என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பெருமாளுக்குரிய இந்த போற்றி துதிகளை தினமும் காலையில் 7 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக படிக்க வேண்டும். வளர்பிறை ஏகாதசி தினங்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று இதை கூறிவணங்குவது சிறப்பு.

    வளம்யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி
    தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி
    குறைவிலா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி
    உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி
    சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி
    மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி
    பொங்கிடும் நலம் யாவும் உன்னருளே போற்றி
    தங்கிடச் செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி

    நலன்கள் அனைத்தையும் அருள்பவர் பெருமாள். பெருமாளுக்குரிய இந்த போற்றி துதிகளை தினமும் காலையில் 7 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக படிக்க வேண்டும். சனிக்கிழமைகளில் படிப்பது மிகவும் விசேஷமானதாகும். வளர்பிறை ஏகாதசி தினங்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று இதை கூறிவணங்குவது சிறப்பு. இதனால் உங்களுக்கு மக்கள் வசீகரம் உண்டாகும். நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் விரைவில் நடக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனத்துயரங்கள் மற்றும் மனக்கவலைகள் நீங்கும்.


    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் கொரோனா வழிகாட்டுமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை அன்று கோவிலின் வெளியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக வெளியில் வைத்து ஊஞ்சல் உற்சவம் நடத்த அரசு தடை விதித்தது. இருப்பினும் ஆகமவிதிப்படி வழக்கமான பூஜைகள் தொடரலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் உட்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி மார்கழி மாத அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை அங்காளபரமேஸ்வாி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள சிவபெருமானுக்கும், அம்மனுக்கும் பால் தயிர், சந்தனம் மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு இடதுகரங்களில் சூலம், பாசம், கபாலம், வலதுகரங்களில் உடுக்கை, கத்தி, சங்கு, சின்முத்திரையுடன் ஜகத்ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    இதில் கொரோனா வழிகாட்டுமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மன் பம்பை, மேளம் முழங்க கோவிலை வலம் வந்து உட்பிரகாரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார். பின்பு பூசாரிகள் பக்தி பாடல்கள் பாடினர். இரவு 8.25 மணிக்கு தாலாட்டுப்பாடல்கள் பாடி அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டவுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது.

    ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் இந்த விழாவை பக்தர்கள் பார்க்க வசதியாக ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ராமு, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே கும்பகோணத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில்.
    சுவாமி: அக்னீசுவரர்
    அம்பாள்: கற்பகாம்பாள்
    மூர்த்தி: அக்னீசுவரர்
    தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்.
    தலவிருட்சம்: பலாசம்.
    தலச்சிறப்பு: இத்தலம் நவக்கிரக தலங்களில் சுக்கி ரன் தலமாக விளங்குகிறது.

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே கும்பகோணத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில். தேவாரம், பெரிய புராணம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 36-வது ஸ்தலமாகும். இந்த கோவில் மதுரை ஆதீனத்திற்கு உட்பட்டதாக திகழ்கிறது. இது நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிரனுடைய ஸ்தலமாக போற்றப்படுகிறது.

    மூலவராக அக்னீஸ்வரரும், தாயாராக கற்பகாம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். தல விருட்சமாக புரசமரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளது.

    சிவபெருமான் பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடி நீங்கியருளியத் தலம் பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தத்தலம், அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்த தலம், சந்திரனின் சாபம் நீங்கியத் தலமாகவும் உள்ளது.

    அது மட்டுமின்றி கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீக்கிய தலம், கலிக்காமருக்கு திருமணம் நடந்தத் தலம், மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டத் தலம். மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்தர் அவதார தலம், வடக்கு நோக்கி ஓடும் காவிரிக் கரையில் அமைந்த தலம் என பல புராண வர லாறுகளை தன்னகத்தே கொண்டது.

    இத்தலம் நம்மை நாளும் ஆளும் நவக்கிரகங்களில் ஒன்றான சுக்ரனுக்குரிய பரிகாரத் தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற திருக்கஞ்சனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள தல மூலவரான அக்னீஸ்வர சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் சுக்ர பகவானாக லிங்க வடிவத்தில் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்.

