செய்திகள்

மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிக்கு ரூ.4760 கோடி ஒதுக்கீடு

Published On 2018-12-22 07:55 GMT   |   Update On 2018-12-22 07:55 GMT
மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் அடுத்த ஆண்டு ஜூலையில் டெண்டர் விடப்பட்டு, நவம்பரில் பணிகள் தொடங்குகிறது. அதற்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் ரூ.4,760 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. #MetroTrain
சென்னை:

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்களால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பணிகள் நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரெயில் முதல்கட்ட பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. 52.4 கி.மீட்டர் தூரத்துக்கு ரெயில் போக்குவரத்துக்கு திட்டமிடப்பட்டது.

அதற்காக ஜப்பான் நிறுவனம் ரூ.11 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கியது. தற்போது சென்ட்ரலில் இருந்து எழும்பூர், கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது. மற்றொரு வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே பணிகள் முடிவடைந்து விரைவில் ரெயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.

இதற்கிடையே 2-வது கட்டமாக மெட்ரோ ரெயில் சேவை மேலும் 108 கி.மீ தூரம் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் 11 கி.மீ. தூரம் பூந்தமல்லி வரை நீடித்து மொத்தம் 119 கி.மீ தூரம் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.69 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி மற்றும் மாதவரம்- சிறுசேரி என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதில், முதலாவதாக மாதவரம்-கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் மாதவரம்- சோழிங்கநல்லூர் வரை 52 கி.மீ. தூரத்துக்கு பணிகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதற்கான செலவு ரூ.40 ஆயிரம் கோடியாகும்.

மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் அடுத்த ஆண்டு (2019) ஜூலையில் டெண்டர் விடப்பட்டு, நவம்பரில் பணிகள் தொடங்கும்.

அதற்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் ரூ.4,760 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. அதற்கான ஒப்பந்தம் நேற்று டெல்லியில் கையெழுத்தானது.

நிதித்துறை அமைச்சகத்தின் பொருளாதார துறை கூடுதல் செயலாளர் சி.எஸ்.மொகாபத்ரா ஜப்பான் நிறுவனத்தின் கட்சுயோ மட்சு மோடர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதை தொடர்ந்து ஜப்பான் நிறுவனத்தின் கடனுதவியின் ஒரு பகுதி இன்னும் சில வாரங்களில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகளுக்கான மீதி தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கும். #MetroTrain
Tags:    

Similar News