தமிழ்நாடு
மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை இணைக்க முயற்சி- அணையில் நீரை திறந்து வைத்து சபாநாயகர் பேட்டி

Published On 2022-05-01 06:59 GMT   |   Update On 2022-05-01 06:59 GMT
விவசாயிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, குறித்த நேரத்தில் நெல் மூட்டைகளை அரசிடம் வழங்கி பணம் பெற்று செல்ல வழிவகை செய்யப்பட்டு உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை வட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

இதன் மூலம் மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்தின் கீழ் உள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடியையொட்டி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

வருகிற ஆகஸ்ட் மாதம் 28ந்தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், தெற்கு பாப்பான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் உள்ள 2,756.62 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அணையை திறந்து வைத்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் பெருங்கால் பாசனத்தின் மூலம் கார் பருவ சாகுபடிக்கு 120 நாட்கள் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

தினமும் 40 கனஅடிக்கு குறையாமல் தண்ணீர் திறக்கப்படும். மேலும் தேவைக்கேற்ப சிக்கனமாக விவசாயிகள் தண்ணீரை பயன்படுத்த வேண்டும். 5 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட விளைநிலங்கள் பயன்பெற உள்ளது.

முதல்-அமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், அவர்கள் 5 பவுனுக்கு கீழ் தங்கநகை அடகு வைத்திருந்தால் அதையும் இலவசமாக திருப்பி கொடுத்துள்ளார். மேலும் தற்போது விவசாயம் செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும் வட்டியில்லா கடனாக அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமும் கடன் வழங்கப்படுகிறது.

அவர்கள் விளைவித்த நெல் மூட்டைகள் அந்தந்த பகுதியில் மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின்பேரில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

அதில் விவசாயிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, அதன்படி குறித்த நேரத்தில் வந்து நெல் மூட்டைகளை அரசிடம் வழங்கி பணம் பெற்று செல்ல வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மணிமுத்தாறு அணையின் கீழ் உள்ள பூங்கா சீரமைக்கப்படும். பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை இணைக்கும் முயற்சி பரிசீலனையில் உள்ளது. இதன் மூலம் மழைநேரத்தில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பது தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், இசக்கிசுப்பையா, மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் தங்கராஜா, உதவி பொறியாளர் முருகன், மகேந்திரன், வினோத், நெல்லை மாவட்ட செய்திமக்கள் தொடர்புத்துறை அலுவலர் ஜெய அருள்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Similar News