    பிரம்ம தேவருக்கு திருமணக்கோலம் காட்டி அருளியதால், இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் தனி சன்னதியில் அன்னை கற்பகாம்பாள் காட்சி அளிக்கிறார்.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் சுக்கிரன் ஸ்தலத்தில் வைணவரான வாசுதேவருக்கு ஓர் குழந்தை பிறந்தது. அவர் நாராயணனே தனக்கு குழந்தையாக பிறந்ததாக கருதி குழந்தைக்கு சுதர்சனர் என பெயரிட்டனர்.

    வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. சிறு வயதிலேயே சிவனின் மேல் ஈடுபாடு கொண்டு சிவ பக்தர்களோடே இருந்தது. வீட்டில் தாய் இட்ட நாமத்தையும் சூரனத்தையும் அழித்து விபூதி ருத்ராட்சம் அணிவதையே விரும்பியது. எப்போதும் சிவன் கோவிலிலேயே இருந்தது. விளையாடும் இடமே சிவன் கோவில் என தினமும் கோவிலிலேயே விளையாடியது.

    சுதர்சனிடம் அவரது தந்தை எவ்வளவோ எடுத்து கூறியும் விபூதியும் ருத்ராட்சமுமே பிடித்ததாய் இருந்தது. பூணூல் கல்யாணம் செய்வித்து நாம் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமகா விஷ்ணு. நாமத்தையும் சூரனத்தையும் இடவேண்டும் என கறாராக சுதர்சனனின் தந்தை சொல்லியும் கேட்கவில்லை. மாலை நேரத்தில் வீடு திரும்பிய மகனை தூணில் கட்டி வைத்து அடித்தார், பயன் இல்லை. மாறாக சிவன் கோவிலுக்கே போனார்.

    தன் பேச்சை கேட்காத வரை இனி வீட்டில் இடமில்லை, உணவளிக்க கூடாதென்று சொல்லி வீட்டை விட்டு குழந்தையான சுதர்சனரை வெளியே அனுப்புகிறார். நேராக அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, அக்னீஸ்வரரையும், கற்பகாம்பிகையையும் வலம் வந்து துதித்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு எதிரே தியானத்தில் அமர்ந்தான் சுதர்சன்.

    சிவபெருமானை துதித்தான். தன் மீது கருணை காட்டி அருள்புரிய வேண்டினான். இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான். பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் சிவபெருமான் காட்சியளித்தார்

    சிவபெருமான் சுதர்சனரிடம் “அப்பா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று சொன்னார். குழந்தையும் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான். சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான். அவனுக்கு எல்லா கலைகளும் வருமாறு வரமருளினார்.

    பின்னர் அவனை கருணையினால் நோக்கி, நீ உனது உடல் பொருள், ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீட்சா நாமம் தந்தோம். உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் என்று அருளினார்.

    தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராட்ச மாலையணி வித்து பஞ்சாட்சர உபதேசம் செய்து, ஸ்படிக லிங்கம் கொடுத்து (ஹரதத்தர் பூஜித்த சிவ லிங்கம் தனியாக கஞ் சனூரிலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது) சிவ பூஜா வித்யையும் தாமே உபதேசித்தார். வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார். தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார். தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியது, பொழுதும் விடிந்தது.

    அந்த ஊரில் இருந்த வைணவர்கள் ஒன்று கூடி, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம். இவ்வூரிலுள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், சிவனே பரம்பொருள் என்று நிரூபிக்க வேண்டும். முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும் என்றார்கள்.

    ஹரதத்தரும் அக்னீசுவரரை வழிபட்டு பெருமாள் கோவிலுக்குச் சென்று தீக்குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ளபடியால் இந்த முக்காலி அடியேனுக்குக் குளிரட்டும் என்று கூறி, சிவபரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும் கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது. தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர்.

    ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்க பட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர். நவகிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார்.

    கோவில் நடை திறப்பு நேரம்

    நடைதிறப்பு: காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

    கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் முகவரி

    அருள்மிகு அக்னீசுவர சுவாமி திருக்கோவில்,
    கஞ்சனூர் அஞ்சல்,
    திருவிடை மருதூர் வட்டம்,
    தஞ்சை மாவட்டம், 609 804.

