில் முக்கிய வீதிகளுக்கு ஊர்வலம் சொல்லாமல் அலங்கார வாசலோடு ஊர்வலம் நிறைவு பெறுகிறது.

    கப்பலில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் ஓதிய பிறகு 5 மினாரக்களில் ஒரே நேரத்தில் கொடியேற்றப்படுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் 13-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
    ஜனவரி மாதம் 4-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 10-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    4-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * திருவோண விரதம்
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பகற்பத்து உற்சவ சேவை
    * கீழ் திருப்பதி கல்வெங்கடேசப்பெருமாளுக்கு திருமஞ்சனம்
    * சந்திராஷ்டமம் - மிருகசீருஷம், திருவாதிரை

    5-ம் தேதி புதன் கிழமை :
     
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலிங்க நர்த்தனம்
    * பெரியநகசு
    * சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்
     
    6-ம் தேதி வியாழக்கிழமை :

    * சதுர்த்தி விரதம்
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோதண்டராமன் திருக்கோலம்
    * சந்திராஷ்டமம்- புனர்பூசம், பூசம்

    7-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * வளர்பிறை பஞ்சமி திதி
    * மதுரை மீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவாரம்பம்
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் எண்ணெய் காப்பு உற்சவாரம்பம்
    * சிறிய நகசு
    * சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்

    8-ம் தேதி சனிக்கிழமை :

    * சஷ்டி விரதம்
    * பிள்ளையார் நோன்பு
    * மதுரை மீனாட்சி சொக்கநாதர் பூத, அன்னவாகன பவனி
    * சந்திராஷ்டமம் - மகம்

    9-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * வளர்பிறை சப்தமி
    * அமிர்தயோகம்
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம்.
    * சிறிய நகசு
    * சந்திராஷ்டமம் - பூசம்

    10-ம் தேதி திங்கள் கிழமை  :

    * வளர்பிறை அஷ்டமி
    * சித்தயோகம்
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி
    * தேவக்கோட்டை ரெங்கநாதர் புறப்பாடு
    * சந்திராஷ்டமம் -  உத்திரம்

    நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமலும் இருப்பான்.
    இந்து மதத்தில் சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன், அம்மன் உள்பட இன்னும் ஏராளமான தெய்வ வழிபாடுகள் இருக்கின்றன. இந்து மதத்தை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, ‘எதற்காக இத்தனை கடவுளர்கள்?’ என்ற கேள்வி எழுவது நியாயமே. இதற்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்துள்ள விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

    உங்கள் இந்து மதத்தில் இத்தனை கடவுள்களா?, யார் உங்களின் உண்மை கடவுள்?, சிவனா?, விஷ்ணுவா?, முருகனா?, விநாயகனா? காளியா?, இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைத்தான் நீங்கள் வழிபடுவீர்கள்? என்பது பலரது கேள்வி. உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இந்து மதத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள். விஷ்ணு புராணம் படித்தால் விஷ்ணுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறுவிதமாக இருக்கலாம்.

    முதலில் இந்துக் கடவுள்களை விமர்சிக்க நீங்கள் தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கடவுளர்கள் பெயர் எல்லாமே காரணப் பெயர். சிவா என்றால் புனிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்ணு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்கக் கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன். ராமன் என்றால் ஒளி மிக்கவன். இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தன்மையை குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. யோசித்துப் பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா?

    கீதையில் கிருஷ்ணன் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது” என்று சொல்கிறார். இங்கே கிருஷ்ணன் என்பவர், புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவர் மட்டும் அல்ல. அவர் பரமாத்மா என்னும் அனைத்திலும் வியாபித்திருக்கும் இறைவன். இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்குள் அடங்க மாட்டான். ஒருமை, பன்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது.

    நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமலும் இருப்பான். புராணங்கள் எனப்படும் தெய்வீகக் கதைகள், சாமானிய மனிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விஷயங்களை விவரித்து, அதன்மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படும் வகையில் சுவாரசியத்தை கூட்டுகின்றன. இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிலடங்காத குணங்கள் அல்லது தன்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறார்கள்.
    ×