    சித்சபையில் நிகழும் ஆனந்த நடனத்தை சிவகாம சுந்தரியார் இடைவிடாமல் கண்டுகளிப்பது, ஆன்மாக்களின் பிறவிப்பிணியைப் போக்குவதற்கே என்று குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ளார்.
    சிதம்பரம் தலத்தில் சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய 5 சபைகள் உள்ளன. இந்த 5 சபைகளின் சிறப்புகள் வருமாறு:-

    சித்சபை

    சிதம்பரம் கோவில் கட்டிட அமைப்பு அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவையாகும். வாஸ்து, ஆகம விதிகள் பிறழாது நெறிப்பட அமைந்த கோவில் இது. குறிப்பாக, சித்சபையானது மரத்தால் நமது உடல் அமைப்பை அப்படியே ஒத்துள்ளது. சித்சபை மேல் 21600 பொன் ஓடுகள் பொருத்தி, 72000 ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.

    ஒரு மனிதனின் நாடி நரம்புகளின் எண்ணிக்கை 72000 அவன் ஒரு நாளைக்கு விடும் சுவாச காற்றின் எண்ணிக்கை 21600. மேல் உள்ள 9 கலசங்கள், 9 சக்திகள், நவரத்தினங்கள், நவகிரகங்கள் ஆகியவற்றை குறிக்கும்.

    9 வெளிவாசல்கள் மனிதனின் 9 துவாரங்களை குறிக்கும். 224 பலகை அமைப்புகள் 224 உலகங்களை குறிக்கும். 64 சந்தன கை மரங்கள் ஆயகலைகள் 64-ஐ குறிக்கும். சதாசிவ பீட 4 தங்க தூண்களும் 4 வேதங்களை குறிக்கும். அடுத்து சதாசிவ பீட 6 தங்க தூண்களும் 6 சாஸ்திரங்களை குறிக்கும். ருத்ரபீட 28 மரத்தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கும். ருத்ரபீட ரகசியம் பார்த்திடும் 96 பல கனிகள் (ஜன்னல்) 96 தத்துவங்களை குறிக்கும். விஷ்ணு பீடத்தின் கதவுகள் அவித்தையையும், ரகசியத் திரை மாயையும் குறிக்கும்.

    ஐந்து தூண்களும் ஐம்பொறிகளை குறிக்கும் இங்கு நடராஜப் பெருமானின் திருமுடியிலுள்ள சந்திரனில் இருந்து உண்டான ஸ்படிகலிங்கமும், மாணிக்க மயமான ரத்தின சபாபதியும், சுவர்ண ஆகர்ஷண பைரவரும், நித்ய உத்ஸவர் முதலானவர்களும் எழுந்தருளியிருக்கின்றனர். இச்சிற்றம்பலத்தின் உள்ளே செல்வதற்கு ஐந்து படிகள் இருக்கின்றன. இவற்றிற்கு பஞ்சாட்சரபடிகள் என்று பெயர். இப்படிகள் இருபுறமும் யானை உருவங்கள் இருக்கின்றன.

    சித்சபையில் நிகழும் ஆனந்த நடனத்தை சிவகாம சுந்தரியார் இடைவிடாமல் கண்டுகளிப்பது, ஆன்மாக்களின் பிறவிப்பிணியைப் போக்குவதற்கே என்று குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ளார். ஆடல்வல்லான் ஆடல்புரியும் இடம் சிற்றம்பலம் இதையே தான் சித்சபை என்று அழைக்கப்படுகிறது. நடராஜர் இச்சபையில் திருநடனம் புரிந்து ஐந்து தொழில்களையும் நிகழ்த்துகிறார்.

    கனகசபை (பொன்னம்பலம்)

    சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது (எதிரம்பலம்) பொன்னம்பலம் என்ற கனகசபை. நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடக்கும் இடம் இதுவேயாகும். இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி ஆறுகால பூஜையும், பகல் இரண்டாம் காலத்தில் ரத்தின சபாபதிக்கு அபிஷேக வழிபாடுகளும் நடைபெறும்.
    பொன்னம்பலத்தின் முகப்பை ஆதித்த சோழன் கொங்கு நாட்டிலிருந்து கொண்டு வந்த மாற்றுயர்ந்த பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழார் சுவாமிகள் கூறியுள்ளார்.

    கனகசபையின் 18 தூண்டுகள் 18 புராணங்களை குறிக்கிறது. கனகசபையின் ஐந்து தளவரிசைக் கற்கள் பஞ்சபூதங்களின் தத்துவத்தை குறிக்கும்.
    கனகசபையில் நின்றுதான் சிதம்பர ரகசியத்தை பக்தர்கள் தரிசிப்பார்கள். மேலும் ஆடல் வல்லானின் ஆட்டத்தை கனக சபையின் மூலமே தரிசிக்க முடியும்.

    நடனசபை (நிருத்த சபை)

    சிதம்பரத்திற்கு ‘‘நிருத்த சேத்ரம்’’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆடல்வல்லான் ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய இடம் இது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடனப் போட்டி நடக்கும் போது சுவாமி தமது காது குண்டலம் கீழே விழ அதை தனது வலது கால் விரல்களால் எடுத்து காதில் மாட்டுமாறு காலை மேலே தூக்கி நடனம் ஆடிடவே அம்பாள் காலை தூக்கி ஆட முடியாமல் போகவே சுவாமி ஆடலில் வெற்றி பெற்றார். இத்தகு தெய்வ திருநடன சிறப்பு பெற்ற இடம்தான் நடனசபை என்ற நிருத்த சபை ஆகும். சுவாமி இங்கு ஆடிய தாண்டவத்திற்கு ஊர்த்துவ தாண்டவம் என்று பெயர்.

    சுவாமிக்கு தென்பகுதியில் ஸ்ரீசரபேஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார். இவருக்கு அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்ய சகல தோஷங்களும் விலகும். ராகுகாலத்தில் நெய்தீபம் ஏற்றினால் சிறந்த பலன்களைப் பெற்று தரும்.

    தேவசபை (பேரம்பலம்)

    பேரம்பலத்தில் ஐந்து மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கின்றனர். இங்குதான் மாதந்தோறும் திருஆதிரை நட்சத்திரத்தன்று சோமாஸ்கந்தருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்குதான் பொது தீட்சதர்கள் ஆலயப் பணிகள், வழிபாடுகள் குறித்து சபை கூட்டுவர். இப்பேரம்பலத்தை, மணவில் கூத்தனான காலிங்கராயன் விக்கிரசோழன் செம்பினால் வேய்ந்தான். இப்பேரம்பலத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் திருப்பணி செய்தான்.

    ராஜசபை

    ஆயிரம் கால் மண்டபம் ராஜசபை என்று அழைக்கப்படுகிறது. இங்கு 999 தூண்கள் மட்டுமே உள்ளன. மீதமான ஒன்று நடராஜப் பெருமானின் ஊன்றிய கால். ஆக, மொத்தம் 1000 கால் மண்டபம் ராஜசபையாக விளங்குகிறது.

    இது 5-வது சபை யாகும். இங்குதான் ஆனி (மிதுனம்), மார்கழி (தனுசு) மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் திருநாள்களில் நடராஜப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலா வந்த பின்னர் இரவில் இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் வீற் றிருந்து, விடியற் காலையில் அபிஷேகம் நடைபெற்று, பத்தாம் நாள் பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் திருக்காட்சியளிப்பார். பிறகு பெருமான் முன்னதாகவும், பெருமாட்டி பின்னாலும் மாறி மாறி நடனம் செய்து கொண்டு சித்சபைக்குச் செல்வர்.

    ராஜசபையில்தான் எல்லா வகையான இதிகாச, புராணங்கள் அனைத்தும் அரங்கேற்றம் செய்யபட்டன. இன்றும் பல காரியங்கள் ராஜசபையில் தான் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

    வலசில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த யாக நெருப்பில் ஆஞ்சநேயர் திருஉருவம் தெரிந்தது. இதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
    திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே வளையக்காரன் வலசில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு இந்த கோவிலில் நேற்று சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் வாசனை திரவியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக போடப்பட்டன. அப்போது நெருப்பில் ஆஞ்சநேயர் திருஉருவம் தெரிந்தது. இதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்து பயபக்தியுடன் ஆஞ்சநேயா, ஆஞ்சநேயா, ராம பக்தா என கரகோஷம் எழுப்பினர்.

    நெருப்பில் ஆஞ்சநேயர் உருவம் தத்ரூபமாக தெரிந்த நிலையில் அந்த பகுதியில் குரங்குகளையே காண முடியாத நிலையிலும் திடீரென்று கோவிலுக்குள் 2 குரங்குகள் நுழைந்து கருவறையில் இருந்த பழங்களை எடுத்து சாப்பிட்டதை கண்ட பக்தர்கள் ஆஞ்சநேயரே வந்துவிட்டார் என பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
    இங்குள்ள காலபைரவரை செவ்வாய்க் கிழமைகள் தோறும் வழிபட்டு வர வீடு கட்டும் யோகம் உண்டாகும். தடைபட்ட கட்டிட வேலைகளும் தடையின்றி நடைபெறும்.
    தாணுமாலய சுவாமி கோவிலில் விநாயகர், பெருமாள், முருகன், காலபைரவர், ஆஞ்சநேயர் என கடவுள்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். இதனால் இந்த கோவிலுக்குள் நுழைந்தாலே பலன்கள் நிச்சயம் என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.

    பொதுவாக இந்திரன் பாவவிமோசனம் பெற்ற தலம் என்பதால் எந்தவொரு பாவமானாலும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள். அவற்றில் சில பலன்களை இங்கே பார்ப்போம்.

    தாணுமாலய சுவாமி:- மும்மூர்த்திகளும் ஒரே உருவில் அருள்பாலிப்பதால் சகல விதமான பலன்களும் கிடைக்கும். அங்குள்ள பிரக்ஞ தீர்த்தம் என்னும் ஞானம் அருளும் திருக்குளத்தில் நீராடி, திருநீறு அணிந்து சிவாய நம என உச்சரித்து, திருக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த புத்திர பாக்கியத்தோடு, நற்பொருளையும், அருளையும் பெற்று பிறவி பயனை பெறலாம்.

    பவுர்ணமி நாட்களில் விரதம் இருந்து தாணுமாலயனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆலய பிரகாரத்தை சிவநாமம் உச்சரித்து சுற்றி வந்தால் நவக்கிரகங்களின் தாக்கம் குறையப் பெற்று தடைகள் விலகி அனைத்து வளங்களையும் பெறலாம். சிவனார்க்கு கனிகளை நைவேத்தியம் செய்வதால் அறிவு மேன்மை அடையும். சுவாமிக்கு விசேஷ வழிபாடாக ருத்ரதாரை அபிஷேகமும், பாயாசம் நைவேத்தியமாக படைத்து வழிபாட்டால் அனைத்து வளங்களும் அடையலாம். திருமண தடை உள்ளவர்களும் சுவாமியை வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.

    பஞ்ச நந்திகள்: கோவிலில் நமசிவாய அட்சர வடிவமாய் பஞ்ச நந்திகள் விளங்குகின்றன. ந என்னும் மந்திர எழுத்தாய் இந்திர நந்தியும், ம என்ற மந்திர எழுத்தாய் பிரம்ம நந்தியெனும் மகா நந்தியும், சி என்ற மந்திர எழுத்தாய் கங்காள நாதர் சன்னதியில் விஷ்ணு நந்தியும், வா என்ற வடிவமாய் கிழக்கு நோக்கி கைலாச நாதர் சன்னதியில் உள்ள சிவாதல நந்தியும், ய என்ற அட்ச வடிவமாய் அறம் வளர்த்த நங்கை சன்னதியில் தர்மநந்தியும் அமையப் பெற்று பூரண சிவாலயமாய் விளங்குகிறது. பிரதோஷ நாட்களில் பஞ்ச நந்திகளை தரிசிப்பது அனைத்து பாவங்களையும் போக்கும் வல்லமையை வழங்கும்.

    ஜுரதேவமூர்த்தி: கோபுரத்தின் மேற்குபுறம் ஊஞ்சல் மண்டபம் எதிரில் மண்டையடி சாமியென உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ஜுரதேவமூர்த்தி சிற்பம் உள்ளது. மூன்று தலைகள், ஒன்பது கண்கள், நான்கு கைகள், மூன்று கால்கள் போன்றவற்றை இச்சிலையில் காணலாம். இந்த சிலையின் தலையில் நல்ல மிளகும், சுக்கும் அரைத்து தேய்த்து வழிபட்டால் தீராத தலைவலி நீங்கும் என நம்பப்படுகிறது. தலைவலியால் அவதிப்படுவோர் ஜுரதேவமூர்த்திக்கு நல்லமிளகு, சுக்கு அரைத்து தேய்த்து வழிபடுகிறார்கள்.

    காலபைரவர்: இங்குள்ள காலபைரவரை செவ்வாய்க் கிழமைகள் தோறும் வழிபட்டு வர வீடு கட்டும் யோகம் உண்டாகும். தடைபட்ட கட்டிட வேலைகளும் தடையின்றி நடைபெறும்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (ஜனவரி) நடக்கும் விழாக்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (ஜனவரி) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    2-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை ஆத்யாயன உற்சவம், 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, ராப்பத்து உற்சவம், 14-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா, ஸ்ரீவாரி தீர்த்த முக்கோட்டி உற்சவம், போகி பண்டிகை, 15-ந்தேதி மகர சங்கராந்தி பண்டிகை, 16-ந்தேதி கோதாதேவி பரிநய உற்சவம், பார்வேடு உற்சவம், 17-ந்தேதி ராமகிருஷ்ண தீர்த்த முக்கொடி உற்சவம், 18-ந்தேதி பிரனய கலஹோற்சவம், 22-ந்தேதி பெரிய சாத்து முறை, 27-ந்தேதி உற்சவர் மலையப்பசாமி திருமலை நம்பி சன்னதிக்கு எழுந்தருளல்.

    மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.
    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகே உள்ள வழுக்குப் பாறையில் தண்ணீர் வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடினர்.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. நேற்று மார்கழி மாத அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதிகாலையிலேயே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். காலை 6.45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்களை வனத்துறையினர் முழுமையான பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகே உள்ள வழுக்குப் பாறையில் தண்ணீர் வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடினர்.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அடிவார பகுதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நீர் ஓடை பகுதியில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தாணிப்பாறை அடிவாரம் பகுதியில் வத்திராயிருப்பு போலீசார், மற்றும் சாப்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
    நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவில் நடக்கும் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 13-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா நாளை (செவ்வாய்க் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 13-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இந்த நிலையில் நாகூர் தர்கா கந்தூரி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகளை நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தர்காவிற்கு வருபவர்கள் அவசியம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என தர்கா நிர்வாகியிடம் அறிவுறுத்தினார். அலங்கார வாசலில் புறகாவல் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை பாலையிட்டார்.

    அதனை தொடர்ந்து கந்தூரி ஊர்வலம் செல்ல உள்ள வாணக்கார தெரு, தெற்குதெரு, கடைத்தெரு ஆகிய இடங்களில் நடந்து சென்று பார்வையிட்டார். அலங்கார வாசலில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது தர்கா கலிபா மஸ்தான் சாஹிப், தர்கா மேலாளர் ஜெகபர் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டும் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மதியம் 12 மணியளவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் தொடங்கியது. எண்ணெய், தயிர் மற்றும் சந்தனம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு பட்டாச்சாரியார்கள் அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு குடம், குடமாக பால் ஊற்றியும் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதையொட்டி நாமக்கல் - கோட்டை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். அவர்கள் துளசி மாலை, வெற்றிலை மாலை கொண்டு வந்து சாமிக்கு சாற்றி வழிபட்டனர். இதையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
    அனுமன் ஜெயந்தியான நேற்று சென்னையில் உள்ள அசோக்நகர் ஆஞ்சநேயர் கோவில், ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் மூலவர், உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது.
    ராம பக்த ஆஞ்சநேயர், மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்த நன்னாளில் ஆஞ்சநேயர் மற்றும் பெருமாள் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடந்து வருகிறது. அனுமனை வழிபட்டால் காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது ஐதீகம். அதன்படி அனுமன் ஜெயந்தியான நேற்று சென்னையில் உள்ள அசோக்நகர் ஆஞ்சநேயர் கோவில், ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அதிகாலையில் மூலவர், உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்ணெய் சாத்தி, வடை மாலை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ராமநாம பஜனையும் நடந்தது.

    நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு செந்தூரம், துளசி, வடை, கற்கண்டு, பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம் போன்றவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதேபோன்று சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதேபோல் நங்கநல்லூரில் உள்ள 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் மகா திருமஞ்சனத்துடன் விழா தொடங்கியது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம்.
    படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கே இருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும் அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது.
    வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர்.

    அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூஜை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர்.

    ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் சிறப்பாக செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூஜையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும் நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.

    பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்.
    ×